மரங்களை போற்றிய மக்கள்! "வனத்துக்குள் திருப்பூர் திட்டம் தந்த வளமை! மாவட்டம் முழுவதும் பரவிய பசுமை!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மரங்களை போற்றிய மக்கள்! "வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் தந்த வளமை! மாவட்டம் முழுவதும் பரவிய பசுமை!

Updated : டிச 17, 2016 | Added : டிச 17, 2016 | கருத்துகள் (4)
Share
 மரங்களை போற்றிய மக்கள்! "வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் தந்த வளமை!  மாவட்டம் முழுவதும் பரவிய பசுமை!

கிளி வளர்த்தேன் பறந்து விட்டது!அணில் வளர்த்தேன் ஓடி விட்டது!மரம் வளர்த்தேன் இரண்டும் வந்து விட்டது!
இது, மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமின், மரம் வளர்ப்பது குறித்தான கவிதை. மரம் வளர்த்தால், என்னென்ன நன்மைகள் வரும் என்பதை, இதை விட எளிமையாக யாராலும் விளக்க முடியாது. அவரின், கொள்கையை லட்சியமாக கொண்டே, "வனத்துக்குள் திருப்பூர்' செயல்படுகிறது.
நாகரீகம் வளர வளர, இயற்கையை மறந்துவிடுகிறோம். இயற்கை மீதான நமது அலட்சியம், பெருகும் வரும் மக்கள் தொகை, வாகன பெருக்கம், தொழிற்சாலை புகை என, பல்வேறு காரணங்களால், பூமி வெப்பமயமாகிறது; சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட பல பிரச்னைகள் காலநிலை மாற்றத்தால் ஏற்படுகிறது.
ஊருக்கு மத்தியில், நோய் நீக்கும் குணமுடைய அரசு மரம், ஆலமரம், வேம்பு, புங்கன் என, மண்ணின் மரபு சார்ந்த மரங்களை முன்னோர் பராமரித்து வந்தனர். இதனால், பசுமையான, அற்புதமான சூழல் நிலவியது. சுவாசிக்க தூய்மையான காற்று, பருவம் தவறாத மழை, விவசாய பயிர்கள் மகரந்த சேர்க்கைக்கும், மண்ணின் வளம் காக்கும் ஆயிரக்கணக்கான நுண்ணுயிரினங்களின் வாழ்க்கை என, பல்லுயிர் இன சுழற்சி மண்டலத்துக்கு ஆதாரமாக, இந்த மரங்கள் இருந்தன.
மரங்கள் அழிக்கப்பட்டு, தற்போது கட்டட காடுகளாக மாறி வருகிறது. இதன் விளைவே, இயற்கையின் சீற்றத்துக்குள்ளாகி, கடும் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறோம். மழை பொய்தது, மண் மலடானது, சுட்டெரிக்கும் வெயில் என, பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறோம்.
நீர் நிலைகளுக்கு நீர் ஆதாரமாக விளங்கிய மரங்கள், மழையை தருவிக்கும் காரணிகளாகும். அவற்றை வெட்டி சாய்ப்பதால், நீர், நிலம், காற்று என அனைத்திலும், பாதிப்பை சந்தித்து வருகிறோம்.
தேசத்தின் வளர்ச்சி ஒன்றை பற்றியே சிந்தித்து வந்த, மக்கள் ஜனாதிபதியாக விளங்கிய அப்துல் கலாம், மரங்களின் அவசியம், மேடைகள் தோறும் முழங்கி வந்தார். "ஒவ்வொருவரும், தங்களது வாழ்நாளில், குறைந்தது ஐந்து மரங்களையாவது வளர்க்க வேண்டும்' என்று, அவர் அறிவுறுத்தி வந்தார்.
கடந்த ஆண்டு, அப்துல்கலாம் மறைவை தொடர்ந்து, திருப்பூர் தொழில் துறையினர், பொதுமக்கள் பங்கேற்ற அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில், கலாமுக்கு உண்மையான அஞ்சலி செலுத்தும் வகையில், மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பது என்று, உறுதி ஏற்கப்பட்டது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்தை பசுமையாக்கும் வகையில், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட்டு, இரண்டு ஆண்டு பராமரிக்கும் "வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தை, "வெற்றி' அமைப்பு முன் எடுத்தது.
சுற்றுச்சூழல் காக்கும் இந்த உன்னத பணியில், "தினமலர்' நாளிதழ் கரம் கோர்த்து, மாவட்டம் முழுவதும் பசுமை எழுச்சியை உருவாக்கி வந்தது. சேவை அமைப்புகள், தொழில் அமைப்புகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு துறைகள், கிராம மக்கள், பசுமை அமைப்புகள் என அனைத்து தரப்பினரும் கரம் கோர்த்தனர்.
கடந்தாண்டு, ஒரு லட்சம் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது; மக்களின் ஆதரவால், 1.35 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன. தொழில் நிறுவனங்கள் வழங்கிய, 30 டிராக்டர்கள் மூலம், தொடர்ந்து மரக்கன்றுகளுக்கு நீர் விட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து, இந்தாண்டு, இரண்டு லட்சம் மரக்கன்றுகள் நட்டு, இரண்டு ஆண்டு பராமரிக்கும் "வனத்துக்குள் திருப்பூர்2' திட்டம், துவக்கப்பட்டது.
இந்தாண்டும், சேவை அமைப்புகள், விவசாயிகள் என பலர் ஆர்வமாக முன் வந்ததால், இலக்கை தாண்டி, 2.25 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில், இரண்டு ஆண்டுகளில், 3.60 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு, 36 மாதங்கள் தண்ணீர் விட்டு பராமரிக்கப்படுகிறது.


