ஜெயலலிதாவின் மறைவு, தமிழக விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் பேரிழப்பாக அமைந்துள்ளது. முதல்வராக, ஜெயலலிதா பங்கேற்ற கட்சி நிகழ்ச்சிகள், அரசு விழாக்களில், தானும் ஒரு விவசாயி என்பதை பலமுறை சுட்டிக்காட்டி பேசியுள்ளார். இதுமட்டுமின்றி, தேர்தலில் போட்டியிடும் போது, வேட்புமனுவில், தன்னை விவசாயி என்றே குறிப்பிட்டு உள்ளார். தன் ஆட்சிக் காலத்தில், விவசாய தொழிலை மேம்படுத்துவதில், அதிக ஆர்வம் காட்டினார். இதற்காக, பல்வேறு சிறப்பு திட்டங்களையும் செயல்படுத்தினார். கடந்த, 2011ல், முதல்வராக பொறுப்பேற்ற பின், தமிழகத்தில், இரண்டாவது பசுமை புரட்சி திட்டம் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக, விவசாயிகளின் பிரதான பிரச்னையான, நீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு, நீண்ட சட்ட போராட்டங்களை நடத்தினார். இதன் மூலம், முல்லைப் பெரியாறு பிரச்னையில், தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட்டது. காவிரி பிரச்னையில், தமிழகத்தின் உரிமையை மீட்பதற்கு, தொடர்ந்து சட்டப் போராட்டங்கள் நடத்தினார். நீண்ட காலத்திற்கு பின், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு, மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. இவரது முயற்சி காரணமாகவே, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி முறைப்படுத்தும் குழுக்களை அமைப்பதற்கு, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. டெல்டா மாவட்டங்களில், பாசன பிரச்னையால், சாகுபடி பாதிக்கும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, குறுவை பருவ நெல் சாகுபடிக்கு, முதன்முதலில், சிறப்பு திட்டத்தை செயல்படுத்தினார். தற்போது, நடந்து வரும் சம்பா பருவ நெல் சாகுபடிக்கும், சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக, விவசாயிகளுக்கு விதைகள், உரங்கள், நுண்ணுாட்ட சத்துக்கள், பாசன கருவிகள் வழங்குவதற்கு, மானியம் வழங்கப்படுகிறது. இதற்காக, பல கோடி ரூபாயை, அரசு செலவிட்டு வருகிறது. 2014ல், கடுமையான வறட்சி ஏற்பட்டது. இதனால், விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டது. விவசாயிகளின் நலனை காப்பதற்காக, வறட்சி நிவாரணத்தை வழங்கினார். முதன்முதலாக, ஜெயலலிதா ஆட்சியில் தான், விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டது. இதுமட்டுமின்றி, 'கெயில்' எரிவாயு, 'ஷேல்' எரிவாயு திட்டங்களை தடுப்பதற்கும், ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார். இதற்காக, சட்டசபையில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. சிறுவாணி அணை குறுக்கே, கேரளா அணை கட்டுவதும், காவிரியின் குறுக்கே, கர்நாடகா, மேகதாது அணை கட்டுவதும் நிறுத்தப்பட்டது.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE