""அம்மாவுக்கு அஞ்சலி செலுத்தினப்ப, எம்.எல்.ஏ., குலுங்கி அழுதுட்டாராம்,'' என்றபடி, உள்ளே வந்தாள் மித்ரா.
""யாரு, எங்க அழுதாங்க. வெவரமா சொன்னதானே தெரியும்,'' என்று சலிப்போடு சித்ரா கேட்டாள்.
""கட்சிக்காரங்க, தொழில்துறையினர், அஞ்சலி கூட்டம் நடத்தினாங்க. அந்த நிகழ்ச்சியில, தெற்கு எம்.எல்.ஏ., மட்டும், குலுங்கி குலுங்கி அழுதாராம்,'' என்றாள் மித்ரா.
""தெற்கு எம்.எல்.ஏ., நல்லூர் மண்டலத்துல ஆய்வு செஞ்சப்ப, பல ஆர்டர் போட்டிருக்காரு. அதுல, மக்கள் புகார் பதியற நோட்டை, என்னோட ஆளுங்க "போட்டோ' எடுத்து, "வாட்ஸ் ஆப்'ல போடுவாங்கனு சொன்னது தான், கொஞ்சம் ஓவராக இருந்துச்சு. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காட்டி, "சிவப்பு ஸ்கெட்ச் பேனாவில் எழுதி, அதை அப்படியே கமிஷனருக்கு அனுப்பி, புகார் செய்வேன்'னு பகிரங்கமா மிரட்டியிருந்தாரு, அப்படி கோபமா பேசினவருதான், தொழில்துறையினர் நடத்திய இரங்கல் கூட்டத்துல, கதறி அழுதார்னு, மாநகராட்சி அதிகாரிங்க, ரகசியமாக பேசிகிட்டாங்க,'' என்று சித்ரா கூறினாள்.
""ரகசியம்னு சொன்னதும் ஞாபகம் வருது. ரேஷன் கார்டு கணக்கெடுப்பு, வீடு வீடா நடத்திட்டு இருக்காங்க. அதுல, கார், "ஏசி', கான்கிரீட் வீடு இருக்கறவங்களுக்கு, இலவச அரிசி கொடுக்கறத குறைக்க போறாங்க. அதனால, கணக்கெடுப்பு எதுக்குனு கேட்டா, உண்மையை சொல்ல வேண்டாம். "ஸ்மார்ட்' கார்டு கொடுக்கறதுக்காக கணக்கெடுப்புனு சொல்லி சமாளிங்கனு சொல்லி அனுப்பியிருக்காங்க. அதனால, பிரச்னைக்கு நாங்க வரமாட்டோம்னு, ரேஷன் கடை ஊழியர்கள் மறுத்துட்டாங்க. அங்கன்வாடி பணியாளர வச்சு கணக்கு எடுத்துட்டு இருக்காங்க,'' என்ற மித்ரா.
"ஐயப்பன் தான், அவங்களுக்கு புத்தி சொல்லணும்'' என்று, அடுத்த விஷயத்துக்கு தாவினாள்.
""எதுக்காக ஐயப்பன் காப்பாத்தணும்,'' என்று, சித்ரா ஆர்வமாக கேட்டாள்.
""ஈஸ்வரன் கோவிலில், ஒவ்வொரு வருஷமும், ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டுவாங்க. பல வருஷமா நடந்திட்டு வந்த நிலையில, இந்த வருஷம் இருமுடி கட்ட அனுமதியில்லைனு, கோவில் நிர்வாகம் தடை போட்டுடுச்சு. இப்படியே போச்சுனா, மாலையணிந்த பக்தர்கள், உள்ளே வந்து சாமிகும்பிடுவதற்கு கூட
அனுமதியில்லைனு எழுதி ஒட்டுவாங்கன்னு, ஐயப்ப பக்தர்கள் கவலையோட வந்து போறாங்க,''என்று மித்ரா கூறினாள். ""அம்மாவோட மறைவை, இன்னும் என்னால நம்ப முடியல. பாவம், பலருக்கும் பெரும் இழப்பை, அவங்க மறைவு உண்டாக்கியிருச்சு,'' என்று, நாளிதழ்களை புரட்டியபடி, சித்ரா கூறினாள்.
""ஆமா. உண்மையிலயே, பலருக்கு பெரும் இழப்புதான். அதேநேரம், தமிழக அரசியல் களமும் இப்ப பரபரப்பாகியிருச்சு,'' என்றாள் மித்ரா.
""எது எப்படியோ. திருப்பூரில் மறுபடியும் ஆளுங்கட்சியில் அரசியல் பரபரப்பு ஆரம்பமாயிடுச்சுன்னு மட்டும் தெரியுது. அம்மாவோட மறைவு செய்தி கேட்டு, அதிர்ச்சியில் உயிரிழந்தவங்க குடும்பத்துக்கு, கட்சி சார்பில் நிதியுதவி வழங்கியிருக்காங்க தெரியுமா,'' என்றாள் சித்ரா.
