எங்கெங்கு காணினும்..! | Dinamalar

எங்கெங்கு காணினும்..!

Added : நவ 29, 2016 | கருத்துகள் (1)
எங்கெங்கு காணினும்..!

பல ஆண்டுகளுக்குப் பின்னர் சொந்த கிராமத்திற்கு வருபவர், “ஊரே மாறிடுச்சி” என்பார். வந்தவரைப் பார்க்கும் ஊரார், “ஆளே மாறிவிட்டார்” என்பார்கள். கால மாற்றம் மனிதர்களை, வாழிடங்களை எல்லாவற்றையும் மாற்றிவிடும். ஆனால் மாற்றங்களுக்கு முன்னும் பின்னுமுள்ள நல்ல விஷயங்களை நாம் பத்திரப்படுத்தியுள்ளோமா?
நல்ல விஷயங்கள் ஆயிரம் நடந்தாலும், அரிதாக நடக்கும் எதிர்மறை விஷயங்களே நம் கவனத்தில் நிறைகின்றன. அவைகளே அன்றாடச் செய்திகளாகி, என்னடா உலகமிது என்று நம்மை விரக்தி அடைய வைக்கின்றன.வள்ளுவன் காலத்திலுமுண்டு மனிதத் தன்மைக்கு எதிரானவர்கள் எல்லா காலத்திலும் இருந்திருக்கிறார்கள். மனிதனை மேல் என்றும் கீழ் என்றும் நடத்தியவர்கள் தன் காலத்தில் இருந்ததால்தான், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று அறிவுறுத்த வேண்டிய அவசியம் வள்ளுவனுக்கு ஏற்பட்டது. மக்களை ஏமாற்றுபவர்கள் அன்றும் இருந்த காரணத்தினால்தான், “மக்களே போல்வர் கயவர்” என்று எச்சரிக்க வேண்டிய கட்டாயம் வள்ளுவனுக்கு ஏற்பட்டது. எல்லா காலத்திலும் நன்மையும், தீமையும் கொண்ட இருபுறங்களாகத்தான் உலக நாணயம் சுழன்று கொண்டிருக்கிறது. ஆனால் நம்மிடம் நல்லவற்றைப் பார்க்கின்ற, அங்கீகரிக்கின்ற, பாராட்டுகின்ற மனநிலை குறைந்து விட்டது. கடுகளவு என்றாலும் எதிர்நிகழ்வுகளை கடலளவாய் பேசுகின்றவர்களாக மாறிப் போனோம்.
கணக்கில் வராத பண்பாடு : இருபது ஆண்டுகளுக்கு முன்னால், எனது நண்பர் பேராசிரியர் முருகன் அவர்களுக்கு பெண் குழந்தைப் பிறந்த செய்தி கேட்டு, குழந்தையைப் பார்ப்பதற்காக பரிசுப் பொருட்களுடன் சென்றிருந்தேன். குழந்தையை என் கைகளில் கொடுத்தனர். 'அப்படியே ஜெராக்ஸ் காப்பி மாதிரி அப்பன உரிச்சு வச்சிருக்குது' என்று நான் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருக்கும் போது, சூடாக ஏதோ என் ஆடையை நனைத்தது. ஒரு வினாடி என்னிடம் ஒரு மனச்சுளிப்பு தோன்றத்தான் செய்தது. அப்போது அங்கிருந்த அப்பத்தா கிழவி சொன்னாள், “பாருடி ஆச்சரியத்த.. இத்தனை பேரு வந்து எடுத்தாங்களே, இந்த மகாராணி ஒண்ணுக்கு அடிச்சாளா? மாமன் வந்து துாக்கின உடனே ஒண்ணுக்கு அடிச்சிட்டா... எம்புட்டு பிரியம்பாரு! என்றாள். இந்த அப்பத்தா கிழவியின் பேச்சை நீங்கள் எந்தக் கணக்கில் வைத்துக் கொள்வீர்கள்? இப்படி கணக்கில் வராத, கண்டு கொள்ளப்படாத அன்பின் செழுமைகள் நம்மிடம் நிரம்ப உண்டு.
மக்கள் இயல்பில் நல்லவர்கள் : இணைய இதழ் ஒன்றில் ஆசிரியர் தனபால் பத்மநாபன் பதிவு செய்துள்ள செய்தி, “முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைந்த பொழுது, இரண்டு நாட்கள் ராமேஸ்வரத்தில் இருந்தேன். லட்சக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். தீவு நிறைய கூடியிருந்த மக்களிடம் சோகத்துடன் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் கண்டேன்.இறுதி அஞ்சலிக்காக கிலோமீட்டர் அளவுக்கு நீண்ட வரிசையில் யாரும் ஒருவரை ஒருவர் முந்திச் சென்றதையோ, முண்டிக் கொண்டதையோ பார்க்க முடியவில்லை. மது அருந்திக் கொண்டு தள்ளாடிய ஒருவரைக் கூட அக்கூட்டத்தில் நான் பார்க்கவில்லை. மக்கள் இயல்பில் எவ்வளவு நல்லவர்கள் என்பதை அங்கு கண்டேன்”.ஆமாம், மக்கள் இயல்பில் மிக நல்லவர்கள். அன்பையும், அமைதியையும், ஆதரவையும் காட்ட வேண்டிய இடங்களில் வெளிப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறார்கள்.பூட்டிய கடைக்கு முன் பூமாலைகள் விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தின் அருகில் துரைப்பாண்டி என்ற அன்பர் பூக்கடை நடத்தி வருகிறார். நாள்தோறும் இரவு கடையைப் பூட்டும் போது, நான்கு பூமாலைகளை பூட்டிய கடைக்குமுன் தொங்கவிட்டுச் செல்கிறார்.இரவு நேரத்தில் யாருக்காவது இறுதிச் சடங்கு நடத்த பூமாலை தேவைப்பட்டால் எடுத்துச் செல்வதற்காகவே இந்த ஏற்பாடு. எடுத்துச் சென்றவர் மறுநாள் வந்து பணம் கொடுத்தாலும் அவர் பெற்றுக் கொள்வதில்லை. இதுபோன்ற மனிதாபிமான சேவைகள் ஊருக்கு ஊர் நிறையவே நடக்கின்றன. தீபாவளி என்றாலே பட்டாசு சத்தமும், மத்தாப்பு மகிழ்ச்சியும்தானே! ஆனால், சிவகங்கை மாவட்டம், வேட்டங்குடிப்பட்டி கிராமத்தில் தீபாவளிக் கொண்டாட்டத்தில் பட்டாசு வெடிச்சத்தம் ஏதும் கேட்பதில்லை. காரணம், வேட்டங்குடிப்பட்டியில் உள்ள பறவைகள் சரணாலயத்திற்கு ஆகஸ்ட் முதல் ஜனவரி வரை பல நாடுகளில் இருந்து இனப் பெருக்கத்திற்காக ஆயிரக்கணக்கான பறவைகள் வருகின்றன. பட்டாசு, வெடிச்சத்தங்களால் பறவைகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்பட்டு விடக்கூடாது என்று, காலம் காலமாக அக்கிராமத்தில் தீபாவளியைச் சத்தமில்லாமல் கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமல்ல, கோயில் திருவிழாக்கள், திருமண வைபவங்களில் கொட்டு மேளங்களையும் தவிர்த்து விடுகின்றனர்.பறவைகளுக்காக சிறார்கள் கூட தங்கள் சந்தோஷங்களைத் தியாகம் செய்யும் பண்பாடு பல கிராமங்களில் உண்டு.
நோக்க நோக்க களியாட்டம்
“காக்கை குருவி எங்கள் ஜாதி, நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்; நோக்க நோக்க களியாட்டம்!” என்ற பாரதியின் குதுாகலத்தை, சென்னையில் அவர் வாழ்ந்த மயிலாப்பூர் பகுதியில் இன்றும் காணலாம். ஜோசப் சேகர் என்ற அன்பர், தினசரி காலையில் தனது வீட்டு மொட்டை மாடியில் சுமார் 4,000 கிளிகளுக்கு உணவூட்டி வருகிறார். இதற்காக நாள்தோறும் 50 கிலோ அரிசி தேவைப்படுகிறது. தனது ஓய்வுக்கால ஊதியம் அனைத்தையும் இதற்கே செலவிடுகிறார். ஜோசப் சேகரின் வீட்டு மாடியில் பாரதியின் கனவு, தினமும் களிநடம்புரியக் காணலாம்.இதேபோன்று, ராமநாதபுரம் மாவட்டம், கோவிலாங்குளம் கிராமத்தைச் சார்ந்த உக்கிரபாண்டியன் என்ற அன்பர், தனது ஊர்ப் புறத்திலுள்ள கருவேலங்காட்டில் தினமும் இருநுாறுக்கும் மேற்பட்ட மயில்களுக்கு உணவளித்து வருகிறார்.முள்ளடர்ந்த கருவேலங்காட்டிற்குள் ஒரு நல்மனசு, தேசியப் பறவைகளின் வண்ணமயமான சங்கமத்தைத் தினமும் நடத்திக் கொண்டிருக்கிறது.
யார் வெற்றியாளர் : வெள்ளம், புயல் என இயற்கைப் பேரிடர்கள் வந்தால்தான் நமது மனிதாபிமானம் வெளிப்படுமா? இதென்ன, சீசன் மனிதாபிமானமா? எல்லாக் காலங்களிலும் உயிரில் கலந்த உணர்வாய் மனிதாபிமானம் வெளிப்பட வேண்டும். மானுடம் வென்ற நல்ல பக்கங்களை நம் வளரும் தலைமுறைக்கு நிறைய காட்ட வேண்டும். அது அவர்களை சமூகத்தின் நலன் நாடுபவர்களாக உணர்வுபூர்வமாக வளர்த்தெடுக்கும்.
தென்கச்சி சுவாமிநாதன் கூறிய செய்தி ஒன்று, “என்னை யாரும் ஜெயிக்க முடியாது!” என்றார் ஒருவர். உங்கள் பேச்சில் ஆணவம் முகம் காட்டுகிறதே என்றவுடன் அவர் கூறினார், “இது ஆணவப் பேச்சல்ல... ஆன்மாவின் மொழி. என்னை யாரும் ஜெயிக்க முடியாது! ஏனென்றால், நான் எல்லோரிடமும் அன்பால், பாசத்தால், உறவால், நட்பால், தியாகத்தால் தோற்றுப்போக தயாராக இருக்கிறேன்! என்னை யார் ஜெயிக்க முடியும்?” என்றார். மனித வாழ்வின் மகத்தான வெற்றி இதுதான். உங்களில் எத்தனைபேர் இத்தகைய வெற்றியாளர்கள்?
முனைவர் மு.அப்துல் சமதுதமிழ்ப்பேராசிரியர் உத்தமபாளையம். 90033 21872We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X