நீர் நிலைகளை மீட்போம்| Dinamalar

நீர் நிலைகளை மீட்போம்

Added : டிச 15, 2016 | கருத்துகள் (1)
நீர் நிலைகளை மீட்போம்

நம் நடைபாதைகளை குளிப்பாட்டிச் செல்கின்றன, தண்ணீர் லாரிகள். தண்ணீர் குழாய்கள் உடைப்பெடுத்து ஜீவ நதிகளாய் மாறுகின்றன நம் சாலைகள். குடங்கள் நிரம்பிய பின்னும் கொட்டிக்கொண்டே இருக்கிறது, திறந்து விடப்பட்ட தெருக்குழாய்கள். அதே வீதியில் நின்றுகொண்டுதான் தண்ணீர் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடத்துகிறோம்.நீர் ஆதாரங்கள் நிறைய இருந்தபோது, அதனை வாழ்வாதாரமாக கருதி மக்கள் பாதுகாத்தபோது, தண்ணீர் பிரச்னை எந்த ரூபத்திலும் எழவில்லை. தண்ணீரை தங்கமென போற்றியவர்கள் நம் தமிழ் மக்கள். தண்ணீருக்கு பஞ்சமில்லாத காலத்திலேயே நீர் சேமிப்பு பற்றி நிறைய விழிப்புணர்வு பெற்றிருந்தார்கள். அவர்கள் அமைத்திருந்த நீர் நிலைகளைப்பற்றி அறிந்து கொண்டால் போதும், தமிழர்களின் தண்ணீர் ஞானத்தை அறிந்து கொள்ள முடியும்.
நீர் ஆதாரங்கள்
ஏரி, குளம், ஆறு என்று ஒரு சில நீர்நிலைகளைத்தான் இந்த தலைமுறைக்குத் தெரியும். ஆனால் தமிழகத்தில் நம் முன்னோர்கள் நாற்பதுக்கும் அதிகமான நீர் ஆதாரங்களை உருவாக்கி பராமரித்தனர். அந்த நீர் நிலைகளை புதுப்பித்து பராமரித்தாலே போதும், தண்ணீர் பஞ்சம் தமிழகத்தில் தலையெடுக்காது
.அகழி: பெரிய கோயில்கள் மற்றும் கோட்டைகளைச் சுற்றி இருக்கும் நீர் நிலை (கோயிலில் உள்ள மூலவரைப் பெயர்த்து எடுப்பதற்காக பானாகரன் என்ற அரக்கன் திருப்புகளுர் கோயிலைச் சுற்றி அகழி தோண்டியதாக திருப்புகளுர் தல புராணம் கூறுகிறது)
ஆழ்கிணறு: கிராமங்களில் விவசாயம் மற்றும் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய தோண்டப்பட்டிருக்கும் நீர்நிலை.
இலஞ்சி: ஒரு சிறிய நீர் தேக்கம். பெரும்பாலும் குடிநீருக்காகவே பயன்படுத்தப் படுகிறது.
கட்டுங்கிணறு: சரளை நிலத்தில் வெட்டிஇருப்பார்கள். செங்கல்லால் உட்புறச்சுவர் எழுப்பப்பட்டிருக்கும்.
கண்மாய்: அளவில் சிறியதாய் இருக்கக்கூடிய ஏரி. பாண்டிய நாட்டில் இதனை கண்மாய் என்று குறிப்பிடுகிறார்கள்.
கலிங்கு: ஏரி முதலிய பாசன நீர்த்தேக்கங்கள் உடைப்பு எடுக்காமல் இருக்க, முன் எச்சரிக்கையாக கட்டப்பட்டு பலகைகளால் அடைத்து திறக்கக்கூடிய (ஷட்டர்ஸ்) மாதிரியான கட்டமைப்பு.
கால்: சாதாரணமாக நீர் ஓடும் வழியைக் கால் என்று சொல்வார்கள்.
கால்வாய்: ஏரி, குளம், ஊருணி போன்ற நீர்நிலைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் 'பாயும் கால்' வழி.
குட்டை: கால்நடைகளை குளிப்பாட்டப் பயன்படும் சிறிய நீர் நிலை.
குட்டம்: அளவில் கொஞ்சம் பெரிதாக இருக்கும். குட்டைகளை 'குட்டம்' என்று குறிப்பிடுகிறார்கள்.
குண்டு: சிறிய அளவில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் குளிக்கும் நீர்நிலை.
(செயற்கையாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் நீச்சல் குளங்கள் இந்த குண்டு வகையைச் சேர்ந்தவைதான்)
குண்டம்: குளிப்பதற்காக உள்ள சிறிய குளம் தான் குண்டம் என்று குறிப்பிடப்படுகின்றது.
குமிழி ஊற்று: நிலத்தின் பாறையைக் குடைந்து ஆழ ஊற்றை மேல் எழுப்பி வரச் செய்யும் குடை போன்ற கிணறு.
குளியல் குளம்: ஊரின் நடுவே மக்கள் குளிக்கப் பயன்படுத்தும் நீர் நிலை.
