2017-தொழில், வணிக வளர்ச்சி எப்படி இருக்கும்| Dinamalar

2017-தொழில், வணிக வளர்ச்சி எப்படி இருக்கும்

Added : ஜன 04, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
2017-தொழில், வணிக வளர்ச்சி எப்படி இருக்கும்

இந்த புத்தாண்டில் தொழில் வணிக வளர்ச்சி மிகச் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடிய வகையில், 2016-ல் மத்திய அரசு பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அவற்றில் மிகவும் துணிச்சலாக எடுக்கப்பட்டுள்ள இரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை கள் நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும். ஒன்று, லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரி. மற்றொன்று, 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு.
ஜி.எஸ்.டி., வரி : இந்த ஆண்டு ஏப்., முதல் அல்லது அதற்கு பின் மூன்று மாதங்களுக்குள் இப்புதிய வரி முறை அமலாக்கப்படஇருக்கிறது. 'ஒரே நாடு', 'ஒரே சந்தை', 'ஒரே வரி' என்ற சூழலை இப்புதிய வரி முறை உருவாக்கும். 125 கோடி மக்கள் வாழும் நாட்டில் ஒரே வரி முறையை அமலாக்குவது சாதாரண விஷயமல்ல. இது மத்திய அரசிற்கு கிடைத்த வெற்றி. தற்போது மாநிலத்திற்கு மாநிலம், ஒரே பொருளுக்கு வித்தியாசமான வரி விகிதம், மாறுபாடான சட்ட விதிகள் இருப்பதால் நாடு முழுவதும் தொழில், வணிக வளர்ச்சி சீராக இல்லை. ஒரு மாநில வணிகர், பிற மாநிலங்களில் தன் பொருட்களின் சந்தையை விரிவுபடுத்துவது கடுமையான செயலாக உள்ளது. வெளிநாட்டு தொழில் முதலீடு களை தேவையான அளவுக்கு ஈர்க்க முடியவில்லை. பொருள் தயாரிப்பிற்கு உற்பத்தி வரி, அதை பிற மாநிலங்களில் விற்கும் போது மத்திய விற்பனை வரி, மாநிலத்திற்குள் விற்கும் போது மதிப்பு கூட்டு வரி, விற்பனைக்காக விளம்பரங்கள் செய்யும் போது சேவை வரி, பல மாநிலங்களில் சரக்குகள் உள்ளே வரும்போது நுழைவு வரி அல்லது ஆக்ட்ராய், வணிக பணிகளுக்காக ஓட்டல்களில் தங்கும்போது ஆடம்பர வரி போன்றவை விதிக்கப்படுகின்றன. அவற்றுக்கான சட்டங்களும், பதிவுகளும் தனித்தனி. இந்த அனைத்து வரிகளையும் ரத்து செய்து விட்டு, சரக்கு விற்பனைக்கும், அளிக்கப்படும் சேவைக்கும் ஒரே வரியாக வருவது தான் சரக்கு மற்றும் சேவை வரி.
வரி பயங்கரவாதம் : பிரதமர் மோடி குறிப்பிட்டுஉள்ளது போல, தொழில் வணிகத் துறையினர் தற்போது வரி பயங்கரவாதத்தில் சிக்கித் தவிக்கின்றனர். இதற்கு பல எடுத்துக்காட்டுகளை கூறலாம். இதுபோன்ற சிரமங்களிலிருந்து விடுதலை கிடைக்கப்போவது இந்த 2017-ம் ஆண்டில் என்பது மகிழ்ச்சியளிக்கிறது.ஒரே நாடு, ஒரே சந்தை என்பதால் மாநிலங்களுக்கிடையிலான விற்பனை வரி சோதனைச் சாவடிகள் அகற்றப்படும். இதன் மூலம் சரக்குகளை நாட்டில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் நேரமும், டீசல் செலவும் மிகவும் குறையும். சரக்குப் போக்குவரத்துத் தடைகள் நீங்குவதால் உற்பத்தி நிறுவனங்கள் மிக அதிக அளவில் மூலப் பொருட்களை இருப்பு வைக்க வேண்டியதில்லை. சரக்குப் போக்குவரத்துக்கான செலவு 20 சதவீதம் குறையும். பெரிய தொழிற்சாலைகளை அந்நிய முதலீட்டாளர்கள் நம் நாட்டில் துவங்குவர். அதன் மூலம் பெரிய அளவில் வேலை வாய்ப்பு கிடைக்கும். பெரிய தொழிற்சாலைகளைச் சார்ந்து நம்மவர்கள் பல துணை தொழிற்சாலைகளை துவக்க முடியும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி மூன்றுசதவீதம் உயரும்.
