திருட்டு நகை மீட்பு... திரும்பக் கேட்டால் 'பல்பு'

Added : ஜன 10, 2017
Share
Advertisement
திருட்டு நகை மீட்பு... திரும்பக் கேட்டால் 'பல்பு'

ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில், காய்கறி பொறுக்கிக் கொண்டே, அரசியலை அலசி, நறுக்கிக் கொண்டிருந்தனர் சித்ராவும், மித்ராவும்.
''ஊருக்குள்ள மறுபடியும், 'மம்மி' பேனர்க அதிகமாயிட்டு இருக்கு... கவனிச்சியா மித்து?'' என்றாள் சித்ரா.
''ம்...கவனிச்சேன். இன்னொரு விஷயத்தை நீ கவனிக்கலை போலிருக்கு. சிட்டிக்குள்ள சின்னம்மா பேனர்களை கிழிக்கிறதும் அதிகமாயிருக்கு. ஆளுங்கட்சிக்காரங்க, போலீஸ்ட்ட சொல்லி, ஆளைப் பிடிக்கச் சொல்லிருக்காங்க. அவுங்க, 'அதெல்லாம் முடியாது; ஏதாவது கேமராவுல சிக்குனா பிடிச்சுத் தர்றோம்'னு சொல்லீட்டாங்க. அதனால, கிழிச்ச பிறகு எடுக்க வேணாம்னு, வச்சவுங்களே அதை எடுத்துட்டு இருக்காங்க,'' என்றாள் மித்ரா.
''கோயம்புத்துார்ல இருந்து, 'மினிம்மா'வுக்கு எதிர்ப்புக்குரல் எதுவுமே கிளம்பலையே மித்து... கட்சியை அவ்ளோ கட்டுக் கோப்பா வச்சிருக்காங்களா, இல்லேன்னா பயந்துக்கிறாங்களா?'' என்றாள் சித்ரா.
''எப்பிடி பயப்புடாம இருப்பாங்க. ரூரல் ஏரியாவுல, பஞ்சாயத்து பிரசிடென்ட் உட்பட ரெண்டு மூணு பேரு, அந்தம்மாவுக்கு எதிரா பேனர் வச்சு, கொடி பிடிச்சாங்க. அந்த பிரசிடென்ட்டைக் கூப்பிட்டு, நாலஞ்சு பேரு பயங்கரமா மிரட்டி இருக்காங்க,'' என்றாள் மித்ரா.
''என்ன கொடுமைக்கா இது... தொண்டர்கள் எல்லாம் எப்பிடித்தான் இதைப் பொறுத்துக்கிறாங்க?'' என்றாள் சித்ரா.
''அது தான், அவுங்க ஒதுங்க ஆரம்பிச்சிட்டாங்களே. முப்பதாவது நாள் ஊர்வலத்துக்கு, பல இடங்கள்ல கூட்டமே இல்லை பார்த்தியா... சீனியர்க சில பேர்ட்ட கேட்டதுக்கு, 'நடக்கிறதெல்லாம் ஒண்ணும் பிடிக்கலை; எதிர்த்துப் பேசுற அளவுக்கு நமக்கு தெம்பு இல்லை; அதனால ஒதுங்கிட்டோம்'னு புலம்புறாங்க,'' என்றாள் மித்ரா.
காய்கறிகளை வாங்கிக் கொண்டு, வெளியே வந்தவர்கள், கரும்பு ஜூஸ் குடிக்க ஒதுங்கினர். மித்ராவே மீண்டும் கேட்டாள்.
''சரி! புது செயல் தலைவர் வந்ததுல, கோயம்புத்துார் உடன் பிறப்புகளாவது சந்தோஷமா இருக்காங்களா?''
''சந்தோஷமா... சண்டை போடவே நேரமில்லைன்னு உடன் பிறப்புக கொந்தளிக்கிறாங்க'' என்றாள் சித்ரா.
''ஆமாக்கா...ஏற்கனவே, ரெண்டா இருந்த மாவட்டத்தை கட்சித்தலைமையே நாலா பிரிச்சிருச்சு. இப்போ, மாவட்டத்துக்கு ஏழு கோஷ்டி முளைச்சிருக்கு. ஆனா, உருப்படியா ஒரு தலைவர் இல்லை,'' என்றாள் மித்ரா.
''உண்மை தான் மித்து...முன்னால, சி.டி.தண்டபாணி, ராமநாதன், கண்ணப்பன், பொங்கலுார்னு யாராவது ஒரு சீனியர் இருந்து வழி நடத்துனாங்க. தண்டபாணி இறந்துட்டாரு; மத்தவுங்க வயசாகி, ஒதுங்கீட்டாங்க. இப்போ, 'பவர்புல் லீடர்'னு யாருமே இல்லியே,'' என்றாள் சித்ரா.
