கோக்கு மாக்கு நியமனம்... கோடிகளில் கொட்டிய பணம்| Dinamalar

'கோக்கு மாக்கு' நியமனம்... கோடிகளில் கொட்டிய பணம்

Added : நவ 29, 2016
Share
ஸ்டேட் பாங்க் பிரதான கிளை வாசல். நான்கைந்து புது ஐநூறு ரூபாய் நோட்டுக்களை விசிறியபடி வெளியே புன்னகையோடு வந்தாள் மித்ரா.''ஏய்! அதுக்குள்ள வாங்கிட்டயா?'' என்று அந்த நோட்டுகளைப் பறித்து முகர்ந்து பார்த்தாள் சித்ரா.''அதெல்லாம் இல்லை; என்னோட 'செக்'கைப் போட்டு, பணம் எடுத்தேன். அவுங்களே கொடுத்தாங்க,'' என்றாள் மித்ரா.''உன்கிட்ட இருக்குற பணத்தையெல்லாம்
'கோக்கு மாக்கு' நியமனம்...  கோடிகளில் கொட்டிய பணம்

ஸ்டேட் பாங்க் பிரதான கிளை வாசல். நான்கைந்து புது ஐநூறு ரூபாய் நோட்டுக்களை விசிறியபடி வெளியே புன்னகையோடு வந்தாள் மித்ரா.
''ஏய்! அதுக்குள்ள வாங்கிட்டயா?'' என்று அந்த நோட்டுகளைப் பறித்து முகர்ந்து பார்த்தாள் சித்ரா.
''அதெல்லாம் இல்லை; என்னோட 'செக்'கைப் போட்டு, பணம் எடுத்தேன். அவுங்களே கொடுத்தாங்க,'' என்றாள் மித்ரா.
''உன்கிட்ட இருக்குற பணத்தையெல்லாம் மாத்திட்டியா மித்து?'' என்றாள் சித்ரா.
''நான் என்ன 76 பேருக்கு, 'அப்பாயின்மென்ட்' கொடுத்துட்டு, 33 கோடி ரூபாயை வசூல் பண்ணி மருதமலை அடிவாரத்துல மறைச்சு வச்சிருக்கேன். மாத்த முடியாம இருக்குறதுக்கு?'' என்று கொக்கி போட்டாள் மித்ரா.
''ஏய்! என்னடி சொல்ற...33 கோடியா?'' என்று தலை சுற்றுவது போல் 'ஆக்ட்' கொடுத்தாள் சித்ரா.
''ஆமாக்கா! குறைந்தபட்சம் 30லட்சத்துல ஆரம்பிச்சு, 50, 60, 65ன்னு போயிருக்கு. நம்மூரு யுனிவர்சிட்டி மட்டுமில்லை; தமிழகம் முழுக்க இப்போ இதான் பேச்சு,''
''இதுக்கு முன்னாடி இருந்த அந்த, 'ஜேம்ஸ்பாண்டை'யே இவரு மிஞ்சிட்டாரு போல''
''அவரு சும்மா காமெடி பீஸ். பேருக்கேத்தது மாதிரி, சலுான்காரன், நொங்கு விக்கிறவன் பாக்கெட்ல இருந்தெல்லாம் கைய விட்டு, ஐநூறு, ஆயிரம்னு எடுத்துக்குவாரு. அவரும் நல்லாத்தான் அள்ளித்தட்டுனாரு. ஆனா, 'அப்பாயின்மென்ட்'டுக்கு, இருபது 'எல்'லுக்கு மேலே அவரு கேட்டதில்லைன்னு சொல்லுவாங்க. இவரு, குறைச்சு வாங்குனதே, முப்பது தானாம். அதுவும் வந்த ஆறே மாசத்துல, அள்ளீட்டாரு,''
''போஸ்ட்டிங் போட்டதுல பெரும்பாலான ஆளுங்க, திருச்சியில அவர்கூட வேலை பார்த்தவங்களாம். உள்ளூர்க்காரங்களுக்கு மொத்தமா அல்வா கொடுத்துட்டாரு. அதனால தான், உள்ளூர் அமைச்சரே, இந்த 'அப்பாயின்மென்ட்'களை நிறுத்துறதுக்கு மெனக்கெட்ருக்காரு. ஆனா, அவராலயே முடியலையாம்,''
''அவரால முடியலைங்கிறது உண்மைதான்க்கா... ஆனா, ஆறாங்கிளாஸ் படிச்ச நம்மூர் எம்.எல்.ஏ., ஒருத்தரு, இவரை 'கரெக்ட்'டா பிடிச்சு, அவருக்கு வேண்டப்பட்ட பையனுக்கு அசிஸ்டென்ட் புரபசர் போஸ்ட்டிங் வாங்கிட்டாரு. அதுக்கு அந்தப்பையன்ட்ட 34 லட்ச ரூபாயும் வாங்கீட்டாராம்,'' என்றாள் மித்ரா.
