மாற்றம் நம்மில் இருந்து துவங்கட்டும்!| Dinamalar

மாற்றம் நம்மில் இருந்து துவங்கட்டும்!

Added : டிச 26, 2016 | கருத்துகள் (1)
மாற்றம் நம்மில் இருந்து துவங்கட்டும்!

தன் கணக்கிலிருந்து ஆயிரம், இரண்டாயிரம் பணம் எடுக்க பஞ்சைப்பராரிகள் வங்கி வாசலில் கால்கடுக்க நின்று கொண்டிருக்க, புத்துருக்கு மாறாத தங்க நகைகளும், புதுவாசனையுடன் கூடிய கரன்சிகளும் காரின் டிக்கியிலிருந்தும், கழிப்பறைகளிலிருந்தும் கோடிக்கணக்கில் சிக்குகின்றன. இது ஏழை தேசமல்ல. ஏழைகள் மிகுந்த தேசம் எனப் புலனாகிறது. இந்த ஏழைகள் உருவாகக் காரணம்.. புரையோடிய லஞ்சமும் ஊழலும். "ராணுவத்திற்கு ஜீப் வாங்கியதில் ஊழல்" என்பதுதான் சுதந்திர இந்தியாவில் முதலில் முணுமுணுக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு. ஆனால், அம்பலத்திற்கு வந்து அமளிதுமளியான பெரிய ஊழல் என்றால் முந்த்ரா ஊழல். முந்த்ரா என்ற தொழிலதிபரின் சரிவடைந்த நிறுவனங்களின் பங்குகளை நல்ல விலைக்கு பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி. வாங்கியது என்பது குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டை நாடாளுமன்றத்தில் ஆதாரங்களுடன் பேசி கிடுகிடுக்கவைத்தவர் இந்திராவின் கணவர் பெரோஸ்காந்தி. அப்போது நேரு பிரதமராக இருந்தார். 1957-ல் நடந்த இந்த ஊழலின் அப்போதைய மதிப்பு ஒன்றேகால் கோடி ரூபாய். மத்தியில் நிதி அமைச்சராக இருந்த டி.டி. கிருஷ்ணமாச்சாரி பதவி விலக வேண்டியதாயிற்று. "காங்கிரஸ் என்கிற ஊழல் பானையின் முதல் பெருச்சாளி முந்த்ரா. இன்னும் பல பெருச்சாளிகள் விரைவில் வெளிவரும்" என நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் குரல் எழுப்பின. அதன் பின்னர் பத்து கோடி.. நுாறு கோடி.. ஆயிரம் கோடி.. லட்சம் கோடியென ஊழல் "வளர்ச்சி"யடைந்தது.
இன்றைய சிக்கல் : ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட, விமானப் படையின் முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகி, அண்மையில் கைது செய்யப்பட்டார். தேசத்தைப் பாதுகாப்பார்கள் என நாம் நம்பியவர்களே பணத்தின் முன் காணாமல் போயிருக்கிறார்கள். இந்த "பிரமாண்ட" ஊழல் எல்லாம் ஒருபுறமிருக்கட்டும். இன்றைய பிரதான சிக்கல் என்பது நாள்தோறும் நாம் சந்திக்கும் லஞ்சம் தான். நேர்மையான அதிகாரிகள் இருக்கிறார்கள். அவ்வாறு இல்லாதவர்களைப் பற்றி மட்டுமே பேசுகிறோம். லஞ்சத்தையும் ஊழலையும் அரசியல்வாதிகள்தான் ஒட்டுமொத்தமாகக் குத்தகைக்கு எடுத்திருக்கிறார்கள் என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இது தவறான கணிப்பு. சில்லறை விலையில் மதுபானம் விற்க அனுமதிப்பதற்கு லஞ்சம் கேட்ட சப் இன்ஸ்பெக்டர், தன் சொந்த நிலத்தில் விவசாயம் செய்வதற்காக ஏரியில் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் எடுத்தவரிடம் இந்த விஷயத்தைக் கலெக்டரிடம் சொல்லாமல் இருப்பதற்காக லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர், மின் இணைப்பு வழங்க ரூ.23ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின் வாரிய இன்ஜினீயர், அனுமதியின்றி டாஸ்மாக் மது விற்றவரை வழக்கிலிருந்து விடுவிக்க பணம் வாங்கிய சப் இன்ஸ்பெக்டர், வருங்கால வைப்புநிதி செலுத்துவதில் முறைகேடு செய்த நிறுவனத்திடம் பல லட்சம் லஞ்சம் வாங்கிய அதிகாரி.. என இரு மாதங்களில் லஞ்சம் வாங்கிப் பிடிபட்டவர்கள் ஏராளம். இவர்களெல்லாம் அன்றாடம் நம் தொடர்பில் இருப்பவர்கள்.
