பேச்செல்லாம் நல்ல பேச்சாகுமா| Dinamalar

பேச்செல்லாம் நல்ல பேச்சாகுமா

Added : ஜன 05, 2017
பேச்செல்லாம் நல்ல பேச்சாகுமா

மனிதனை மனிதனாக்கிய அருங்கலைகளில் ஒன்று 'சொல்லாடல்' என்ற பேச்சாற்றல். பேசுபவரை 'சொற்செல்வர்' என்றும், கேட்கின்றவரை 'செவிச்செல்வர்' என்றும் தமிழ் மரபு பேசுகிறது. மனிதர்களின் எல்லா பேச்சும் பேச்சாவதில்லை. மழலை பேச்சும், கிளிப்பேச்சும் போல மகிழ்வு தருவதும் இல்லை.
''ஆர்த்தசபை நுாற்றொருவர்; ஆயிரத்து ஒன்றாம் புலவர்வார்த்தை பதினாயிரத்து ஒருவர்'' - என்பார் அவ்வையார்.உயர்ந்த சபைகளில் அமரும் தகுதி நுாறு பேரில் ஒருவருக்கு வாய்க்கும். ஆயிரம் பேரில் ஒருவரே கவிஞராய் திகழ்வர். ஆனால், பேச்சாளராக இருப்பவர் பதினாயிரம் பேரில் ஒருவரே என்பது அவ்வையாரின் கருத்து.
மேடைப்பேச்சு
பேச்சு என்பது உரையாடல் தவிர்த்த உயர்ந்த நோக்கோடு கூடிய ஒரு அரிய கலை. இதனை மேடைப் பேச்சு என்கிறோம். மேடையில் பேசுவது ஒரு கலை. அவையிலே பேசுவது மனித உறவுகளை மேம்படுத்தும் ஒரு வினைப்பாடாகும். அது வெறும் சொற்களின் கூட்டு அல்ல. பரந்த மனமும், விரிந்த வாசிப்பும் நல்ல பேச்சாளனுக்கு உரிய அடிப்படை தகுதி. 'அவையறிதல்' என்பது நல்ல பேச்சாளனுக்கு உரிய கண்ணியமாகும். மேடை பேச்சு ஆரவாரமான ஒரு வணிக செயல் அல்ல. முன்னர் பலகாலும் நெஞ்சில் விழுந்த சிந்தனை வித்துக்களின் வெளிப்பாடு.''சொல் திறன் மிக்கவனை வெல்வது அரிது'' என்பார் வள்ளுவர். மேடையில் பேசுபவர் பொதுமக்கள் ஏற்று கொள்ளும் வகையில் பேசாவிட்டால், பொதுமக்கள் வெறுப்படைந்து எழுந்து சென்று விடுவார்கள். கேட்கின்றவர்களுக்கு ஏற்ப மொழிவதுதான் பேசும் திறன். பிறரை காயப்படுத்தாமல் பேசுவது அரிய கலை. நல்லதை கேட்டவன் நல் வழியில் நடப்பான். இடைவிடாத முயற்சி, விடாத வாசிப்பு கற்றறிந்தோர் தொடர்பு ஆகியவை எப்போதும் சிந்தையில் இருந்தால் பேச்சாளராகலாம். வெற்றியும் பெறலாம். இலக்கிய சொற்பொழிவாளருக்கு மனப்பாட பயிற்சியும், நல்ல உச்சரிப்பும் தேவை. நல்ல பேச்சாளர்களை பார்த்து நாமும் அவர்களை போல் பேச வேண்டும் என்ற வைராக்கியத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும். பேசத் தெரியாமல் திணறுகிறவர்களை பார்த்து, நாம் இவர் போல் மேடையில் அரைகுறையாக பேசக்கூடாது என்று உறுதி செய்து கொள்ள வேண்டும்.
