நேர்மையான "ஆடிட்டிங்' அதிகாரி தூக்கியடிப்பு நோட்டீஸை திருத்திய எஸ்.ஐ.,க்கு பாதுகாப்பு

Added : டிச 27, 2016 | கருத்துகள் (1)
Advertisement
""புத்தாண்டு பிறக்க இன்னும் ஐந்து நாள்தான் இருக்கு. அதுக்குள்ள, காலண்டர், டைரி வாங்கணும்,'' என்றவாறே, ஜெர்க்கினுடன் வண்டியில் வந்திறங்கினாள் சித்ரா.""ஆமாக்கா, நானும் தான் வாங்கோணும்'' என்றவாறு, மித்ராவும் புறப்பட்டாள். வண்டியில் போய்க்கொண்டிருக்கும் போதே, ""அரசு துறை நிர்வாகத்தில் வருமான வரித்துறையினர் ரெய்டு உச்ச பட்சமாக நடந்து கொண்டிருக்கிறது
நேர்மையான "ஆடிட்டிங்' அதிகாரி தூக்கியடிப்பு நோட்டீஸை திருத்திய எஸ்.ஐ.,க்கு பாதுகாப்பு

""புத்தாண்டு பிறக்க இன்னும் ஐந்து நாள்தான் இருக்கு. அதுக்குள்ள, காலண்டர், டைரி வாங்கணும்,'' என்றவாறே, ஜெர்க்கினுடன் வண்டியில் வந்திறங்கினாள் சித்ரா.
""ஆமாக்கா, நானும் தான் வாங்கோணும்'' என்றவாறு, மித்ராவும் புறப்பட்டாள். வண்டியில் போய்க்கொண்டிருக்கும் போதே, ""அரசு துறை நிர்வாகத்தில் வருமான வரித்துறையினர் ரெய்டு உச்ச பட்சமாக நடந்து கொண்டிருக்கிறது பார்த்தாயா,'' என்று ஆரம்பித்தாள் சித்ரா.
""வருமானத்துக்கு அதிகமாக சம்பாதித்தால் இப்படித்தான் எல்லாவற்றையும் இழந்து நிற்க வேண்டியது வரும். இது ஏனோ ஒரு சிலருக்கு புரிவதில்லை. ஆனால், உயர் மட்டத்தில் நடக்கும் இது போன்ற நடவடிக்கைகள் கீழ் மட்டத்திலும் நடத்த வேண்டும். அப்போது தான் சிறிய அளவில் ஊழல் செய்வோர் கூட திருந்துவார்கள்,'' என்றாள் மித்ரா.
""அதற்குத் தான் வாய்ப்பே கிடைப்பதில்லையே. கீழ் மட்டத்தில் நடக்கும் நிகழ்வுகள் தான் மேல் மட்டத்தில் பேசி சரிக்கட்டப்பட்டு விடுகிறதே,'' என்றாள் சித்ரா.
""சமீபத்தில் திருப்பூரில் உள்ளாட்சித்துறை தணிக்கை பிரிவில் பணியாற்றிய ஒருவரை திடீரென கோவைக்கு டிரான்ஸ்பர் செய்தாங்க தெரியுமா,'' என்றாள் மித்ரா.
""ஆமாம். அதிலென்ன பிரச்னை,'' என்றாள் சித்ரா.
""உள்ளாட்சி அமைப்புகளில் ஆடிட்டிங் நடத்திய அவர், செப்., மாதம் தான் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் ஆடிட்டிங் பணிக்கு நியமிக்கப்பட்டார். ஆனால், துணை "மாஜி'யோட வற்புறுத்தலால், அவருக்கு, மற்ற அலுவலர்கள் யாருமே <உரிய ஒத்துழைப்பு தரவில்லையாம். மாநகராட்சி நிர்வாகத்தில் என்னென்ன கோளாறு இருக்கும் என்பது அவருக்குத்தானே தெரியும். அந்த நேர்மையான அதிகாரி இருந்தால், கணக்கு வழக்குல பிரச்னை வந்துவிடும் என்று உஷாராகி, மேலிடத்துக்கு பிரஷர் கொடுத்து, கோவைக்கு தூக்கி அடிச்சுட்டாங்களாம்,'' என்று சித்ரா கூறி முடிக்கவும், குணசேகரன் ஸ்டோர்ஸ்
வரவும், சரியாக இருந்தது.
