அரிது அரிது கமிஷனரை காண்பது அரிது...! கொடிது கொடிது அவிநாசி ரோட்டில் செல்வது கொடிது...!

Added : ஜன 04, 2017
Advertisement
மதிய நேரம், ""2017ம் ஆண்டிலாவது நல்லா மழை வரணும். தண்ணீர் பிரச்னை இருக்கக்கூடாது,'' என்றவாறு, வண்டியை ஆப் செய்து விட்டு, ""பேங்க், ஏ.டி.எம்., பிரச்னை, இந்த ஆண்டிலாவது தீருமா,'' என்று கேட்டபடி, உள்ளே நுழைந்தாள் சித்ரா.""நாமே இப்படி அலுத்துக்கலாமா? "டிஜிட்டல்' முறைக்கு மாறிட வேண்டியது தானே'' என்றாள் மித்ரா.""பிரதமர் செஞ்சது எல்லாம் சரியாத்தான் போயிட்டிருக்கு.
அரிது அரிது கமிஷனரை காண்பது அரிது...! கொடிது கொடிது அவிநாசி ரோட்டில் செல்வது கொடிது...!

மதிய நேரம், ""2017ம் ஆண்டிலாவது நல்லா மழை வரணும். தண்ணீர் பிரச்னை இருக்கக்கூடாது,'' என்றவாறு, வண்டியை ஆப் செய்து விட்டு, ""பேங்க், ஏ.டி.எம்., பிரச்னை, இந்த ஆண்டிலாவது தீருமா,'' என்று கேட்டபடி, உள்ளே நுழைந்தாள் சித்ரா.
""நாமே இப்படி அலுத்துக்கலாமா? "டிஜிட்டல்' முறைக்கு மாறிட வேண்டியது தானே'' என்றாள் மித்ரா.
""பிரதமர் செஞ்சது எல்லாம் சரியாத்தான் போயிட்டிருக்கு. இடையில இருக்கிற, சில பெருச்சாளிகளால் தான், மக்களுக்கு இவ்ளோ கஷ்டம், அதுஇதுன்னு கதை அளந்துட்டு திரியறாங்க. பெரியாண்டிபாளையத்தில், மூணு ஏ.டி.எம்., பக்கம் பக்கமா இருக்கு. அதில், கோவையில இருந்து பணம் எடுத்து வந்து நிரப்பர ஒரு ஏ.டி.எம்.,ல மட்டும், "செக்யூரிட்டிங்க' ராஜ்ஜியம் நடக்குது''
""வழக்கமான வாடிக்கையாளர்கிட்ட, "கமிஷன்' அடிப்படையில பேசி, கார்டுகளை வாங்கி, "செக்யூரிட்டி' வச்சுக்கறாரு. வரிசையில காத்திருந்து, ஒவ்வொருத்தர் போறதுக்கு இடையில, அவரு, இரண்டு"கார்டு' போட்டு பணத்த எடுத்துக்கறாரு. வரிசையில காத்திருக்கறவங்க, பணம் கிடைச்சா போதும்னு, "வாய் பேசாம' நின்னுக்கறாங்க. வடமாநில தொழிலாளர் அதிகம் வர்ற பகுதியா இருக்கறதால, "செக்யூரிட்டி' நினைச்சா, 10 கார்டுல கூட பணம் எடுப்பாங்க போல,''என்றாள் சித்ரா.
""பொதுக்குழுவுல, கலெக்டர் டிரைவர் மேல, ஏகப்பட்ட புகார் வாசிச்சாங்களாம்,'' என்று மித்ரா கூறியதும், சித்ரா சுறுசுறுப்படைந்தாள்.
""நீ, நினைக்கற மாதிரி, ஆளும்கட்சி பொதுக்குழு கூட்டமில்ல; இது, அரசு வாகன டிரைவர்கள் சங்க பொதுக்குழு மேட்டர். பாதிக்கப்பட்ட "டிரைவர்' எல்லோரும் புகார் மழை பொழிஞ்சாங்களாம். சந்தா கட்டணம் வசூலிக்கிற தலைவர், அதை கணக்குல சேர்க்காம, இஷ்டம் போல் செலவு செய்யறார்னு பேசியிருக்காங்க. கலெக்டர் டிரைவர் மேல, குண்டடம், ஊத்துக்குளின்னு, பல்வேறு பகுதி அரசு டிரைவருங்க புகார் சொல்லியிருக்காங்க'' என்று கூறி, வாட்டர் பாட்டிலில் இருந்து தண்ணீர் எடுத்து குடித்து விட்டு, ""நான் கலெக்டர் டிரைவர்; எனக்கு சரியான மரியாதை இல்லைனா, தொலைச்சு போடுவேன்; ஒழுங்கா இருக்கனும்'னு எல்லோரையும் மிரட்டியிருக்காரு. "ஏன், வணக்கம் சொல்லாமயே போறன்னு, சிலரை "டோஸ்' விட்டிருக்காரு. கலெக்டர் டிரைவர்னா, இப்படி பயந்து போக வேண்டியிருக்கு; "ஜாண்' ஏறினா, முழம் சறுக்குது என்று, வருத்தமா பேசியிருக்காங்க,'' என்றாள் மித்ரா.
