சுயகட்டுப்பாடுடன் சுகமாய் பயணம் செய்வோம் சாலைகளில்!| Dinamalar

சுயகட்டுப்பாடுடன் சுகமாய் பயணம் செய்வோம் சாலைகளில்!

Added : ஜன 05, 2017 | கருத்துகள் (1)
சுயகட்டுப்பாடுடன் சுகமாய் பயணம் செய்வோம் சாலைகளில்!

விபத்துக்களை இருவகை யாக பிரிக்கலாம். ஒன்று இயற்கையாய் இயற்கையினால் நிகழக்கூடியது. இதை நாம் இயற்கை பேரிடர் என்கிறோம். இயற்கை மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி. அதை மனிதனால் கட்டுப்படுத்தவோ, தடுத்து நிறுத்தவோ முடியாது. இயற்கை பேரிடர்களில் தங்களை எவ்வாறு காத்துக்கொள்ள வேண்டும். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்பதை சிந்தித்து ஆராய்ந்து செயல்படுவோமானால் ஆபத்தில் இருந்து தப்பலாம்.இரண்டாம் வகை மனிதனால் நிகழக்கூடிய, நிகழ்த்த கூடிய பேரிடர். இது நிகழ்வதும், நிகழாமல் இருப்பதும் நம் கைகளில் தான் உள்ளது. எனவே, நாம் நினைத்தால் இந்த பேரிடரில் இருந்து நம்மையும் காத்து, மற்றவர்களையும் பாதுகாக்க முடியும்.
கவனக்குறைவால் விபத்து : மனிதனின் கவனக்குறைவால் ஏற்படக்கூடிய விபத்துக்கள் பல வகைப்படும். தொழிற்சாலை களில், வேலை செய்யும் இடங்களில் ஏன் வீடுகளில் கூட விபத்துக்கள் நடக்கலாம். ஆனால், இவையெல்லாம் எங்கோ, எப்பொழுதோ நிகழக்கூடியது. இதற்கான நிகழ்தகவு மிகவும் குறைவு. ஆனால் இன்று சாலைகளில் மனிதன் கவனக்குறைவால், அலட்சியத்தால் நித்தம், நித்தம் ஏற்படக்கூடிய சாலை விபத்துக்களை பார்க்கும்போது மனம் வருந்துகிறது. வேதனையில் ஆழ்கிறது. நாம் சந்தோஷமாக, சவுகரியமாக பயணம் செய்யவே கடன் பட்டாவது வாகனங்களை வாங்கி பயணிக்கிறோம். சாலை விபத்துக்களில் சிக்கும் போது சந்தோஷம் சுக்குநுாறாகி போகிறது. அதுமட்டுமல்ல நாம் மற்றவர்களின் சந்தோஷத்தையும் அழித்து, பிறருக்கு சுமையாக இருக்க கூடிய சூழலும் உருவாகிறது.
அதிவேக பயணம் ஆபத்து : இன்றைய சாலை விபத்துக்கான காரணங்களை ஆராய்வோமானால் சாலைகள் சரியாக இல்லை, வாகன பெருக்கம் அதிகரித்ததால் சாலை விதிகளைப் பின்பற்றாமை, 'ஹெல்மெட்' அணியாமை, போதிய பயிற்சி,ஓட்டுனர் உரிமம் இன்றியும் வாகனங்களை இயக்குதல், சீதோஷ்ண நிலை சரியில்லாமை, அதிவேகமாக வாகனங்களை இயக்குதல், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுதல், போன்ற காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். ஆனால் இவற்றுள் எல்லாம் முதன்மையாக கவனிக்கப்பட வேண்டியது, அதிவேக பயணம் என்பதை யாரும் மறக்க முடியாது. இன்றைய விபத்து புள்ளிவிபரங்களை ஆராய்ந்து பார்த்தால் இதன் உண்மை புரிய வரும்.
புள்ளி விபரம் : தற்போதைய வாகன விபத்து புள்ளிவிபரங்கள் கூறுவது என்ன?இன்றைய வாகன விபத்துக்களில், இருசக்கர வாகன ஓட்டிகளால் நிகழக்கூடிய விபத்துக்கள் 26.4 சதவீதம். மூன்று சக்கர வாகனமாகிய ஆட்டோக்களினால் 5.8 சதவீத விபத்துக்களும், கனரக வாகனங்களினால் 20.1 சதவீத விபத்துக்களும், பஸ் மற்றும் ஜீப்களினால் முறையே 8.8 ,4.5 சதவீத விபத்துக்களும் நிகழ்கிறது.இதில் மிகவும் வேதனையான புள்ளிவிபரம் என்னவென்றால், 36.8 சதவீத விபத்துக்கள் அதிவேக மாக வாகனங்களை இயக்குவ தனால் ஏற்படுகிறது என்பது தான். இதில் இருந்து நாம் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டியது இரண்டு முக்கியமான கருத்துக்கள். தோராயமாக 100க்கு 40 சதவீத விபத்துக்கள் அதிக வேகம் காரணமாகவும், 100க்கு 30 சதவீத விபத்துக்கள் இருசக்கர வாகனங்களினாலும் ஏற்படுகிறது என்பதே. வேகத்தை குறைத்து விவேகமாக வாகனத்தை இயக்கினால், பெருமளவு விபத்துக்களை தவிர்க்கலாம்.
