அன்பெனும் பிடியில் அகப்படும் செல்வம்| Dinamalar

அன்பெனும் பிடியில் அகப்படும் செல்வம்

Added : டிச 30, 2016
அன்பெனும் பிடியில் அகப்படும் செல்வம்

பிறவிகளில் மானுடப் பிறவியை உன்னதமானதாகக் கருதுகின்றோம். அப் பிறப்பின் நோக்கமும், பயனும் என்ன? பிறவி பெற்ற அனைவரும் அதன் பயனை முழுமையாக அடைந்துவிட்டார்களா? உண்மையில் கொடுத்துவைத்தவர் யார்? என சிந்தனைத் திரையில் பல கேள்விகள்.தன்யன் என்று ஒரு சொல்லுண்டு. வடமொழிச் சொல்லாக இருந்தாலும், அன்றாட வழக்கில் இதன் பயன்பாட்டினை பலமுறை நாம் கேட்டதுண்டு. 'நான் மிகவும் தன்யனானேன்' என்று கூறுவார்கள். என்ன பொருள்? கொடுத்து வைத்தவன், ஆசீர்வதிக்கப்பட்டவன், அதிர்ஷ்டமுடையவன் என்றெல்லாம் பல பொருள் கூறலாம். ஆனால் தனம் உடையவனைத் தன்யன் என்கின்றோம். தனம் என்றால் செல்வம். செல்வமுடையவனை தன்யன் என்பர். எனவே எது செல்வம்? யார் உண்மையில் செல்வந்தர் என்பதை ஆராய்வதைக் காட்டிலும், அதை நம் அறிவில் உரமாக ஏற்றி வாழ்தல் சிறந்தது. அது பிறவிப் பயனை நமக்கு நன்குணர்த்தும்.
பொருட்செல்வம் : இவ்வுலகில் செல்வம் இருவகைப்படும். முதலாவது நாமெல்லோரும் அறிந்த செல்வம். ஒருபுறம் உழைத்து வியர்வை சிந்தி ஈட்ட ஈட்ட, சேர்க்கச் சேர்க்க, மறுபுறம் குறைந்தும் அழிந்தும், நிலையற்று நில்லாது போகும் பொருட்செல்வம். உழைத்த செல்வமே நிலைக்காத போது, ஏமாற்றிப் பிழைத்த செல்வத்தை குறித்து என்ன கூறமுடியும்?பொருட்செல்வத்தை முற்றிலும் பயனற்றதாகக் கூறி புறந்தள்ளி விடமுடியாது. ஏனெனில், வாழ்க்கை பெரும்பாலும் அதை சுற்றியே சுழல்கின்றது. அது நிகழ்வுகளின் மையம். அச் செல்வத்தை தானும் அனுபவித்து, பிறர் தமக்கும் அளித்து உதவும் பொழுது துாய்மை பெறுகின்றது. மனிதருக்கு நன்மதிப்பையும் பெற்றுத் தருகின்றது.
பெருஞ்செல்வம் : செல்வத்திற்கு நோயுண்டா? எனில் உண்டு என்கின்றார் வள்ளுவர். “ஏதம் பெரும் செல்வம்” என்கின்றார். தானும் அனுபவிக்காது, பிறர் தமக்கும் உதவாது வாழ்பவனின் செல்வம், நோயால் பீடிக்கப்பட்டதாக கடுமையாகச் சாடுகின்றார். பகிர்ந்து கொடுத்து வாழ்வதற்கே அன்றி, பதுக்கி வைத்துப் பாதுகாப்பதற்கல்ல செல்வம். அந்நிலை களைவதே அறவாழ்க்கை. செல்வத்தை நிந்திப்பது நோக்கமல்ல. ஆனால் அப்பொருட் செல்வத்தை நிலையானதாகவோ, இடையீடற்ற இன்பத்தை தரக்கூடியதாகவோ, கருத இயலாது. நம் ஆசைகளுக்கு ஒரு வரம்பினை வகுத்துக் கொள்ளாத பொழுது, பொருளீட்டலும் எல்லை மீறிச் செல்கின்றது. செல்வத்திற்கும் வரம்புண்டு என்று உணர்ந்தோர் தம் தேவைகளை அறிந்து இன்பமுற்று இருந்தனர். ஒன்று தேவை. மற்றொன்று பேராசை. இரண்டும் இருவேறு துருவங்கள் என்பார் காந்தியடிகள். பொருட் செல்வத்தின் ஒருபுறம் இன்பம் என்றால் மறுபக்கம் துன்பமே.
பட்டினத்தார் : “செல்வத்துக் களித்தனை தரித்திரத் தழுங்கினை'' என்கிறார் பட்டினத்தார். செல்வம் சேர்ந்த பொழுது இன்புற்ற நீ, அது உன்னை விட்டு விலகியபோது துயர்பட்டாய் என்பதே பொருள். “காதற்றவூசியும் வாராதுகாணுங் கடைவழிக்கே” என்று கூறியவரும் அவரே. உலகின் நிலையாமை குறித்து உணராதிருத்தலே, கல்லாப் பிழை, கருதாப் பிழை, நினையாப் பிழையென மானுடத் தவறுகளைக் காட்டுகின்றார். ஏட்டுக் கல்வியும், செல்வமும், வீடும், வாகன வசதிகளும் மட்டுமே ஒருவரை அதிர்ஷ்டக்காரராகவோ கொடுத்து வைத்தவராகவோ ஆக்கிவிடாது எனில், யார் கொடுத்து வைத்தவர்? கொடுத்து வைத்தவர் பிறவிப்பயன் குறித்த வாழ்வின் வேறொரு கோணத்தை சிந்திப்போரே அதிர்ஷ்டசாலிகள். என்றும் குறையாத நீடித்த இன்பமாகிய இறைச் செல்வத்தை அடைந்தோரே உண்மையில் செல்வந்தர்கள். இறைவன், ஆறாத இன்பத்தை நமக்கு அள்ளித்தரும் அருட்கொடை, செல்வம் என்கிறார் மாணிக்கவாசக பெருமான்.மனம் மாசற, இறைவனடி பற்றித் தொழுது தன் பணி செய்து வாழ்வோரே பாக்கியசாலிகள். கீதையில் “பல்லாயிரம் மனிதரில் சிலரே அவ்வாறு வாழ்கின்றனர்” என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.