""நல்லவேளை, அதிகாரிங்க மேல எதுவும் சொல்லலையே'' என்று சித்ரா முடிப்பதற்குள், ""சொல்லாம இருப்பாங்களா?, பணி நேரத்துல அதிகாரிகளுக்கு வேலை செய்யறது கடமை; ஆனா, கோவிலுக்கு போறது, சொந்த வேலையா போறதுக்கும் சிலர் கூப்பிடறாங்க''என்றும் சில டிரைவருங்க புலம்பியிருக்காங்க,'' என்றாள் மித்ரா.
""சரி, அவிநாசி ரோட்டுல இருக்கற பேக்கரி வரைக்கும் போய்ட்டு வந்துடலாம். கொஞ்சம் வர்றீங்களா,'' என்று மித்ரா கூறியதும், வண்டியை ஸ்டார்ட் செய்து புறப்பட்டனர்.
""அவிநாசி ரோட்டை அதிகாரிகள் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே போட்டு வெச்சிருப்பாங்களோ,'' என, சித்ரா சலித்து கொண்டாள்.
""போன மாசம்தான், இந்த ரோட்டை சரி செய்யச்சொல்லி, கட்சிக்காரங்க, தீவிர போராட்டம் நடத்தினாங்க. பிறகு, வேண்டா வெறுப்பாக "பேட்ச் ஒர்க்' நடந்துச்சு. கொஞ்சம் தள்ளியிருக்கிற நெடுஞ்சாலைத்துறையினர், இதை சரி செய்யறதேயில்லை,'' என்றாள் மித்ரா.
""அந்தளவுக்கு அதிகாரிகளுக்கு பொறுப்புணர்வு இருக்கு. மக்கள் போராடலைன்னா, இதுவும் நடந்திருக்காது,'' என்று, சித்ரா கூறினாள்.
""நெடுஞ்சாலைத் துறையினரோட பொறுப்புணர்வுக்கு தான், மாநில தகவல் ஆணையம் குட்டு வெச்சிருச்சே தெரியுமா,'' என்றாள் மித்ரா.
""அது என்ன மேட்டர்,'' என்று சித்ரா ஆர்வத்தோடு கேட்டாள்.
""திருப்பூரில் நடக்கும் சுரங்க பாலம் வேலை பத்தி, தகவல் அறியும் உரிமை சட்டத்தில், நெடுஞ்சாலைத் துறைக்கு, 2014ல் சில தகவல்கள், மா.கம்யூ., சார்பில கேட்டிருக்காங்க. கோட்டம், கண்காணிப்பு அதிகாரிங்க, பதில் தராமல் இழுத்தடிக்க, மாநில ஆணையத்துக்கு புகார் போயிருக்கு. போன வாரம், விசாரணைக்கு அதிகாரி போயிருக்கார். விண்ணப்பதாரருக்கு, 31 மாதமாக பதில் தரவில்லை; 15 நிமிடத்தில், இதற்கான பதிலை தரணும்னு விசாரணை
அதிகாரி கண்டிச்சிருக்கார்.
""அங்கிருந்தே, கால் மணி நேரத்தில் பதிலை தயார் செஞ்சுகொடுத்தாராம். அது, ஏற்கனவே தயார் செஞ்சு வெச்சிருந்த விவரங்கள் தான். ஆனா, அனுப்பாமல் கிடப்பில் போட்டு வெச்சிருந்திருக்காங்க,'' என்றாள் மித்ரா.
பேசியபடியே வந்த போது, ரோட்டில் இருந்த குழியில் இறங்கி ஏறிய அரசு பஸ் ஒன்று, டயர் பஞ்சராகி ரோட்டின் மையத்தில் நின்றிருந்தது. பயணிகளை வேறு பஸ்சில் அனுப்பிய ஊழியர்கள், டயரை மாற்றி கொண்டிருந்தனர். அதை பார்த்த சித்ரா, வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு, மொபைல் போனில், அதை படம் எடுக்க முயற்சித்தாள்.
""அதை ஏன் படம் பிடிக்கறே? முறையான பராமரிப்பில்லாத அரசு பஸ் நடுவழியில் பழுதாகி நின்னா, அந்த பஸ் டிரைவருக்கு அதிகாரிங்க மெமோ கொடுக்கறாங்களாம். பாவம், அவங்களை ஏன் சிக்கலில் மாட்டி விடறே,'' என்றபடி தடுத்தாள் மித்ரா.
""பஸ்சை முறையா பராமரிக்காதது அதிகாரிங்க தவறு. அதுக்கு, டிரைவருக்கு ஏன் மெமோ கொடுக்கணும்,'' என்ற சித்ராவின் பேச்சில் ஆவேசம் வெளிப்பட்டது.
""பஸ்சில் கோளாறுன்னு சொன்னாலும், அப்படியே ஓட்டீட்டு போன்னு சொல்ற அதிகாரிகள், நடுவழியில் நின்னா மட்டும், "பணியில் கவனக்குறைவு'ன்னு மெமோ தர்றாங்க. பழுதை நீக்கறதெல்லாம், அதிகாரிகளுக்கு ஒரு வேலையா. அவர்களுக்கு "கலெக்ஷன், கரெக்ஷன் மற்றும் கரெப்ஷன்' என பல முக்கிய வேலைங்க இருக்கும். பஸ்சில் போனால் தானே, அதிகாரிகளுக்கு அரசு பஸ்களோட லட்சணம் தெரியும்' என நொந்து கொண்டாள் மித்ரா.
""சரி, வா. பொங்கலுக்கு பொருட்கள் பர்சேஸ் பண்ணனும். கடைக்கு ஒரு எட்டு போய்ட்டு வந்துடலாம்,'' என்றதும், அங்கிருந்த கடைக்குள் இருவரும், புகுந்தனர். அப்போது, அவ்வழியே கமிஷனர் ஜீப் சென்றது. அதைப்பார்த்தவுடன், சித்ரா, ""திருப்பூர் மாநகரத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் போலீசார் பற்றாக்குறை உள்ளது. இருக்கிற போலீசாரை வைத்து சட்டம்ஒழுங்கு பிரச்னை, குற்றவாளிகளை பிடிப்பது என, எந்த வேலையையும் திருப்தியாக செய்ய முடியாமல் சிரமப்படறாங்க.
""அதேபோல், கமிஷனர் அலுவலகத்தில், மாத துவக்கத்தில் நடைபெற்று வந்த, மாதந்திர ஆய்வுக்கூட்டம் கூட, இப்போது, மாதக்கடைசியில், ஏதோ கடமைக்கு நடத்துகின்றனர். நம்ம கமிஷனரை, மாநகர போலீஸ் சார்பில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பார்ப்பதைவிட, தனியார் நிகழ்ச்சிகளில் தான் அதிகமாக பார்க்க முடிகிறது,'' என்றாள்.
""ஆமாம், நானும் கேள்விப்பட்டேன். கமிஷனர், ஏனோதானோ என்று இருக்கிறார். மக்கள் மத்தியில வந்தாதான், போலீசுக்கு பேர் கிடைக்கும்,'' என்று, மித்ரா ஆமோதித்தாள். ""சரியா சொன்னே,'' என்ற சித்ரா, ""தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில் சமீபத்தில், ஜெய்வாபாய் பள்ளியில் முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டி நடந்தது,'' என்று விளையாட்டு மேட்டருக்கு தாவினாள்.
""சரி, அதிலென்ன, விவகாரம்,'' என மித்ரா கேள்வி எழுப்பினாள். ""அரசு சார்பில் நடக்க கூடிய விழாவில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் ஒருவர் கூட வரவில்லையாம். மாவட்ட விளையாட்டு துறை சார்பில், முறையாக அழைப்பு கொடுக்கவில்லை என்பதால் வரவில்லைன்னு பேச்சு அடிபடுது. இதுபற்றி, கலெக்டரும் பெரிசா கண்டுக்கவில்லையாம். ஜெ., மறைவுக்கு பிறகு நடந்த போட்டியை, இப்படி கடமைக்கு நடத்தியிருப்பது, ஸ்போர்ட்ஸ் வீரர்கள் ரொம்பவே அப்செட் ஆயிட்டாங்களாம்,'' என்று, சித்ரா, நீண்ட விளக்கம் கொடுத்தாள்.
""சரி, வாக்கா, போலாம். இன்னும் கொஞ்சம் பொருள் வாங்கணும், அடுத்த வாரம் வாங்கிக்கலாம்,'' என்று, மித்ரா சொல்ல, சித்ரா வண்டியை ஸ்டார்ட் செய்தாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X