மண் திருட்டில் "மினியம்மா கும்பல்! மனசாட்சியின்றி அதிகாரிகள் அலம்பல்!| Dinamalar

மண் திருட்டில் "மினி'யம்மா கும்பல்! மனசாட்சியின்றி அதிகாரிகள் அலம்பல்!

Added : ஜன 10, 2017 | |
""கனிம வளத்தை கொள்ளையடிப்பது, மாபியா கும்பல் என்றால், அவர்களுக்கு ஆதரவாக இருப்பது அரசியல்வாதிகள். அதிகாரிகளுக்கும் இதில், பங்கு இருக்கு,'' என்றபடி, வண்டியை நிறுத்தி விட்டு பானையுடன் உள்ளே வந்தாள் சித்ரா.""பொங்கலுக்கு, பானையும், வாங்கிட்டு, ஏதோ, மண் தகவலோடு வந்துட்டீங்களா,'' என்றபடி, காபி டம்ளரை, மித்ரா நீட்டினாள்.""நான் சொல்ல வர்றது, உள்ளூர் பிரச்னை பற்றி.
மண் திருட்டில் "மினி'யம்மா கும்பல்! மனசாட்சியின்றி அதிகாரிகள் அலம்பல்!

""கனிம வளத்தை கொள்ளையடிப்பது, மாபியா கும்பல் என்றால், அவர்களுக்கு ஆதரவாக இருப்பது அரசியல்வாதிகள். அதிகாரிகளுக்கும் இதில், பங்கு இருக்கு,'' என்றபடி, வண்டியை நிறுத்தி விட்டு பானையுடன் உள்ளே வந்தாள் சித்ரா.
""பொங்கலுக்கு, பானையும், வாங்கிட்டு, ஏதோ, மண் தகவலோடு வந்துட்டீங்களா,'' என்றபடி, காபி டம்ளரை, மித்ரா நீட்டினாள்.
""நான் சொல்ல வர்றது, உள்ளூர் பிரச்னை பற்றி. அவிநாசி பக்கத்திலே, முறைகேடாக மண் அள்ளறது, மாசக்கணக்கில் நடக்குது. அங்கே, வருவாய் துறையில் உயர் பதவி வகித்து, பல்வேறு புகாருக்கு ஆளான ஒரு அதிகாரியின் மனைவி பேரில் தான், அங்கு நிலம் வாங்கி, மணல் மாபியா கும்பலின் முக்கிய நபருக்கு மண் அள்ள ஒப்பந்தம் தந்திருக்காங்க. விதிமுறை மீறி மண் அள்ளறது பத்தி, புகார் போயும், நடவடிக்கை இல்லை. இரு உயர் அதிகாரிகள், கடந்த, 21ம் தேதி, நேரில் அப்பகுதிக்கு போய், தார் ரோடு போடுறதுக்கு ஆய்வு செஞ்சு, உள்ளூர் அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டிருக்காங்க. வேறு வழியில்லாம, உள்ளூர் அலுவலர்கள் அங்க, அளவீடு செய்யப்போய், பொதுமக்கள் திரண்டதால, திரும்பீட்டாங்க. எதிர்ப்பு பெரியளவில் ஏற்பட்டதால, மண் அள்ள தடை விதிச்சிருக்காங்க,'' என்றாள் சித்ரா.
""பெரிய இடத்து விவகாரமாச்சே. அதனால, அதிகாரிகளும் பணிஞ்சு போக வேண்டியிருக்கோ என்னவோ,'' என்றாள் மித்ரா.
""நானும் அப்படித்தான் நெனச்சேன். ஆனா, சம்பந்தப்பட்டவங்கள ரகசியமா கண்காணிக்கிறாங்களாம், எப்ப வேணுமுன்னாலும் நடவடிக்கை பாயுமாம்,'' என்று சித்ரா கூறினாள்.
""அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படறது ஒருபக்கம் இருந்தாலும், ஒரு அதிகாரியோட அருள் பார்வைக்கு, ஆளும் கட்சிக்காரங்க சிலர், தவம் கெடக்கறாங்க தெரியுமா,'' என்று மித்ரா சொல்ல, ""யார் அந்த அதிகாரி? அவருக்கு என்ன அப்படியொரு மவுசு,'' என்று, சித்ரா ஆச்சரியத்தோடு கேட்டாள்.
