உயிர்காக்கும் 'பிசியோதெரபி' சிகிச்சைகள்

Added : டிச 15, 2016
Advertisement
உயிர்காக்கும் 'பிசியோதெரபி' சிகிச்சைகள்

சமீப காலமாக பிசியோதெரபி சிகிச்சை முறைகள் (இயன்முறை மருத்துவம்) உலக அளவில் பிரசித்தி பெற்று வருகிறது. குறிப்பாக 'நுரையீரல் மற்றும் சுவாச பிசியோதெரபி' பிரிவில் பல்வேறு அரிய சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. மனித உடலின் சுவாச பாதைகளில் உள்ள கோழை போன்ற கழிவுகள், நுரையீரல் நீர் சேர்க்கை, நுரையீரல் பகுதிகளில் உள்ள அடைப்பு போன்றவற்றினை அகற்றி சீரான சுவாசத்தை ஏற்படுத்தக் கூடிய, மிக முக்கிய சிகிச்சை முறையே நுரையீரல் மற்றும் சுவாச பிசியோதெரபி என அழைக்கப்படுகிறது.
அனைத்துக்கும் தீர்வு : ஆரம்ப காலத்தில் இயன்முறை மருத்துவமானது, உடலின் இயக்கத்திற்கான மேலோட்டமான சில பயிற்சி முறைகளை கொண்டிருந்தது. தற்போதைய நவீன மருத்துவ வளர்ச்சியில், பிசியோதெரபி மருத்துவத்துறையின் வளர்ச்சியும் பன்மடங்கு உயர்ந்துள்ளது. சாதாரண வலிகளுக்கான சிகிச்சை முறைகள் தொடங்கி, அதி தீவிர சிகிச்சை பிரிவுகள் வரை, சிகிச்சை முறைகளை கொண்டுள்ளது. பிறந்த பச்சிளம் குழந்தை முதல் நோயினால் முடக்கப்பட்ட முதியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு சிகிச்சை முறைகள் பிசியோதெரபியில் உள்ளன. விபத்துகால அவசர சிகிச்சைகள், குழந்தைகளுக்கான தீவிர மூச்சுத்திணறல், மூச்சிரைப்பு பிரச்னைகளில் நுரையீரலை காத்து உயிர் காக்கும் சிகிச்சை முறைகளாக பிசியோதெரபி உள்ளது. ஏறத்தாழ அனைத்து அறுவைச் சிகிச்சைகளுக்கு முன்பும், பின்பும் நுரையீரலை பாதுகாத்து அதன் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் விதமாக சுவாச பிசியோதெரபி அளிக்கப்படுகின்றது.
நுரையீரலின் முக்கியத்துவம் : உடல் உறுப்புகளில் இருதயம், மூளை, சிறுநீரகம் போன்ற உறுப்புகளுடன் நுரையீரல் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. ஒவ்வொரு மனிதனின் நெஞ்சுக்கூட்டின் சுருங்கி விரியும் தன்மை வேறுபடுகிறது. இருதய நெஞ்சுக் கூட்டினை சுற்றியுள்ள சதைகளின் வலிமையை பொருத்தே, சுருங்கி விரியும் தன்மை இருக்கும். மூச்சை இழுத்து வெளியே விடும் இடைவெளியில் ஆக்ஸிஜன் அதிகளவு நுரையீரலில் சேமிக்கப்படுகிறது. சேமிக்கப்படும் ஆக்ஸிஜனே ரத்தத்தில் கலந்து உடல் இயக்கத்திற்கு தேவையான ஊட்டத்தை தருகிறது. நுரையீரல் நுண்ணிய அறைகளால் நிரம்பப்பட்டது. அந்த அறைகளில்தான் ஆக்ஸிஜன் கலந்த காற்று நிரம்பும். அதில் சளியோ அல்லது திரவங்களோ சூழ்ந்து கொண்டால் அவற்றில் காற்று நிரம்புவதில் சிரமங்கள் உண்டாகும். நாளடைவில் கிருமி தொற்று உருவாகும்.
நுரையீரலின் செயல்பாடுகள் : பாதிக்கப்படும். இதனால் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். நுரையீரலில் மேல்பாகம், நடு பாகம் மற்றும் அடிபாகம் என்று இருக்கும். எக்ஸ்ரே, ஸ்டெதஸ்கோப் மூலம் நுரையீரலில் எந்த பகுதியில் சளி அதிகம் சேர்ந்துள்ளது என்பதை கண்டறிந்து, அதற்கேற்ப பிசியோதெரபி மருத்துவர்கள் சிகிச்சை முறைகளை திட்டமிடுவார்கள்.
சிகிச்சை முறைகள் : 'வென்டிலேட்டர்' சிகிச்சையில் உள்ளவர்கள், மூச்சு இரைப்பு உள்ளவர்கள் என பாதிக்கப்பட்டவர்களின் நெஞ்சுப்பகுதி, பின்முதுகு, கைகளின் அடிப்பகுதிகளில் பிசியோதெரபிஸ்ட்கள் தங்களது சிகிச்சை முறையை பயன்படுத்தி, நுரையீரலில் தேங்கியுள்ள தேவையில்லாத நீர் மற்றும் சளியை வெளியேற்றுவார்கள். இருமக்கூடிய அளவுக்கு நோயாளிகள் விழிப்புணர்வுடன் இருந்தால், 'காப் பெசிலிடேஷன்' என்ற முறையை பயன்படுத்தி இருமச் சொல்லி சளியை வெளியேற்றுவார்கள். இரும இயலாதவர்களுக்கு “சக் ஷன் தெரபி” என்ற முறையை பயன்படுத்தி தொண்டை பகுதியில் குழாயை செலுத்தி சளியை உறிஞ்சி வெளியே எடுப்பார்கள். குறைந்தது 20--30 நிமிடங்கள் வரை இதனை செய்வார்கள். ஒருநாளைக்கு மூன்று முதல் நான்கு முறை செய்யப்படும். இது ஒவ்வொரு நோயாளியின் தன்மைக்கேற்ப வேறுபடும்.நுரையீரலில் எந்த பகுதியில் சளி சேர்ந்துள்ளதோ அதற்கேற்ப நோயாளிகளை “பொஸிஷனிங்” செய்து, புவிஈர்ப்பு விசையின் உதவியுடன் சளியை வெளியேற்றுவார்கள். இம்முறை நுரையீரலில் தேங்கியுள்ள சளி மற்றும் கெட்ட திரவங்களை வெளியேற்றி மேற்கொண்டு சளி சேராமல் தடுக்கும்.கருவிகள் உதவியுடன் கருவிகளின் உதவியோடு செயற்கை சுவாசம் அளிக்கப்படும் நோயாளிகள், இயற்கையாக சுவாசிக்க இச்சிகிச்சை முறை பயன்படும். நுரையீரல் உட்பட மொத்த சுவாச மண்டலத்தின் செயல்பாட்டை சீர்படுத்த, இச்சிகிச்சை முறை அவசியம். இச்சிகிச்சை முறையின் முக்கிய நோக்கம், பாதிக்கப்பட்டவர்களை நோயின் பிடியிலிருந்து இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வருவது ஆகும். இதனால், மருத்துவமனையில் தங்கி இருக்க வேண்டிய நாட்கள் குறையும். இயல்பாக சுவாசிக்கும் தன்மை மீட்கப்படும். சிகிச்சைக்கு பின் நுரையீரல் அதிகளவு ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்ள துவங்கும். மேலும் உடற்பயிற்சிகள் மேற்கொள்ள ஏதுவான சூழலை உருவாக்கும். திடமான, சமநிலை கொண்ட உடல்நிலை உணர்வினை பாதிக்கப்பட்டவர்களிடம் உருவாக்கி மன பலத்தை அதிகரிக்கும்.
ஆலோசனை பெறுங்கள் : நுரையீரல், இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்ட நோயாளிகளின் நுரையீரல் பலவீனமாக காணப்படும். அதற்கு, அறுவை சிகிச்சைக்காக பயன்படுத்தும் மயக்க மருந்தே காரணம். இதனை சரி செய்ய பிசியோதெரபி சிகிச்சை முறைகள் சிறந்தது. நெஞ்சுக்கூட்டின் சுருங்கி விரியும் தன்மையை, ஒழுங்காக உடற்பயிற்சிகள் மூலம் பராமரித்து வரவேண்டும். இதுபற்றி பொதுமக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும். முழுநேர விளையாட்டு வீரர்களுக்கு நுரையீரல் செயல்திறன் நன்றாக இருக்கும். அதுவே உடல் உழைப்பு குறைவாக உள்ளவர்களுக்கு செயல்திறன் போதிய அளவுக்கு இருக்காது. 35 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஆண்டிற்கு ஒருமுறையேனும் பிசியோதெரபிஸ்ட்டை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். அவர்கள், உங்கள் நெஞ்சுப்பகுதியை சுற்றியுள்ள சதைப் பகுதிகளின் செயல்பாட்டை சோதித்து, அதில் உள்ள பிரச்னைகளை கண்டறிந்து, மேற்கொள்ள வேண்டிய உடற்பயிற்சிகள், மூச்சுப் பயிற்சிகளை பரிந்துரைப்பார்கள். 50 வயதுக்கும் மேற்பட்டவர்கள் வருடத்திற்கு இரண்டு முறை இயன்முறை மருத்துவரை சந்திப்பது நல்லது.
-டாக்டர் கிருஷ்ணகுமார்பிசியோதெரபிஸ்ட், மதுரை9843558158

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X