தேனி: முதல்வர் ஜெ., மறைவை ஒட்டி தேனி மாவட்டம் முழுவதும் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது. மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
முதல்வர் ஜெ., மறைவை தொடர்ந்து தேனி மாவட்டம் பெரும் சோகத்தில் மூழ்கியது.
பல இடங்களில் அவர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அ.தி.மு.க., தொண்டர்கள் பலர் ஜெ.,வுக்காக மொட்டை போட்டனர்.
அரப்படிதேவன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, காமயகவுண்டன்பட்டி, அணைப்பட்டி, ராயப்பன்பட்டி, ஆனைமலையன்பட்டி, கோகிலாபுரம், உத்தமபாளையம், புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பெண்கள், மூதாட்டிகள் ஜெ.,படத்தின் முன் ஒப்பாரி வைத்து அழுதனர்.
தேனி, பெரியகுளம், கம்பம், கூடலுார், ஆண்டிபட்டி உள்ளிட்ட நகரங்கள், தேவதானப்பட்டி சுற்றியுள்ள கிராமங்களில் அரசியல் கட்சியினர், மக்கள் சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து மவுன ஊர்வலம் நடந்தது.
1989 சட்டசபை தேர்தலில் போடியில் சேவல் சின்னத்தில் ஜெ., போட்டியிட்டு வெற்றி பெற்று, முதல் பெண் எதிர்க்கட்சி தலைவரானார்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இத்தொகுதியில் அனைத்து கட்சியினர் சார்பில் அவரது நினைவாக மவுனஊர்வலம் நடத்தப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆட்டோ, வாடகை கார்கள் என எதுவும் ஓடவில்லை.
கடைகள், ஓட்டல்கள், பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டிருந்தன.
700க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெற வில்லை.
சபரிமலைக்கு எந்த தடையுமின்றி ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் சென்றன.
மூணாறு: மூணாறில் நேற்று காலை 11 மணி வரை வர்த்தக சங்கத்தினர் கடைகளை அடைத்து இரங்கல் தெரிவித்தனர்.
அனைத்து கட்சி சார்பில் மவுன ஊர்வலம், இரங்கல் கூட்டமும் நடந்தது.
*மூணாறில் இருந்து தேனி மற்றும் உடுமலைபேட்டைக்கு இயக்கப்பட்ட கேரள அரசு பஸ்கள் நேற்று முன்தினம் மாலை முதல் நிறுத்தப்பட்டன.
* மறையூரில் நேற்று மாலை 4 மணி முதல் 6மணி வரை கடைகள் அடைக்கப்பட்டன. மவுன ஊர்வலம், இரங்கல் கூட்டம் நடந்தது.
*கேரளாவில் இருந்து குமுளி வழியாக தமிழகப்பகுதிக்கு இயக்கப்பட்ட அம்மாநில அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டது. ஆனால் கேரள எல்லையில் கடைகள் திறந்திருந்தன.