இளையராஜா இசையில் பாட ஆசை : ' வைக்கம்' விஜயலட்சுமி| Dinamalar

இளையராஜா இசையில் பாட ஆசை : ' வைக்கம்' விஜயலட்சுமி

Added : ஜன 08, 2017 | கருத்துகள் (1)
இளையராஜா இசையில் பாட ஆசை : ' வைக்கம்' விஜயலட்சுமி

தற்போது இசையின் ஆக்கிரமிப்பில் பாடகர்களின் குரல் வெளிப்படுவது அதிசயம் தான். ஆனால், இசையை மிஞ்சி தன் குரல் வளத்தால் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் மலையாளத்தின் 'பொக்கிஷம்' எனப்படும் பாடகி வைக்கம் விஜயலட்சுமி. 1995ல் தொடங்கிய இவரது இசைப்பயணம் தற்போது வரை தொடர்கிறது. குரலில் உள்ள தனிப்பட்ட தன்மையால், பல இசை அமைப்பாளர்கள் வாய்ப்பு கொடுத்து வருகின்றனர். அவரும் அதற்கேற்ற 'ஹிட்' பாடல்களை கொடுத்து ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார்.கேரளாவின் வைக்கம் பகுதியை சேர்ந்தவர். பார்வை குறைபாடு இருந்ததால் இளம் வயதிலேயே இசையை பின்னணியாக கொண்டு பெற்றோர் வளர்க்க ஆரம்பித்தனர். சிந்துபைரவியில் வரும் 'நானொரு சிந்து காவடி சிந்து' பாடலை சிறு வயதில் பாடி அசத்தினார். முறைப்படி சங்கீதம் கற்று, மேடை கச்சேரிகளில் பாட ஆரம்பித்தார். 8 ஆயிரம் மேடை கச்சேரியில் பாடியுள்ளார்.முதன் முறையாக மலையாள 'செல்லுலாய்ட்' படத்தில் 'காற்றே.. காற்றே..' என்ற பாடலை பாடினார். கேரள அரசு இவருக்கு விருது தந்து கவுரவித்தது. அதன் தொடர்ச்சியாக 'நடன்' படத்தில் பாடிய 'ஒற்றக்கு பாடுன' பாடலுக்கு பிலிம்பேர் விருது கிடைத்தது. தமிழில் ரோமியோ ஜூலியட் படத்தில் 'இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி..., வீரசிவாஜியில் 'சொப்பன சுந்தரி நான் தானே, சொப்பன லோகத்தில் தேன்தானே...' உட்பட பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். வரும் மார்ச்சில் மலையாள இசையமைப்பாளர் சந்தோைஷ கரம்பிடிக்கும் சந்தோஷத்தில் இருக்கும், விஜயலட்சுமி சண்டே ஸ்பெஷலுக்காக நம்மிடம் பேசியது:மலையாளத்தில் வெளி வந்த 'செல்லுலாய்ட்' படத்தின் தமிழ் டப்பிங்கில் நான் பாடின காற்றே, காற்றே பாடல் தான் என் முதல் தமிழ் பாட்டு. அதை தொடர்ந்து சந்தோஷ் நாராயணன் 'குக்கூ' படத்தில், 'கோடையில மழை போல' பாட வாய்ப்பு வந்தார். டி.இமான் இசையில் 'என்னமோ ஏதோ' படத்துக்காக புதிய உலகை தேடி போகிறேன் பாட்டு. இதில் என்னுடைய காயத்ரி வீணையை பயன்படுத்தினேன். அப்புறம் வெள்ளைக்கார துரையில் 'காக்கா முட்டை' பாட்டு. சிறு வயதில் என் விருப்பத்துக்காக ஒற்றை கம்பியை வைத்து, அப்பா வீணை செஞ்சு கொடுத்தாங்க. அந்த வீணை மூலம் தான் நான் பாட்டு கத்துக்க ஆரம்பித்தேன். நிறைய மேடை கச்சேரியில் இந்த வீணை மூலம் கச்சேரி செய்துள்ளேன். குன்னக்குடி வைத்தியநாதன் என்னை ஆசீர்வதித்து என் வீணைக்கும் 'காயத்ரி வீணைன்னு' பெயர் வைச்சாரு. எனக்கு ரொம்ப பிடிச்ச ராகம் 'சஹானா' ராகம் தான். அவ்வை சண்முகியில் வரும் 'ருக்கு... ருக்கு...' பாடல் இந்த ராகத்தில் அமைந்தது. நான் முணுமுணுக்கும் பாடலும் இது தான். யுவன் சங்கர், இமான் மியூசிக்கில் பாடியுள்ளேன். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர் இசையில் பாட வேண்டும், எஸ்.பி.பால சுப்பிரமணியனுடன் இணைந்து பாட வேண்டும், என்பது தான் ஆசை. தற்போது மாவேலிக்கரை பொன்னம்மா, வி.சுப்பிரமணியன், நெடுமங்காடு சிவானந்தம் ஆகியோரிடம் இசை கற்று வருகிறேன், என்றார். கணீர் குரலில் பாடும் மலையாளத்தின் பொக்கிஷம் எனப்படும் வைக்கம் விஜயலட்சுமி விரைவில் வையகம் முழுவதும் பேசப்படும் பின்னணி பாடகராக உயர்வார். இவரை பாராட்ட: vaikomvijayalakshmi29@gmail.com.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X