ஓட்டப்பந்தய பாதை... ஓடி ஜெயித்தது போதை!| Dinamalar

ஓட்டப்பந்தய பாதை... ஓடி ஜெயித்தது போதை!

Added : ஜன 03, 2017
Share
ஓட்டப்பந்தய பாதை... ஓடி ஜெயித்தது போதை!

பல வண்ணங்களின் கலவையாக இருந்த அந்த ஐஸ்க்ரீமை, ருசித்து ரசித்துக் கொண்டிருந்தாள் மித்ரா; எதிரில், 'புரூட் சாலட்'டை சுவைத்தபடி, கேட்டாள் சித்ரா.
''என்னடி! இந்த வருஷமாவது நம்ம ஊருக்கு ஏதாவது நல்லது நடக்குமா?''
''நடக்கும்க்கா...ஏன் ஒனக்கு இந்த அவநம்பிக்கை?'' என்றாள் மித்ரா.
''இல்லடி...போன வருஷமும் இதே மாதிரித்தான ஆரம்பிச்சோம். என்ன பெருசா மாற்றம் நடந்துருச்சுன்னு யோசிச்சுப் பார்த்தேன். கொஞ்சம் விரக்தியா இருந்துச்சு,'' என்றாள் சித்ரா.
''நீ எலக்ஷன்ல ஏதாவது மாற்றம் வரும்னு நினைச்சிருந்தியா?'' என்று கேட்டாள் மித்ரா.
''யாரு ஜெயிச்சா நமக்கென்ன... ஊருக்கு ஏதாவது நல்லது நடக்கணும்கிறது தான், நம்மளோட எதிர்பார்ப்பு. ஆனா, ஆறு மாசமாகியும் போன ஆட்சியில அறிவிச்ச திட்டங்களையே, இன்னும் தொடங்குறது மாதிரி தெரியலையே,'' என்றாள் சித்ரா.
''கேட்டா, நிதி இல்லைங்கிறாங்க; நம்மூர்ல இருக்குற சில அரசியல்வாதிகள் சம்பாதிச்ச சொத்தைப் பறிச்சாலே, சிட்டிக்குள்ள பத்து பாலம் கட்டலாம்,'' என்றாள் மித்ரா.
''இதையெல்லாம் கேக்க, திராணியுள்ள எதிர்க்கட்சி ஆளுகளும் இங்க இல்லை; தொழில் அமைப்புகள்ட்டயும் ஒற்றுமை இல்லை. நோட்டைக் கொடுத்து ஓட்டு வாங்குறவுங்க, மறுபடியும் விட்டதை எடுக்கணும்னு பார்ப்பாங்களா, ஊரு வளரணும்னு வேலை பார்ப்பாங்களா?'' என்றாள் சித்ரா.
அவிநாசி சாலையில், மங்கலான வெளிச்சத்தில் இருந்த அந்த உணவகத்தில், கூட்டம் அதிகமாக இல்லை; இருவரும் பேச்சைத் தொடர்ந்தனர். மித்ரா, அடுத்த மேட்டருக்குத் தாவினாள்.
''அரசுக்கு எதிரா தீர்மானம் நிறைவேத்தி இருக்காங்க''
''அடேங்கப்பா! அவ்ளோ தைரியமா தீர்மானம் நிறைவேத்துறது யாரு மித்து?''
''அவசரப்படாதக்கா. இது நம்ம அரசுக்கு எதிரான தீர்மானமில்லை. தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவரான அரசுக்கு எதிரா, பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் போட்ட தீர்மானம். அவரு, 'காந்தி' பேரைக் கொண்ட ஒரு பெண் அதிகாரிக்கு எதிரா, நிறையா போராட்டங்களை நடத்திட்டு இருக்காராம். அதனால, அவரு வேலை பார்க்கிற பள்ளிக்கூடம் முன்னால போராட்டம் நடத்தப் போறாங்களாம்...''
''எது மாதிரியும் இல்லாத புது மாதிரியா இருக்கே. இப்பிடிப் பண்ணுனா, பள்ளிக் கல்வித் துறைக்கு உள்ளேயே பெரிய பனிப்போரா ஆயிருமே?''
''பனிப்போர் இல்லை; பகிரங்கப் போர் ஆரம்பிச்சிருச்சு. தீர்மானம் நிறைவேத்துன கூட்டத்துக்கு, அந்த லேடி ஆபீசரம்மாவே போயிருக்காங்க. கூடவே, மெட்ரிக் ஸ்கூல் ஆபீசரம்மாவும் போயிருக்காங்க. ரெண்டு பேரையும் வச்சுக்கிட்டே தான், தீர்மானம் நிறைவேத்தி, அவரை குளிர்விச்சிருக்காங்க...''
''வரவர இங்க சங்கங்கள் பண்ற வேலைகளைப் பார்த்தா, எதிர்காலத்துல எந்த சங்கத்துலயும், யாரும் சேர மாட்டாங்க போல இருக்கு,'' என்றாள் சித்ரா.
