சண்டை நாடாக விளங்கும், அண்டை நாட்டில் அச்சடித்த பணத்தை, நம் நாட்டில் புழக்கத்தில் விட்டு, நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க நினைக்கும் பயங்கரவாதிகள்; எளிய மக்களைப் பற்றி கவலைப்படாத பண முதலைகள்; கட்சியை முன்னிறுத்தி, சில அரசியல் கட்சிகள் செய்யும், நாட்டின் முன்னேற்றத்தை தடுக்கும் செயல்கள் போன்றவற்றை தடுக்கவே, புழக்கத்திலிருந்த, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை, செல்லாது என, பிரதமர் மோடி அறிவித்தார்.
'சரியான நடவடிக்கை தான்' என, ஊடகங்கள் பலவும் பாராட்டி இருக்கின்றன.
திருக்குறளின், 384வது குறள், 'அறநெறி தவறாமலும், குற்றமேதும் இழைக்காமலும், வீரத்துடனும், மானத்துடனும் ஆட்சி நடத்துபவர்கள், சிறந்தவர்களாவர்' என, கூறுகிறது. அதில் இடம் பெற்றுள்ள, வீரத்துடன், எந்த அச்சமும் இல்லாமல், துணிந்து இந்த அறிவிப்பை, பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். அவர், 'உங்கள் கையில் உள்ள பணம் செல்லாது; செலவழிக்கவே முடியாது; குப்பையில் போடுங்கள்' என, சொல்லவில்லை. 'செல்லாத நோட்டுகளை வங்கியில் மாற்றிக் கொள்ளுங்கள்' என்று தான் சொல்லியுள்ளார்.
எவ்வளவு பணம் நாட்டில் இருக்கிறது என, அரசுக்கு தெரிந்தால் தான், அதற்கு ஏற்றபடி நலத்
திட்டங்களை அமல்படுத்த முடியும். அப்போது தான், பொருட்கள் விலையும், பணவீக்கமும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். அவ்வாறு இல்லை என்றால், சில நாடுகளில் நடந்தது போல, வங்கிகளை இழுத்து மூட வேண்டியது தான். நோட்டை மாற்ற, மக்கள், சில மணி நேரங்கள் வரிசையில் நிற்க வேண்டும்; இதை தவிர வேறு எந்த சிரமங்களும் இருப்பதாகத் தெரியவில்லை. சினிமா, கிரிக்கெட் மேட்ச் போன்ற பல காரணங்களுக்காக, இளைஞர்களும், பிறரும், அதிக நேரம் வரிசையில் நிற்பதை பார்க்கிறோம். நோட்டை மாற்ற, வரிசையில் நிற்பவர்களில், 90 சதவீதம் பேர் நடுத்தர மக்களே; கீழ்த்தட்டு மக்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவர்கள் வழக்கம் போல, பக்கத்து வீடு, நண்பர்கள், உறவினர்களிடம் தங்கள் பணப் பிரச்னையை சொல்லி, தீர்வு காண்கின்றனர். சில மளிகைக் கடைக்காரர்களும், நகைக்கடைக்காரர்களும் பழைய, 500 மற்றும், 1,000 ரூபாய் நோட்டுகளை வாங்கிக் கொள்கின்றனர். சில கடைகளில், 'பழைய, 500, 1,000 நோட்டுகள் வாங்கிக் கொள்ளப்படும்' என, அறிவிப்புப் பலகையே வைத்திருக்கின்றனர். மத்திய அரசின் நிதி சீரமைப்பு நடவடிக்கைக்கு எதிராக கூறப்படும் இன்னொரு குற்றச்சாட்டு, 'முன்னதாகவே அறிவித்திருக்கலாம்' என்பது. அப்படிச் செய்தால், கறுப்பு பணத்தை வைத்திருப்பவர்கள், அந்த பணத்தை வெள்ளையாக மாற்றி விடுவர் என்பதை, குற்றம் கூறுபவர்கள் மறந்து விடுகின்றனர். மக்கள்தொகையில் உலகின் இரண்டாவது பெரிய நாடு, இந்தியா. இங்கு, பணப் புழக்கம் அதிகம் என்பதால் தான், தெருவுக்கு தெரு, ஏ.டி.எம்.,களும், வங்கிகளும் இருக்கின்றன. அதனால் தான், குறுகிய காலத்தில், புதிய நோட்டுகளை புழக்கத்தில் விடுவதில், சிரமம் ஏற்பட்டுள்ளது. நம் நாட்டின் மக்கள் தொகையில், 40 சதவீதத்துக்கு குறையாமல் இளைஞர்கள் இருக்கின்றனர். வரிசையில் நிற்பது, அவர்களுக்கு சிரமமாக இருக்காது. சில வங்கிகள், முதியோர், பெண்கள் நோட்டுகளை மாற்றுவதற்கு தனி வரிசை ஏற்படுத்தி, முன்னுரிமை கொடுத்திருக்கின்றன. எந்த வங்கியும், 'பணம் தர முடியாது' என, திருப்பி அனுப்பியதாக செய்திகள் இல்லை. ரோடு போடும் போது, அந்த வழியே நடக்க முடியாது; வண்டிகளும் போக முடியாது; சுற்றி தான் போக வேண்டும். மக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது என்பதற்காக, 'ரோடு போட வேண்டாம்' என, யாரும் சொல்வதில்லை. இதை கருதியே, பிரதமரும், 'நாட்டு நலனில் அக்கறை வைத்து, வங்கிகளில் பணம் மாற்ற, வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன்' என, சொல்லி இருக்கிறார். மருந்து கசப்பாகத் தான் இருக்கும்; ஆனால், முடிவில் உடல் நலம் தேறும். இப்போது கசப்பாக நிலைமை இருக்கிறது. மருந்து வேலை செய்து, கறுப்பு பண ஆதிக்கம் கட்டுப்படுத்தப்படும் என, நம்புவோம்; நம்பிக்கை தான் வாழ்க்கையை வலுவாக்கும். திருக்குறளின், 466வது பாடலில், திருவள்ளுவர், 'செய்யக் கூடாததைச் செய்வதால் கேடு ஏற்படும்; செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டாலும், கேடு ஏற்படும்' என, கூறியுள்ளார். திருக்குறள் படி, மோடி அரசு, செய்ய வேண்டியதை செய்திருக்கிறது.
- எல்.வி.வாசுதேவன் -
சமூக ஆர்வலர்
இ-மெயில்: lvvasudev@gmail.com