செத்து மடியும் விவசாயி; செத்துப் போகுது ஜனநாயகம்!| Dinamalar

செத்து மடியும் விவசாயி; செத்துப் போகுது ஜனநாயகம்!

Added : ஜன 07, 2017 | கருத்துகள் (4)
Share
செத்து மடியும் விவசாயி; செத்துப் போகுது ஜனநாயகம்!

'நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது; மழை இல்லையென்றால் ஒழுக்கமும் இருக்காது' என்பது திருவள்ளுவர் கூற்று. மனிதன் மட்டும் தான் நாகரிகத்திற்கு ஏற்ப மாற வேண்டுமா... இயற்கையாகிய நாங்களும் ஏன் மாறக்கூடாது என, கேட்பது போல இயற்கை மாற்றங்கள் ஏற்படுகின்றன. மாசு மற்றும் சுற்றுச்சூழல் குறித்து நாம் கண்டு கொள்ளாததால், இயற்கை வாரி வழங்கும் மழை எனும் கொடை, நம்மை விட்டு வெகு துாரம் செல்லத் துவங்கியுள்ளது. ஆம்... வட கிழக்குப் பருவ மழை பொய்த்துப் போனது. நன்றாக மழை பெய்த காலங்களில் தண்ணீரின் அருமை தெரியாமல், முறையாக சேமிக்காமல் விட்டு விட்டோம். மழையும், தண்ணீரும் இல்லாமல் போனால், 'நாட்டின் முதுகெலும்பு' எனப்படும் கிராமங்களும், விவசாயமும் அழிந்து போகும் அபாயம் உள்ளது. விவசாயிகளுக்கு, மழை ஒரு சில நேரங்களில் வரமாகும். சில நேரங்களில், அதுவே புயல், காற்று, அதீத மழை என, சாபமுமாகும். சாபமானாலும் கூட, அடுத்த ஆண்டில் விவசாயத்தை துாக்கிப் பிடித்து விடுவான் விவசாயி. காரணம் நிலத்தடி நீரும், ஈரப்பதமும் பூமியில் இருந்தால் போதும், 'பூமராங்' போல் மீண்டெழுவான் விவசாயி.ஆனால், அந்த நிலத்தடி நீரும் இப்போது அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறதே! சட்டப்படி தர வேண்டிய தண்ணீரை, அண்டை மாநிலம் தர மறுப்பதாலும், தமிழகம் இன்று வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது. வறட்சி, கோரத்தாண்டவம் ஆட, வெகு துாரமில்லை. இதற்கான, 'கவுன்ட் டவுண்' தான், தமிழகத்தில் வரிசையாக விழும் விவசாயிகளின் தற்கொலைகள்.இதைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளவில்லை. நமக்கெதற்கு இயற்கை பற்றிய அக்கறை வர வேண்டும்... நமக்கு மற்றும் நம் இளைஞர்களுக்கு, மொபைல் போனும், விவசாயிகளின் கூக்குரல் காதுகளில் விழாமல் இருக்க, 'ஹேண்ட்ஸ் பிரீ' செட் இருந்தாலே போதுமே! நமக்கும், நம் இளைஞர்களுக்கும் தான் அக்கறை இல்லை என்றால், நாம் தேர்ந்தெடுத்த தமிழக அரசும், மத்திய அரசும் என்ன செய்தன?பாவம். இப்போதிருக்கும் ஆட்சியாளர்களுக்கு இதெல்லாம் எங்கே தெரியப் போகிறது. மே மாதம் தேர்தல் முடிந்து, அ.தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்று, முதல்வரான ஜெயலலிதா, முழுதாக நான்கு மாதங்கள் கூட ஆட்சியை நடத்தாமல், உடல் நலமின்றி, செப்டம்பரில், அப்பல்லோ மருத்துவமனையில் விழுந்தார். அமைச்சர்கள், முதல் ஆளும் கட்சி, எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள், மருத்துவமனை வாசலிலேயே நின்றிருந்தனர். மக்கள் பற்றிய சிந்தனையே அவர்களுக்கு மறந்து போனது. 'அம்மா... அம்மா' என, மருத்துவமனையே கதியாக கிடந்தனர். டிச., 5ல், ஜெயலலிதா இறந்ததாக அறிவிக்கப்பட்டது. அன்று நள்ளிரவிலேயே, பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள் பதவியேற்றனர். பதவியேற்றது முதல், 'சின்னம்மா' புராணம் பாடத் துவங்கி விட்டனர். அவரை கட்சியின் தலைமை பீடத்தில் அமர வைக்கும் முயற்சியில், ஒரு மாதம் ஓடி விட்டது.தமிழகத்தில் ஜனநாயகம் செத்துப் போய் விட்டதா... ஜனநாயக முறைப்படி, ஒரு அரசை தேர்ந்தெடுத்து, எட்டு மாதங்களாகி விட்டது. இதுவரை என்ன செய்தது இந்த அரசு... அழிந்து கொண்டிருக்கும் விவசாயத்தை காத்ததா... தண்ணீர் இன்றி, விவசாயம் செய்ய முடியாமல் மடியும் விவசாயிகளின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறியிருக்கிறதா... வேளாண் துறைக்கு என அமைச்சர் இருக்கிறாரா... அந்தத் துறை செயல்படுகிறதா...இதுபோல, எத்தனையோ கேள்விகள் எழுகின்றன. பதில் சொல்லப் போவது யார்?கடந்த ஆண்டு பருவ மழையின் போது, வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டு, விவசாயிகளுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டது. மழை நீரை சேமிக்க முடியாமல் போனதற்கு, ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்புகள் தான் காரணம் என்பதால், ஆக்கிரமிப்புகளை அகற்றி, பாசன நீர் நிலைகளில் தண்ணீரை சேமிக்க வழி காணப்படும் என, அனைத்து கட்சியினரும் உறுதி அளித்தனர்.வெற்றி பெற்றவர்கள் செய்தனரா... இது வரை ஒரு செங்கல்லைக் கூட பெயர்க்கவில்லை; மண்வெட்டியை எடுத்து, ஒரு வாய்க்காலைக் கூட வெட்டவில்லை என்பது தான் நிதர்சனம். வாழ்க ஆட்சியாளர்களே! வளர்க நீங்கள் சேர்க்கும் செல்வம். மத்திய அரசும், தன் பங்குக்கு தமிழக விவசாயிகளை பழிவாங்கிக் கொண்டிருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் படி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும், மத்திய அரசு காதில் வாங்கி கொள்ளவில்லை. மேலாண்மை வாரியத்தை அமைத்திருந்தால், ஓரளவிற்கு விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என, நம்பிக்கை கொள்ளலாம்; அதுவும் இல்லாமல் போய் விட்டது. விவசாயத்தை இப்படி முற்றிலும் அழித்து விட்டு, எதை சாதிக்க ஆட்சியாளர்கள் இருக்கின்றனர் என, தெரியவில்லை. இளைஞர்களே, விவசாயத்துடன் நம்மையும், நம் வருங்கால சந்ததியினரையும் காப்பாற்ற, இனியும் அரசை நம்பியிருக்க வேண்டாம். உங்கள் காதுகளில் இருக்கும், 'ஹேண்ட்ஸ் பிரீ' செட்டை துாக்கியெறியுங்கள். கையில் இருக்கும் மொபைல் போனை விசிறி அடியுங்கள்; களத்தில் இறங்குங்கள். நிலத்தடி நீர் குறித்து ஆராயுங்கள். நீர் ஆதாரத்தை பெருக்க என்ன வழி என, வல்லுனர்கள் மற்றும் இணையத்தில் தேடுங்கள். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறுங்கள். விளை நிலங்கள், 'பிளாட்'டுகளாக மாறுவதை தடுத்திடுங்கள். விவசாய நிலங்களில் பசுமையை கொண்டு வரும் வழிமுறைகளை கண்டுபிடியுங்கள். விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுத்து நிறுத்துங்கள். உங்களிடம் இருக்கும் திறமையை வெளிக் கொண்டு வாருங்கள். விவசாயத்தைக் காத்திடுங்கள்; பசுமைப் புரட்சியை ஏற்படுத்துங்கள்.
- வி.மோகன் -சமூக ஆர்வலர்


இ - மெயில்: vimomohan63@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X