''மித்து! இந்த விஷயத்துல ஒனக்குத் தெரியாத ஒரு தகவலைச் சொல்றேன். அந்த ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., போஸ்ட்டிங் வாங்கிக் கொடுத்த பையன், தி.மு.க.,வுல ஒன்றிய மாணவரணி பொறுப்புல இருக்குற பையனாம்,'' என்றாள் சித்ரா.
இருவருக்கும் முன்னால் வந்து நின்ற மினி பஸ்சில், 'கணபதியே வருவாய்...!' என்று கணீரென சீர்காழி முழங்கிக் கொண்டிருந்தார்.
''எந்தா ஒரு வல்லிய சிச்சுவேஷன் சாங்! அவரு பேரைச் சொன்னாலே, அமோக வருவாய் தான்,'' என்று வெடித்துச் சிரித்தாள் மித்ரா.
இருவரும் நடந்து, எதிரில் உள்ள ஆர்.எச்.ஆர்., ஓட்டலுக்குள் புகுந்து, ஆளுக்கொரு சாம்பார் வடை, தேநீர் 'ஆர்டர்' கொடுத்து விட்டு, அரட்டையைத் தொடர்ந்தனர்.
''மித்து! நம்ம ஊருல கல்விப்பணி செய்யுறதுக்காக வர்றவுங்க எல்லாருமே 'கலெக்ஷன்'ல ராஜா, ராணிகளாத்தான் இருக்காங்க,'' என்று அடுத்த மேட்டருக்கு 'இன்ட்ரோ' கொடுத்தாள் சித்ரா.
''நீ சொல்றது டிபார்ட்மென்ட் மேட்டர் மாதிரித் தெரியுதே!'' என்றாள் மித்ரா.
''அதே தான்...ஆனா, இது பள்ளிக் கல்வித்துறை விவகாரம். அங்க இருக்குற ஒரு லேடி ஆபீசரைப் பத்தின எச்.எம்., டீச்சர்களோட புலம்பல் தான்,'' என்றாள் சித்ரா.
''ஓ! நீ யாரைச் சொல்ல வர்றேன்னு ஓரளவு தெரியுது,'' என்று சொன்ன மித்ரா, தனது பர்ஸில் இருந்த புது நோட்டை மீண்டும் காட்ட, அதில் சிரித்துக் கொண்டிருந்தார் மகாத்மா...
''செம்ம 'ஷார்ப்'டி நீ... அவங்கள பத்தி, 'நாளொரு குறை பொழுதொரு புகார்'னு வந்துட்டே இருக்கு. இதே மாவட்டத்துல 32 வருஷமா, எச்.எம்.,மா இருந்து, இங்கேயே பதவி உயர்வு 'பொறுப்பு' வாங்கி, அப்புறம் இங்கேயே நிரந்தர பதவி உயர்வும் வாங்கிருக்காங்க. தர்மபுரியில 'போஸ்ட்டிங்' போட்டும் போகவே இல்லை. காரணம், டிபார்ட்மென்ட்ல பெரிய இடத்துல இருக்குற ஆபீசரோட ஆதரவுதானாம்,'' என்றாள் சித்ரா.
