வேகமும், விவேகமும்

Added : டிச 13, 2016
Advertisement
வேகமும், விவேகமும்

'ஞாலம் கருதினும் கைகூடும் காலம்கருதி இடத்தால் செயின்'
மனம் கூறுவதை கேட்டு உடனே தீர்வு காண நினைப்பது வேகம். சூழலுக்கு ஏற்ப, வரும் பயனை அறிந்து தெளிவு காண்பது விவேகம். திருவள்ளுவரும் தகுந்த காலத்தில் ஏற்ற இடத்தில் வேகத்துடனும், விவேகத்துடனும் செயலை செய்தால் இவ்வுலகையே ஆளலாம் என அந்த திருக்குறளில் தெளிவுபடுத்தியுள்ளார். சிந்தனையில்லா வேகம், காட்டாற்று வெள்ளம் போல யாருக்கும் பயன்படாது. தீமையை விளைவிக்கும். அது தன்னையும் துன்புறுத்தி பிறரையும் துன்பத்திற்கு ஆளாக்கி விடும். சிந்தனையுடன் கூடிய வேகம் விவேகமாய் மாறி நதியை போல செல்லும் இடமெல்லாம் பயன் தரும். நாணயத்தின் இரு பக்கங்கள் போல வேகமும், விவேகமும் ஒன்றிணைந்தால் தான் ஆற்றல் உருவாகும். வேகத்திற்கும், விவேகத்திற்கும் இடையே சுவரை எழுப்புவதை விட, பாலத்தை உருவாக்கினால் வாழ்வு வளம் பெறும்.
கருவறையின் தேவரகசியம்
எந்த செயலும் வேகத்துடனும், விவேகமின்றி செயல்படுத்தப்பட்டால் தகுந்த பயன் தராது. தகுந்த பருவத்தில் விவேகத்துடன் செயல்படுவதே நன்மை பயக்கும். பருவத்தே முதிரும் காயே சுவையுள்ள கனியாகும். பருவத்தே முதிரும் கருவே சிசுவாகும். தற்போது வேகம் என்ற பெயரில் செயற்கை முறையில் காய் கனியாக்கப்படுகிறது. குழந்தை பருவம் கனிந்து பிறக்கும் முன்னரே நல்ல காலம், நேரம் கருதி சில பெற்றோர்களால் குழந்தையின் பிறப்பு தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் கருவறை என்பது தேவரகசியம் என்று மந்திரம் உரைக்கிறது.புகழ்வதும், இகழ்வதும் ஈசன் அறியும்; எடுப்பதும், கொடுப்பதும் ஈசன் அறியும்; பிறப்பும் இறப்பும் ஈசன் அறியும் என கூறும் மந்திரம் குழந்தையின் பிறப்பின் ரகசியத்தையும் இறைவனே அறிவார் என்கிறது.ஆக்கின்றான் பின் பிரிந்த இருபத்தஞ்சுஆக்குகின்றான் அவன் ஆதி எம் ஆருயிர்ஆக்குகின்றான் கர்ப்பக் கோளகையுள்இருந்துஆக்குகின்றான் அவன் ஆவது அறிந்தே மாற்றான் வலிமை அறிதல் வெறும் வேகத்துடன் செய்யும் ஆற்றலைவிட, விவேகத்துடன் செய்யும் ஆற்றலே மேன்மையானது.வினைவலியும் தன் வலியும் மாற்றான் வலியும்துணைவலியும் துாக்கிச் செயல்தன்னுடைய வலிமை, மாற்றானுடைய வலிமை, துணையின் வலிமை இவற்றை ஆராய்ந்து செய்வதே விவேகம் ஆகும் என திருக்குறள் விளக்குகிறது. இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர், காலத்தை கணக்கிடாது, மாற்றானின் வலிமையை கருதாது, ரஷ்யாவின் மீது போர் தொடுத்தார். பருவ நிலை மாற்றத்தால் ரஷ்யாவில் ஏற்பட்ட கடும் மழை, பனியால் ஹிட்லரின் வீரர்கள் பலர் இறந்தனர். வெற்றியை எட்ட வேண்டிய ஜெர்மனி விவேகமில்லா வேகத்தால் தோல்வியை தழுவியது. காலமறியா வேகமே, ஹிட்லருக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
வேகத்துடன் இணைந்த விவேகம்
காலத்திற்கு ஏற்ப வேகத்தையும், விவேகமாக மாற்றி கொண்டவர் சுதந்திர போராட்டத்தில் வேகமுள்ள புரட்சி வீரராக திகழ்ந்த அரவிந்த கோஷ். பிறப்பிலேயே கல்வியில் மேன்மையும், செல்வமும் மிக்க குடும்பத்தில் பிறந்து பின் கேம்பிரிட்ஜ் பல்கலையில் ஐ.சி.