பசுமைக்கு மாறும் நிலங்கள்


பருவ மழை பொய்த்ததால், விவசாயம் செய்ய முடியாமல், இரண்டு லட்சம் ஏக்கர் நிலங்கள் வீணாக உள்ளன. இவை, வெப்பத்தை எதிரொலித்து, மேலும், கடும் வெப்ப நிலையை அதிகரித்து வருகிறது. "வனத்துக்குள் திருப்பூர்2' திட்டத்தின் கீழ், இந்தாண்டு விவசாய நிலங்களில் மரப்பயிர் சாகுபடிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. இதனால், அதிகரிக்கும் மரங்களால், வெப்பம் முற்றிலும் குறைக்கப்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, மழை வளம் பெருக்கும் வழிமுறை என்பதோடு, விவசாயிகளுக்கும் பயனுள்ள திட்டமாக மாறியுள்ளது. குறுகிய கால பயிர் சாகுபடி செய்து, "விளைச்சல் இருக்கும் போது விலையில்லை; விலை இருக்கும் போது விளைச்சல் இல்லை,' என்ற சூழலில் இருக்கும் விவசாயிகளுக்கு, "நிலத்தில் முதலீடு; மரங்களாக சேமிப்பு' என்ற குறிக்கோளுடன் திட்டம் முன் எடுக்கப்பட்டது.
எனவே, இதில், விவசாயிகள் பலரும் ஆர்வத்துடன், திட்டத்தில் இணைந்தனர். கம்பி வேலி, சொட்டு நீர் பாசனம் என, இத்திட்டம் வீணாக இருந்த பல விவசாய நிலங்களை பசுமையாக்கியுள்ளது. வரும் தலைமுறைக்கு அருமையான சுற்று சூழல் கிடைப்பதோடு, அடுத்த சந்ததிக்கு மதிப்பு மிகுந்த மரங்களை நிலத்தில் விட்டுச்செல்லும் அருமையாக வழிகாட்டுதல் கிடைத்துள்ளது, என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.இதன் மூலம், மாவட்டத்தின் பசுமை பரப்பு அதிகரித்து, வெப்பத்தின் தாக்கம் குறைகிறது; பல்லுயிரின பெருக்கம், மழை, குளிர் சீதோஷ்ண நிலை என, அழித்த இயற்கையை மீட்கும் அருமையான ஒரு வழியாக அமைந்துள்ளது. கடந்த ஆண்டு, முதலீடு அடிப்படையில், வீணாக உள்ள நிலங்களில் மரங்கள் வளர்க்கும் போது, "தூய காற்றும், மழையும் மக்களுக்கு சொந்தம்; நிலமும், மரமும் உரிமையாளருக்கு சொந்தம்' என்ற வகையில், பல நூறு ஏக்கரில், மரக்கன்றுகள் நடப்பட்டன.