''எம்.எல்.ஏ., கார்த்திக், அவரோட சக்திக்கு தகுந்தது மாதிரி, போராட்டம், மனு கொடுக்குறது, வாங்குறதுன்னு ஏதோ பண்ணிட்டு இருக்காரு. கார்த்திக், மீனா லோகு, பைந்தமிழ்பாரி, பிரபாகரன்னு 'ஆக்டிவ்' ஆன இளசான ஆளுகளை, 'மாவட்டமா' போட்டாத்தான், ஆளுங்கட்சி மேல கோயம்புத்துார் மக்களுக்கு இருக்குற அதிருப்தியை தி.மு.க.,வுக்கு சாதகமாக்க முடியும்னு அந்த கட்சிக்காரங்க பேசிக்கிறாங்க,'' என்றாள் மித்ரா.
''மித்து! நம்மூர்ல திராவிட இயக்கம் பேருல ஒரு மாநாடு நடந்துச்சே. அதுல, தி.மு.க.,வைத் திட்டித் தீர்க்குற பல கட்சித் தலைவர்களும் வந்து கலந்துக்கிட்டாங்களே. அது எங்க நடந்துச்சு தெரியுமா?'' என்று கேட்டாள் சித்ரா.
''எங்க நடந்தா என்ன...அதுல என்ன பிரச்னை?'' என்றாள் மித்ரா.
''அது தான் பிரச்னையே. அந்த இடம், தி.மு.க., 'மாஜி' ஒருத்தருக்குச் சொந்தமானது. பணத்துக்கோ, சும்மாவோ எப்பிடிக் கொடுத்திருந்தாலும், 'தி.மு.க.,வை ஆட்சிக்கே வர விடாமப் பண்ணுன தலைவர்க கலந்துக்கிட்ட கூட்டத்துக்கு அதை எப்பிடி கொடுக்கப் போச்சு'ன்னு உடன் பிறப்புக உறுமுறாங்க,'' என்றாள் சித்ரா.
இருவரும் வண்டியை எடுத்துக்கொண்டு, கிளம்பினர். எதிரில் சென்ற போலீஸ் ஜீப்பைப் பார்த்ததும், மித்ரா கேட்டாள்.
''அக்கா, காட்டூர்ல இருந்த வுமன் இன்ஸ்பெக்டரை, 'சஸ்பெண்ட்' பண்ணுன பின்னணி என்னன்னு தெரியுமா?''
''முழுசாத் தெரியலை. ஏதோ 'ரெக்கவரி' பொருட்கள்ல கணக்குக் குறையுதுன்னு சொல்லி தான், 'சஸ்பெண்ட்' பண்ணுனதா கேள்விப்பட்டேன். கரெக்டா?''
''ஓரளவு... மீட்கப்பட்ட திருட்டு நகை, பணத்தை எல்லாம் சம்மந்தப்பட்டவுங்களுக்குக் கொடுக்காம, லவட்டிட்டாங்களாம். இதுல, ஸ்டேஷன்ல இருக்கிறவுங்களுக்கு, 'பங்கு' கொடுத்திருக்காங்க. ஆனா, அவுங்க யாரும் வாங்கலை. மேட்டர், பெரிய ஆபீசருக்குப் போயிருக்கு. அவரு, லேடி ஆபீசரை விசாரிக்கச் சொல்லிருக்காரு. அவுங்க விசாரிச்சப்போ, அந்த லேடி இன்ஸ்பெக்டரம்மா ஒரு கேள்வி கேட்டாங்களாம்...''
''ஏன்டி...வடிவேலு சொன்னது மாதிரி, அப்பிடியே, 'ஷாக்' ஆயிட்ட?''
''அதே 'ஷாக்' தான் அந்த லேடி ஆபீசருக்கும் கிடைச்சிருக்கு. ரெக்கவரி நகையை ஏன் திருப்பிக்கொடுக்கலைன்னு அவுங்க கேட்டதுக்கு, 'இதெல்லாம் கொடுத்தா எப்பிடி ஸ்டேஷனை நடத்துறது'ன்னு கேட்ருக்காங்க,''
''சூப்பரு. அதென்ன ஸ்டேஷனா, கட்சியா... அந்த லேடி 'இன்ஸ்' சம்பாத்தியத்தைப் பத்தி பல கதைகள் கேட்ருக்கேன் மித்து... மில் ஓனர் ஒருத்தரு, ஏதோ விஷயத்துக்காக இந்தம்மாகிட்ட ஒரு கேசுக்காக வந்திருக்காரு. அவர்ட்ட ஒரு லட்ச ரூபா வாங்கிட்டு, அனுப்பிட்டாங்களாம். அப்புறம் தான், பக்கத்துல இருக்குற ஒரு போலீசு, 'இவருக்கு 10 மில்லு இருக்கு'ன்னு சொல்லிருக்காரு,'' என்றாள் சித்ரா.
''ஆஹா...அப்புறம் என்ன ஆச்சு?'' என்றாள் மித்ரா.
''அதை ஏன் முதல்லயே சொல்லலைன்னு, அந்த போலீசுக்கு பயங்கரமா திட்டு விழுந்திருக்கு,'' என்றாள் சித்ரா.
