மிரட்டாமலே வந்தது தேடி... மிச்சமானது எட்டு கோடி!| Dinamalar

மிரட்டாமலே வந்தது தேடி... மிச்சமானது எட்டு கோடி!

Added : டிச 20, 2016
Share
அகன்று விரிந்த அவிநாசி சாலையில், அதிகாலையில், தோழியின் காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர் சித்ராவும், மித்ராவும். தோழி காரை ஓட்ட, முன் சீட்டில் உட்கார்ந்து கொண்டே, சாலையின் இரு புறமும் படர்ந்துள்ள பனி மூட்டத்தை ரசித்துக் கொண்டு வந்தாள் மித்ரா. பின் சீட்டில் சப்தமின்றி அமர்ந்து கொண்டிருந்தாள் சித்ரா. அமைதியைக் கிழிக்க, பண்பலையை ஒலிக்க விட்டாள் தோழி.மருதமலை மாமணியே
மிரட்டாமலே வந்தது தேடி... மிச்சமானது எட்டு கோடி!

அகன்று விரிந்த அவிநாசி சாலையில், அதிகாலையில், தோழியின் காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர் சித்ராவும், மித்ராவும். தோழி காரை ஓட்ட, முன் சீட்டில் உட்கார்ந்து கொண்டே, சாலையின் இரு புறமும் படர்ந்துள்ள பனி மூட்டத்தை ரசித்துக் கொண்டு வந்தாள் மித்ரா. பின் சீட்டில் சப்தமின்றி அமர்ந்து கொண்டிருந்தாள் சித்ரா. அமைதியைக் கிழிக்க, பண்பலையை ஒலிக்க விட்டாள் தோழி.
மருதமலை மாமணியே முருகைய்யா...தேவரின் குலம் காக்கும் வேலய்யா...
கணீரென்று ஒலித்த பாடலில், காருக்குள் பக்தி மணம் பரவியது.
''அக்கா! நம்ம மருதமலையில, வருஷா வருஷம் தைப்பூசத்துக்கு, கோவிலுக்குக் கீழ இருக்கிற மைதானத்துல அன்னதானம் போடுவாங்களே. இந்த வருஷம் கிடையாதாம்,'' என்று ஆன்மிகத்தில் ஆரம்பித்தாள் மித்ரா.
''ஏன் மித்து! அறநிலையத்துறையில பணமில்லையா? அதிகாரிகளுக்கு மனமில்லையா?'' என்றாள் சித்ரா.
''அது அவுங்க போடுறதில்லை; ஆண்டாண்டு காலமா ஒரு குடும்பம் தான், இதைப் பண்ணிட்டு இருக்காங்க. கட்டளைக்காரங்கன்னு சொல்லுவாங்க. அவுங்களை, 'இந்த வருஷம், கீழேயே மண்டபம் பிடிச்சு, போட்டுக்கோங்க. இங்க இடம் தர முடியாது'ன்னு சொல்லீட்டாராம் பெரிய ஆபீசர். பாவம், அந்த குடும்பம், பெரும் வேதனையில இருக்காங்க,'' என்றாள் மித்ரா.
''ஓ...அந்த 'இளம்' அதிகாரியா...அவரு, அவுங்களை மட்டுமா கீழ இறக்கி விட்ருக்காரு. சாமிக்கு சமைக்கிற மடப்பள்ளியை, பிரசாதம் விக்கிற கான்ட்ராக்ட்காரங்களுக்குக் கொடுத்துட்டு, அடிவாரத்துல இருக்குற கட்டடத்துக்கு மடப்பள்ளியை இறக்கீட்டாராம். ஆகமப்படி, அதை மாத்தவே கூடாதாம்,'' என்றாள் சித்ரா.
''ஏற்கனவே, கடைக்காரங்கள்ட்ட வசூல் பண்றாரு; அன்பளிப்பா வர்றதெல்லாம், கோவில் செலவு கணக்குல காமிச்சிர்றாருன்னு அவரு மேல ஏகப்பட்ட, 'கம்பிளைண்ட்' இருக்கு'' என்றாள் மித்ரா.
