வரி பணம், கறுப்பு பணம், செல்லாத நோட்டு!| Dinamalar

வரி பணம், கறுப்பு பணம், செல்லாத நோட்டு!

Added : டிச 03, 2016 | கருத்துகள் (6)
வரி பணம், கறுப்பு பணம், செல்லாத நோட்டு!

நம் நாட்டில் நடைபெறும் ஆட்சி, ஜனநாயகம் என்ற பெயரில் நடக்கும் பணநாயக ஆட்சி தான். இந்த பணநாயக ஆட்சியில், 'கார்ப்பரேட்டுகள்' எனப்படும், பெரும் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பெரு வணிகர்கள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றனர். பல முறைகேடுகளில் ஈடுபட்டு, இத்தகையோர் சேர்த்து வைத்திருக்கும் கோடிக் கணக்கான கறுப்புப் பணம், நாட்டின் பொருளாதாரத்திற்கு சவாலாக, தனித்த பொருளாதார சக்தியாக விளங்குகிறது. இதனால், ஜனநாயகத்தின் காவலர்களாக இருந்து வரும் சாமானியர்கள், மக்கள் தொகையில், 60 சதவீதம் இருக்கும் போதிலும், தங்கள் அடிப்படை உரிமைகளையும், சலுகைகளையும் பெற முடியாமல், அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்; இது, தேசிய அவமானம்.இப்பண நாயகத்திற்கு தீனி போடுவது கறுப்புப் பணம். அது, இரு விதங்களில், தன் கைவரிசையை காட்டுகிறது. பெரிய தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்களின் கையிலிருக்கும் அது, பங்குச்சந்தை முதலீடுகளாகவும், வெளிநாட்டு சொத்துகளாகவும் மாறுகிறது. தேர்தல் நேரங்களில் அது, வாக்காளர்களுக்கு லஞ்சமாக கொடுக்கப்பட்டு, தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சியை பிடிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.மற்றொரு விதத்தில், லஞ்சம், ஊழல் மூலம் சம்பாதிக்கப்படும் பணம், கறுப்புப் பணமாக மாறி, வீடுகள், மனைகள், நகைகள், ரொக்கம் என, பல வடிவங்களில் சொத்துகளாக மாற்றப்படுகின்றன.இந்த கறுப்புப் பணம், இவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது... சந்தேகமே இல்லாமல், பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரி பணத்திலிருந்து தான் கிடைத்துள்ளது. பொதுமக்கள் கொடுக்கும் வரிப்பணம், பல வழிகளில் சுரண்டப்படுகிறது. வளர்ச்சி மற்றும் சமூகநல திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியிலிருந்து, 70 சதவீதத்தை, அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், ஒப்பந்ததாரர்கள் பங்கு போட்டு கொள்கின்றனர். மீதமுள்ள, 30 சதவீத பணம் தான், திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.பெரும் தொழிலதிபர்கள், வங்கிகளில் கடனாக பெறும் கோடிக் கணக்கான பணத்தை திருப்பிச் செலுத்தாமலும், வரி ஏய்ப்பு செய்தும், பல ஆயிரம் கோடி ரூபாயை, கறுப்புப் பணமாக சேர்த்து வைத்துள்ளனர்.ஆக, மொத்தத்தில், இந்த சீர்கேடுகளால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தனி மனித வாழ்க்கை தரம் கடுமையாக பாதிக்கப்பட்டு, வேலையில்லாத திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பணவீக்கம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்றவை நிரந்தரமாகி விட்டன. இந்த சீர்கேடுகளை போக்க, கறுப்புப் பணத்தையும், கள்ளப் பணத்தையும் ஒழித்துக் கட்ட வேண்டிய நிர்ப்பந்தம், மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அதை காலத்தே செய்யாவிட்டால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி படிப்படியாக குறைந்து விடும்.அவ்வாறு ஏற்பட்டால், பழைய படி, பணக்கார நாடுகளிலிருந்தும், உலக வங்கியிடமிருந்தும் பல லட்சம் கோடிகளை, நம் நாடு கடனாக பெற வேண்டிய கேவலம் உண்டாகும். உணவுப் பொருட்களை கூட, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.இதை கருத்தில் கொண்டு தான், பிரதமர் மோடி, '500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என, அதிரடியாக அறிவித்தார். மத்திய அரசின் இந்த நடவடிக்கையின் நோக்கம், கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டு வருவதும், கள்ளப் பணத்தை ஒழிப்பதுமே ஆகும். நோக்கம், மிக சரியானது தான்; அதில் குறை காண்பதற்கு எதுவுமில்லை. ஆனால், அந்த நோக்கத்தை செயல்படுத்திய விதம் தான், பொதுமக்களுக்கு சிரமங்களை கொடுத்து விட்டது. தக்க முன்னேற்பாடுகளுடன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தால், பொதுமக்கள் இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. இத்தகைய அசம்பாவிதங்கள் நிகழ காரணம், மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும், போதிய அளவில் சில்லரை ரூபாய் நோட்டுகளை, வங்கிகள் மற்றும் வங்கிகளின், ஏ.டி.எம்., இயந்திரங்களில் வைக்க தவறியது தான்; இது, தவிர்க்கப்பட்டிருக்கலாம். மத்தியில், பா.ஜ., அரசு பதவி ஏற்ற உடனேயே, வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை வெளிக்கொணர, சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து, உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடவடிக்கையில் இறங்கியது. அதற்கு, ஒருசில நாடுகள் சரி வர மத்திய அரசுடன் ஒத்துழைக்காத காரணத்தால், முழு அளவில் வெற்றி பெற முடியவில்லை.இந்நிலையில் தான், மத்திய அரசு, உள்நாட்டில் புழக்கத்தில் இருக்கும் கறுப்புப் பணத்தை கைப்பற்றவும், கள்ளப் பணத்தை ஒழிப்பதிலும் தீவிரமாக இறங்கியுள்ளது. அதனால், பொதுமக்களுக்கு சில கஷ்டங்களும், அசவுகரியங்களும் ஏற்படவே செய்யும். நாட்டு நலன் கருதி, பொதுமக்கள் அவற்றை சகித்துக் கொள்ளத் தான் வேண்டும். அதே சமயம், அசவுகரியங்கள் ஒன்றிரண்டு நாட்களுக்கு மேல் நீடிக்காதவாறு, அரசும் பார்த்துக் கொள்ள வேண்டும்.தொடரட்டும் கறுப்புப் பண வேட்டை!
ஜி.கிருஷ்ணசாமி- கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் (பணி நிறைவு)எழுத்தாளர், சிந்தனையாளர் -

இ - மெயில்:

krishna_samy2010@yahoo.comWe use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X