சென்னை:பிரதமர் நரேந்திர மோடியை, இன்று சந்திக்கும் முதல்வர் பன்னீர்செல்வம், 'மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, 'பாரத ரத்னா' விருது வழங்க வலியுறுத்துவார்' என, தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில், 'வர்தா' புயலால், சென்னை, காஞ்சி புரம், திருவள்ளூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. சேதங்களை சரி செய்ய, தமிழக அரசு, 500 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது. ஆனால், சேதங்கள் அதிகமாக இருப்பதால், கூடுதல் நிவாரணம் தேவை. இந்தக் கோரிக்கையுடன், டில்லி சென்ற முதல்வர் பன்னீர்செல்வம், இன்று காலை, பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.
இது குறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:தமிழகத்தில், வர்தா புயலால் ஏற்பட்ட சேதத்துக்கு, மதிய அரசிடம் நிவாரணம் கோர வும், தமிழகம் சார்பாக பல கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் மோடியிடம் அளிக்கவும், முதல்வர் பன்னீர்செல்வம், இன்று அவரை சந்திக்க உள்ளார். அப்போது, 'மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும்; பார்லிமென்ட் வளாகத்தில், அவரது முழு உருவ வெண்கல சிலையை நிறுவ வேண்டும்' என்பது போன்ற கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தையும் பிரதமரிடம் அளிப்பார்.
இவ்வாறு தமிழக அரசு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
கவர்னருடன்திடீர் சந்திப்பு ஏன்?
முதல்வர் பன்னீர்செல்வம், நேற்று மாலை, திடீரென ராஜ்பவன் சென்று, கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்தார். இதனால், அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என்ற, செய்திகள் பரவின. ஆனால், முதல்வர் இன்று டில்லி செல்வதால், மரியாதை நிமித்தமாகவே, கவர்னரை சந்தித்தார் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.இன்று காலை, 9:35 மணிக்கு, சென்னையில் இருந்து, ஏர் இந்தியா விமானம் மூலம், டில்லி செல்லும் முதல்வர் பன்னீர்செல்வம், இரவு, 11:30 மணிக்கு திரும்புகிறார்.