இன்று நம் வாழ்க்கையில் பழமொழிகளும், வாக்கியங்களும் எந்த நோக்கத்திற்காக சொல்லப் பட்டதோ, அதனை தவறாக புரிந்து பயன்படுத்தி கொண்டிருக்கிறோம். அதற்கான பொருளை அறிய வேண்டும் என்பது பற்றி நாம் சிந்திக்காதது, அதைவிட வேதனையான விஷயம். இதைத்தான் திருவள்ளுவர்,
''எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்பது அறிவு''(குறள் 355)
எனக்கூறியுள்ளார். அதாவது ஒரு பொருள் எத்தன்மை உடையதாயினும் அப்பொருளின் உண்மை நிலைகாண்பதே அறிவு என்பது இதற்கு பொருளா கும். இன்று நாம் தவறாக புரிந்து கொண்டு பயன்படுத்துகின்ற அந்த சரியான வாக்கியங்களை பார்ப்போம்.
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்
அக்காலத்தில் இடி, மின்னல் போன்ற இடர்பாடுகளில் இருந்து பாதுகாத்து கொள்ள வழிகள் மக்களுக்கு தெரியாது. பொதுவாக கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடக்கும். அப்படி நடக்கும்போது, கோபுர கலசங்களில் கம்பு, சோளம், கோதுமை, கேப்பை, வரகு போன்ற தானியங்களை வைத்து மருந்து பூசி கலசம் ஒட்டப்படும்.இந்த தானியங்களுக்கு இடி, மின்னல் போன்றவற்றை தாங்கும் சக்தி உண்டு. ஆனால் 12 ஆண்டுகளில் அதன் சக்தியை இழந்துவிடும் என்பதால், ஏற்கனவே கலசத்தில் உள்ள தானியங்களை மாற்றுவதற்காகதான் ஜீரணாதாரணம் போன்ற சம்பிரதாயங்களும், சடங்குகளும் நடக்கின்றன. இதைத்தான் நமது முன்னோர்கள் கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் எனக்கூறியுள்ளார்.
ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்
இதன் பொருள், கணவனை பொருத்த வரை அவனது மனைவி ஊரார் பெற்ற பிள்ளைதான். மனைவி கருவுற்றிருக்கும் காலத்தில் கணவன், அவளுக்கு சத்தான உணவுகளை கொடுப்பதன்மூலம், அவள் வயிற்றில் வளர்ந்து வரும் அவனது குழந்தைக்கு அந்த சத்துக்கள் தானாகவே சென்றுவிடும் என்பதைதான் மூத்தோர் அப்படி சொன்னார்கள்.
ஆறிலும் சாவு நுாறிலும் சாவு
கர்ணனுக்கு, தான் குந்திதேவியின் மூத்த மகன் என தெரியவருகிறது. ஏற்கனவே குந்தி தேவிக்கு பாண்டவர்கள் 5 மகன்கள் உள்ளனர். அவர் களுடன் கர்ணனும் சேர்ந்தால், பாண்டவர்கள் எண்ணிக்கை 6 ஆக மாறிவிடும். ஆனால், பாண்டவர்களின் எதிரிகளான கவுரவர்கள் மொத்தம் 100 பேர் ஆவர். இந்த இரண்டு பிரிவினருக்கு இடையே போர் நடந்தால், கர்ணன் பாண்டவர்களுடன் அல்லது கவுரவர்களுடன் சேர்ந்து போர் புரிய வேண்டும். யாராவது ஒரு பிரிவினருடன் சேர்ந்து போர் புரிந்தாலும், போரில் மரணம் ஏற்பட நிச்சயம் வாய்ப்புண்டு என்பதை குறிப்பதற்காகதான் ஆறிலும் சாவு, நுாறிலும் சாவு என்பது சொல்லப்பட்டது. இதில் குறிப்பிட வேண்டிய விஷயம், நன்றிக்கடன் தீர்ப்பதற்காக கர்ணன் துரியோதனுடன் இணைந்தார்.
சிவபூஜையில் கரடி புகுந்த மாதிரி
கரடி என்பது சிவன் கோயில்களில் வட்டவடிவமாக இருக்கும் வாத்தியத்தை குறிக்கிறது. அதாவது சிவன் கோயிலில் பூஜைகள், தீபாராதனை போன்ற முக்கிய நிகழ்வுகள் நடக்கும்போது, இந்த வாத்தியம் இசைக்கப்படுகிறது. அதன் நோக்கம் அந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக தான். இதைதான் சிவபூஜையில் கரடி புகுந்த மாதிரி என்கின்றனர்.