கரன்சி போதும் : பிறப்பு, இறப்பு, வாரிசு சான்றிதழ், ரேஷன் கார்டு, மின் இணைப்பு, வீடுகட்ட அனுமதி.. போன்று சட்டத்துக்கு உட்பட்டு கிடைக்க வேண்டிய, நடக்கவேண்டிய வேலைகளுக்குக்கூட லஞ்சம் கொடுக்க வேண்டும் என்ற நிலை உருவாகிவிட்டது. நினைத்தகாரியம் கைகூட இப்போது கடவுள் துணை வேண்டாம். கரன்சி போதும் என்ற நிலையினை உருவாகிவிட்டார்கள். பெண்கள் பொறுப்பிலிருந்தால் ஊழல் செய்யமாட்டார்கள் என்பதும் தவறு. லஞ்சம் வாங்கியதாக அம்பாசமுத்திரம் துணை தாசில்தாராக இருந்த பெண்ணுக்கு அண்மையில் மூன்றாண்டு சிறை தண்டனை வழங்கியது திருநெல்வேலி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம். நீதிபதிகள் நியாயவான்களாக இருக்கிறார்கள் என நினைத்தால், சாரி. டில்லியில் உள்ள திஸ் ஹசாரி கோர்ட்டில் மூத்தபெண் நீதிபதியாக இருந்த ரச்னா திவாரி லகான்பால் என்பவர், வழக்கு ஒன்றின் விசாரணைக்குழு ஆணையராக வக்கீல் ஒருவரை நியமிப்பதற்காக லட்சம் பெற்றபோது கைதானார் இப்படி லஞ்சத்துக்கு யாரும் விதிவிலக்கல்ல என்ற நிலை உருவாகிவிட்டது.
இந்தியாவின் இடம் : ஜெர்மனி தலைநகர் பெர்லினை தலைமையிடமாகக் கொண்ட டிரான்ஸ்பரன்ஸி இன்டர்நேஷனல் வெளியிட்ட 2015-ம் ஆண்டுக்கான ஊழல் குறைவான நாடுகளின் தர வரிசைப் பட்டியலில், டென்மார்க் முதலிடத்தில் உள்ளது. இந்தியா 76-ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவில், மாநில எல்லைகளுக்கு இடையே லாரி போக்குவரத்தில் லஞ்சம் கரைபுரண்டு ஓடுவதாக டிரான்ஸ்பரன்சி இன்டர் நேஷனல் கூறுகிறது. லாரி உரிமையாளர்கள் ஆண்டுதோறும் 22 ஆயிரத்து 200 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கிறார்களாம். லஞ்சப் பணத்தை அதிகாரிகள் 43 சதவிகிதமும் காவல்துறையினர் 45 சதவிகிதமும் பங்கு போட்டுக்கொள்கிறார்கள். சோதனை சாவடிகளில் வாகனங்கள் தேவையிலாமல் நிறுத்தி வைக்கப்படுகின்றன. வாகனங்களின் கட்டாய தாமதங்கள் தவிர்க்கப்பட்டால், வாகனப் பயணங்களின் எண்ணிக்கை 40 சதவிகிதம் அதிகரிக்கும் என்கிறது இந்த அமைப்பு. யார் இது குறித்துக் கவலைப்பட்டார்கள்? இந்தியா விடுதலை பெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பாகவே 1947 ல் ஊழல் தடுப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. லஞ்ச ஒழிப்புக்கென்று அரசாங்கத்தில் அமைப்புகள் இருந்தாலும் அவை பெரும்பாலும் ஆட்சி செய்பவர்களுக்கு கட்டுப்பட்டவையாக உள்ளன, ஊழலுக்கும் லஞ்சத்துக்கும் எதிராக இந்தியாவில் போதிய சட்டங்கள் இருக்கின்றன என்றாலும் அவற்றால் லஞ்சத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியவில்லை என்பதே நிஜம்.
அதிக தண்டனை : லஞ்சம் வாங்குபவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கினால், லஞ்சத்தை ஒழிக்கலாம் என்பது பலரது வாதம். ஐஸ்லாந்து நாட்டில் லஞ்சம் வாங்குகிறவர்களுக்கு தண்டனை என்னவோ 2 வருட சிறைச்சாலைதான். ஆனால், ஏற்கனவே சேர்த்த பணம் முழுவதும் பறிமுதல் செய்யப்படும். எகிப்து நாட்டில் லஞ்சம் வாங்குவது கிரிமினல் குற்றம். நிரூபிக்கப்பட்டால் ஆயுள் முழுவதும் சிறை. அர்ஜெண்டினா நாட்டில் சிறை தண்டனையோடு வேலையும் பறிபோய்விடும். விடுதலையான பிறகும் சாகும் வரை வேறு வேலை தர மாட்டார்கள். நைஜர் நாட்டில் தண்டனை கொஞ்சம் வித்தியாசமானது. லஞ்சம் பெற்றது உறுதியானால் அரசியல் மற்றும் குடி உரிமைகள் பறிக்கப்படும். சீனாவில் கீழ்மட்ட அரசாங்க அலுவலர்களுக்கு சிறை தண்டனையும், உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு மரண தண்டனையும் உண்டு. விஷ ஊசி போட்டு நொடிகளில் சாகடித்து விடுவார்கள். முன்பெல்லாம் துப்பாக்கியால் நெற்றியில் சுட்டுச் சாகடிப்பார்கள் துப்பாக்கி குண்டுக்கான செலவு உறவினர்களிடம் வசூலிக்கப்படும். இந்திய ஜனநாயகத்திற்கு இன்றைய சவால் என்பது லஞ்சமும் ஊழலும்தான். நாட்டின் பொருளாதார, தொழில், விவசாய வளர்ச்சிக்கும், சமூக நெறிகளுக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் எதிரானது லஞ்சம். அதிகரித்துவரும் லஞ்சமானது, ஜனநாயகம் மீதான மக்களின் அடிப்படை நம்பிக்கையைத் தகர்ந்து விடும். நாம் ஏதோ ஒரு விதத்தில் லஞ்சத்தை அங்கீகரித்துவிட்டோம். அதனால்தான் நம் நாட்டில் லஞ்சம் "செழித்து வளர்கிறது". முதலில் மாற்றம் நம்மிலிருந்து துவங்கவேண்டும். எதற்கும் லஞ்சம் தரமாட்டேன் என்ற உறுதி நம்மிடம் வரவேண்டும்.
-ப. திருமலைபத்திரிகையாளர், மதுரை84281 15522

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X