''அது சரி! அவுங்க மேல இப்போ என்ன கம்ப்ளைன்ட்?''
''வசூல் தான். தனியார் நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு 'விசிட்'டே போறதில்லையாம். ஆனா, அவுங்க ஜீப்பை ஒர்க்ஷாப்ல விட்டுட்டு, அதுக்கு நேரடியா அங்க போய், ஒவ்வொரு ஸ்கூல்காரங்களையும் ஆளுக்கு அஞ்சாயிரம் அங்க கொடுக்கச் சொல்லிருக்காங்க. டீச்சர்ஸ்கிட்ட பேசுனா, ஏகப்பட்ட கதை சொல்றாங்க'' இருவரும் தேநீர் குடித்து, பில் கொடுத்து விட்டு, வெளியே வந்தனர். தனது 'டியோ'வை கிளப்பினாள் மித்ரா. பின்னால் சித்ரா அமர, வண்டி டவுன்ஹால் பக்கம் பறந்தது. மாநகராட்சி அலுவலகத்தைக் கடக்கும்போது கேட்டாள் மித்ரா.
''அக்கா! கார்ப்பரேஷன் ஆபீசர்க பல பேரு இப்ப தான் கொஞ்சம் நிம்மதியா இருக்காங்க!''
''ஏன்டி... கவுன்சிலர்க இம்சை இல்லாம இருக்கா?,'' என்று சிரித்தாள் சித்ரா.
''அதைக் கூட சமாளிச்சிருவாங்கக்கா. இது, 'டுபாக்கூர் ரிப்போர்ட்டர்'களோட மிரட்டல் இம்சை. கோயம்புத்துார்ல தான், வேற எந்த ஊர்லயும் இல்லாத அளவுக்கு, புதுப்புதுப் பேர்ல பத்திரிகைகளை ஆரம்பிச்சு, அதிகாரிகள், பிசினஸ் பண்றவுங்க, இண்டஸ்ட்ரிகாரங்க எல்லாரையும் மெரட்டுறது அதீதமா இருக்கு. அதுல தான், இப்போ ரெண்டு பேரை போலீஸ் அரெஸ்ட் பண்ணிருக்காங்க,'' என்றாள் மித்ரா.
''அவுங்க கார்ப்பரேஷன் ஆபீசர்களை மெரட்டுனாங்களா?'' என்றாள் சித்ரா.
''ஒருத்தரை இல்லை; பட்டியல் போட்டு, 15 பேரை மெரட்டி, அப்பப்போ பணம் பறிச்சிருக்காங்க. இதே மாதிரி, ரிஜிஸ்ட்ரேஷன் டிபார்ட்மென்ட், கலெக்ட்ரேட், கமர்சியல் டாக்ஸ் டிபார்ட்மென்ட்ன்னு பல பேர்ட்ட 'பறிச்சிட்டே' இருந்திருக்காங்க. இப்போ, ரெண்டு பேரை கைது பண்ணிருக்காங்க. சில 'டுபாக்கூர் நிருபர்'களை 'குண்டாஸ்'ல போடுறதுக்கு சிட்டி போலீஸ் தீவிரமா வேலை பார்த்துட்டு இருக்காம்,'' என்றாள் மித்ரா.
குறுக்கிட்ட சித்ரா, 'எனக்கொரு சந்தேகம்... தப்பு செய்யாத அதிகாரிங்க, எதற்கு பயப்படோணும்? மடியில கணம் இருந்தாதானே வழில பயமிருக்கும். மித்து...நம்மூரு பெரிய போலீஸ் ஆபீசரைப் பத்தி, ஒரு குரூப், 'வாட்ஸ் ஆப்'லயும், 'பேஸ்புக்'லயும் தாறுமாறா தகவல்களைப் பரப்பிட்டே இருக்காம். அதுல, அந்த ஆபீசரும் செம்ம, 'காண்டா' இருக்காராம். தகவல்களைப் பரப்புனது யாருன்னு ஆதாரமெல்லாம் திரட்டிட்டாங்களாம்; சீக்கிரமே ரெண்டு பேரை துாக்கப் போறாங்களாம்,'' என்றாள் சித்ரா.