மோடியின் துணிச்சல் : நாட்டில் லஞ்சம், ஊழல் வரம்பு மீறி விட்டது. அரசு அலுவலகங்களில் எந்த வேலையாக இருந்தாலும், பொதுவாக லஞ்சம் கொடுத்தே ஆக வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாகி விட்டது. இதை அனைத்துக் கட்சிகளும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு ஏற்றுக்கொள்வார்கள் என்பது உறுதி. லஞ்ச லாவண்யத்திற்குப் பயந்து இளம் தொழில் முனைவோர் தொழில் முயற்சிகளில் ஈடுபடத் தயங்கி வேலைக்குச் செல்கின்றனர். மேக் இன் இந்தியா போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டும் கூட, வெளிநாட்டினர் இந்தியாவில் முதலீடு செய்யத் தயங்குவது நாட்டில் நிலவும் வரி பயங்கரவாதம் மட்டுமல்ல லஞ்ச லாவண்யமும் தான். இந்தியாவில் தொழில் துவங்குவது எளிதல்ல என்ற செய்தி உலகம் முழுவதும் பேசப்படுவது நாட்டின் முன்னேற்றத்திற்கு நல்லதல்ல. எளிதாக தொழில் துவங்குவது குறித்து 150 நாடுகளுடன் ஒப்பிடப்பட்டதில் நம் நாடு 130-வது இடத்தில் உள்ளது என்பது வேதனையானது. இதை 80-வது இடத்திற்கு உயர்த்த மத்திய அரசு பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.நம் பொருளாதார நடவடிக்கைகளுக்கு இணையாக, நிழல் பொருளாதாரமாக கறுப்புப் பணம் புழங்கி வருகிறது. அதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து சாமானியர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். வரி கட்டாத பணத்தையும், லஞ்சப் பணத்தையும் வைத்திருப்போர் நிலங்கள் மற்றும் கட்டடங்களை மட்டுமல்ல; நுகர் பொருட்களை யும் என்ன விலை கேட்டாலும் கொடுத்து வாங்குவதால் பண வீக்கம் அதிகரித்துள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீதம் இந்த நிழல் பொருளாதாரத்தின் மூலம் தான் நடக்கிறது. இந்த லஞ்ச லாவண்யத்திற்கும், கறுப்புப் பண பொருளாதாரத்திற்கும் எதிரான நடவடிக்கை தான் பெரிய மதிப்பிலான கரன்சி நோட்டுகளை செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ள நடவடிக்கையாகும். 125 கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில் 3.65 கோடி மக்கள் தான் 2013--14-ம் ஆண்டுக்கான தனி நபர் வருமான வரி ரிட்டர்ன் சமர்ப்பித்துள்ளனர். இதில் 24 லட்சம் பேர் தான் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் காண்பிக்கின்றனர். இந்த நிலை விரைவில் மாறும்.
நல்லது நடக்கும் வாய்ப்பு : உயர் கரன்சி நோட்டுக்களை செல்லாது என அறிவித்த நடவடிக்கை காரணமாக, அனைத்து மாநிலங்களிலும் மக்கள் வங்கிகளில் செல்லாத நோட்டுக்களை மாற்றுவதற்கும், வங்கியிலிருந்து பணம் எடுப்பதற்கும் வரிசைகளில் நீண்ட நேரம் காத்திருந்து சிரமத்திற்கு உள்ளாயினர். இருப்பினும் நல்லது நடக்கப் போகிறது என்ற ஓர் எதிர்பார்ப்பு அவர்கள் கண்களில் தெரிந்தது. அதனால் தான் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பெரிய அளவில் போராட்டம் எதுவும் நடக்கவில்லை. கடந்த நவம்பர் 8-ம் தேதிக்கு பின்னர், 12.5 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளில் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது. பணப்புழக்கம் குறைவு காரணமாக, சில குறிப்பிட்ட