வேதனை தீர்த்தவர்; விழிகளில் நிறைந்தவர் : நாளை எம்.ஜி.ஆர்., நினைவு நாள்| Dinamalar

வேதனை தீர்த்தவர்; விழிகளில் நிறைந்தவர் : நாளை எம்.ஜி.ஆர்., நினைவு நாள்

Added : டிச 22, 2016 | கருத்துகள் (2)
வேதனை தீர்த்தவர்; விழிகளில் நிறைந்தவர் : நாளை எம்.ஜி.ஆர்., நினைவு நாள்

''இருந்தாலும், மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும்; இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்,''
இப்படி சினிமாவில் பாடியது மட்டுமின்றி வாழ்ந்து முடித்தவர் முறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., இப்பூமி உள்ளவரை எம்.ஜி.ஆரின் புகழ் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் இறுதி வரை வெற்றிக்கனியை பறித்தவர். சிறு வயதில் பட்ட கஷ்டத்தை உணர்ந்ததால் தான், முதல்வரானதும் சத்துணவு என்ற மகத்தான திட்டத்தை கொண்டு வந்து பள்ளி மாணவ, மாணவியர் பசியாற செய்தார். யாரை சந்தித்தாலும் அவரது முதல் கேள்வி 'சாப்பிட்டாச்சா' என்பதாக தான் இருக்கும். அந்தளவுக்கு அவரது வீட்டிற்கு சென்று யாரும் சாப்பிடாமல் திரும்பியது கிடையாது. 'அண்ணா என் தெய்வம்' என்ற சினிமாவில் அவர் நடித்து கொண்டிருந்த நிலையில் அரசியலில் இறங்கி முதல்வராகவும் பொறுப்பு ஏற்றார். அந்த படத்தை மறைந்த இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில், தயாரிப்பாளர் துரை தயாரித்தார். எம்.ஜி.ஆர்., முதல்வரானதால், படம் பாதியில் கைவிடப்பட்டதால் நஷ்டம் ஏற்பட்டதாக, துரை கவலையுற்றதை அறிந்தேன். எம்.ஜி.ஆர்., படத்தை தயாரித்து லாபம் ஈட்டியதாக தான் அதுவரை கேள்வி பட்டிருந்தேன். துரை இப்படி வேதனைப்படுகிறாரே என அறிந்து அவரை தொடர்பு கொண்டேன். ''அந்த கதையில் சிறிய மாற்றம் செய்து தருகிறேன். வேறு ஹீரோவை வைத்து படம் எடுங்கள்,'' என அவரிடம் கூறினேன். இதையறிந்த எம்.ஜி.ஆர்., துரையிடம் விசாரித்தார்.
நடிக்க வைத்த தலைவர் : என்னையும் வரச் சொன்னார். ராமாவரம் தோட்டத்திலுள்ள எம்.ஜி.ஆர்., வீட்டிற்கு சென்றேன். ''கதையை மாற்றியது சரி. ஏன் நீயே நடிக்க மாட்டாயா,'' என்றார். ஆக்ஷன் படம் என்பதால் வேறு ஹீரோ நடித்தால் நன்றாக இருக்கும் என அவரிடம் தெரிவித்தேன். 'துாறல் நின்னு போச்சு படத்தில் நீ நன்றாக சண்டை சீன்களில் நடித்திருக்கியே' என சுட்டி காட்டி 'நீயே நடி,' என்றார். அதன்படி அந்த படத்தின் கதையை மாற்றி தங்கை கதாபாத்திரத்திற்கு இரு குழந்தைகள் வருவது போல மாற்றி அவரிடம் காட்டினேன். தங்கை கதாபாத்திரத்திற்கு இரு குழந்தைகள் என்பதை, எப்படி காட்ட போகிறாய் என சினிமாவில் நடிப்பதை நிறுத்தி பல ஆண்டுகளான போதும், கதையை மறக்காமல் நினைவில் வைத்து கேள்வி கேட்ட போது நானே அதிர்ந்து விட்டேன். அந்தளவுக்கு ஆட்சியில் இருந்த போதும், சினிமா மீதான ஈடுபாட்டை அவர் விடவில்லை. பிறகு ரசிகர்களுக்காக ஒரு கதாபாத்திரத்திற்கு சண்டை, மற்றொருவருக்கு நகைச்சுவை காட்சிகள் இடம் பெறுவதை அவரிடம் விளக்கினேன். அப்போது பாராட்டினார். துரதிருஷ்டம், படம் வெளியான போது அவர் இல்லை. ஆனால் படபூஜையின் போது அவர் பங்கேற்றதை படத்தில் வருவது போல காட்டினேன்.