பாசனகுளம்: ஊருக்கு வெளியே பாசனத்திற்காக பயன்படுத்தும் நீர் நிலை.
கூவம்: ஒழுங்காக வெட்டப்பட்ட கிணறு.
கூவல்: ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.
கேணி: அகலமும், ஆழமும் உள்ள பெரிய கிணறு.
சிறை: தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை.
சுனை: கால்நடைகளை குளிப்பாட்டப் பயன்படும் சிறிய நீர் நிலை.
சேங்கை: பாசிக்கொடி மண்டிய குளம்.
தடாகம்: நான்கு புறமும் அழகாக கட்டப்பட்ட குளம்.
தனிக்குளம்: கோயிலின் நான்கு புறத்தையும் சுற்றி அமைந்துள்ள அகழி போன்ற நீர் நிலை.
தாங்கல்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் ஏரியைக் குறிக்கும் சொல் தாங்கல்.
திருக்குளம்: கோயிலின் அருகே அமைந்த நீராடும் குளம்.
தெப்பக்குளம்: தெப்பம் சுற்றி வரும் வகையில் அமைக்கப்பட்ட கோயிலின் திருக்குளம்.
தொடுகிணறு: ஆற்றின உள்ளேயும், அருகிலும் அவ்வப்போது மணலைத் தோண்டி நீர் எடுக்கும் இடம்.
நடை கேணி: இறங்கிச் செல்லும் படிக்கட்டுகளுடன் அமைந்த பெரிய கிணறு.
நீராழி: நடுவில் மண்டபத்துடன் கூடிய பெரும் குளம்
பொங்கு கிணறு: ஊற்றுக்கால் கொப்பளித்துக் கொண்டே இருக்கும் கிணறு.
பொய்கை: தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்ட நீர் நிலை.
மறுகால்: அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்
வலயம்: வட்டமாய் அமைந்த குளம்
வாய்க்கால்: ஏரி முதலிய நீர் நிலைகளில் இருந்து பயிருக்கு நீர் பாய்ச்ச சிறிய கால்.
ஆழிக்கிணறு: கடல் அருகில் தோண்டிக்கட்டிய கிணறு.
ஆறு: பெருகி ஓடும் ஏரி.
உறை கிணறு: மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண்ணில் வளையமிட்ட கிணறு.
ஊற்று: பூமிக்கு அடியில் இருந்து நீர் ஊறிவரும் நீர் நிலை.
ஏரி: வேளாண்மைப் பாசனம் செய்வதற்கான பெரிய நீர்த்தேக்கம்.
ஓடை: ஆழத்தில் இருந்து ஊற்றெடுக்கும் நீர், எப்போதும் ஊறி ஓடிக்கொண்டே இருக்கும் நீர் நிலை.
மறைந்தவை : இந்த நாற்பது விதமான நீர் நிலைகளும், எங்கெல்லாம் மறைந்து போய் இருக்கிறதோ, அங்கெல்லாம் இவற்றை புனரமைப்பு செய்து மீட்டெடுத்தால், நம்முடைய நீர்த்தேவைகளை சுயமாக நிறைவேற்றிக் கொள்ள முடியும். உள்ளாட்சி அமைப்புகளுடன், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் சேர்ந்து, இந்த நீர் நிலைகளை மீட்டெடுக்க முயற்சி செய்யலாம்.தமிழ்நாட்டில் ஜீவநதிகள் எங்கும் பாயவில்லை. அதே போல் பருவ மழையும் எல்லாப் பகுதிகளிலும் ஒரே மாதிரியாக பொழிவதில்லை. பருவ மழை பெய்கிற பொது, மழைநீரை தேக்கி வைத்து அதை விவசாயத்திற்கு கிடைக்கச் செய்ய வேண்டிய கடமை நமக்கு உள்ளது. நீர் மேலாண்மை குறித்து, நமக்கு இன்னும் நிறைய விழிப்புணர்வு தேவைப்படுகிறது.நாட்டில் மக்கள் தொகை ஒரு பக்கம் அதிகரித்துக்கொண்டே போகிறது. எனவே உணவு உற்பத்தியும், அதே அளவு அதிகரிக்க வேண்டும். இந்நிலையில் நீர்ப்பாசனத்திற்கு உத்தரவாதம் இல்லையென்றால் விவசாயிகள் தொழிலைவிட்டு வெளியேறி விடுவார்கள். அப்படியொரு ஆபத்து நிகழாமல் இருக்க வேண்டும் என்றால், மேற்சொன்ன நீர்நிலைகளை பாதுகாக்கும் முயற்சிகளை நாம் எடுக்க வேண்டும்.
-முனைவர் ஆதலையூர் சூரியகுமார்

எழுத்தாளர். 98654 02603

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X