குழந்தையைப் போற்றும் குழந்தையாக வாழ்வோம்!| Dinamalar

குழந்தையைப் போற்றும் குழந்தையாக வாழ்வோம்!

Added : நவ 30, 2016 | கருத்துகள் (1)
 குழந்தையைப் போற்றும் குழந்தையாக வாழ்வோம்!“கடவுளுக்கு இன்னும் மனிதனிடம் சலிப்பு ஏற்படவில்லை என்ற செய்தியுடன் ஒவ்வொரு குழந்தையும் பிறக்கிறது” என்பார் கவியரசர் தாகூர்.
ஒரு முறை அவர் ஐரோப்பாவில் ஸ்ட்ராஸ்போர்க் என்னும் நகரத்தில் ஒரு வீட்டில் தங்கி இருந்தார். அப்போது அந்த வீட்டில் இருந்த குழந்தை ஒன்று அவருடைய சிந்தையைக் கவர்ந்தது. அருகே சென்று அக்குழந்தையை அன்போடு பார்த்தார். அவரது மூக்குக் கண்ணாடியை அந்தக் குழந்தை, தனது பூங்கையின் சிறுவிரல்களால் பற்ற முயன்றது.
உள்ளம் நெகிழ்ந்த தாகூர், “இந்த அழகு மிக்க இளங்குழந்தையின் சிறுவிரல்கள் என் மூக்குக் கண்ணாடியின் புதுமையை ஆராய்ந்து கண்டுபிடிக்க விரும்புகின்றன” என்று எழுதினார். இவ்வாறு அவர் தம் வாழ்நாள் முழுதும் குழந்தையைப் போற்றும் குழந்தையாகவே விளங்கினார்.
“கிழவனுடைய அறிவு முதிர்ச்சியும், நடுவயதிற்கு உள்ள மனத்திடனும், இளைஞனுடைய உத்ஸாகமும், குழந்தையின் ஹிருதயமும் தேவர்களே, எனக்கு எப்போதும் நிலைத்திருக்கும் படி அருள் செய்க”
என்பதே பாரதியாரின் பிரார்த்தனை.குழந்தை செல்வம் ஒருவர் தம் வாழ்வில் வகை வகையான செல்வங்கள் படைத்தவராக இருக்கலாம். ஆயினும், குழந்தைச் செல்வம் பெற்றவராகத் திகழவில்லை என்றால், அவரது வாழ்க்கை முழுமையான ஒன்றாக இராது. இக் கருத்தினைத் தன்னகத்தே கொண்ட பாண்டியன் அறிவுடை நம்பியின் புறநானுாற்றுப் பாடல்
“படைப்புப் பலபடைத்துப் பலரோடு உண்ணும்உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக்குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்மயக்குறு மக்களை இல்லோர்க்குப்பயக்குறை இல்லை தாம் வாழும் நாளே!”
சிறுகுழந்தை ஓர் அடி வைப்பதற்கும், அடுத்த அடி எடுத்து வைப்பதற்கும் இடையே சிறிது கால இடைவெளி விட்டு, தத்தித் தத்தி நடக்கும். தன் சிறிய கையை நீட்டி, உணவில் இட்டு, தொட்டு, வாயால் கவ்வி, கையால் துழாவி, நெய்யுடன் கலந்த சோற்றைத் தன் உடலில் பூசிக் கொள்ளும். இங்ஙனம் அறிவை இன்பத்தால் மயக்கும் குழந்தைகளைப் பெறாதவர்களின் வாழ்நாள்கள் பயனற்றவை.
“ஒரு மனிதன் வாழ்ந்தான் என்பதற்கு, அவன் ஒரு வீடாவது கட்டி இருக்க வேண்டும், ஒரு குழந்தையாவது பெற்றிருக்க வேண்டும், ஒரு நுாலாவது எழுதி இருக்க வேண்டும்”
என்கிறது இத்தாலியப் பழமொழி.வள்ளுவர் கூறியது
வள்ளுவரைக் குறித்து வழங்கி வரும் கதைகள் அவரது துணைவியாரின் பெயர் வாசுகி என்கின்றன. ஆனால், அவர்களுக்குக் குழந்தைச் செல்வங்கள் இருந்தனவா, இருந்தால் எத்தனை என்பது பற்றி யாதொரு குறிப்பினையும் அவை தெரிவிக்கவில்லை. ஒன்று மட்டும் உண்மை:
இல்வாழ்க்கையைச் செம்மையாக நடத்தி, நலமான வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ந்து, குழந்தைச் செல்வங்களைப் பெற்று நிறைவாக வாழ்ந்த ஒருவராலேயே பாட முடியும் எனக் கூறும் அளவிற்கு 'மக்கட்பேறு' அதிகாரத்தில் இடம் பெற்றுள்ள பத்துக் குறட்பாக்களும் விளங்குகின்றன. ஓர் எடுத்துக்காட்டு:
“குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர்”

