சட்டமும் சந்தேகங்களும் பகுதியில்... வாகன லைசன்ஸும், மாநில மொழியும்:| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சட்டமும் சந்தேகங்களும்

சட்டமும் சந்தேகங்களும் பகுதியில்... வாகன லைசன்ஸும், மாநில மொழியும்:

Updated : நவ 27, 2016 | Added : நவ 27, 2016 | கருத்துகள் (1)
சட்டமும் சந்தேகங்களும் பகுதியில்...  வாகன லைசன்ஸும், மாநில மொழியும்:

சில நாடுகள், அதில் உள்ள மாநிலங்கள் செய்து கொண்ட கூட்டு ஒப்பந்த்த்தின் அடிப்படையில் எழுந்தவை. இந்த மாதிரியான அரசியலமைப்பை ஃபெடரல் என்பார்கள். இதற்கு சரியான எடுத்துக்காட்டு அமெரிக்கா.இந்திய நாடு பல மாநிலங்களின் கூட்டு ஒப்பந்தத்தினால் எழுந்ததல்ல. இது கூட்டாட்சியும் அல்ல, ஒற்றை ஆட்சியும் அல்ல. கூட்டாட்சிப் போல எனலாம். (Quasi-federal Constitution)ஒரு நாடு தமது நிர்வாக வசதிக்காக நாட்டை மாநிலங்களாகப் பிரிக்கிறது. அப்படிப் பிரித்த மாநிலங்களுக்கு ஒரு ஒற்றை மத்திய அரசு இருக்கும். இந்த முறையில் அமைவதை யூனியன் என்பர். இந்தியா ஒரு யூனியன். அரச ஏடுகளிலும் கூட யூனியன் ஆஃப் இந்தியா என்றே குறிப்பிடப்பட்டிருக்கும்.இந்த அமைப்பில், ஒரு நாட்டின் பணிகளை மாநில அரசும், மைய அரசும் பங்கிட்டுக் கொள்கின்றன. அவை எவை என இந்திய அரசியலமைப்புச் சட்ட்த்திலேயே பட்டியலிடப்பட்டிருக்கும். மத்திய பட்டியலின் கீழ் வரும் பணிகளை மத்திய அரசும், மாநில பட்டியலில் இடம்பெற்றிருக்கும் பணிகளை மாநில அரசும், சில பணிகளை நோக்கத்திற்கு ஏற்றார் போல மத்திய அரசும், மாநில அரசும் செயல்படுத்தும்.இதை மத்திய, மாநில இரட்டையாட்சி எனச் சொல்லலாம். இந்திய அரசைப் பொறுத்தவரை அதன் அரசியலமைப்புச் சட்டமே மேலானது. இந்த கட்டமைப்புக்கு எதிராக அமையும் எந்த சட்டமும், அரசின் எந்த நடவடிக்கையும் செல்லாது.


வாகன உரிமமும், மாநில விதியும்:

இவற்றில் வாகனங்களுக்கு உரிமம் வழங்கும் பணி அந்தந்த மாநில அரசின் கீழ்வருகிறது.ஒரு மாநிலத்தில் ஓடும் வாகனங்களுக்கு அந்தந்த மாநில ஆர் டி ஓ அலுவலகத்திலேயே உரிமம் தரப்படும். பொதுவாக இதற்கு நாடு முழுவதும் ஒரே விதிதான் எனினும், அந்தந்த மாநிலங்கள் தம் தேவைக்கேற்ப உள் விதிகளை அமைத்துக் கொள்ளலாம். மகாராஷ்டிர அரசு, இனிமேல் விண்ணப்பிக்கப்படும் ஆட்டோ உரிம விண்ணப்பங்களுக்கு அது போன்ற விதிகளாக, ஆட்டோ ரிக்ஷாக்களில் ஜிபிஎஸ் வசதியோடு, RPRS சிஸ்டம் இருக்க வேண்டும் என்றும், விண்ணப்பிக்கும் ஆட்டோ ஓட்டுனர் அந்த மாநில மொழியாகிய மராட்டி அறிந்திருக்க வேண்டும் எனவும் சொல்லி இருக்கிறது. இந்த விதி நவம்பர் 1 2015 முதல் தேதி முதல், அமலுக்கு வரும் என்றும் மகாராட்டிர போக்குவரத்துத் துறை மந்திரி திரு திவாகர் ரோத் கூறி இருக்கிறார்.


வந்தேறிகளை விரட்ட சட்டம் அனுமதிக்குமா

உண்மையில் அந்த மகாராட்டிர மாநிலத்தில், மற்ற மாநிலங்களை விட அதிக எண்ணிக்கையில் வட, வட கிழக்கு மற்றும் தென் இந்தியாவில் இருந்து பலரும் குடியேறி உள்ளனர். அவர்களில், குறிப்பாக, வட மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பீகாரிகள், உத்தரப்ரதேசத்தைச் சார்ந்தவர்கள் பலருக்கும் ஆட்டோ போன்ற வாகனம் ஓட்டும் தொழிலே பிரதானத் தொழிலாக இருக்கிறது. இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரம் எனச் சொல்லத் தக்க இந்த மாநிலத்தில், இது வரை ஆட்டோ ஓட்டும் உரிமம் பெற்றவர்களுக்கு இந்த விதி செல்லாது எனினும். இதே காரணங்களுக்காக மற்ற மாநிலங்களில் இருந்து அங்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவே மறைமுகமாக இந்த விதி சேர்க்கப்பட்டிருக்கிறது என்றே நம்ப வேண்டி இருக்கிறது.