பொருட்களை வாங்கி விட்டு, அருகிலுள்ள பேக்கரிக்கு சென்ற இருவரும், ஆடர் கொடுத்துவிட்டு, மீண்டும் பேச ஆரம்பித்தனர். ""மணல் விவகாரத்தில் மாநில அளவில் பெரிய புள்ளி சி.பி.ஐ., பிடியில் சிக்கியிருக்கார் தெரியுமா,'' என்று அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.
""ஆமாம். அவர் மீது நடவடிக்கை எடுத்த பின்னரே திருப்பூரில் அதிகாரிகளுக்கு தெம்பு ஏற்பட்டு விட்டது. ஆளும் கட்சியினர் ஆதரவுடன், கிராவல் மண்ணை, ஆற்று மணலுடன் கலந்து விற்பனை செய்ததில், நடவடிக்கை எடுக்க தயாராகி வருகின்றனர்,'' என்றாள் சித்ரா.
""அனுமதியின்றி மணல் எடுத்த இடத்தில் தான் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால், மணல் கலப்படம் குறித்து இது வரை, ஒரு நடவடிக்கையும் இல்லையே,'' என்றாள் மித்ரா.
""அகற்கெல்லாம் இன்னும் மேலிடத்திலிருந்து சிக்னல் கிடைக்கவில்லையாம். அங்கிருந்து "ஓகே' சொன்ன பின்னர் தான் இங்கு நடவடிக்கை இருக்குமாம்,'' என்றாள் சித்ரா.
""போக்குவரத்து போலீஸ் பிரிவில் "ஸ்பாட் பைன்' வசூலில் நடந்த முறைகேடு குறித்து ஏதாவது தகவல் இருக்கா,'' என்றாள் மித்ரா.
""போன வருசம் தான், லட்சக்கணக்கில் அபராத தொகையை முறைகேடு செய்த அலுவலக ஊழியர் ஒருவரை மாவட்ட போலீஸ் அலுவலகத்தில், முறைகேடு செய்த தொகையை வசூல் செய்து, கடும் எச்சரிக்கைக்கு பின் இடமாறுதல் செய்தார்கள். இப்போது இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கு. இது போன்ற விஷயமெல்லாம் ஆண்டு இறுதியில் 'ஆடிட்டிங்' செய்யும் போது தான் வசமாக மாட்டும்,'' என்றாள் மித்ரா.
சுடச்சுட டீயை குடித்து விட்டு கிளம்பிய போது, ""சேலம் மாநகராட்சியோட, முன்னாள் கவுன்சிலர், குடும்பத்தோடு கலெக்டர்கிட்ட புகார் கொடுக்க வந்த
விவரம் தெரியுமா?'' என்றாள் மித்ரா.
""திருப்பூர்ல கம்பெனி நடத்திட்டு இருக்காரோ என்னவோ? அவருக்கு என்ன கொடுக்கல் வாங்கல் பிரச்னையோ?'' என்றாள் சித்ரா.
"" கொடுக்கல் மட்டும்தான், வாங்கல் இல்லாததால இப்ப பிரச்னையாகிடுச்சு. "மாஜி'யோட பி.ஏ.,வாக இருந்தவரு, பல பேர் கிட்ட அரசாங்க வேலை
வாங்கித்தர்ரேனு சொல்லி, பல மாவட்டத்துல வேலையை காட்டிட்டாரு. தலைகாட்டாம இருந்தவரு, உள்ளாட்சி தேர்தல் அறிவிச்சபிறகுதான், திருப்பூருக்கே வந்தாரு. அவருதான், சேலம் எக்ஸ் கவுன்சிலர் மகனுக்கு, பி.ஆர்.ஓ., ஆபீசுல வேலை வாங்கி தர்றேன்னு சொல்லி, ரெண்டு லகரத்தை கறந்துட்டாராம்.
கடைசியில, வேற ஆள் கிட்ட பேரம் பேசி, மாத்தி கொடுத்துட்டாரு,'' என்று பெருமூச்சு விட்டு மீண்டும் தொடர்ந்தாள்.