மேடை அச்சம்
ஆழமான கல்வியே மேடை அச்சத்தை போக்கும். உணர்ச்சி மிக்க சொற்களால், நகைச்சுவையுடன் பேசினால் கேட்பவர் கவனத்தை ஈர்த்து விடும். பேச்சாளனின் வார்த்தைக்கும், அவனின் வாழ்க்கைக்கும் வித்யாசம் இல்லாவிட்டால், பேச்சாளனிடமிருந்து வெளிப்படும் கருத்துக்களை மக்கள் மறுக்காமல் ஏற்பர். குறித்த நேரம், நல்ல தொடக்கம், நல்ல முடித்தல் ஆகியவை நடுவர்களாலும், பார்வையாளர்களாலும் பெரிதும் விரும்பப்படும். கூட்டத்தினரின் மனநிலை, நேரத்தின் அருமை இவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். குறிப்புகளை வைத்து பேச வேண்டுமே தவிர பெரிய புத்தகங்களை எடுத்து சென்று, மேடையில் புரட்டி பார்த்து பேச கூடாது.
பேச்சில் புதுமை
பேச்சுலகில் புதுமையை கையாண்டவர்களே புதிய வரலாறு படைக்கின்றனர். நல்ல பேச்சு நடை மக்களிடத்தில் சென்று சேர்ந்து, அவர்களையும் நம்முடன் சேர்ந்து சிந்திக்க துாண்டும். கருத்தரங்கம் மற்றும் விவாத மேடைகளில் பேசும்போது, எதிரில் இருந்து பேசுபவர்களின் கருத்தை நன்கு உள்வாங்கி கொண்டு, அதற்கு தக்க மறு மொழி பகிர்தலே சிறப்பாக அமையும். மேடையில் அமங்கலமான அச்சம் தரும் சொற்களை தவிர்த்து, இனிய மங்கல சொற்களை பேச வேண்டும். நகைச்சுவை என்ற பெயரில் கொச்சையான சொற்கள், இரட்டை பொருள் தரும் சொற்களை பேச கூடாது. கேட்போர் நேரில் காட்சிகளை பார்ப்பது போல், வருணனையாளர்கள் செய்திகளை உவமை நயத்துடன் கூற வேண்டும். கதைகள் வாயிலாக கூறும் செய்திகள் மக்களின் கருத்தை கவரும். தளர்ந்து கிடக்கின்ற உள்ளங்களை, சக்தி மிக்க பேச்சாளரின் பேச்சு நிமிர்ந்து நிற்க செய்யும்.
பேச்சாளர்களின் பெருமை
திரு.வி.க.,வின் மேடை பேச்சு, எழுதப்பட்ட வாக்கியம்போல் எளிமையாகவும், இனிமையாகவும் இருக்கும். மறைமலை அடிகள், ரா.பி.சேதுபிள்ளை போன்ற தமிழ் அறிஞர்கள் மேடையில் முழங்குவர். ஈ.வே.ரா.பெரியார் மேடை பேச்சு பாமரனும் புரிந்து கொள்ளும் வகையிலானது. அண்ணாத்துரை, ஈ.வி.கே.சம்பத், நெடுஞ்செழியன், கருணாநிதி போன்ற திராவிட இயக்க பேச்சாளர்கள் பேச்சின் வலிமையால் ஆட்சி கட்டிலை அடைய முடியும் என்று நிரூபித்தவர்கள்.ஜீவா, பாலதண்டாயுதம், ஜெயகாந்தன் போன்ற பொது உடைமை கட்சியினர் தங்களுக்கென ஒரு பேச்சு பாணியை வகுத்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர்கள். குன்றக்குடி அடிகள், கி.ஆ.பெ.விசுவநாதன், கி.வா.ஜெகநாதன், திருமுருக கிருபானந்த வாரியார், திருக்குறள் முனுசாமி, திருச்சி ராதாகிருஷ்ணன், புலவர் கீரன், சாலமன் பாப்பையா, சத்திய சீலன் போன்றோர் இலக்கிய உலகிலும் பட்டிமன்ற வரலாற்றிலும் தங்களுடைய பேச்சால் தனித்தடம் பதித்தவர்கள். சக்தி பெருமாள், சரஸ்வதி ராமனாதன், இளம்பிறை மணிமாறன் போன்ற பெண் பேச்சாளர்களும் பேச்சால் பெருமை பெற முடியும் என நிரூபித்தவர்கள்.