வாகன பெருக்கம் அதிகரிப்பு : வெளிநாடுகளைப்போல் நம் நாட்டில் வாகனங்களுக்கு தகுந்தாற்போல் சாலைகள் பிரித்து தரப்படவில்லை. அதற்கான வசதிகளும் இங்கில்லை. நம் நாட்டில் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சாலை வசதிகளும் இல்லை. ஆனால் வாகன பெருக்க சதவீதம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே செல்கிறது. 2013 கணக்கின்படி வாகன பெருக்க சதவீதம் 12.37 ஆகும். கடந்த 6 ஆண்டுகளில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 89 சதவீதம் அதிகரித்துள்ளது.
மித வேகம் விபத்தை தடுக்கும் : போக்குவரத்து மற்றும் போலீசார் வாகன சோதனைகள், போக்குவரத்து சீர் செய்தல், மது அருந்தி வாகனம் ஓட்டுவதை தடுத்தல் போன்ற செயல்கள் மூலம் விபத்துக்கள் நிகழாமல் தடுத்து வருகின்றனர். ஆனாலும் விபத்துக்கள் நடைபெற்றுக்கொண்டேதான் இருக்கின்றன. இதற்கு காரணம் நாம் செய்யும் தவறாகிய அதிவேக பயணமே. தலைக்காயம் ஏற்படுவதை தவிர்க்க 'ஹெல்மெட்' அவசியம் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் இன்று நம்மில் பலர் 'ஹெல்மெட்' அணிந்து கொண்டு அதிவேகமாக வாகனத்தை இயக்குகிறோம். அப்போது 'ஹெல்மெட்' நம் உயிரை வேண்டுமானால் காப்பாற்றலாம். ஆனால் மற்ற உடல் உறுப்புகளுக்கு ஏற்படும் ஊனத்தை தடுக்க முடியாது.ஆனால் மிதவேகத்தை கடைப்பிடிப்போமேயானால் விபத்து ஏற்படாமலே தடுக்க முடியும்.
மீண்டும், மீண்டும் அதே தவறு : இதற்கு தீர்வு என்னவென்று பார்த்தால் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனலாம். மது அருந்தினால் உடல் நலம் கெடும் என்ற விழிப்புணர்வு எல்லோரிடமும் இருப்பதுபோல், வேகமாக வாகனம் ஓட்டினால் விபத்து ஏற்படும் என்ற விழிப்புணர்வு அனைவரிடமும் உள்ளது. ஆனால் மீண்டும், மீண்டும் அதே தவறை தான் செய்கிறோம்.எனவே, இங்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதை விட மனிதர்களாகிய நம்முடைய செயல்பாடுகளினால், மாற்றம் கொண்டு வர வேண்டும். நாம் ஒவ் வொருவரும் நாம் நடைமுறை செயல்பாடுகளில் விபத்து குறித்து நல்ல முறையான மாற்றத்தை கொண்டு வந்தால் விபத்துக்களை அறவே தடுக்க முடியும். ஆனால் இதற்கு காலதாமதமாகும். நாம் காத்திருக்க வேண்டும்.
பின் எப்படி விபத்தை குறைப்பது? : இருசக்கர வாகனங்களில் மணிக்கு, 140 கி. மீ., வேகம் 180 கி.மீ., வேகம் செல்பவை என நிறுவனங்கள் தயாரிக்கின்றன. அவை சற்றே சிந்திக்க வேண்டும். நம்முடைய சாலைகளில் இது சாத்தியமா? வாகன ஓட்டிகள் ஆர்வக்கோளாறு காரணமாக வாங்கி அதிவேகமாக செல்லும் பொழுது ஆபத்தில் சிக்குகின்றனர்.
வேகக்கட்டுப்பாடு கருவி : மேலும் பள்ளி, கல்லுாரி வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்தப்படுவது போல், இருசக்கர வாகனங்களுக்கும் அதனை பொருத்தினால் 30 சதவீத விபத்துக்களை தடுக்கலாம்.மக்கள் நாம் நினைப்பது எல்லாம் நம்மை யாராவது கட்டுப்படுத்த வேண்டும் என்பது தான். ஆனால் என்னுடைய தாழ்மையான கருத்து என்னவென்றால் நம்மை நாமே கட்டுப்படுத்தி கொள்ள வேண்டும். இது சாலை விபத்துக்கு மட்டுமல்ல பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வாகும். எனவே, சுய கட்டுப்பாடு கொண்டு சுகமாய் பயணம் செய்வோம். சாலைகளில் மட்டுமல்லாமல் நம் வாழ்க்கையிலும் பின்பற்றுவோம்.
----முனைவர் எஸ்.கணேசன்

சிவகாசி. 98650 48554We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X