மரமாக வந்த வரம்...!பின்னலாடை உற்பத்தி, ஏற்றுமதி வர்த்தகத்தில் உலக அளவில் தனக்கென தனி இடத்தை பெற்றுள்ள திருப்பூரில், சுற்றுச்சூழல் பாதிப்புகள் அதிகம். ஆறு லட்சம் வாகனங்கள் கக்கும் கரும்புகை, தொழிற்சாலை புகை, மக்கள் நெரிசல், சாக்கடை நீர் ஓடும் நொய்யலாறு, திடக்கழிவு மேலாண்மையில் விழிப்புணர்வு இல்லாதது, என பல்வேறு சுற்றுப்புறத்தை மாசுபடுத்தும், சிக்கல்களை திருப்பூர் தினமும் சந்தித்து வருகிறது.
திருப்பூர் நகரில் உள்ள காற்றின் நிலை குறித்த ஆய்வில், அதிர்ச்சி தகவல் வெளியானது. பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, அரசு மருத்துவமனை பகுதியில் நடத்திய ஆய்வில், 2.5 மைக்ரானுக்கு கீழ் உள்ள துகள்கள் அளவு, 73 மைக்ரோ கிராம்/ மீட்டர் க்யூப், 10 மைக்ரானுக்கு கீழ் உள்ள துகள்கள் அளவு, 147 மைக்ரோ கிராம்/ மீட்டர் க்யூப், என உயர்ந்திருந்தது. இதனால், சுவாசக்கோளாறு ஏற்படும் அபாயமும் உள்ளது.
காற்றிலுள்ள, கார்பன் டை ஆக்சைடு வாயுவை உட்கிரகித்து, நமக்கு சுவாசிக்க தூய காற்று வழங்குபவை மரங்கள். காற்று மாசு அதிகரிப்புக்கு முக்கிய காரணம், மரங்கள் குறைவே. எனவே, மரங்கள் வளர்ப்பது மிக முக்கிய தேவையாக மாறியுள்ளது. அதே போல், மாவட்டத்தில், விவசாயம் பிரதானமாக இருந்தாலும், பொய்க்கும் மழை, பருவம் தவறும் கால சூழல் காரணமாக பாதிப்பு ஏற்படுகிறது. நிலத்தடி நீர் மட்டமும், அபாய கட்டத்தை எட்டியுள்ளது. இதனால், அதிகளவு மரங்கள் வளர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.


"வெற்றி' அமைப்பு தலைவர் சிவராம்:மாவட்டத்தை பசுமையாக்கும் பணியில், அனைத்து தரப்பினரும் ஒத்துழைத்ததால், 3.60 லட்சம் மரக்கன்றுகளை நட்டு, பராமரித்து வருகிறோம். மரம் மட்டுமன்றி, நகரின் சுற்றுச்சூழலை காக்க வேண்டிய பொறுப்பு, தொழில் துறையினருக்கு உண்டு. பெய்யும் மழை நீரை முழுமையாக சேகரித்தால், நிலத்தடி நீர் மட்டத்தையும், நீரின் தரத்தையும் மேம்படுத்தலாம்.
தொழிற்சாலை கூரைகளிலிருந்து, மழை நீரை சேகரித்து, போர்வெல்கள் மூலம், முழுமையாக நிலத்துக்குள் இறக்க வேண்டும். வீணாக உள்ள போர்வெல்களையும் இதற்கு பயன்படுத்த வேண்டும். ஆறுகள் மற்றும் ஓடைகள், சாக்கடை கழிவு நீர் செல்லும் கால்வாயாக மாற்றப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தொழிற்சாலைகளிலும், நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் உள்ள நிலையில், வெளியேறும் கழிவுகளை, சுத்திகரிப்பு இயந்திரங்கள் பொருத்தி, சுத்திகரிக்கலாம். இதற்கு, ஒரு லிட்டருக்கு இரண்டு காசு மட்டுமே செலவாகிறது.பல ஆயிரம் ரூபாய் செலவழித்து நீர் வாங்குவதற்கு பதில், சுத்திகரித்து பயன்படுத்தலாம். அதன் மூலம், நமது அபாயகரமான கழிவுகள் ஆறுகளில் ஓடுவது தவிர்க்கப்படும்.
தென் மேற்கு மற்றும் வட கிழக்கு பருவ மழை ஏமாற்றியுள்ள நிலையில், நமது மாவட்டத்தில் வறட்சியும், நீர் தட்டுப்பாடும் ஏற்படும் அபாயம் உள்ளது. நிலத்தடி நீர் மட்டமும், பாதாளத்துக்கு சென்றுள்ளது. தொழிற்சாலைகள், உடனடியாக கழிவுநீரை மறு சுழற்சி செய்யும் கட்டமைப்புகளை, உடனடியாக அமைக்க வேண்டும்.
பின்னலாடை உற்பத்தி, ஏற்றுமதி வர்த்தகம் என தொழிலில் மட்டுமல்ல, இயற்கையை மீட்டு, காக்கும் வகையில், 3.60 லட்சம் மரக்கன்றுகள் நட்டு, மரங்களாக வளர்த்து வருகிறோம். அதே போல், நிலத்தடி நீர் மட்டம், நீர்நிலைகள் காப்பதிலும், முன் மாதிரியான திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.