வாழ்வில் கிடைத்த வெகுமதி : 'ஒரு கைதியின் டைரி' படத்தை கமலை வைத்து குருநாதர் பாரதிராஜா இயக்கியிருந்தார். அதை இந்தியில் நடிகர் அமிதாப்பை வைத்து நான் இயக்கினேன். இந்த படத்தின் பிரிவியூவிற்கு வந்த எம்.ஜி.ஆர்., ''தந்தை, மகன் இரு கதாபாத்திரங்கள் ஒரு நடிகர் நடித்தது போல இல்லை. இரு கதாபாத்திரங்களும் இரு நடிகர்கள் நடிப்பது போல அமைத்திருக்கிறாய்,'' என பாராட்டினார். அவரே இரண்டு, மூன்று வேடங்களில் நடித்திருக்கிறார். அப்படிப்பட்டவர் சினிமா பார்த்து பாராட்டியது என் வாழ்வில் கிடைத்த மிகப்பெரிய வெகுமதி.'டார்லிங் டார்லிங்' படபிரிவியூவிற்கு வந்தவர், இந்த படத்தில் வில்லனுடன் சண்டையிடுவது போல ஒரு காட்சி வைத்திருக்கலாம் என்றார். இதுகுறித்து கேட்ட போது, 'தவறு செய்வோர் தண்டனை பெறும் வகையில் காட்சிகளிருந்தால் தான் மக்கள் ரசிப்பர். மேலும் தவறு செய்தால் தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உண்மையாகும்' என்றார். அந்தளவுக்கு தன் அரசு பணிகளுக்கு மத்தியிலும் சினிமா மீதான பிடிப்பை அவர் இறுதி வரை விடவே இல்லை. அதுமட்டுமின்றி 'நாடோடி மன்னன்' போன்ற சினிமாக்களில் நடித்தது போல, இறுதி வரை மக்களுக்காவே ஆட்சி செய்தார்.
மூன்றெழுத்து மந்திரம் : எம்.ஜி.ஆர்., சிவாஜி ரசிகர்கள் இடையே பயங்கர போட்டி இருக்கும். ஆனால் அவர்கள் இரண்டு பேரும் சிறந்த நண்பர்களாக திகழ்ந்தனர். 'எங்க மாமா' என்ற படத்தை எம்.ஜி.ஆரை வைத்து தயாரிக்க திட்டமிட்டு அவரை அணுகியுள்ளனர். ஆனால் இந்த கதை நண்பர் சிவாஜி நடித்தால் நன்றாக இருக்கும் எனக் கூறி சிவாஜியை தொடர்பு கொள்ளும்படி கூறினார். அதன்படி அந்த படத்தில் சிவாஜியும் நடிக்க படம் வெற்றி பெற்றது. தீர்க்கதரிசியாகவும் திகழ்ந்தார். தர்மம் தலைகாக்கும் என சினிமாவில் பாடியவாறு, கஷ்டம் என வருவோருக்கு இறுதி வரை உதவி செய்து வந்தார். அதனால் தான் எம்.ஜி.ஆர்., என்ற அந்த மூன்றெழுத்து மந்திரத்தை இன்றும் மக்கள் உச்சரித்து கொண்டிருக்கின்றனர். எந்தவொரு திட்டம் என்றாலும் அதனால் மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்பதை ஆராய்ந்த பிறகு அதை செயல்படுத்தியும் வந்தார். அதனால் தான் இன்றும், மக்கள் மனங்களில் 'மன்னாதி மன்னனாகவும்' திகழ்கிறார்.
கே.பாக்யராஜ், இயக்குனர், நடிகர்044 - 4308 1207.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X