""எம்.ஜி.ஆர்., காலத்துல கவுன்சிலரா இருந்தும், பணத்த கொடுத்து ஏமாந்துட்டோமேனு, அவருக்கு கவலை. பணத்த திருப்பி கேட்டப்பவும் ஒழுங்கான பதில் இல்லை. பார்த்துவிட்டு, கலெக்டர் கிட்ட மனு கொடுத்து, பிரச்னையை பரப்பி விடலாம்னு, 19ம் தேதி கலெக்டர் ஆபீசு வந்து, மனு எழுதி பதிவு பண்ண கொடுத்தாரு. அதுக்குள்ள விவரம் தெரிஞ்சு, "மாஜி' பி.ஏ., பேச்சு வார்த்தை நடத்தி, கெஞ்சி கூத்தாடி, சமாதானம் செஞ்சு அனுப்பியிருக்காரு. அதனால, பதிவு செஞ்ச மனுவ கொடுக்காம திரும்பி போயிருக்காங்க. சொன்ன மாதிரி பணத்த கொடுக்கலைனா, தமிழ்நாடு முழுவதும் நாற வச்சிடுவேன்,'' அப்படீன்னு சொல்லிட்டுத்தான் போயிருக்காரு,'' என்று ஒரு வழியாக கூறி முடித்தாள் மித்ரா.
""நானும் அங்க நடந்தத கேள்விப்பட்டேன். சேலம் "மாஜி' கவுன்சிலர் பணம் கொடுத்து மூணு வருஷம் ஆச்சு... ரூபா நோட்ட மாத்த முடியாத இந்த நேரத்துல கேட்டு பார்த்தா, பழைய நோட்டையாவது தள்ளுவாங்கனு எதிர்பார்த்துத்தான், இப்படி மனு கொடுத்து மிரட்டலாம்னு வந்திருக்கேன்னு, அவரே சொல்லியிருக்கார்னா பார்த்துக்க,'' என்றாள் சித்ரா.
""இப்ப நிலைமை சரியில்லாம இருக்கறதால, உள்ளாட்சி தேர்தல மெதுவா நடத்தலாம்னு மேலிடம் முடிவு பண்ணியிருக்காம். ஆளுங்கட்சியில புது தலைமை வந்தாலும், தொண்டர்கள் ஏற்பாங்களானு சந்தேகமா இருக்கு? முதலில் இடத்த பிடிக்கலாம்னு தான் பார்க்கறாங்க. உடனடியா, உள்ளாட்சி தேர்தல் நடந்தா, தொண்டர்களோட கோபம் வெளியே தெரிஞ்சிடும். அதனால, உள்ளாட்சி தேர்தலை, முடிஞ்ச வரைக்கும் தள்ளிட்டே போகலாம்னு, உளவுத்துறை மூலமா தகவல் போயிருக்கு. முடிவு எப்படி இருக்குமோனு தெரியலை,'' என்றாள் மித்ரா.
""ஆமாக்கா... சாதாரணம பிறந்த நாள் விழானா, எவ்வளவு பேனர் வைப்பாங்க! ரோட்டுல வண்டி, வாகனம் போக முடியாத அளவுக்கு இருக்கும். ஜெ., இறந்த பிறகு, ஒரு சில இடத்துல மட்டும் தட்டி வச்சிருக்காங்க. அதுவம், "மாஜி' எம்.பி.,எம்.எல்.ஏ., மேயர்னு யாரும் தட்டி வைக்காதது, தொண்டர்களுக்கு ஏகப்பட்ட கோபமாம்... இது, எங்க போய் முடியுமோ தெரியலை,'' என்றாள் சித்ரா.
""அதை விடுங்க, இந்த மாநகராட்சியில் நடந்த கூத்தை கேளுங்க,'' என்று ஆர்வத்துடன் சொன்னாள் மித்ரா.
""சரி சொல்லு, பார்க்கலாம்,'' என்று சித்ரா சொன்னதுதான் தாமதம்.