''அப்பிடி என்னக்கா அவுங்க பண்ணீட்டாங்க?'' என்றாள் மித்ரா.
''கார்ப்பரேஷன்ல துப்புரவுத் தொழிலாளிகள், 45 பேரை நியமிக்கப் போறாங்க. கருணை அடிப்படையில, வாரிசுகளை நியமிக்கணுமாம். ஆனா, அவுங்ககிட்டயும், 'நான் வேலை வாங்கித்தர்றேன்'னு சொல்லி, இந்த சங்கத்துக்காரங்க சில பேரு, அம்பதாயிரம் ரூபா வரைக்கும் வாங்கிருக்காங்க,'' என்றாள் சித்ரா.
''ஏதோ ஒரு சங்கத்துக்காரங்க பண்றதால, உண்மையா இருக்குற சங்கத்துக்காரங்களுக்கும் கெட்ட பேரு தான். பாவம் அந்த துப்புரவுத் தொழிலாளிங்க,'' என்றாள் மித்ரா.
''இப்பல்லாம் யாரு மித்து பாவம் பார்க்குறாங்க. கார்ப்பரேஷன்ல வி.எல்.டி., அதான்... காலியிட வரி வசூல் பண்றதுல, செம்ம கலெக்ஷன் போயிட்டு இருக்காம். வரியைக் குறைச்சுப் போடுறதுக்கு, ஒரு சென்ட்டுக்கு ஆயிரம் ரூபான்னு லஞ்சம் வாங்குறாங்களாம்,'' என்றாள் சித்ரா.
''அடப்பாவிகளா...கார்ப்பரேஷனுக்கு வி.எல்.டி., முக்கியமான வருமானமாச்சே. அதுலயும் கொள்ளை அடிக்க ஆரம்பிச்சிட்டாங்களா?'' என்றாள் மித்ரா.
''மித்து... அதை வாங்கச் சொன்னது யாருன்னு சொன்னா, நீயே அசந்து போயிருவ,'' என்று சித்ரா பேசும்போதே, அலைபேசியில் அழைப்பு வர, எடுத்தவள், எதிர்முனையில் பேசுபவரிடம், 'இதைத்தான் பாவம் ஒரு பக்கம், பழி ஒரு பக்கம்னு சொல்லுவாங்க. சரி, நான் அப்புறம் கூப்பிடுறேன்,'' என்றாள்.
''நீ என்னவோ இப்பிடிச் சொல்ற. பாவம் பண்ணுனது ரெண்டு பேரு. ஆனா, தண்டனை மட்டும் ஒருத்தருக்கு கொடுக்குறதை என்ன சொல்லுவ?'' என்றாள் மித்ரா.
''இது ஏதோ வில்லங்க மேட்டராத் தெரியுது. என்னன்னு நீயே சொல்லு,'' என்றாள் சித்ரா.
''பீளமேடு ஏரியாவுல, சரக்கு பாட்டில்களை பதுக்கி வச்சதா, ஒரு போலீஸ் இன்ஸ்சை, 'சஸ்பெண்ட்' பண்ணுனாங்களே. அந்த விவகாரத்துல, 'ஸ்பாட்'ல இருந்த எஸ்.ஐ., மேல இதுவரைக்கும் எந்த நடவடிக்கையுமே எடுக்கலை,'' என்றாள் மித்ரா.
''நானும் ஒரு போலீஸ் மேட்டர் சொல்றேன். வ.உ.சி., பூங்கா ஏரியாவுக்குள்ள வந்து, ஏரியா 'இன்ஸ்சு' பண்ற அலும்பும், அலப்பறையும் தாங்கலைன்னு ஏகப்பட்ட, 'கம்பிளைன்ட்'டா வருது,'' என்றாள் சித்ரா.
''என்ன...அங்க இருக்குற ரோட்டுக் கடைகள்ல, மாமூல் அதிகமா கேக்குறாரா?'' என்றாள் மித்ரா.
''அது தான், வாரிக் கொடுக்குறாங்களே. பிரச்னை அது இல்லை. அதே ஏரியாவுல, சின்னச் சின்ன பசங்களும், பொண்ணுகளும் லேசா இருட்டுனாலே, ஓரம் கட்டி 'ஓவரா' அன்பு காட்டிட்டு இருக்காங்க. அதை தடுக்கவோ, தட்டிக்கேட்கவோ, ஸ்டேஷன்ல இருந்து யாரும் எட்டியே பார்க்குறதில்லை. ஆனா, தனியா வர்ற காலேஜ் பசங்களை அந்த 'இன்ஸ்' கூப்பிட்டு, வாய்க்கு வந்தபடி, தாறுமாறா திட்றாராம்; கை நீட்டுறாராம்,'' என்றாள் சித்ரா.