எஸ்., பயின்று இந்தியா திரும்பினார். இந்தியாவில் சுதந்திர போராட்டம் தீவிரமாக இருந்த நிலையில் அதில் இணைந்து செயல்பட்டார். போராட்டம் கொழுந்து விட்டு எரியும் நிலையில், அலிபூர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு அரவிந்தரே காரணம் என ஆங்கிலேய அரசு குற்றம் சாட்டி கைது செய்தது. அவரை அலிபூர்சிறையில் அடைத்தது. மிகவும் மோசமான அந்த சிறையில், அரவிந்தர் தன்னுடைய வேகத்தை விடுத்து விவேகத்துடன் தியானம், யோகம், இறைவழிபாடு என்று தன்னை ஈடுபடுத்தி கொண்டார். சிறையில் இருந்து வந்தவுடன் மீண்டும் அவர் மீது கொலை குற்றம் சாட்டப்பட்டது. அதனால் 1910ல் கோல்கட்டாவில் இருந்து தப்பி புதுச்சேரிக்கு இடம் பெயர்ந்தார். அங்கே ஆன்மிகத் தேடலுடன் இயல்பான தன்னுடைய வேகத்தை நிலைப்படுத்தி, விவேகத்தால் கவிஞர், யோகி, தத்துவ ஞானி என்ற பன்முகம் கொண்ட அரவிந்தர் என்ற ஞானியாக மாறினார்.
இறையறமே நல்லறம்
சிங்கத்தின் வேகமும், யானையின் பலமும், விடுதலை வேட்கையும், யாருக்கும் அஞ்சாத நெஞ்சமும், எண்ணத்தில் ஈரமும் உடையவர்கள் மருதுபாண்டியர் மன்னர்கள். இவர்களை அடி பணிய வைக்க முடியாது என கருதிய ஆங்கிலேய அரசு, தங்களிடம் சரணடையா விட்டால், அவர்கள் உயிரினும் மேலாக கருதிய காளையார் கோவிலை தகர்த்து விடுவதாக எச்சரித்தனர். 'பண்பாடிய அடியவர்களுக்கு இறைவன் மண் சுமந்து தன் பொன் மேனியால் புண் சுமந்தான்' என குன்றக்குடி அடிகள் கூறியது போல, மருது பாண்டியர்கள் தங்களின் இயல்பான வேகத்தை விடுத்து, விவேகத்துடன் மக்களுக்காகவும், மக்களை சுமக்கும் இறைவனுக் காகவும் ஆங்கிலேயரிடம் அடிபணிந்து தங்களையே அர்ப்பணித்தனர். உயர்ந்து நிற்கும் காளையார்கோவிலை காணும் போதெல்லாம் கண்களில் நீர் மல்கி கலங்கும் விழிகளுடன் மக்கள், மருதுபாண்டியர்களை நினைவு கூறுகின்றனர்.
விழி வேள்வி
கண் மருத்துவமனையை தோற்றுவித்த டாக்டர் வெங்கடசாமி, மருத்துவம் முடித்து உலக போரின் போது யுத்தகளங்களில் பணிபுரிந்தார். பர்மா காடுகளில் முகாமிட்ட போது, விஷப்பூச்சிகளின் தாக்கத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டு ராணுவப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். பின் கிராமங்களில் தகுந்த மருத்துவ வசதியின்றி மகப்பேறு காலத்தில், தாய்மார்கள் படும் துயர் கண்டு அதை துடைக்க மகப்பேறு மருத்துவம் பயிலத் துவங்கினார். சில மாதங்களில் ஏற்பட்ட தீவிர முடக்கு வாதத்தால் கை விரல்கள் வலுவிழந்து இருந்தது. நண்பர் தந்த அறிவுரையின்படி, விவேகத்துடன் தன் படிப்பை கண் மருத்துவத்துறைக்கு மாற்றி கொண்டார் டாக்டர் வெங்கடசாமி. அதையே சவாலாக ஏற்றுக் கொண்டு, அரவிந்தரின் ஆன்மிக நெறியில் ஈடுபட்டு, சலனமில்லா மனத்துடன், தன்னம்பிக்கையுடன் விவேகானந்தரின் விவேகமுள்ள மொழிகளை தேவவாக்காக ஏற்று அரிய கண் அறுவை சிகிச்சையை செய்து, இன்று லட்சக்கணக்கானோர் கண்ணொளி பெற வழிவகுத்து சாதனை படைத்தார்.இயற்கையின் சீற்றம் விபத்து போன்ற நிகழ்வுகளுக்கு வேகத்தை முதன்மைப் படுத்துவது விவேகமாகும். பயன் கொடுக்கும் நதியும், கடலில் கலந்தவுடன் பயிர்களுக்கு பயனின்றி போய் விடுகிறது. அதுபோல நலம் கொடுக்கும் வேகமும் விவேகமின்றி செய்தால் பலனின்றி போய் விடும். வேகம் என்ற செயல் அனைத்துயிர்க்கும் உரியது. ஆனால் விவேகம் என்ற பண்பு மனிதனுக்கு மட்டுமே உரியதாகும். வேகத்துடன் செய்த செயல்களில் தோல்வி அடைந்தால் அதைக் கண்டு மனம் தளராது, விபரீத முயற்சிகளில் தன்னை ஈடுபடுத்தி கொள்ளாது விவேகமுள்ள மாற்று வழியை சிந்தித்து வெற்றி காண வேண்டும். சிறு துவாரத்தின் வழியே பரந்த வெளியை காண்பது போல விவேகம் என்ற சிறு தேடலால் விரிந்த உலகையே வெல்லலாம். வேகத்தை விவேகத்துடன் இணைத்து வளம் பெறுவோம். வாழ்வில் வெற்றி காண்போம்.
முனைவர் எஸ்.சுடர்கொடிஎழுத்தாளர், காரைக்குடி.

94433 63865

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X