கோவை "சிறுதுளி' அமைப்புநிர்வாக அறங்காவலர் வனிதா மோகன்:


நகர மயமாக்குதலில், கட்டடங்கள், ரோடு அமைக்க, முதலில் பலியாவது மரங்களே. மக்கள் வாழும் பகுதிக்கு, நுரையீரலாக மரங்களே உள்ளன. மரங்களை அழிப்பது, நம்மை நாமே அழித்துக் கொள்வது சமம். உயிரினங்களுக்கு பிரதானமான, மரங்களை வளர்க்கும் அருமையான பணியில், "வனத்துக்குள் திருப்பூர்' என்ற திட்டத்தின் கீழ், "வெற்றி' அமைப்பு செயல்பட்டு வருகிறது.
மரக்கன்றுகளை நடுவதோடு மட்டுமின்றி, இரண்டு ஆண்டுகளுக்கு தண்ணீர் விட்டு, அவற்றை பராமரித்தல், கண்காணித்தல் என்பது, மிகவும் பாராட்டுக்குரியது. மரம் வளர்ப்பில், இத்திட்டம், முன்மாதிரியாக திகழ்கிறது. மற்ற நகரங்களும், இதை முன்மாதிரியாக கொண்டு, சேவை அமைப்புகள் களமிறங்க வேண்டும்.
மாவட்டத்தில், 3.60 லட்சம் மரக்கன்றுகள் நட்டு, அவற்றை கண்காணித்து, நூறு சதவீதம் மரங்களை வளர்த்து வருவதில், "வெற்றி' அமைப்பு தலைவர் மற்றும் குழுவினரின், அருமையான திட்டமாகும்.


முன் மாதிரி திட்டம்!


வழக்கமாக மரக்கன்று நடுவதுபோல் இல்லாமல், "வனத்துக்குள் திருப்பூர்' திட்டம், முற்றிலும் மாறுபட்டது. இத்திட்டத்தின் கீழ் நடப்படும் மரக்கன்றுகள், தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு தண்ணீர் விட்டு பராமரிக்கப்படுகிறது. இவற்றுக்கு, டிராக்டர்கள் தண்ணீர் விடுவதை, ஜி.பி.எஸ்., முறையில் கண்காணிக்கப்படுகிறது. அதோடு, மரக்கன்றுகள் நடப்பட்டுள்ள நிலங்கள், நவீன தொழில் நுட்பம் மூலம் கண்காணிக்கப்படுகிறது. வேளாண் துறை வல்லுனர்கள் கொண்ட குழு, நடப்பட்ட மரக்கன்றுகளை தொடர்ந்து ஆய்வு செய்து, தேவையான ஆலோசனைகள் வழங்கி வருகிறது. இரண்டு ஆண்டுகள் இவ்வாறு கண்காணிக்கப்படுவதால், நடப்பட்ட கன்றுகள், பசுமை பூத்துக்குலுங்கும் மரங்களாக வளர்வது உறுதி செய்யப்படுகிறது.