''ஆளுங்கட்சிக்காரங்களாலேயே அவரை அசைக்க முடியலையாம்,'' என்றாள் சித்ரா.
கார் ஓட்டிக் கொண்டிருந்த தோழியின் அலைபேசியில், 'டிங் டிங்' என்று 'வாட்ஸ் ஆப்' மெசேஜ்கள் வந்து விழுந்து கொண்டே இருந்தன.
''என்னடி உனக்கு இவ்ளோ மெசேஜ் வருது... நீ என்ன கார்ப்பரேஷன் கமிஷனரா?'' என்று அலைபேசியை ஆய்வு செய்தாள் மித்ரா.
''என்னை ஏன்டி வம்புக்கு இழுக்குற... அவரு மட்டும் தான், 'வாட்ஸ் ஆப்' வச்சிருப்பாரா?'' என்று அப்பாவியாய்க் கேட்டாள் தோழி.
''அதில்லைடி... அவருக்கு பேரே, 'வாட்ஸ்ஆப்' கமிஷனர்னு ஆயிருச்சு. தன்னை, 'ஹைடெக் கமிஷனர்'னு காமிக்கிறதுக்காக, 25 'வாட்ஸ் ஆப் குரூப்' ஆரம்பிச்சு, என்.ஜி.ஓ.,ஸ்களை எல்லாம் அதுல சேர்த்திருக்காரு. கார்ப்பரேஷன் அட்மினே, அதுல தான் நடக்குதாம்,'' என்றாள் மித்ரா.
''ஆமா மித்து! நானும் கேள்விப்பட்டேன். பெங்களூரு, ஹைதராபாத், டில்லின்னு எல்லா இடத்துக்கும் என்.ஜி.ஓ., ஆளுங்களோட தான் போறாராம். குப்பை மேட்டர்ல தான், அதிகமா, 'அக்கறை' காட்றாராமே!'' என்றாள் சித்ரா.
''ஆமாக்கா... இப்பக்கூட, 'சுவாச் பாரத்' திட்டத்துக்கு எத்தனையோ கோடி வந்திருக்காம்; அது எவ்ளோன்னு கூட, சொல்றதில்லை. அது அக்கவுன்ட் செக்ஷனுக்கும், அவருக்கும் தான் தெரியுமாம். அந்த காசுல தான், சிட்டியில இருக்கிற, 370 டாய்லெட்லயும், 'வெள்ளையடிக்கிற' வேலை நடக்குது போலிருக்கு. காந்திபுரத்துல, கழிப்பிடத்தையே இடிச்சுக் கட்றாங்க. ஒண்ணுமே புரியலை,'' என்றாள் மித்ரா.
''மித்து... அவரு வாட்ஸ்ஆப்'ல பேசுறதை நானும் கேட்டேன். காலேஜ் பசங்களை 'சுவாச் கட்டா'ங்கிற, 'ஆப்ஸ்'ஐ 'டவுண்லோடு' பண்ணச் சொல்றாரு... அதுல குப்பைத்தொட்டி பத்தி ஏதாவது புகார் பண்ணுனா, உடனே சரி பண்ணிர்றாங்க. அதெல்லாம் நல்ல விஷயம் தானே,'' என்றாள் தோழி.
''இப்போ, ஆறாயிரம் பேரு தான் அதை 'டவுண்லோடு' பண்ணீருக்காங்க. நம்மூரு மக்கள் தொகைக்கு மொத்தம் 35 ஆயிரம் பேரு பண்ணனுமாம். டில்லியில இருந்து ஒரு, 'டீம்' வருது. அவுங்க ஆயிரம் பேர் நம்பரை வாங்கி, அதுல நுாறு பேருக்கு போன் பண்ணுவாங்களாம். அவுங்க, 'சுவாச் கட்டா' பத்தி கரெக்டா பதில் சொன்னா, நம்ம கார்ப்பரேஷனுக்கு மார்க் கிடைக்கும்; அவார்டும் கிடைக்கலாம்,'' என்றாள் மித்ரா.