உடனே, ""மண்டல பூச்சியல் வல்லுனராக இருக்கும் பெண் அதிகாரி, தனது பணியாளர்களுடன், 55வது வார்டு பகுதியில் வீடுகளின் சுகாதார நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதியில் வசிக்கும் ஒருவர், தனது வீட்டில் ஆய்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து, வாக்குவாதம் செய்து, அதிகாரிகளை ஒருமையில் சகட்டுமேனிக்கு திட்டினாராம்,''
""இதை கேள்விப்பட்டு, மண்டல குழுவினர் மாநகராட்சிக்கு தெரிவிக்க, மூன்றாவது மண்டல அதிகாரிகளும் வந்தனர். அதற்குள், அப்பகுதி மக்களுக்கு ஆதரவாக, மாஜி கவுன்சிலரும் வந்தாராம். அதே நேரம், பல அலுவலர்களும் ஒன்றாக திரண்டுள்ளனர். சுகாதாரக்கேடான வீட்டின் குடிநீர் இணைப்பை துண்டித்து பின் தான், போவோம். இல்லாவிடில், மாநகராட்சியின் எந்த வார்டுக்குள்ளும் இனி ஆய்வுக்கு வரமாட்டோம் என பிடிவாதாமாக கூறினர்,'' என்று மித்ரா முடிக்கவும், ""அட, அப்புறம் என்னாச்சு?'' என்ற சித்ரா ஆர்வமாக கேட்டாள்.
""உடனே, அதிகாரிகள், கலெக்டரை தொடர்பு கொண்டனர். வேண்டுமென்றால், போலீசை அனுப்புவா?ன்னு சொன்னதை கேட்டு, வீட்டின் குடிநீர் இணைப்பை துண்டியுங்கள்,'' என கறாராக கூறினாராம். இதையெல்லாம், கேட்டுக்கொண்டிருந்த மாஜி கவுன்சிலர், நைஸாக, "எஸ்கேப்' ஆகி விட்டாராம்,'' என்று மித்ரா கூறியதும், ""கோவிந்தா.. கோவிந்தா..'' என்று கூறி சிரித்தாள் சித்ரா.
""அக்கா, அவிநாசியில ஒரு டிராபிக் எஸ்.ஐ., செஞ்ச முறைகேடுதான், போலீஸ் வட்டாரத்திலுள்ள ஹாட் டாபிக், தெரியமா?'' என்று மித்ரா, புதிர் போடவும், ""அட, அப்படி என்ன மேட்டர்,'' என்று, சித்ரா சுவாரசியமாக கேட்டாள்.
""அவிநாசியில் டிராபிக் எஸ்.ஐ., ஒருவர், வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்படும் நோட்டீஸை திருத்தி, முறைகேட்டில், பல மாதங்களாக ஈடுபட்டு வருகிறார். அவர் மீது, ஆதாரத்துடன் புகார் கொடுத்தும் கூட, டி.எஸ்.பி., கண்டுங்காணாமல் இருக்கிறாராம். ஒரு வேளை அவருக்கு "பங்கு' போனதால், "கப்சிப்' என்று இருக்கிறார்,''என்று மித்ரா கூறினாள்.
""இருந்தாலும், இருக்கும்,'' என்று சொன்ன சித்ரா, ""திருப்பூர் ரூரல் பகுதியில், மீண்டும் திருட்டு சம்பவங்கள் அதிகளவில் நடக்குதாம். பொதுமக்கள் "கம்ப்ளைன்ட் கொடுத்தாலும், சம்பந்தப்பட்ட போலீசார் பெற மறுக்கின்றனராம். காரணம் கேட்டால், ஏதோதோ சொல்லி மழுப்புகின்றனராம்,'' என்றாள்.
""என்னக்கா, எல்லா நேரங்களிலும், எல்லோரும் ஒரே மாதிரியாவ இருக்காங்க,'' என்று பொடி வைத்து, மித்ரா கூறியதும், ""அட, புரியற மாதிரி சொல்லு,'' என்று சித்ரா கோபப்படவும், ""ஆளுங்கட்சியில நடக்கிற விஷயங்களை பார்த்த, கலெக்டர் ஆபீசில, சில அதிகாரிங்க, எதிர்க்கட்சிக்காரங்களை பார்த்த, கும்பிடு பலமா போடறாங்களாம். எப்படித்தான், இப்படி "டக்'குன்னு மாறிடறாங்களோ,'' என்று மித்ரா சொன்னதும், ""அட, அசடு. சில நேரங்களில், சில மனிதர்கள்,'' என்று கூறியவாறே, வண்டியில் புறப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
27-டிச-201615:43:34 IST Report Abuse
Rajendra Bupathi ஆனா ஒண்ணு, இந்த மேலிடம் எண்ணைக்கு ஒழியுதோ அன்னைக்குதான் அதிமுக உருப்படும் இது நிச்சியம்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X