""ஆமா. திருப்பூர் பக்கத்துல கூட, ஒரு தொழிலாளி தன் கைவிரலை வெட்டிகிட்டாருன்னு, நிதியுதவி அறிவிச்சாங்களே,'' என்றாள் மித்ரா.
""அப்படித்தான் சொன்னாங்க. ஆனா, அடுப்பு வெறகுக்கு வெட்டின போது, கவனக்குறைவாக, விரலை சேர்த்து வெட்டி கிட்டாராம்; அவருக்கு நல்ல நேரம், இந்த சம்பவத்தை இணைத்து, அவரை "லைம் லைட்'டிலே கொண்டு வந்து, கட்சி தலைமை வரை அவர் பெயர் பிரபலமாயிருச்சு,'' என்றாள் சித்ரா.
""யார், யாரோ எப்படி எப்படியெல்லாமோ கட்சி நிதியை "தாம்தூம்'ன்னு செலவழிக்கறாங்க. உண்மையிலேயே கஷ்டப்படற ஒரு தொழிலாளிக்கு, இந்த வகையில் கிடைக்கிற நிதி, பெரிய உதவியாகத்தானே இருக்கும்,'' என்றாள் மித்ரா.
"அரசன் அன்றே கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்' என்று திடீரென்று பழமொழி பேசினாள் சித்ரா.
""என்ன, திடீர்னு இப்படி சொல்றே. யாருக்காச்சும் ஏதாவது பிரச்னையா,'' என்றாள் மித்ரா.
""திருப்பூர் புறநகர் பகுதியில், சிறுமியை கேலி செஞ்சவங்க மேல, போலீசார் கேஸ் போட்டு, வழக்கு திருப்பூர் கோர்ட்டுல நடக்குது. இதிலே, போலீஸ் மற்றும் நீதித்துறையோட வேகம், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கு. விசாரணையை தாமதிக்கணும்னு போலீசார் மற்றும் நீதித்துறை மேல குற்றம் சுமத்தி, ஐகோர்ட்டில் மனு போட்டிருக்காங்க. அதுதவிர, வழக்கு விசாரணைக்கும் ஆஜராகல. இதனால, வாரன்ட் பிறப்பிச்சு, கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்து போடணும்னு நிபந்தனை போட்டிருக்காங்க. கோர்ட் நேரம் முடியறதுக்குள்ள போகணும்கிற அவசரத்தில சென்று, விபத்தில் சிக்கி
இறந்திட்டாங்க. இப்ப, நீயே சொல்லு. நான் சொன்ன பழமொழி சரியா இல்லையா,'' என்றாள் சித்ரா.
""சரி, விடுக்கா, திருப்பூர்ல போக்குவரத்து தொழிலாளர்கள் எந்த போராட்டம் செஞ்சாலும், முக்கிய எதிர்க்கட்சியோட தொழிற் சங்கத்துக்காரங்க கலந்துக்கறதே இல்லையாம், இது நியாயமான்னு மத்த கட்சிக்காரங்க கேக்கறாங்களாம் என்று மித்ரா சொன்னதுக்கு, "அத விடு, அவங்க கட்சி விவகாரத்த அவங்களே பாத்துக்கட்டும்' என்று சித்ரா முடித்தாள்.
""ஆமாக்கா, ரொம்ப சரியாத்தான் சொன்னீங்க! குளோரின் மாத்திரை மேட்டர் என்னாச்சு,'' என்றாள் மித்ரா.
""இருப்பில் உள்ள கொள்முதல் மாத்திரைகளை, சப்ளை செய்த நிறுவனமே திரும்ப எடுத்துக்க, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதாம். ஆனா, உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அன்றே, முந்தைய தேதியிட்டு ஊராட்சிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு விட்டதாக, சில ஊராட்சிகளில் கணக்கு காட்டிட்டாங்களாம். அந்த விவரத்தையும் வெளிக் கொண்டுவர, ஒரு தரப்பு முயற்சி செஞ்சுட்டு இருக்கு. இதில, நடந்த "உள் குத்து' விவகாரத்தை கிளறினால், பல விஷயம் இன்னும் வெளியே வரும்போல,'' என்றாள் சித்ரா.
""அடடே!, இன்னிக்கு கார்த்திகை ஜோதி 2வது நாள், விளக்கேத்தணும், சரிப்பா, நான் கோவிலுக்கு போறேன், என்று சொல்லி, மித்ரா அகல்விளக்கு, எண்ணெயுடன் கிளம்பினாள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE