ஏற்றம் தரும் ஏற்றுமதி | Dinamalar

ஏற்றம் தரும் ஏற்றுமதி

Added : டிச 14, 2016
ஏற்றம் தரும் ஏற்றுமதி

பழங்காலத்தில் மக்கள் ஆறுகள் ஓடிய பகுதிகளையே தங்களுடைய வாழ்விடமாக கொண்டனர். சரஸ்வதி நதி ஓடிய பகுதியில் தான் பழமை வாய்ந்த 'ஹரப்பா நாகரிகம்' தோன்றியது என்பதற்கான ஆதாரங்களை பேராசிரியர் வால்டியா குழு சமீபத்தில் கண்டறிந்தது.
'ஆதிச்சநல்லுார் நாகரிகம்' தாமிரபரணி ஆற்றங்கரையில் உருவானது என்று தொல்பொருள் ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. பண்டைய காலத்து மக்கள் ஆற்றங்கரை ஓரங்களில் அவரவருக்கு தேவையானதை அவர்களே உற்பத்தி செய்தார்கள். பிற தானியங்கள் தேவைப்பட்ட பொழுது தங்களிடம் உள்ள உற்பத்தி பொருளை, பிறரிடம் கொடுத்து பிற தானியங்களை பெற்று கொண்டார்கள். அப்படித்தான் பண்டமாற்று வணிகம் துவங்கியது.
நாணயம், பணம் உருவாக்கம்
இவ்வணிகத்தில் தேவைகள் ஒருவருக்கொருவர் உடன்பாடு இல்லாதிருந்ததும், பண்டமாற்று பொருட்களின் மதிப்பு சமமாக இல்லாதிருந்ததன் காரணமாக நாணயம் மற்றும் பணம் உருவாக வழி வகுத்தது. அதன் பிறகு வணிகம் விஸ்வரூபம் எடுத்தது. உள்ளூர் வணிகர்கள் கடல் வழியாக பயணித்து பிற நாடுகளிலும் வணிகத்தை விரிவுபடுத்தினர். 'திராவிட மக்களின் கொடை' என்று அழைக்கப்படும் சிந்து சமவெளி நாகரீகத்தில், அம்மக்களுடைய பொருட்கள் சுமேரியாவில் கண்டறியப்பட்டன. இதன் மூலம் இவ்விரு நாடுகளுக்கிடையே ஏற்றுமதி வணிகம் நடைபெற்றிருப்பது உறுதியாகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் இருந்து எகிப்து நாட்டிற்கு மிளகு ஏற்றுமதி செய்யப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. தஞ்சாவூர் மாவட்டம் மந்திரிபட்டினம் என்னும் கிராமத்தில் கிடைத்துள்ள ரோமானிய நாணயங்கள், சோழர் காலத்தில் அப்பகுதி 'பந்தர்பட்டினம்' என்ற பெயரில் துறைமுகமாக செயல்பட்டுள்ளதையும், அங்கிருந்து ஏற்றுமதி வணிகம் நடைபெற்றுள்ளதையும் தெரியப்படுத்துகின்றன. சேர, சோழ, பாண்டிய அரசுகள் தோன்றியதற்கு காரணமே மிகவும் சிறப்பாக நடைபெற்ற வணிகம் தான்.
இந்திய மண் ஏற்றுமதி
சங்க கால மக்கள் ரத்தின கற்கள், தந்தம், பருத்தி, பட்டாடைகளை கிரிசு, ரோம் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தார்கள். முகலாயர் ஆட்சி காலத்தில் பருத்தி அடைகள், சர்க்கரை, அபினி, நறுமணப் பொருட்கள் ஆகியவை ஏற்றுமதி செய்யப்பட்டன. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்திய பொருட்களின் வணிகத்தை நசுக்கும் விதத்தில், இங்கிலாந்து பொருட்கள் இந்தியாவில் குவிக்கப்பட்டன. விடுதலைக்கு பிறகு, இந்திய அரசு அன்னிய செலாவணி இருப்பை அதிகப்படுத்த, ஏற்றுமதியை இன்று வரை ஊக்கப்படுத்தி வருகிறது. இளம் வயதிலேயே ஏற்றுமதி வணிகத்தை மிகவும் சிறப்பாக நடத்தியவர் திருபாய் அம்பானி. அரபு நாட்டு பணக்காரர்களுக்கு ரோஜா செடிகளை வளர்ப்பதற்காக மண்ணை இந்தியாவில் இருந்து டன் கணக்கில் அம்பானி ஏற்றுமதி செய்தார். இன்று ஜப்பானுக்கு இரும்புத்தாது, கடல் உணவு பொருட்கள், நவரத்தின தங்க நகை ஆபரணங்கள், கவரிங் நகைகள், ஏலக்காய் மற்றும் ஆடைகள் ஆகியவை இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகின்றன.
இந்தியா ஒரு ஏற்றுமதி பூங்கா
சிங்கப்பூருக்கு தமிழகத்தில் இருந்து விமான பயண நேரம் மூன்றரை மணி நேரம் மட்டுமே என்பதால், காய்கறிகள், பழங்களை எளிதாக அனுப்ப முடிகிறது. மேலும் பாசுமதி அரிசி, பருப்பு, கடலுணவு பொருட்கள், கோதுமை, தேயிலை ஆகியவைகளும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தென்னாப்ரிக்காவிற்கு ஜவுளிகள், ஆயத்த ஆடைகள் மற்றும் அரிசியும், ஜாம்பியாவிற்கு பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களும், ரஷ்யாவிற்கு மருந்து பொருட்களும், ஆஸ்திரேலியாவிற்கு மளிகை பொருட்களும், காட்டன் துணி வகைகளும் அதிக தேவையுடையதாக உள்ளன. இஞ்சி, அப்பளம், மருதாணி இலை பவுடர், ஏலக்காய், எள், காபி, தேயிலை, வெங்காயம், உருளைக்கிழங்கு, சீரகம், மஞ்சள், சணல், புளி, இறால், கிரானைட், தோல் பொருட்கள், கைத்தறி துணிகள், கைக்குட்டைகள், தீப்பெட்டி, காய்கறி, பழங்கள், தேன், இயந்திர உதிரி பாகங்கள் என சுமார் 1,200 பொருட்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகின்றன. தைவான், ஜப்பான், ஜெர்மனி, வியட்நாம், நெதர்லாந்து, மலேசியா, இந்தோனேஷியா, சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு முட்டைகள் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ராமேஸ்வரம் நண்டுகளுக்கு மவுசு
இந்திய நறுமணப் பொருட்கள் வாரியம் கொச்சியில் உள்ளது. இதன் கட்டுப்பாட்டில் உள்ள பிற அலுவலகங்கள் இந்தியா முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ளவர்கள், சிவகங்கையில் உள்ள நறுமணப் பொருட்கள் பூங்காவில் சான்றிதழ் பெற்று ஏற்றுமதி செய்ய வாய்ப்பு உள்ளது. இந்திய கடல் உணவு பொருட்கள் அமெரிக்கா, தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதில் இறால், மீன்கள் மற்றும் நண்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலகளவில் இறால் உற்பத்தியில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. தமிழகத்தில் 7000 எக்டேரில் இறால் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்தாண்டு இறால் ஏற்றுமதி இந்தியாவிற்கு 30 ஆயிரம் கோடியை அன்னிய செலாவணியாக ஈட்டித்தந்துள்ளது. ரமேஸ்வரம் நண்டுகள் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நண்டுகள் பாக்ஜலசந்தி கடலில் 35 முதல் 40 அடி ஆழத்தில் உயிருடன் பிடிக்கப்படுபவை.