மித்ராவின் அலைபேசி அலற, ''மோகன்! கோயம்புத்துார் வந்திருக்கியா, சென்னையில இருக்கியா?'' என்று கேட்டவள், புத்தாண்டு வாழ்த்தைச் சொல்லி, அலைபேசியைத் துண்டித்து விட்டு, பேச்சைத் தொடர்ந்தாள்.
''ஐஸ்க்ரீம், க்ளைமேட்... எல்லாம் சேர்ந்து, ஒரு மாதிரி போதையா இருக்குக்கா''
''ஏன்டி! ஏதாவது ஓட்டப்பந்தயத்துல சேரப்போறியா?''
''என்னக்கா, சம்மந்தமில்லாம கேள்வி கேக்குற... நீ சொல்றதைப் பார்த்தா, யாரோ போதை மருந்தைப் பயன்படுத்தி, ஓடுறது மாதிரி இருக்கே...''
''அதே தான் மித்து... சமீபத்துல, நம்ம நேரு ஸ்டேடியத்துல, 'இன்டர் யுனிவர்சிட்டி அத்தலெட் மீட்' நடந்துச்சே. அது முடிஞ்ச பிறகு, அங்க போயிருந்தேன்; டாய்லெட்ல பார்த்தா, ஏகப்பட்ட சிரிஞ்ச், இன்ஜெக்ஷன் எல்லாம் கிடந்துச்சு. அதை எடுத்துப் பார்த்தா, அத்தனையும், 'ஸ்டிராய்டு' மருந்து. அப்பிடியே ஆடிப்போயிட்டேன்டி,'' என்ற சித்ரா, தனது 'ஹேண்ட்பேக்'கில் இருந்து சில மாத்திரைத் தாள், மருந்துக் குப்பிகளை எடுத்துக் காண்பித்தாள்.
''நானும் கேள்விப்பட்டேன்க்கா...ரெண்டு காலேஜ் பசங்க தான், நல்ல 'பர்பார்ம்' பண்ணி, முக்கியமான ரெண்டு இடத்தைப் பிடிச்சிட்டாங்க. அந்தப் பசங்க தான், அதெல்லாம் 'யூஸ்' பண்ணுனாங்கன்னு, மத்த காலேஜ் பசங்க அடிச்சுச் சொல்றாங்க. விளையாட்டுல 'ஸ்டேட் லெவல்'ல ஏதாவது சாதிச்சிட்டா, கவர்மென்ட் வேலை வாங்கிடலாம்னு இப்பிடிப் பண்றாங்க போலிருக்கு,''
''இதுல கொடுமை என்னன்னா, இதைப் பத்தி, அந்த காலேஜ் 'பிஸிக்கல் டைரக்டர்', 'ஸ்போர்ட்ஸ் அதாரிட்டி' அதிகாரிங்க யாருமே கண்டுக்கலையாம். இந்த பசங்களோட எதிர்காலத்தை நினைச்சா பயமாவும், பாவமாவும் இருக்குடி!'' என்று பரிதாபப்பட்டாள் சித்ரா.
பில் வந்தது; பணத்தை, 'செட்டில்' செய்து விட்டு, இருவரும் வெளியே வந்தனர். சாலையோரத்தில், ஆளுங்கட்சியின் பிரமாண்ட பேனர் இருந்தது.
''இவுங்க நினைச்ச இடத்துல பேனர் வச்சுக்கிறாங்க. ஆனா, மத்தவுங்க வச்சா, மெரட்டுறாங்க,'' என்றாள் மித்ரா.
''யாரை யாரு மெரட்டுனாங்க?,'' என்றாள் சித்ரா.
''ஜெ., அண்ணன் மகள் தீபாவுக்கு 'சப்போர்ட்'டா யாரோ சொல்லி, 'பிளக்ஸ்' அடிச்சுக் கொடுத்ததுக்கு, வின்சென்ட் ரோட்டுல இருக்குற பிளக்ஸ் கம்பெனிக்காரங்களை போலீஸ் மெரட்டி இருக்காங்க,'' என்றாள் மித்ரா.
வண்டியை மித்ரா எடுக்க, 'ரேஸ்கோர்ஸ் ஹவுசிங் யூனிட் போகணும்' என்றாள் சித்ரா.
''அக்கா! அந்த ஹவுசிங் போர்டுல, யாருக்கும் புதுசா 'அலாட்மென்ட்' கொடுக்கக் கூடாதுன்னு கோர்ட்ல 'ஸ்டே' இருக்காம். ஆனா, காசை வாங்கிட்டு, பதினைஞ்சு பேருக்கு மேல, 'அலாட்மென்ட்' போட்டுக் கொடுத்திருக்கிறாராம் இப்போ இருக்குற ஆபீசர். அநேகமா கோர்ட்ல அவரு பதில் சொல்ல வேண்டி வரும்கிறாங்க'' என்றாள் மித்ரா. வண்டி புறப்பட, இருவரும் அமைதியாயினர்.
மித்ராவின் 'டியோ', இருவரையும் சுமந்து கொண்டு, பந்தயச்சாலையை நோக்கிப் பறந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X