சென்னை: மறைந்த, முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்த, 'அம்மா' உணவகங்கள், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த மக்களுக்கு, இலவசமாக உணவளித்து, பசி போக்கின.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக, ஓமந்துாரார் தோட்டத்தில் உள்ள, ராஜாஜி அரங்கில் நேற்று வைக்கப்பட்டு இருந்தது. தமிழகம் முழுவதும் இருந்து, லட்சக்கணக்கான மக்கள் குவிந்து, அஞ்சலி செலுத்தினர். இரங்கல் தெரிவிக்கும் வகையில், சென்னையில் கடைகள் முற்றிலும் மூடப்பட்டிருந்தன. இதனால், பசி போக்க வழியின்றி மக்கள் தவித்தனர். ஜெயலலிதா திறந்து வைத்த, அம்மா உணவகங்கள், அவர்களுக்கு கை கொடுத்தன. மாநகராட்சியில் உள்ள, 407 உணவங்களும், வழக்கத்தை விட சுறுசுறுப்புடன் இயங்கின. இங்கு, காலை, மதியம், இரவு என, மூன்று நேரங்களிலும், இலவசமாக உணவு வழங்கப்பட்டது.
இது, அஞ்சலி செலுத்த வந்தோருக்கும், கடைகள் மூடப்பட்டதால் தவித்த மக்களுக்கு பெரும் உதவியாக இருந்தது. முதல்வரின் திட்டங்களில் பெரிதும் வரவேற்பை பெற்ற அம்மா உணவகங்கள், அவரது இறுதி நாளிலும், மக்களின் பசியாற்றும் சேவையை செய்துள்ளன.