விதவையிடம் பறித்த லஞ்சம் விம்மி வெடிக்குது நெஞ்சம்!| Dinamalar

விதவையிடம் பறித்த லஞ்சம் விம்மி வெடிக்குது நெஞ்சம்!

Added : டிச 13, 2016
Share
வீட்டில் 'டிவி' பார்த்துக் கொண்டிருந்தாள் மித்ரா. அவளுக்கு முன்னால், குட்டி குட்டி வடைகளும், 'கப் அண்ட் சாசரில்' ஆவி பறக்கும் பில்டர் காபியும் இருக்க, ரசித்து ருசித்துக் கொண்டிருந்தாள்.திடீர் 'என்ட்ரி' கொடுத்த சித்ரா, ''ஏண்டி! நான் ஊரெல்லாம் சுத்தி, 'அம்மா' அஞ்சலி பேனர்களை எண்ணிட்டு வர்றேன். நீ உட்கார்ந்து, இங்க 'ஹாயா' காபி குடிச்சிட்டு இருக்க,'' என்று
விதவையிடம் பறித்த லஞ்சம் விம்மி வெடிக்குது நெஞ்சம்!

வீட்டில் 'டிவி' பார்த்துக் கொண்டிருந்தாள் மித்ரா. அவளுக்கு முன்னால், குட்டி குட்டி வடைகளும், 'கப் அண்ட் சாசரில்' ஆவி பறக்கும் பில்டர் காபியும் இருக்க, ரசித்து ருசித்துக் கொண்டிருந்தாள்.
திடீர் 'என்ட்ரி' கொடுத்த சித்ரா, ''ஏண்டி! நான் ஊரெல்லாம் சுத்தி, 'அம்மா' அஞ்சலி பேனர்களை எண்ணிட்டு வர்றேன். நீ உட்கார்ந்து, இங்க 'ஹாயா' காபி குடிச்சிட்டு இருக்க,'' என்று கொந்தளித்தாள்.
''சாரிக்கா! 'வர்தா' புயல் நம்ம ஊருக்கு வராட்டாலும், ஒரே குளிரா இருந்துச்சு. வெளியில எங்கயும் சுத்தப் போகாதடின்னு அம்மா 'கண்டிஷன்' போட்டாங்க,'' என்ற மித்ரா, 'அம்மா! சூடா நாலு வடை, ஒரு பில்டர் காபி' என்று ஓட்டல் போல 'ஆர்டர்' கொடுத்தாள்.
''நீ உங்க 'அம்மா' போட்ட கண்டீஷனுக்கு கட்டுப்படுற. ஆனா, 'அம்மா' இறந்த பிறகு, ஆளுங்கட்சிக்காரங்களுக்கும், அதிகாரிகளுக்கும் குளிர் விட்டுப் போச்சு,'' என்று 'டிரைலர்' ஓட்டி விட்டு, வடையை ருசிக்க ஆரம்பித்தாள் சித்ரா.
''யாரைச் சொல்ற நீ...!'' என்று விழிகளை விரித்தாள் மித்ரா.
''அதிகாரிக, அரசியல்வாதிக எல்லாருக்கும் தான். மாவட்ட ஆபீசர் மேல, ஏகப்பட்ட 'கம்ப்ளைன்ட்' குவியுது. குறை தீர்ப்புக் கூட்டத்துல கொடுக்குற எந்த மனுவுக்கும், எந்த ஆக்ஷனும் இல்லியாம். இங்க வந்து, கை நிறையா 'சம்பாதிக்கிற' அவரு, வாய் நிறையா பல பேரையும் திட்டித் தீர்க்குறாராம்,'' என்றாள் சித்ரா.
''எப்ப பார்த்தாலும் 'ஹரிபரி'யாத் திரியுறாரு; அவரு எதுக்குக்கா திட்டுறாரு?'' என்றாள் மித்ரா.
''அதுதான் தெரியலை; ஏதோ ஒரு விஷயமா, இண்டஸ்ட்ரிக்காரங்க அவரை வந்து பார்த்துட்டுப் போயிருக்காங்க. அவுங்க போன மறுநிமிஷமே, 'இவங்க சொல்றதை நான் கேக்கணுமா'ன்னு 'கமென்ட்' அடிச்சிருக்காரு. அது மட்டுமில்லை... விவசாயிகள் குறை தீர்ப்புக் கூட்டத்துலயும், விவசாயிகளைப் பார்த்து, 'உங்கள்ட்ட வேலை பார்க்கிறவுங்களை, சட்டப்படிதான் நடத்துறீங்களா'ன்னு எகிறி இருக்காரு,''
''அவரை இங்க கொண்டு வந்த முக்கியஸ்தர் இதைக் கேட்டு சந்தோஷப்படுவாரோ?''
''கார்ப்பரேஷன்ல இருக்குற ஆபீசரைப் பத்தியே, அவரு கடுமையான அதிருப்தியில இருக்காராம். அந்த ஆபீசர், இங்க 'ஜாயின்' பண்ணுனப்போ சந்தோஷப்பட்டவரு, இப்போ, 'சின்ன வயசு; நல்லா வேலை பார்ப்பார்னு நினைச்சு கொண்டு வந்தா, இப்பவே இப்பிடி கை நீட்றாரே'ன்னு நொந்து கெடக்காராம். ஆனா, மாவட்ட ஆபீசரைப் பத்தி அவரு என்ன நினைக்கிறாருன்னு தெரியலை,''
''இந்த ரெண்டு ஆபீசர்களும் நல்லா 'டெவலப்' ஆகுறாங்க. ஊரு தான் 'டெவலப்' ஆவுறா மாதிரி தெரியலை,''
மித்ராவின் கருத்தை ஆமோதித்த சித்ரா, சேனலை மாற்றி, காபியை உறிஞ்ச ஆரம்பித்தாள். இசையருவியில், 'கலைவாணியே! உனைத்தானே அழைத்தேன்' என்று ஜேசுதாஸ் உருகி கொண்டிருந்தார்.
''மித்து! பாட்டைக் கேட்டதும், டவுன்ல இருக்கிற ஒரு லேடி வி.ஏ.ஓ., ஞாபகம் வந்துச்சு. அந்தம்மா மேல மூணு தடவை, ஆர்.டி.ஓ.,வுக்கு புகார் போயும் ஒரு நடவடிக்கையும் எடுக்கலை. அதனால, 'என்னை யாராலயும் அசைக்க முடியாது. ஏன்னா, நான் ஆளுங்கட்சி ஆளு'ன்னு, யாரு வந்தாலும் காசைப் புடுங்குறாங்களாம்,'' என்றாள் சித்ரா.
''அது சரி! இப்போ என்ன 'கம்ப்ளைன்ட்' அவுங்க மேல...?'' என்றாள் மித்ரா.
''ஒரு ஏழைப் பொண்ணு; புருஷன் குடிச்சே செத்துட்டான். அவன் பாங்க்ல வச்சிட்டுப் போன, 3,500 ரூபா பணத்தை எடுக்குறதுக்கு, வாரிசு சான்று கேட்ருக்கு அந்தப் பொண்ணு. அதுக்கு, 500 ரூபா கொடுத்தாத்தான் கொடுப்பேன்னு அந்த வி.ஏ.ஓ.,கேட்க, அந்தம்மாவோட அசிஸ்டென்ட், 200 ரூபா கேட்ருக்கார். அலைஞ்சு, அலைஞ்சு அலுத்துப் போயி கடைசியில, 700 ரூபா கொடுத்து தான் அந்த சர்ட்டிபிகேட்டை வாங்கிருக்கு,'' என்றாள் சித்ரா.
''அட அநியாயமே... அந்த காசெல்லாம் விளங்குமா? கறுப்புப் பணத்தை ஒழிக்க எத்தனை திட்டம் கொண்டு வந்தாலும், இந்த மாதிரி கறுப்பு ஆடுகளை அடக்கவே முடியாதோ?'' என்று ஆவேசப்பட்டாள் மித்ரா.
இருவரும் அமைதியாகி, செய்தி சேனலுக்கு மாற்ற, 'கஞ்சா பறிமுதல் தொடர்பான செய்தி ஓடியதைப் பார்த்து, சித்ரா ஆரம்பித்தாள்.
''நம்ம சூலூர்ல பிடிச்சது தான், தமிழ்நாட்டுல பிடிபட்டதுலயே அதிகம் சொல்றாங்க. விசாரிச்சியா மித்து?''
''ஆமாக்கா! சூலூர்ல பிடிபட்டது சும்மா 'சேம்பிள்'தான். துடியலூர்லயும், கவுண்டம்பாளையத்துலயும் இதே மாதிரி 'ரெய்டு' நடத்துனா, பல ஆயிரம் கிலோ கஞ்சா பிடிக்கலாம்,'' என்றாள் மித்ரா.
''யெஸ் மித்து... சமீபமா, உக்கடம், நவஇந்தியா, தடாகம் ரோடு, சிங்காநல்லூர் காமாட்சிபுரம், ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோடு, பட்டணம் ரோடு, வெள்ளக்கிணர் ரோடுன்னு பல இடங்கள்ல, கஞ்சா சேல்ஸ் கொடி கட்டிப் பறக்குது. அத்தனையும் அந்தந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்களோட தயவுல தான் நடக்குது. சில ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்களுக்கு லட்சக்கணக்குல மாமூல் போகுது,'' என்றாள் சித்ரா.
''இவுங்க 'டார்கெட்' எல்லாமே, காலேஜ் பசங்களும், ஆட்டோக்காரங்களும் தான். லேட்டஸ்ட்டா, ஐ.டி., பசங்க பல பேரு, கஞ்சாவுக்கு ரொம்பவும் அலையுறதா கேள்விப்பட்டேன். மெடிக்கல் காலேஜ் ஸ்டூடன்ட்ஸ்களை கஞ்சா ஏஜன்டா ஒரு கும்பல் வச்சிருக்கிறதாவும் பேசிக்கிறாங்க,'' என்றாள் மித்ரா.
காமெடி சேனலுக்கு மாற்றினாள் மித்ரா. சொப்பனசுந்தரியைப் பற்றி கேட்டதற்காக, செந்திலை மாறி மாறி அறைந்து கொண்டிருந்தார் கரகாட்டக்காரன் கவுண்டமணி.
பல முறை பார்த்த காமெடி என்றாலும், வெடித்துச் சிரித்த சித்ரா, ''சொப்பனசுந்தரி காமெடியைப் பார்த்ததும், ஞாபகம் வந்துச்சு. நம்மூரு ஸ்டேஷன்ல வேலை பார்த்த ஒரு 'சொப்பன' லேடி போலீஸ் கதை உனக்குத் தெரியுமா?'' என்று கேட்டாள்.
''பேரே அதுதானா, கற்பனைப் பெயரா?,'' என்று ஆர்வமாய்க் கேட்டாள் மித்ரா.
''இல்லையில்லை. பாதிப்பேரு அது தான். நம்மூர் சிட்டில இருக்குற ஒரு இன்ஸ்பெக்டரோட 'கஸ்டடி'க்கு அந்த சொப்பனசுந்தரி போயிருச்சுன்னு 'கம்ப்ளைன்ட்' போயி, அவுங்களை தூத்துக்குடிக்கு தூக்கி அடிச்சிருக்காங்க. ஆனா, அங்க போக வேணாம்னு சொல்லி, இங்கேயே இருக்க வச்சுட்டாராம் அந்த இன்சு. அவுங்க வீட்டுக்காரரு, முட்டி, மோதி முடியாம, இப்போ கண்ணீரோட பிரிஞ்சு போயிட்டாராம்,'' என்றாள் சித்ரா.
காமெடி சேனலில், 'கடவுள் இருக்கான் குமாரு' படத்தின் விளம்பரம் ஓட, சிரித்தனர் இருவரும்.