ஏற்றுமதி செய்ய நடைமுறைகள்
முழு விவரமும் தெரிந்த பொருளாக தேர்ந்தெடுக்க வேண்டும். ஏற்றுமதி நிறுவனம் துவங்க வேண்டும். நிறுவனம் தனிநபர் நிறுவனமாகவும் இருக்கலாம். இறக்குமதி - ஏற்றுமதி குறியீடு எண் (ஐ.எஸ்.இ. கோட் எண்) பெற வேண்டும். தென் மாவட்டங்களில் வசிப்பவர்கள் மதுரையில் உள்ள 'பன்னாட்டு வணிக இணை இயக்குனர்' அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பித்தால், சில வாரங்களுக்குள் ஏற்றுமதி நிறுவனத்தின் அலுவலக முகவரிக்கு இக்குறியீடு எண் அனுப்பி வைக்கப்படும். விண்ணப்பக் கட்டணம் 500 ரூபாய் மட்டுமே. ஒவ்வொரு பொருளுக்கும் அதன் வெவ்வேறு தன்மைகள் அடிப்படையாக கொண்டு 'எச்.எஸ்.குறியீடு எண்' (ஹார்மோனைஸ்டு சிஸ்டம் கோட்) வழங்கப்பட்டுள்ளது. இறக்குமதியாளரை தொடர்பு கொள்ளும்போது, பொருட்களின் பெயருடன் 'எச்.எஸ்.' குறியீடு எண்ணையும் சேர்த்து குறிப்பிட வேண்டும். ஏற்றுமதியாளர் ஏற்றுமதி செய்யவிருக்கும் பொருளுக்கென உள்ள 'ஏற்றுமதி மேம்பாட்டு குழு'வில் உறுப்பினராக வேண்டும். வேளாண் பொருட்கள் எனில் 'வேளாண் மற்றும் பக்குவப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு குழுவில்' பதிவு செய்து உறுப்பினராக வேண்டும்.தோல், கடல் உணவு பொருட்கள், பட்டு, ஆயத்த அடைகள் உட்பட அனைத்துக்கும் ஏற்றுமதி மேம்பாட்டு குழுக்கள் உள்ளன. கயிறு, டீ, காப்பி, ரப்பர் வாரியங்கள் உள்ளன. ஏற்றுமதியாளர், அவரது பொருளுக்குரிய ஏற்றுமதி மேம்பாட்டு குழுவில் உறுப்பினரானால், அவருக்கு 'பதிவு மற்றும் உறுப்பினர் சான்றிதழ்' வழங்கப்படும். ஒருவரே பலவிதமான பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்பினால் ஒவ்வொன்றிற்கும் தனித்தனி குழுக்களில் உறுப்பினராக வேண்டியதில்லை. 'இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பு கழகத்தில்' உறுப்பினரானாலே போதுமானது.'கடந்து விட்ட நாட்களையும், இழந்து விட்ட இளமையையும் மீண்டும் பெற முடியாது,' எனவே இளைஞர்கள் இதனை மனதில் கொண்டு தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். வெளிநாடுகளில் ஏற்றுமதி வணிகத்தை முதன்மை தொழிலாகவே செய்து வருகிறார்கள். நமது நாட்டிலோ பன்னாட்டு வணிகம், செல்வம் ஈட்டும் சொர்க்கம் என்பதை அறியாமல் வேலையில்லா பட்டதாரிகளாகவே நாட்களை கடத்துகிறார்கள். பன்னாட்டு வணிகத்தில் இடைவிடாத முயற்சியுடன் ஈடுபட்டு இணையற்ற வீரர்களாக இளைஞர்கள் வலம் வந்தால், அவர்களின் வாழ்க்கை மட்டுமல்ல, இந்திய பொருளாதாரமும் ஏற்றம் பெறும் என்பது உண்மை.
- சி.சம்பத்,முதுகலை ஆசிரியர், சிங்கம்புணரி

அலைபேசி 89037 03021We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X