பேச்சாளனின் தகுதி
மேடை பேச்சில் வல்லவராக திகழ நல்ல தமிழ் கற்க வேண்டும். மொழி நடை, தெளிவான உச்சரிப்பு, உணர்ச்சி பொங்க பேசுதல், கருத்திலே தெளிவு, குரலில் ஏற்ற, இறக்கம், இலக்கிய எடுத்துக்காட்டுகள், உடல் மெய்ப்பாடு என பயிற்சி எடுத்து கொண்டால் சிறந்த பேச்சாளராக திகழலாம்.''சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லைவெல்லும் சொல்இன்மை அறிந்து''- என்பார் வள்ளுவர்.ஒரு மேடையில் புகழ்மிக்க பேச்சாளர்கள் பலர் இருக்கலாம். ஆனால், அத்தனை பேரின் பேச்சிலும் ஒருவர் அல்லது இருவர் பேச்சு தான் மக்களை ஈர்க்கும். சென்ற நுாற்றாண்டில் வாழ்ந்த சுவாமி விவேகானந்தர், சர்வசமய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சிகாகோ சென்றார். அங்கு பேசிய ஒவ்வொரு மத தலைவர்களும் ''சீமான்களே, சீமாட்டிகளே'' என பேசியபோது, விவேகானந்தர் மட்டுமே, ''சகோதர்களே, சகோதரிகளே'' என்ற இரண்டு சொற்களை சொன்னவுடன், அந்த சொல்லில் ஈர்க்கப்பட்ட மக்கள், எழுந்து நின்று கைதட்டி அவரது பேச்சை பாராட்டி ஆர்வத்தோடு கேட்டனர்.''கேட்டார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்வேட்ப மொழிவதாம் சொல்''-(குறள்)கேட்டு கொண்டிருப்பவர்களை தன் பேச்சாற்றலால் கட்டி போட்டு, பகைவரும் கேட்க விரும்பும் பேச்சே சிறந்த பேச்சு என்பார் வள்ளுவர்.''மெய்யுடை ஒருவன் சொல மாட்டாமையால்பொய் போலுமே பொய்போலுமேபொய்யுடை ஒருவன் சொல்வன்மையாலேமெய் போலுமே மெய் போலுமே''நேர்மையான ஒருவன் உண்மையான செய்தியை மேடையிலோ, எதிரில் இருப்பவர்களிடமோ எடுத்து சொல்ல இயலாதவனாக இருப்பானேயானால் அப்போது உண்மையும் பொய்யாகும். இதற்கு மாறாக பொய்மை குணமுடைய ஒருவன், பொய்யான செய்தியை தன் ஆற்றல் மிக்க பேச்சால் எடுத்துரைப்பானேயானால் பொய்யும் மெய்யாகும். அப்பொய்மையாளனும் போற்றப்படுவான். ஒரு நல்ல சொற்பொழிவு நுாறு புத்தகங்கள் படித்ததற்கு ஈடாகும். தமிழ்நாட்டில் சொற்பொழிவு என்பது சமயத்தில் தொடங்கி, நாடகத்தில் இயங்கி அரசியலில் துலங்கி, இன்று பெரும்பாலும் இந்த மூன்றையும் உள்வாங்கிய வடிவமாக திகழ்கிறது.
ஈர்க்கும் பேச்சு
இனிமையான பேச்சு எதிராளியை தன்பால் ஈர்க்கும். நகைச்சுவையான நல்ல பேச்சு சிரிக்கவும், சிந்திக்கவும் துாண்டும். கற்பதை விடவும், கேட்டறிதல் நன்று என்ற உண்மையை பேச்சாளன் உணர்ந்து பேச வேண்டும். ஜனநாயக நாட்டில் பேச்சே ஆயுதம். நல்ல பேச்சாளனே சமுதாயத்தில் மதிக்கப்படுகின்றான். அவனே தலைவனாகவும் ஆகிறான். எனவே, பேச்சு என்னும் ஆயுதத்தின் வலிமையை உணர்ந்து அதனை பயன்படுத்தி வெற்றி காண வேண்டிய சூழ்நிலையில் நாம் வாழ்ந்து வருகிறோம்.
எம்.பாலசுப்பிரமணியன்,செயலர், வள்ளல் அழகப்பர் தமிழ் இலக்கிய பேரவை,காரைக்குடி. 94866 71830

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X