மொழியைக் கட்டாயப்படுத்தலாமா

மகாராட்டிராவில் இருந்தும் பலர் வெவ்வேறு மாநிலங்களில் குடியேறியது போலவே, இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து மக்கள் மகாரட்டிராவில் குடியேறியுள்ளனர்.மகாராட்டிரா, அதிலும் குறிப்பாக மும்பை மற்ற ஊர்களைப் போல இல்லை. இது இந்தியாவின் பெரும் பொருளாதார சந்தையாகவே இருப்பதால், வந்தேறிகள் அதிகம்தான். ஆனால் அவர்களை விரட்டத் தேவை இல்லை. ஏனெனில் அது அரசியலமைப்புப் படியும் குற்றம். அப்படி வருபவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும் தேவை இல்லை. ஏனெனில், தமக்குப் பொருத்தமான இடத்தில் தம்மைப் பொருத்திக் கொள்ளும் மனித இயல்பையும், இது போக, இடமாற்றம் காரணமாக அங்கு சில வருட காலத்திற்கு மட்டுமே குடியேறியவர்களையும் பாதிக்கும் செயலே அந்த மாநிலத்தின் மொழி பற்றிய விதி.ஆட்டோ தொழில் என்பது பொது சனத்தோடு ஊடாட வேண்டிய ஒன்று என்பதால் மொழிக் கட்டுப்பாடு கட்டாயம் எனச் சொன்னால், அது பொது சனத்தோடு ஊடாட வேண்டிய பிற துறைகளுக்கு இருக்க வேண்டும் அல்லவா? உதாரணமாக வங்கிகள், ஹோட்டல்கள் என? உதாரணத்திற்கு வங்கிகளை எடுத்துக் கொண்டால், அதில் பணி புரிபவர்கள் அதிக சதவீதமானோர், அவ்வப்போது இட மாற்றம் காரணமாக அங்கு வந்தவர்களே. தொழில் செய்யும் உரிமை:


எது சமத்துவ உரிமை

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ப்ரியாம்பில் எனும் முன்னுரையிலேயே, நீதி மறுக்கப்படக் கூடாது என்றே ஆரம்பமாகிறது.இந்திய எல்லைக்குள், ஒருவர், இனம், மொழி, பால், பிறப்பிடம் போன்ற காரணங்களால் தனிமைப்படுத்தப்படுவதோ, வாய்ப்பு மறுக்கப்படுவதோ கூடாது, என இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் (ஆர்டிகில் 14 முதல் 18 வரை) சமத்துவ உரிமை பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. அவை இந்திய எல்லைக்குள்ளான சமத்துவம் பற்றிச் சொல்கின்றன. இது தவிர இந்த விதி, ஒருவரின் தொழில் செய்யும் உரிமையைப் Right to do Business) பாதிக்கிறதாக இருக்கிறது. ஒருவரின் தொழில் செய்யும் உரிமை என்பது அடிப்படை உரிமை எனும் வகைப் பாட்டில் வருகிறது என்பதால், அதை மீறி ஒரு சட்டம் அமையக் கூடாது.இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஆர்டிகில் 19 -ல் பேச்சுரிமை, எழுத்துரிமை, அமைதியாக்க் கூடும் உரிமை, யூனியன் போன்ற அமைப்புகள் ஆரம்பிக்கும் உரிமை, இந்திய நில எல்லைக்குள் எங்கு வேண்டுமானாலும் போய் வரும் உரிமை, இந்திய எல்லைக்குள் எங்கு வேண்டுமானாலும் குடியேறும் உரிமை, எந்தத் தொழிலையும், வியாபாரத்தையும் செய்யும் உரிமை(இந்திய எல்லைக்குள்,) ஆகியவற்றை அடிப்படி உரிமைகளாக்க் கூறுகிறது.


உரிமையை பாதிக்கும் சட்டம்

ஆனால், மகாராட்டிர அரசின் இந்த விதியானது, அப்படி, இந்திய எல்லைக்குள் எங்கு வேண்டுமானாலும் குடியேறும் உரிமை, எந்தத் தொழிலையும் தேர்ந்தெடுத்துச் செய்யும் உரிமை ஆகியவற்றை மறைமுகமாக பாதிக்கும்படிச் இருக்கிறது.மாநில மொழி பற்றிக் கூறும் ஆர்டிகிலும் கூட ஆட்சி மொழியாக அந்தந்த மாநிலத்தில் பெரிதும் பயனாகும் மொழியை 'ஆட்சி மொழியாகக்” குறிப்பிடலாம் என்று மட்டுமே சொல்கிறது.345. Official language or languages of a State:Subject to the provisions of articles 346 and 347, the Legislatura of a State may by law adopt any one or more of the languages in use in the State or Hindi as the language or languages to be used for all or any of tha official purposes of that State:Provided that, until the Legislature of the State otherwise provides by law, the English language shall continue to be used for those official purposes within the State for which it was being used immediately before the commencement of this Constitution.இது ஆட்சி மொழி பற்றியே கூறிகிறதே ஒழிய, தனியார் தொழில்களில் மொழி ஒரு இடையூறாக இருக்க்க்கூடாது. அல்லவா?மராட்டிய மாநில வாகன விதியின் படி, அப்படி மராட்டி தெரிந்தவர்கள் மட்டுமே ஆட்டோ ஓட்ட முடியும் என்றும் அதற்குக் காரணம் அது பொதுசன புழக்கத்தோடு இணைந்த ஒரு தொழில் எனவும் காரணம் சொல்லப்பட்டால், அதே போன்ற பிற தொழில்களும் அம்மொழியை ஒரு கட்டாயத் தேவையாக்க் கொள்ள வேண்டும். அப்படிக் கொள்வதென்பதும் ஆர்டிகில் 16-ன் கீழான சமத்துவ வாய்ப்பையும் குலைக்கும் அல்லவா? - ஹன்ஸா ஹன்ஸா (வழக்கறிஞர்); legally.hansa68@gmail.com

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X