ஒருவர் தம் வாழ்வில் உயர்வை அடைய, நல்லொழுக்கத்தை கடைபிடித்தாக வேண்டும். அதனால் தான் 'ஒழுக்கம் விழுப்பம் தரும்' என்கிறது குறள் வழி.ஒரு மாணவனை ஆசிரியர் ஒருவர் தினமும் திட்டிக் கொண்டே இருக்கிறார்.
ஒவ்வொரு நாளும் ஆசிரியர் திட்டும் போது அந்த மாணவன், நாம் என்ன தவறு செய்தோம். நம்மை ஆசிரியர் ஏன் திட்டுகிறார். அந்த தவற்றை நாம் எப்படி திருத்திக் கொண்டு அந்த ஆசிரியரிடம் எப்படி நல்ல பெயர் எடுப்பது என்று சிந்திப்பது இல்லை.
மாறாக அந்த ஆசிரியருக்கு பட்ட பெயர் வைப்பது, அவரை எப்படி பழிவாங்கலாம் என்று திட்டம் போடுகின்றனர். இதனால் தான் சென்னையில் நடந்த சம்பவம் ஒன்றில் மாணவர் தன்னுடைய ஆசிரியரை கொலை செய்தான். தான் தவறான வழிக்கு செல்கிறோம் என்பதை அறியாமலேயே செய்யும் தவறுகள் அவர்களுடைய பின்வாழ்க்கையை சிதைக்கின்றன.
சென்னை சுவாதி, கோவை தன்யா, விழுப்புரம் நவீனா, கரூர் சோனாலி, துாத்துக்குடி பிரான்சினா, விருத்தாச்சலம் புஷ்பலதா வரிசையில் டில்லியில் கருணா என்ற 21 வயது பெண்ணை 34 வயதான ஒரு தலைக்காதலன் 25 முறைக்கு மேல் கத்தியால் தாக்கி சாகடித்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளில் எங்கோ விழுந்த சிறு ஓட்டை இன்று பெரிய பள்ளமாகி இளம் பெண்களை தினமும் காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. எங்கு விழுந்தது இந்த சிறு ஓட்டை?
பலமுறை மூளைச்சலவை செய்யப்பட்டு தான் மனிதன் ஒருவன் தீவிரவாதியாகிறான். அவனுக்கு ஈவு, இரக்கம், பந்தம், பாசம் அனைத்தையும் மூளைச்சலவை செய்து அழித்து விடுகின்றனர். அப்படிப்பட்ட தீவிரவாதிகளே பலமுறை குழந்தைகளையும், பெண்களையும் விட்டு,விட்டு ஆண்களை மட்டும் கடத்தி சித்திரவதை செய்கின்றனர். ஆனால் நல்ல குடும்பத்தில் பிறந்து நல்ல கல்வி கற்று, நல்ல நிலையில் இருக்கும் ஒரு இளைஞருக்கு எங்கிருந்து வருகிறது இந்த கொலை வெறி தாக்குதல்.
நல்லொழுக்க கல்வி 20 ஆண்டுகளுக்கு முன் பள்ளிகளில் நல்லொழுக்க வகுப்பு என்று வாரத்திற்கு ஒரு மணிநேரம் ஆசிரியர் வகுப்பெடுப்பார். இந்த வகுப்பில் தாய், தந்தையை மதிப்பது, ஆசிரியர் யார், அவர்களை எப்படி மரியாதை செய்வது, செடி, கொடிகளை எப்படி பாதுகாப்பது, விலங்குகளிடம் அன்பு செலுத்தி அவைகளை வளர்ப்பது போன்றவைகளும், சகிப்புத்தன்மை, நன்றியுடைமை, தவறுகளை மன்னிப்பது, மறப்பது மற்றவர்களை மதித்து மென்மையாகவும் அன்பாகவும் எப்படி பழகுவது என்பதை அழகான வார்த்தைகளால், அமைதியாகவும், அன்பாகவும் விளக்குவார்கள். அந்த வகுப்பு எப்போது வரும் என்று மாணவர்கள் காத்திருப்பார்கள்.