நல்லதுக்கு காலமில்லை
இதற்கு அர்த்தம் நல்ல செயல்கள் செய்வதற்கு காலம், நேரம் எதுவுமே கிடையாது. உழைப்பையும், திறமையையும் மட்டுமே நம்பி எந்த ஒரு செயலும் தொடங்க வேண்டும். மூடநம்பிக்கை, தவறான சம்பிரதாயங்களால் நல்ல செயல்களை தள்ளிப்போடக்கூடாது. திருமணம் போன்ற எல்லா நல்ல செயல்களுமே நாள், நட்சத்திரம் பார்க்காமல் உடனே செய்ய வேண்டும் என்பதையே 'நல்லதுக்கு காலமில்லை' என்று கூறியுள்ளனர்.
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது
இதற்கான அர்த்தம் ஜோதிடத்தில் புதன்(மெர்க்குரி) கோள் அறிவாற்றலையும், திறமையையும் குறிக்கும். எனவே கல்வி என்பது ஒருவனுக்கு கிடைக்க வேண்டிய செல்வங்களுள் முக்கியமான செல்வமாகும். ஒருவன் பணம் கிடைத்ததும் பெரிய செல்வந்தனாககூட ஆகிவிடலாம். ஆனால் கல்வி கிடைப்பது என்பது மிகவும் அரிதான விஷயம். இதை குறிப்பதற்காகதான் 'பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது' என்கின்றனர்.
கல்லை கண்டால் நாயை காணோம்நாயை கண்டால் கல்லை காணோம் ஒரு சிற்பியின் சிலை வடிக்கும் திறமையை குறிப்பிடுவதற்காகவே, இவ்வாறு சொல்லப்படுகிறது. அதாவது ஒரு சிற்பி, நாய் சிலை வடித்தால் அதை நாயாகவே நினைத்து பார்க்கும்போது அதில் இருக்கும் கல், நம் கண்களுக்கு தெரியாது. ஆனால் நாம் ரசனையில்லாமல் அதை வெறும் கல்லாக மட்டும் பார்த்தால், அந்த சிற்பி வடித்த நாய் சிலை தெரியாது. இதைதான் நாம் 'கல்லை கண்டால் நாயை காணோம், நாயை கண்டால் கல்லை காணோம்' என்கிறோம்.
அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்
ராமாயணத்தில் ராமன் 14 ஆண்டுகள் வனவாசம் செல்ல நேர்ந்தது. அப்போது, அவனது இளைய தம்பியான பரதனிடம் ஆட்சி பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டன. ஆனால், பரதன் அதை விரும்பவில்லை. தன் அண்ணன் ராமனிடம் ஆட்சியை கொடுக்க விரும்பினான்.ஆனால், ராமன் தனது பாதுகைகளை விட்டுவிட்டு வனவாசம் சென்றான். தன் அண்ணன் மீது கொண்ட மரியாதை காரணமாக, பரதன் அந்த அடிகளையே(செருப்பு) வைத்து வணங்கி ஆட்சி நடத்தினான். எனவே, மக்கள் குறைகளை பாதுகைகளிடம் சொன்னாலே நிறைவேறிவிடும் என்பதை குறிக்கவே, 'அடி உதவுவது போல அண்ணன், தம்பி உதவ மாட்டார்கள்' என்றனர்.
பந்திக்கு முந்து படைக்கு பிந்து!
இதன் பொருள், பொதுவாக நாம் சாப்பிடுவதற்கு கைகளை உட்கார்ந்திருக்கும் பகுதிக்கு முன்புறமாக பயன்படுத்துகிறோம். ஆனால், படை பரிவாரங்களோடு வில் மற்றும் அம்புகளை வைத்து போரிடும்போது, வில்லினை இழுப்பதற்கு நமது கைகளை உடலுக்கு பின்புறமாக பயன்படுத்துக்கிறோம். இதை குறிப்பிடுவதற்காகதான் 'பந்திக்கு முந்து, படைக்கு பிந்து' என்று சொன்னார்கள்.
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?
கழு என்பது ஒருவகை கோரைப்புல். அதை வைத்து பாய் தைக்கலாம். அந்த பாயில் படுத்து உறங்கும் போது, அதில் இருந்து கற்பூர வாசனை வரும். பாயின் அருகில் தேள், பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் நெருங்காது. பாயில் படுத்து உறங்கினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். நிம்மதியான துாக்கமும் வரும். இதைதான் 'கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை' என்று கூறினர். நாம் தவறாக புரிந்துகொண்டு பயன்படுத்துக்கிற வாக்கியங்களை, அதன் பொருள் தெரிந்து சரியான முறையில் பயன்படுத்தினால், நமது வாழ்க்கை அழகாகவும், அர்த்தமுள்ளதாகவும் மாறிவிடும் என்பதில் சந்தேகமில்லை!
- எஸ். ராஜசேகரன்முதுகலை ஆசிரியர்
வத்திராயிருப்பு. 94429 84083