என்ற குறட்பாவில் வரும் 'குழல்' என்பது ஆண் குழந்தையையும், 'யாழ்' என்பது பெண் குழந்தையையும் குறிப்பதாகக் கருதுவதற்கு இடம் உள்ளது. கண்ணன் தன் கையில் புல்லாங்குழல் வைத்திருப்பதும், கலைமகள் தன் கையில் வீணையைக் (யாழ் என்பது பண்டைய இசைக்கருவி) கொண்டிருப்பதும் கவனிக்கத்தக்கது. எனவே, ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாக இரு குழந்தைச் செல்வங்களைப் பெற்றவராக வள்ளுவர் இருந்திருக்கலாம். இது மேலாய்வுக்கு உரியது.
குழந்தை தொழிலாளர் நம் சமூகத்தில் குழந்தைகள் நிலை என்ன? இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பதினான்கு வயதிற்கு உட்பட்ட லட்சக்கணக்கான சிறுவர் சிறுமியர் ஐந்து ரூபாய்க்கும் பத்து ரூபாய்க்கும் ஒரு நாளைக்கு 12 மணியில் இருந்து 16 மணி வரை உழைத்து வருகின்றனர். கவிஞர் வைரமுத்து 'இரும்படிக்கும் ரோஜாக்கள்' என்னும் கவிதையில் முதன்முதலில் இக் கொடுமைக்கு எதிராக அழுத்தமாக குரல் கொடுத்துள்ளார்.
சிவகாசியின் வெடி மருந்துக் கிடங்குகளில் எழுபதாயிரம் பூக்கள், - காஷ்மீரின் கம்பளத் தொழிற்சாலைகளில் ஒரு லட்சம் பிஞ்சுகள், - மேற்கு வங்கத்தின் செங்கற் சூளைகளில் நாற்பதாயிரம் தளிர்கள், - சூரத்தின் வைரத் தொழிற்சாலைகளில் முப்பதாயிரம் மொட்டுகள், - டெல்லியின் டீக்கடைகளில் அறுபதாயிரம் பிஞ்சுகள், - பெரோஸாபாத்தின் வளையல் கூடங்களில் நாற்பதாயிரம் நாற்றுகள், அலிகாரின் பூட்டுத் தொழிற்சாலைகளில் பத்தாயிரம் மலர்கள் எனக் குழந்தைத் தொழிலாளர்கள் நாடெங்கும் கல்வி கற்கும் நல்வாய்ப்பினை இழந்து, பல்வேறு நோய்களின் தாக்குதல்களுக்கு இடையே பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
அவர்களை, 'இரும்படிக்கும் ரோஜாக்கள்', 'பொதி சுமக்கும் பூக்கள்', 'தாய்ப்பாலுக்குச் சம்பளம் கட்டச் சம்பாதிக்கும் சிசுக்கள்', 'சிலுவையில் அறையப்பட்ட சின்னச் சின்ன ஏசுகள்' என்னும் அருமையான குறியீடுகளால் - குறிப்பிடுகிறார் வைரமுத்து.
'பணயப் பாண்டங்களாய் - உயிர்ச் சில்லரை-களாய் - காமாந்தக்காரர்களின் ஏமாந்த துாதுவர்களாய் - மன்மத வில்லுக்கு வளையுண்ட கரும்புகளாய் - போதை மாத்திரை கடத்தும் சதைப் பெட்டிகளாய் - பிச்சைத் தொழிலில் பேசும் திருவோடுகளாய் - எத்தனை எத்தனை இந்நாட்டு மன்னர்கள்…?' என்னும் கூரிய கேள்விக் கணையினையும் அவர் தம் கவிதையின் வாயிலாக முன்வைக்கின்றார். கலீல் ஜிப்ரானின் வைர வரிகள்
பெற்றோர்கள் தங்கள் நெஞ்சங்களில் கல்வெட்டுப் போல பொறித்து வைத்துக் கொள்ள வேண்டிய - வாழ்வில் பின்பற்ற வேண்டிய - உலகப் புகழ் பெற்ற கலீல் ஜிப்ரானின் வைர வரிகள் இவை:
“உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்லர்.
அவர்கள் உங்கள் மூலமாக வந்தவர்களே அல்லாமல் உங்களில் இருந்து வந்தவர்கள் அல்லர்.
அவர்கள் உங்களுடனே இருந்த போதிலும் உங்களுடைய உடைமைகள் அல்லர்.
நீங்கள் அவர்களுக்கு உங்கள் அன்பை மட்டுமே கொடுக்கலாம். உங்கள் எண்ணங்களை அல்ல.
ஏனெனில், அவர்களுக்கு என வேறு எண்ணங்கள் உள்ளன…
நீங்கள் அவர்களைப் போல இருக்கப் போராடலாம். ஆனால், உங்களைப் போல் அவர்களை ஆக்க முயலாதீர்கள்.
ஏனெனில், வாழ்க்கை பின்னோக்கிப் போவதும் இல்லை, நேற்றோடு தங்கி விடத் தாமதிப்பதும் இல்லை”.இவ் வரிகள் வெறும் வார்த்தையாக இல்லாமல், பெற்றோர்கள் பின்பற்றும் வாழ்க்கையாக அமைந்தால் பெற்றோர் - குழந்தை உறவு என்பது என்றென்றும் இனிக்கும் நல்லுறவாகவே இருக்கும்!
மகாத்மாவாக… “குழந்தை துாய்மையிலே தும்பை மலர் சிரிப்பிலே, முல்லை மலர் நடையிலே குருவி மழலைப் பேச்சிலே, தேனாறு குழந்தையைப் போற்றினால் மகாத்மாவாகி விடலாம். இது சத்தியம்” என்பது மூதறிஞர் வெ.சாமிநாத சர்மாவின் அமுத மொழி.
அவரது கருத்தில், “உலகத்தில் உள்ள மனிதர்கள் எல்லோரும் குழந்தைகளாகி-விட்டால் - குழந்தை நெஞ்சம் பெற்று விட்டால் போரே இராது. மனிதன், நாள்தோறும் இறந்து, பிறக்க வேண்டி இராது: பொறாமைத் தீயிலே பொசுங்கிக் கருக வேண்டி இராது”
பேராசிரியர் இரா.மோகன் எழுத்தாளர், மதுரை94434 58286

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X