அடர் வனமாகும் அணைப்பகுதி!


"வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில் கிராம மக்கள் இணைந்து மரக்கன்றுகள் நட்டு வருகின்றன. மாவட்டத்தின் எல்லை கிராமமான, பொன்னிவாடி ஊராட்சியில் உள்ள எல்லப்பாளைத்தில், "அனிதா டெக்ஸ்' நிறுவனம் உதவியோடு, 16 கிராமங்களை சேர்ந்த மக்கள் இணைந்து, கடந்தாண்டு, 20 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டனர். "வனத்துக்குள் திருப்பூர் 2' திட்டத்தில், இந்தாண்டு, தாராபுரம் நல்லதங்காள் அணை பகுதியில், 32 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
அணை பகுதியில், 900 ஏக்கர் பரப்பளவில் இருந்த, சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும் சீமை கருவேலன் மரங்கள் அகற்றப்பட்டன. அங்கு, ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு, 36 ஆயிரம்மரக்கன்றுகள் நட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. அதே போல், கிராம பகுதிகள்,குடியிருப்புகள், கல்வி நிறுவன வளாகங்கள், தொழிற்சாலை வளாகங்கள், பொதுஇடங்கள் என, மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டு, பொதுமக்கள்ஆர்வத்தோடு பராமரித்து வருகின்றனர்.


அதிகரிக்கும் பசுமை ஆர்வம்!


இத்திட்டம், இந்திய அளவில், முன் மாதிரியான, சிறந்த திட்டமாக விளங்குகிறது. இத் திட்டத்தை, பிற மாவட்டங்களும் பின்பற்ற துவங்கியிருப்பதே, அதன் வெற்றியை பறை சற்றுகிறது. திண்டுக்கல் நகரில் உள்ள தொழில் நிறுவன உரிமையாளர்கள், கல்வி நிறுவனங் கள், சேவை அமைப்புகள் இணைந்து, "திண்டி மா வனம்' என்ற அமைப்பை உருவாக்கி, மரக்கன்றுகள் நட்டு, பராமரித்து வருகின்றனர். பல்லடத்தில் "வனம் இந்தியா பவுண்டேசன்' அமைப்பும், பசுமைப்பணியில் கரம் கோர்த்து, களமிறங்கி செயல்பட்டு வருகிறது. இதேபோல், மாவட்டத்தில் உள்ள, பல்வேறு பசுமை அமைப்புகளும், "வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில் இணைந்து, பசுமை வளர்க்கும் புனிதப்பணியில் ஈடுபட்டுள்ளன.


"அனிதா டெக்ஸ்காட்' நிர்வாக இயக்குனர் சேகர் :


"வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், சொந்த மண்ணில் நட வேண்டும் என்ற நோக்கில், பொன்னிவாடி ஊராட்சியில், 18 கிராமங்களிலும், 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. குறிப்பாக, மயானங்கள் மரங்களாக, பூங்காக்களாக மாற்றப்பட்டுள்ளன. நல்லதங்காள் அணைப்பகுதியில், ஒரு லட்சம் மரக்கன்றுகள் என இலக்கு நிர்ணயித்து, 32 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு, சீமை கருவேலன் மரங்களால் சூழ்ந்து, வெறும் காடாக நுழைய முடியாமல் இருந்த அணை பகுதி, தற்போது இயற்கை மற்றும் பல்லுயிரினங்களுக்கு பலன் அளிக்கும் வகையில், அருமையான மரங்களால், அற்புதமான பூமியாக மாறியுள்ளது.
பத்து ஆண்டுகளில், அருமையான வனமாக இது மாறும். கிராம மக்களின் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைந்த உழைப்பு காரணமாக, இப்பகுதி பசுமையாக மாறியுள்ளது. அடுத்த மழை காலத்தில், மீதமுள்ள இடத்தில் மரக்கன்றுகளும் நடப்படும். ஒரு பகுதியில், நமது மண்ணின் மரபு சார்ந்த, அழிந்த மற்றும் அரிய வகை நாட்டு மரங்கள் அனைத்தும் கொண்ட மரப்பூங்கா அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. கிராம மக்கள் இணைந்தால், ஒரு சில ஆண்டுகளில், தங்கள் பகுதியை பசுமையாக மாற்றலாம், என்பதற்கு சிறந்த உதாரணம், வளர்ந்துள்ள, 52 ஆயிரம் மரக்கன்றுகளாகும்.


சி.ஐ.ஐ., திருப்பூர் மாவட்ட கவுன்சில் தலைவர் கோவிந்தராஜூ :


திருப்பூர் தொழில் வளர்ச்சியின் வேகத்தில், நமக்கே தெரியாமல், இயற்கையை அழித்துள்ளோம். மரங்கள் வெட்டியதோடு, நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என பஞ்ச பூதங்களுக்கும், தெரியாமல் பாதிப்பை ஏற்படுத்தினோம். அதனை உணர்ந்து, தற்போது இயற்கை மீட்கும் அரும்பணியில் ஈடுபட்டுள்ளோம். ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில் நுட்பம், சூழல் பாதிக்காத, காற்றாலை மின் உற்பத்தி, சோலார் மின் உற்பத்தி என, திருப்பூர் தொழில் துறையினர் கவனம் செலுத்தி வருகிறோம்.
அவ்வகையில், "வனத்துக்குள் திருப்பூர்' திட்டமும், திருப்பூருக்கு பெயர் பெற்றுத்தரும் அருமையான திட்டமாக உள்ளது. மரக்கன்று நட்டு, இரண்டு ஆண்டு பராமரிக்கும், திட்டத்தின் செயல்பாடும், மரம் வளர்ப்பது குறித்த வழிமுறைக்கு, மிகச்சிறந்த முன் மாதிரி திட்டமாக உள்ளது.


வேளாண் உதவி இயக்குனர் சுருளியப்பன் :


"வனத்துக்குள் திருப்பூர்' திட்டம், மாவட்டம் முழுவதும் நிலத்தின் மண் மாதிரி ஆய்வு செய்து, அதற்கு ஏற்ற மரங்கள் நடப்பட்டது.ஒவ்வொருவரின் நிலமும் பார்வையிட்டு, மண், நீர் ஆய்வு செய்து, அதற்கு ஏற்றவாறு மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டதோடு, தொழில் நுட்ப ஆலோசனையும் வழங்கப்பட்டது.

நீர் வசதி உள்ளவர்கள், சொட்டு நீர் பாசனம் அமைத்து, பராமரித்து வருகின்றனர். இலக்கை தாண்டி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதோடு, நடப்பட்டவையும் சிறப்பாக உள்ளன. சில விவசாயிகள், மரங்களுக்கு மத்தியில், களை பாதிப்பை தடுக்கும் வகையில், ஊடுபயிராக உளுந்து உள்ளிட்டவற்றை சாகுபடி செய்துள்ளனர்.

திட்டத்தின் "வெற்றி' யால், ஈரோடு மாவட்ட விவசாயிகள், பசுமை அமைப்பினர், இதே வழிமுறையை கேட்டறிந்து, செயல்படுத்தி வருகின்றனர்.திண்டுக்கல் பகுதி, தொழில் அமைப்பினர் துவங்கியுள்ளனர். அருகிலுள்ள மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, ஆண்டிபட்டி தாலுகாவை சார்ந்த விவசாயிகளும், சேவை அமைப்புகளும் தங்கள் பகுதியில் இதனை விரிவுபடுத்த ஆலோசனை பெற்றுள்ளனர்.

தாராபுரம் நல்லதங்காள் அணை பகுதியில் நடப்பட்ட மரக்கன்றுகள் 32,000
1.35 லட்சம் மரக்கன்று, "வனத்துக்குள் திருப்பூர்' முதல் திட்டத்தில் நடப்பட்டன.
2.25 லட்சம் மரக்கன்று, வனத்துக்குள் திருப்பூர் 2 திட்டத்தில் நடப்பட்டன.
30 பின்னலாடை தொழில் நிறுவனங்கள் வழங்கிய டிராக்டர்கள்
3.60 லட்சம், மரக்கன்றுகள், இரண்டு ஆண்டில் நடப்பட்டுள்ளன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X