வாகன நெரிசலுக்கு இடையே, விடாமல் அலறியபடி, 108 ஆம்புலன்ஸ் ஒன்று, திக்கித் திணறி கடந்து கொண்டிருந்தது.
''அக்கா! நம்மூரு ஜி.எச்.,க்கு 60, 65 கோடின்னு செலவழிச்சு, ஏழை மக்களுக்காக கவர்மென்ட் சார்புல புதுக் கட்டடம் கட்டி, எக்யூப்மென்ட் எல்லாம் கொடுத்திருக்காங்க. ஆனா, அங்க இருக்குற புதுப் பொருள் எல்லாம், ரகசியமா வெளியே போகுதாம்,'' என்று அதிர்ச்சித் தகவலை ஆரம்பித்தாள் மித்ரா.
''ஏய்! என்னடி சொல்ற...அப்பாவி ஜனங்களுக்குக் கொடுத்ததை இப்பிடி செய்யுறதுக்கு யாருக்கு மனசு வருது?'' என்று ஆதங்கப்பட்டாள் சித்ரா.
''அங்க சர்ஜரி பண்ற டிபார்ட்மென்ட்டுக்கு நிறையா, 'எக்யூப்மென்ட்ஸ்' புதுசா கொடுத்திருக்காங்க. அதுக்கு தலைமைப் பொறுப்புல இருக்குற ஒருத்தரு, ஏற்கனவே ஜி.எச்.,ல இருந்த பழைய பொருட்களை ரிப்பேர் பண்ணி, கணக்குக்கு வச்சிட்டு, புதுசா வந்த பொருளை எல்லாம் தன்னோட, 'கிளீனிக்'குக்கு தள்ளிட்டுப் போயிட்டாராம்,'' என்றாள் மித்ரா.
வண்டி, வாலாங்குளம் பக்கம் திரும்பியது. நினைவுக்கு வந்தவளாய் ஆரம்பித்தாள் சித்ரா.
''என்னடி ஆச்சு, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம். குளமெல்லாம் வளமாகப் போகுதுன்னு வாசிச்சிட்டே இருக்காங்க. எப்ப தான் வேலை ஆரம்பிப்பாங்களாம்?''
''2008 ல ஜே.என்.என்.யு.ஆர்.எம்., திட்டத்துல ஆரம்பிச்ச பாதாள சாக்கடை வேலையே இன்னமும் முடிஞ்சபாடில்லை. அதே மாதிரி இதுவும் சொதப்பிடக்கூடாதுன்னு தான், சென்ட்ரல் கவர்மென்ட், தெளிவா இருக்குறதா சொல்றாங்க. இந்த திட்டப்பணிகளைக் கண்காணிக்கிறதுக்குன்னே ஒரு ஏஜன்ஸியை நியமிக்கிறாங்களாம். கவுன்சிலுக்கு எந்தத் தீர்மானமும் வராது,'' ''அப்பிடின்னா வேலை 'குவாலிட்டி'யா இருக்குமா?''
''அதை 'ஆடிட்' பண்றதுக்கும் ஒரு 'டீம்' போடுறாங்க. ஏகப்பட்ட கிடுக்கிப்பிடியோட தான், 'பண்ட்' ஒதுக்குவாங்க''
''ஆனா, இவ்ளோ பணத்தை, குளத்துல போடுறதுக்குப் பதிலா, ரோடுகளை மேம்படுத்துறதுக்கு ஒதுக்குனா என்னன்னு ஒரு 'டிஸ்கஷன்' நடக்குதாமே,'' என்று சித்ரா கேட்க, தனது கோபத்தைக் காட்டும் விதமாக, ஆக்சிலேட்டரை வேகமாக முறுக்கினாள் மித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X