அருட்செல்வம் : சாந்தோக்யம் என்ற உபநிடத நுாலில் ஜானஸ்ருதி என்ற செல்வச் செழிப்புடைய மன்னர், தன் ஏவலனிடம் ரைக்வர் என்ற பெயருடைய ஒருவரைத் தேடிவரச் சொல்லி அனுப்புகின்றார். மன்னனே தேடுவதால் அவர் செல்வந்தராக இருக்க வேண்டும் என எண்ணிய ஏவலன், அவரைப் பொருளுடையோர் நடுவில் தேடியும் காணக் கிடைக்கவில்லை.கடைசியில், மன்னர் கூறியவர் மாட்டு வண்டியின் அடியில் அமர்ந்தது பொருளேதுமின்றி உடம்பிலுள்ள கொப்பளங்களை சொறிந்து கொண்டிருப்பது கண்டு ஆச்சர்யமுற்றார். மன்னருக்கு இவரிடம் என்ன வேலை என எண்ணியபடி, தான் கண்ட காட்சியை மன்னரிடம் வந்து கூறினார். அது கேட்டு மகிழ்ந்த மன்னர் அறுநுாறு பசுக்கள், பொன்மாலைகள், குதிரைகள் பூட்டிய ரதம் ஆகியவற்றுடன் ரைக்வரைச் சந்தித்து, “என் செல்வம் அனைத்தையும் உமக்களிப்பேன்; அதைப் பெற்று உம்மிடமுள்ள அழியாத அருட் செல்வத்தை எனக்கு உபதேசியுங்கள்” என்றார். நிலையான செல்வத்தை நமக்குணர்த்தும் மகத்தான நிகழ்விது. நம் தேசத்தின் பெருமை.
செவிச் செல்வம் : நிலையான இச்செல்வமதைப் பெறுவதற்காகவே, இறைவன் நமக்கு செவியெனும் செல்வத்தை அளித்துள்ளார். புலன்களனைத்தும் இறையின்பம் பெறுவதற்கே. “செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்” என்கிறார் வள்ளுவர். உலகனைத்தும் நம் செவி வழியாகவே நம் மனதை அடைந்து நம்மை வழி நடத்துகின்றது. நம்மை வீறு கொண்டு எழவைப்பதும், சோர்வுக் குழியில் தள்ளி துவள வைப்பதும் செவிவழி வந்ததே. எதை விடாது கேட்கின்றோமோ, அதையே பழகுகின்றோம். எவருடைய காதுகள், நல்ல விஷயங்களைக் கேட்க மறுக்கின்றதோ அவை பாம்புகள் புகுந்து வாழ உகந்த புற்றுக்களே என்கிறது புராணங்கள். ஆகவே நல்லவற்றைக் கேட்க நல்லோர் உறவையே நாடுவோம். பயனிலாச் சொல் கேட்பதையும் பேசுவதையும் தவிர்ப்போம். மகாகவி பாரதி, வேத நாயகி வாணியிடம் “எள்ளத்தனைப் பொழுதும் பயனின்றி இராது என்றன் நாவினிலே வெள்ளமெனப் பொழிவாய்” என பிரார்த்திக்கின்றார். இதுவே நம் அறியாமையை அறிவுத் தீயில் ஆகுதியாக்கும் ஞான வேள்வி. பாரதி மொழியில் அக்கினிக் குஞ்சு. மடிக் கணினிக்குள்ளும், கையடக்க அலைபேசியிலும் விலை போகாது, அவற்றை சரிவரப் பயன்படுத்தி கண்ணியம் காக்கப் பழகுவோம்.
சிந்தனைகள் : வாழ்வின் உயர் நோக்கங்கள் அன்றாடத் தேவைகளில் தொலைந்து போய்விடக் கூடாது. மெய்ஞானத் தேடுதலின் முக்கியத்துவத்தை நாம் குறைத்து மதிப்பிடத் தேவையில்லை. ஆன்மிகப் பெருமக்களை நம் முன்னோடிகளாக கொள்வதால் எந்த நாகரிகமும் சீரழிந்துவிடாது. அரசியல் புரட்சிகளைக் காட்டிலும் ஆன்மிக மலர்ச்சியின் தாக்கம் சமுதாயத்தின் சிந்தனைகளை சீர்படுத்தி உள்ளது. மனவேதனைகளுக்கு மாபெரும் மருந்து.அருட் செல்வத்தை விலைகொடுத்து வாங்க இயலாது. உழைத்துப் பெற முடியாது. ஆணவத்திற்கு அடிபணியாதது. அன்பெனும் பிடியில் மட்டுமே அகப்படும் மலையிது. குவிந்த மனதில் விரியும் மலரிது. அவனருளால் அவன் தாளினைப் பணிந்தால் வரும், நிகரிலாச் செல்வமிது. இதை அடைந்தோரே பேரமைதியினைப் பெறுவர். வீண் பெருமை பேசி வீழாது இச் செல்வமதைப் பணிந்து பெறுவோம்.
பலகாலம் வாழ்வோம்! பிறவிப் பயன் அடைவோம்!
சுவாமி சிவயோகானந்தாசின்மயா மிஷன் மதுரை

94431 94012We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X