''அக்கா! நம்மூர்ல ஏ.ஆர்.,ல இருக்குற ஒரு ஆபீசரு, இன்னும் ரெண்டு மாசத்துல 'ரிட்டயர்டு' ஆகப்போறாரு. ஆனா, அதுக்குள்ள 'சைக்கோ' மாதிரி மாறி, போலீஸ்காரங்களை எல்லாம் படுகேவலமா திட்டிட்டே இருக்காராம். எப்பப் பார்த்தாலும், போதையிலயே மெதக்குற அவரோட ஆபீஸ்க்குள்ள போகவே லேடி போலீஸ் பயப்படுறாங்க,'' என்று மீண்டும் போலீஸ் செய்தி வாசித்தாள் மித்ரா.
''ஒரே கஞ்சா, சரக்குன்னு ஒரே போதை மேட்டராவே இருக்கே. வேற நியூஸ் இல்லியா?,'' என்று விரக்தியாகக் கேட்டாள் சித்ரா.
''ஏன்க்கா! நம்மூரு தொழில் அமைப்புகள் எல்லாம், டிஎம்கே பீரியட்ல மின்தடைக்கு எதிரா, ஒண்ணு கூடுனதுக்கு அப்புறமா இப்பதான், 500 ரூபா, ஆயிரம் ரூபா செல்லாது அறிவிப்புக்கு எதிரா கை கோர்த்திருக்காங்க. என்ன விசேஷம்?'' என்றாள் மித்ரா.
''இந்த அறிவிப்பால, 80 சதவீதம் உற்பத்தி முடங்கிருக்குன்னு சொல்றாங்க. எந்த இண்டஸ்ட்ரியிலயும் வேலை நிக்கலையாம். உண்மையா பார்த்தா, அவுங்கள்ல பாதிப்பேரு கூட, சரியான 'அக்கவுன்ட்' வச்சிருக்கிறதாத் தெரியலை,'' என்றாள் சித்ரா.
''இதே இண்ட்ஸ்ட்ரிகாரங்க, காந்திபுரம் பாலத்தை 'டிசைன்' மாத்துனப்போ ஏன் ஒண்ணு சேரலை? விமான நிலைய விரிவாக்கம் பண்ணாம இருக்குறது, புது விமானங்கள் விடாம புறக்கணிக்கிறது, பை-பாஸ் ரோடு திட்டத்தை கை விட்டதுன்னு எத்தனையோ விஷயம் நடந்தப்போ, ஏன் ஒண்ணு சேர்ந்து, மத்திய, மாநில அரசுகளைக் கேள்வி கேட்காம விட்டாங்க?'' என்று கேள்விகளாய் அடுக்கினாள் மித்ரா.
''கேள்வி கேக்குறதுக்கே ஆளில்லைங்கிறது மாதிரித்தான் இருக்கு நம்மூரு யுனிவர்சிட்டி மேட்டரு''என்றாள் சித்ரா.
''அந்த மேட்டர் சூட போயிட்டு இருந்தப்போ, திடீர்னு சி.எம்., இறந்துட்டதால, அப்பிடியே 'ஆப்' ஆயிருந்துச்சு. இப்போ ஏதாவது டெவலப்மென்ட் இருக்கா?''- கேட்டாள் மித்ரா.
''இந்த மாச கடைசில, பல்கலை செனட் கூட்டம் நடக்கப்போகுது. பணி நியமனத்துல நடந்த ஊழல் பத்தி, சிலபேரு கேள்வி கேட்க தயாரா இருக்காங்களாம். என்ன செய்றதுன்னு தெரியாம, 'வி.சி.,' முழிச்சிட்டிருக்காராம். பேராசிரியருங்க சிலபேரு போராட்டம் நடத்தவும் தயாராகிட்டிருக்காங்களாம்,'' என்று விரிவான ரிப்போர்ட் வாசித்தாள் சித்ரா.
வர்தா புயல் பாதிப்பு பற்றிய காட்சிகளை சேனல்கள் அடுத்தடுத்து அடுக்க, இருவரும் அமைதியானார்கள்.
மழை வலுக்கும் சத்தம் கேட்கவே, இருவரும் வாசலுக்கு வந்து மழையை ரசிக்க ஆரம்பித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X