''அக்கா...போன வருஷம் ரூரல் ஏரியாவுல தான், பயங்கர ஆக்சிடென்ட் நடந்திருக்கு. மொத்தம், 716 ஆக்சிடென்ட்ல, 764 பேரு இறந்து போயிருக்காங்க. அதுக்கு முந்துன வருஷம், 696 ஆக்சிடென்ட்ல, 735 பேரு இறந்திருந்தாங்க. இதுல கொடுமை என்னன்னா, இறக்கிறதுல பெரும்பாலானவுங்க, காலேஜ் ஸ்டூடன்ட்ஸ் அல்லது முப்பது வயசுக்குள்ள இருக்குற சின்ன வயசுக்காரங்க தான்,'' என்றாள் மித்ரா.
''இது பழைய விஷயமாச்சே,'' என்று அலுத்துக் கொண்டாள் சித்ரா.
''அதென்னவோ உண்மை தான். இந்த வருஷம், எப்பிடியாவது ஆக்சிடென்ட்களைக் குறைக்கணும்னு, ரூரல் ஏரியாவுல இருக்குற காலேஜ் பசங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துறதுக்கு எஸ்.பி., மேடம் நடவடிக்கை எடுத்திருக்காங்களாம்,'' என்றாள் மித்ரா.
''நல்ல விஷயம் தான். ஆனா, எனக்குத் தெரிய, பெரும்பாலான ஆக்சிடென்ட்டுக்குக் காரணம், 'குடி'தான். சிட்டியில பிடிக்கிறது மாதிரி, ரூரல் ஏரியாவுல குடிச்சிட்டு வண்டி ஓட்றவுங்களைப் பிடிக்கிறதில்லை. அப்புறம் எப்படி ஆக்சிடென்ட் குறையும்?'' என்றாள் சித்ரா.
''ஆக்சிடென்ட் பத்திப் பேசவும், நம்ம ரேஸ்கோர்ஸ்ல கலெக்டர் வீட்டுக்கு முன்னால போட்ருக்கிற ஸ்பீடு பிரேக்கர் தான் ஞாபகம் வந்துச்சு. இதுவரைக்கும் எந்த கலெக்டருக்கும் வராத உயிர் பயம், இவருக்கு மட்டும் எப்பிடி வந்துச்சுன்னு தெரியலை. அதே ரேஸ்கோர்ஸ்ல, பசங்க ரேஸ் நடத்துறாங்க. அதைத் தடுக்காம, அவரு வீட்டு முன்னால மட்டும் வேகத்தடையும், தடுப்பும் வைக்கிறது என்ன நியாயம்னு தெரியலை,'' என்றாள் மித்ரா.
காந்தி பார்க் வழியாகச் செல்லும்போது, பூங்காவுக்கு அருகில், துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், ஒரே மாதிரி சீருடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.
''கார்ப்பரேஷனே துாய்மை பாரதமா மாறிட்டு இருக்குடி; யூனிபார்ம்ல எல்லாரும் கலக்குறாங்க,'' என்றாள் சித்ரா.
''போன வாரம் சனிக்கிழமை, நாள் முழுக்க எல்லாரும் பரபரப்பா வேலை பார்த்துட்டு இருந்தாங்க. கார்ப்பரேஷன் கழிப்பிடம், குப்பைத்தொட்டி எல்லாமே 'பளிச்'ன்னு ஆயிருச்சு. என்ன... அந்த யூனிபார்மை, 'ஸ்பான்சர்'ல வாங்கி, எல்லாரையும் விளம்பர போர்டு மாதிரி வலம் வர வச்சதைத்தான் பல பேரு 'கமென்ட்' அடிச்சாங்க,'' என்றாள் மித்ரா.
''அதை விடு மித்து...கார்ப்பரேஷன்ல ஜே.என்.என்.யு.ஆர்.எம்., திட்டத்துக்கு, 54 பேரை 'அவுட்சோர்சிங்'ல எடுத்து இருந்தாங்களே. அவுங்க அத்தனை பேரும், சும்மா உட்கார்ந்துட்டு, சம்பளம் வாங்குறாங்கன்னு கார்ப்பரேஷன் ஆளுங்க குமுறுறாங்க. அவுங்களையும் இந்த துாய்மை பாரதத்துக்குப் பயன்படுத்தலாமே,'' என்றாள் சித்ரா.
''அக்கா...கோயம்புத்துார்ல இருக்குற மாவட்ட ஆபீசர் ஒருத்தரு, கட்டட விவகாரங்கள்ல காசு தட்டி எடுக்குறாராம். சமீபத்துல, மெட்ராஸ்ல ஒரு சொத்து வாங்கிருக்காராம். டீட்டெய்லா அப்புறம் சொல்றேன். முதல்ல வண்டிக்கு பெட்ரோல் போடணும்,'' என்று பெட்ரோல் பங்க்கில் வண்டியை ஓரம் கட்டினாள் மித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X