''இந்த மாதிரி, 'ஜிக் ஜாக்' வேலை பார்த்து, அவார்டு வாங்கி என்ன பிரயோஜனம்? வந்து ரெண்டு வருஷத்துக்கு மேலாச்சு. ஒரு 'சப் வே' கூட கட்டலை. அவினாசிலிங்கம் யுனிவர்சிட்டிகிட்ட அமைச்ச நடை மேம்பாலத்தையும் இன்னும் திறக்கலை. குளங்களைச் சுத்தி சுவரு கட்டி, ஒரு வேலி போட்ருக்கலாம். எதுவுமே செய்யலையே,'' என்று அலுத்துக் கொண்டாள் சித்ரா.
ஆறு வழிச்சாலையில் வழுக்கிக் கொண்டு சென்றது வாகனம். மித்ரா கேட்டாள்...
''ஏன்க்கா...நம்ம பொள்ளாச்சி ரோடும் இந்த மாதிரி ஆயிருமா?''
''ம்ஹூம்... சான்சே இல்லை; அதுலயும், குறிச்சி குளக்கரையில வெறும் ரெண்டு மீட்டர் தான், அகலப்படுத்தப் போறாங்க. அங்க, 'சென்டர் மீடியன்' கூட அமைக்கப் போறதில்லையாம். எட்டு மீட்டர் ரோட்டை, பத்து மீட்டராக்குறாங்க. அவ்ளோ தான்''
''அங்க தான் ரெண்டு பக்கமும் நல்லா இடமிருக்கே!''
''குளத்துக்கு எதிர்ல, 170 மீட்டர் நீளத்துக்கு தான், தடுப்புச்சுவர் கட்றாங்க. மீதியைக் கட்டுறதுக்கு நிதி இல்லியாம். அங்க ரோட்டோரத்தை ஆக்கிரமிச்சிருக்கிற சில பேரு, அதை எடுக்க முடியாதுன்னு தெம்பா நிக்கிறாங்க. அவுங்களுக்கு, 'பொலிடிக்கல் சப்போர்ட்' இருக்காம்,''
''நம்ம ஊரைக் கெடுத்து குட்டிச் சுவராக்குறதே, இந்த 'பொலிட்டிக்கல் பிரஷர்' தான். இருபது லட்சம் பேரு, பயனடையுற காந்திபுரம் மேம்பாலத்தோட டிசைனை, வெறும் 20 பேருக்காக மாத்துனாங்களே. அம்பது பேரு சேர்ந்து நடத்துன போராட்டத்துக்காக, 601 கோடி ரூபா, பை-பாஸ் திட்டத்துக்கு சென்ட்ரல் கவர்மென்ட்டுக்கு ஒத்துழைப்பு தராம, கை விட வச்சாங்களே... நினைச்சாலே கொதிக்குதுக்கா!''
கையில், 'சில்' என்றிருந்த தண்ணீர் பாட்டிலை, மித்ராவிடம் நீட்டி, 'பீ கூல்' என்ற சித்ரா, வழியோரச் சுவர்களில் தென்பட்ட அரசு அலுவலர் ஒன்றிய போஸ்டர்களைப் பார்த்ததும், ஏதோ நினைவுக்கு வந்தவளாய்க் கேட்டாள்.
''மித்து! நம்மூர்ல அரசு அலுவலர் ஒன்றிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்துச்சே. ஏதோ டிஎம்கே கூட்டம் மாதிரித்தான் நடந்துச்சாம். கருணாநிதிக்கு ஒரே புகழ் மாலையாம். காரணம், அதுக்கு மாவட்டத் தலைவரா பொறுப்பு ஏற்கிறவரு...'மாஜி' அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமிட்ட பி.ஏ.,வா இருந்தவரு,''
''அது தான் ஒனக்குத் தெரியுமா... அந்த கூட்டம் நடந்துட்டு இருக்கிறப்போ, கருணாநிதியைப் பத்தி, ஏதேதோ தகவல், 'வாட்ஸ் ஆப்'லயும், மெசேஜ்லயும் வந்திருக்கு. சலசலப்பானவுடனே, 'மைக்'கைப் பிடிச்ச, மாநிலத்தலைவர் சண்முகராஜன், ''யாரும் அந்தச் செய்தியை நம்ப வேண்டாம்; கருணாநிதிக்கு, 'ட்ரீட்மென்ட்' கொடுக்குற டாக்டர் எழில்ட்ட பேசுனேன். அவரு நல்லாத்தான் இருக்காராம்'னு சொல்லிருக்காரு,'' என்றாள் மித்ரா.
அதைக் கண்டு கொள்ளாத சித்ரா, ''ஏய் மித்து! நாம அன்னிக்கு ஒரு மேட்டர் பேசிட்டு இருந்தோமே. விதவையிடம் லஞ்சம் வாங்குன வி.ஏ.ஓ.,பத்தி... அந்த வாணியை 'சிட்டியில இருந்து சிறுவாணிக்கு போ நீ'ன்னு சித்திரைச் சாவடிக்கு மாத்தீட்டாங்களாம்,'' என்று உற்சாகமாய்க் கூறினாள்.
''இதே மாதிரி சில இன்ஸ்களைத் துாக்கி விட்டா நல்லாருக்கும். அவுங்க பண்ற வேலை அப்பிடி இருக்கு. போனவாரம், சரவணம்பட்டியில ஒன்பது லட்ச ரூபாய்க்கு பான் மசாலா போதைப் பொருளைப் பிடிச்சிருக்காங்க. தகவல் தெரிஞ்சு, மீடியாக்காரங்க போறதுக்குள்ள, 'டீலிங்' பேசி, ஒரு பெரிய அமவுன்டைத் தட்டீட்டாங்க,''
''பெரிய அமவுன்ட்ன்னு சொன்னதும், கடைசியா 'டவுண்டாடி' பதவியில இருந்த நம்ம 'மன்னர் மகன்' பத்துன ஒரு மேட்டர் ஞாபகத்துக்கு வந்துச்சு. ஐநுாறு, ஆயிரம் ரூபா செல்லாதுன்னு சொன்ன பிறகு, ஆளுக்கு ஆளு பணம் மாத்த அலைஞ்சப்போ, அவரும் எட்டு கோடியை வச்சிட்டு, 'எப்பிடியாவது மாத்திக் கொடுங்க'ன்னு பல பேர்ட்ட முட்டி மோதிருக்காரு. மாத்துனாரா, இல்லையான்னு தான் தெரியலை'' என்றாள் சித்ரா.
''அவரு வெறும், 'டம்மி'யாதான் இருந்தார்னு சொல்லுவாங்க,'' என்று சந்தேகம் கேட்டாள் மித்ரா.
''மாவட்டமா இருந்திருக்காரு; டவுண்டாடிக்குன்னு கட்டடக்காசு, கமிஷன்லாம் கேக்காமலே வந்திருக்குமே. அதுலயே அவரு, 15 கோடிக்கு மேல பார்த்துட்டாரு. செலவு போக, இவ்ளோ காசு இருந்திருக்கும்னு ரத்தத்தின் ரத்தங்கள் பேசிக்கிறாங்க,'' என்றாள் சித்ரா.
''அப்படியா, இன்னொரு விசயமும் கேள்விப்பட்டேனே... டவுண்டாடி போயஸ் தோட்டத்துக்கு போயி, முக்கியமானவங்கள பாத்துட்டாராமே,'' என்றாள் மித்ரா.
''ஆமாம்... மீதியை அடுத்த வாரம் சொல்லுறேனே,'' என முற்றுப்புள்ளி வைத்தாள் சித்ரா.
இருவரின் பேச்சையும் கேட்டுக் கொண்டு வந்த தோழி, 'எனக்கு பயங்கர பசியாயிருச்சுப்பா. சாப்பிடலாமா?'' என்று பை-பாஸ் ஓரமாய் இருந்த ஓட்டலில் காரை ஓரம் கட்டினாள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X