சென்னை: மக்கள் நலக் கூட்டணியில் இருந்து, ம.தி.மு.க., விலகுவதாக, அக்கட்சியின் பொதுச்
செயலர், வைகோ அறிவித்துள்ளார்.
கடந்த, 2016 சட்டசபை தேர்தலுக்கு முன், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய, நான்கு கட்சிகள் இணைந்து, மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கின
பிரதமர் மோடி வெளியிட்ட, செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை, ம.தி.மு.க., ஆதரித்தது. ஆனால், மக்கள் நலக் கூட்டணியில் உள்ள, மற்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, புதுச்சேரி யில், இன்று நடக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநாட்டிற்கு, வைகோ அழைக்கப்படவில்லை.அதனால், அதிருப்தி அடைந்த வைகோ, மக்கள் நலக் கூட்டணியை விட்டு வெளியேற, முடிவு செய்துள்ளார்.
சென்னையில், நேற்று அவர் கூறுகையில், ''மக்கள் நலக் கூட்டணியில் இருந்து, ம.தி.மு.க., விலகிக் கொள்கிறது. அதேநேரத்தில், அதில் உள்ள கட்சிகளுடனான நட்பு தொடரும்,'' என்றார்.
திருமாவளவன் கூறுகையில், ''இனி, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து செயல்படும்,'' என்றார்.