அதனால் தான் அன்று ஆண்கள் காதலில் தோல்வி அடைந்தால், ஒரு தேவதாசாக தாடி வைத்துக் கொண்டு சோகமாக திருமணமே செய்து கொள்ளாமல் இருந்தார்கள். மேலும் 'எங்கிருந்தாலும் வாழ்க, உன் இதயம் அமைதியில் வாழ்க, மஞ்சள் வளத்துடன் வாழ்க, உன் மங்கல குங்குமம் வாழ்க' என்று, தான் காதலித்த பெண் வேறு ஒருவருடன் சந்தோஷமாக வாழ வாழ்த்தினார்கள்.
இன்றைய கல்வி குழந்தை காலையில் ஆசையுடன் கீபோர்டை பள்ளிக்கு எடுத்துச் செல்வான். ஆனால் மாலையில் சோர்வாக கீபோர்டை வைத்துவிட்டு, இன்று கீபோர்டு வகுப்பு நடக்கவில்லை. அந்த வகுப்பை கணித ஆசிரியர் எடுத்துக் கொண்டார் என்பான். இதே போல் தான் விளையாட்டு, யோகா, ஓவிய வகுப்பு. எந்த வகுப்பெல்லாம் குழந்தைக்கு உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் கொடுக்குமோ அந்த வகுப்புகளையெல்லாம் கணித ஆசிரியரும், அறிவியல் ஆசிரியரும் எடுத்துக் கொண்டால் குழந்தைகள் பள்ளியில் எப்படி உற்சாக மனநிலையில் இருப்பார்.
ஏன் நன்னெறி வகுப்புகள் குழந்தைகள் காலையில் எழுந்தது முதல் பள்ளிக்கு செல்லும் வரை, அவர்களை பள்ளிக்கு புறப்படுவதற்கு தயார் செய்யவே பெற்றோருக்கு நேரம் சரியாக இருக்கிறது. மாலை பள்ளி, கல்லுாரியில் இருந்து திரும்பியவுடன் அடுத்தநாள் செய்ய வேண்டிய வீட்டுபாடங்கள், புராஜெக்ட் ஆகியவற்றை செய்து முடிக்கவே நேரம் சரியாக உள்ளது. ஆனால் காலை முதல் மாலை வரை ஒரு நாளின் பெரும் பகுதி மாணவர்கள் இருப்பது பள்ளி, கல்லுாரிகளில் தான். அதனால் பெற்றோரின் பங்கை விடஅதிக பங்கு மாணவர்களின் நன்னெறியில் இருப்பது பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களையே சாரும்.
பெற்றோர்களே! நம் குழந்தைகளுக்கு தோல்வியை ஏற்கும் மனபக்குவத்தை நீங்கள் தான் உருவாக்க முடியும். பிரச்னைகளை எதிர்நோக்கச் சொல்லுங்கள். எதிர்நீச்சல் போட கற்றுக்கொடுங்கள். தோல்விகளை பழக்குங்கள். அதுவே உங்கள் குழந்தைகளை ஒரு வெற்றியாளனாக்கும்.
சிறந்த மாணவ சமூகம் ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? அதனால் ஐந்து வயது குழந்தைகள் முதல் வாரத்தில் ஒரு மணி நேரமாவது நன்னெறி வகுப்புகளை பள்ளிக்கூடங்களில் கட்டாயமாக்க வேண்டும். அந்த வகுப்புகளில் குழந்தைகளுக்கு நன்னெறி கதைகள், பாடல்கள், நன்னெறி நுால்கள், சிறுகதைகள், நல்லொழுக்கத்துடன் வாழ்ந்து சாதித்தவர்களின் வாழ்க்கை வரலாறுகள்கட்டுரைகள் கற்பிக்க வேண்டும்.
மேலும் மாணவர்களை சிறுகுழுக்களாக பிரித்து, நன்னெறிகளை விளக்கும் குறும்படம், பாடல்கள், நாடகங்கள், நடனங்கள் இவற்றை இயக்க பழகவேண்டும். அப்போது தான் இனிவரும் இளைஞர் சமுதாயம் சிறந்த சமுதாயமாக இருக்கும்.- அமுதாதன்னம்பிக்கை பயிற்றுனர் மதுரை. 98429 76770