தொழில் வணிகத் துறைகளில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது. குறிப்பாக ரியல் எஸ்டேட், ஆட்டோமொபைல்ஸ், நுகர்பொருள் வணிகம், டெக்ஸ்டைல்ஸ் போன்ற துறைகளில் 50 சதவீத வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உற்பத்தியும் குறைந்துஉள்ளது. இருப்பினும் கறுப்புப் பணத்தையும், லஞ்ச லாவண்யத்தையும் ஒழிக்கும் முயற்சியில் தங்கள் சிரமங்களையும் பொருட்படுத்தாது அரசுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு தந்துள்ளனர்.
ரொக்கமில்லா பரிவர்த்தனை : கையில் பணப்புழக்கம் இல்லை என்றவுடன் வளர்ச்சியடைந்த நாடுகளைப் போல், நம் நாட்டிலும் ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனையின் நன்மைகளை புரிந்துகொண்டு, மக்கள் ஆர்வமுடன் மாறி வருகின்றனர். இவ்வாறு மாற எவ்வளவு பிரசாரம் செய்தாலும், சாதாரண காலத்தில், 10 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியது இருக்கும். ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனை காரணமாக, கரன்சிகளை எண்ணும், பணத்தை பத்திரமாகக் கொண்டு செல்லும் பணிகள் குறைந்து வணிகம் பெருகும்; அரசுக்கு வரி வருவாய் கூடும்; நாளடைவில் வரி விகிதங்கள் குறையும். ஏற்கனவே வங்கிகள் வழங்கும் கடனுக்கு வட்டி வீதங்களை குறைக்கத் துவங்கி விட்டன. எனவே, நம் நாட்டவர் வெளிநாட்டு உற்பத்தியாளர்களுடன் வெற்றிகரமாக போட்டியிடும் வாய்ப்பு அதிகரிக்கும். கள்ளப்பணம் முற்றிலும் மறைந்து போகும்.இந்த நோக்கங்கள் நிறைவேற மத்திய அரசு மேலும் சில நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். கறுப்பு பணம் பெருமளவில் கைப்பற்றப்பட்டுள்ளது. தொழில் வணிக துறையினரிடம் தான் கறுப்பு பணம் இருக்கும் என்ற தவறான எண்ணத்தை மாற்றி, கறுப்பு பணம் பெருமளவில் இருப்பது அரசியல்வாதிகளிடமும், அதிகார வர்க்கத்தினரிடமும் தான் என்பதை இந்த நடவடிக்கை தெளிவுபடுத்தியிருப்பதற்காக பிரதமர் மோடிக்கு தொழில் வணிகத்துறை சார்பில் நன்றி. மீண்டும் கறுப்பு பணம் உருவாகாமல் இருக்க, லஞ்ச லாவண்யத்தை ஒழிக்க மேலும் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.அமெரிக்கா உட்பட சில நாடுகள் போல, நம் நாட்டிலும் 2000, 500 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி மூலம் திரும்ப பெற்று 100 ரூபாய்க்கு மேல் உயர் நோட்டுகளை புழக்கத்திற்கு விடக்கூடாது. ஒரு லட்சம் ரூபாய் வரை ரொக்கமில்லா பணபரிவர்த்தனைக்கு எந்தவித கட்டணமும் இருக்க கூடாது. வணிக நிறுவனங்களை போல, அரசியல் கட்சிகளும் முறையாக கணக்கு வைத்து ஆடிட் செய்து கணக்கு விபரங்களை பத்திரிகைகளில் வெளியிட வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சியில் உலக அளவில் அமெரிக்காவிற்கு அடுத்து 2வது இடத்தை இந்தியா பிடிக்கும். ஒளிமயமான எதிர்காலத்திற்கு 2017 துவக்கமாக அமையும்.
எஸ்.ரத்தினவேல்முதுநிலை தலைவர்தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், மதுரை.

98430 53153

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundar - Madurai,ஐக்கிய அரபு நாடுகள்
04-ஜன-201708:56:09 IST Report Abuse
Sundar Good analysis. Political parties are to read this article to obviate to fool the voters.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X