""எல்லாம், "மினி'யம்மாவின் கைங்கரியம் தானாம். ஆளுங்கட்சியின் பிரதான பொறுப்புக்கு வரும் போதே, தனக்கு "நெருக்கமானவர்'களை முன்னிறுத்தி சில
திட்டங்களும், கட்சியில் நியமனங்களும் செய்யப்போறாங்களாம். அதில், தென் மாவட்டத்துக்கு பொறுப்பாளரா, "கருணை' வடிவான ஒருவரை தேர்வு செஞ்சிருக்காங்க. அவர் மருமகன், திருப்பூரில் முக்கிய அரசு பொறுப்பில் இருக்காராம். கடந்த தேர்தலின் போது, தேர்தல் கமிஷன் உத்தரவால் இடமாறுதல் செஞ்சு, தேர்தலுக்கு பின் "சாமி பிரசன்னம்' போல் மீண்டும் வந்திருக்கார். திருப்பூரை சேர்ந்த ஆளும் கட்சிக்காரங்க சிலர், இந்த விஷயத்தை மோப்பம் பிடிச்சு, அந்த அதிகாரியின் பார்வைக்காக தவமிருக்காங்களாம்,'' என்று, மித்ரா விவரித்தாள்.
""அடடே, அப்படியா விஷயம். தூய்மை இந்தியா திட்டம் தொடர்பாக, டில்லியில் இருந்து ஒரு டீம், திருப்பூர் வர்றதா சொல்லி, அவுங்கள மாதிரியே ஒரு குரூப் வந்து, கார்ப்ரேஷனை கதிகலங்க வெச்சுட்டாங்கப்பா,'' என்று, அடுத்த விஷயத்துக்கு சித்ரா தாவினாள்.
""அட, இப்படியெல்லாம் நடக்குதா. கொஞ்சம் டீடெய்லா சொல்லேன்,'' என்று மித்ரா கேட்டாள்.
""போன வாரம், ஒரு டீம் வருவதை மட்டும் சொன்னாங்க. கமிஷனர், உதவி கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளும், ரெடியானாங்க. ஆனா, கடைசி நேரத்தில, வரப்போறது உள்ளூர் டீம்; அதுக்கு பிறகு வர்றது தான் மெயின் டீம்னு, தகவல் வந்திருக்கு,'' என்று சித்ரா கூறினாள்.
""ஓ! அப்படியா..'' என்றாள் மித்ரா.
""ஜூனியர் டீம் தானே முதலில் வருது. என்ன செஞ்சிட போறாங்கன்னு, அதிகாரிங்க கொஞ்சம் அசால்டா இருந்திருக்காங்க. கமிஷனர் ரூமுக்கு போன டீம், கழிப்பிட விஷயம் பத்தி கேள்வி கேட்டு, நாறடிச்சிட்டாங்க. பல வருஷத்துக்கு முன்னாடி கட்டின டாய்லெட்டை எல்லாம், தூய்மை இந்தியா திட்டத்தில காட்டக்கூடாது. அதுமட்டுமில்லாம, ஏரியாவுக்குள்ள போகும் முன், ஜி.பி.ஆர்.எஸ்., மூலமாக ரூட் செக் பண்ணீட்டு, வீதிகளை எல்லாம் கரெக்டா அடையாளம் கண்டு, ஆய்வு நடத்தினத பார்த்து, மாநகராட்சி அதிகாரிங்க, வெலவெலத்து போயிட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.
""கார்ப்பரேஷன் பத்தி, வேற நியூஸ் இருக்கா,'' என்று, மித்ரா ஆர்வம் பொங்க கேட்டாள்.
""மாநகராட்சிக்கு ஆட்கள் பற்றாக்குறை இருக்கு. ஆனா, பி.ஆர்.ஓ., கூட, நோய் தடுப்பு அலுவலரா நியமிக்கிற அளவுக்கு தட்டுப்பாடு இருக்கக்கூடாது. மாநகராட்சி பி.ஆர்.ஓ., வாக விக்னேஷ் வந்தார். அவர் அலுவலகத்துக்கு புது பெயிண்ட் அடிச்சு, புது "டிவி' யெல்லாம் கூட வாங்கினாங்க. ஆனா, மூன்றாவது மண்டல நோய் தடுப்பு அலுவலரா, தற்காலிகமாக அவரை நியமிச்சிட்டாங்க. அவரும், நோய் தடுப்பு பணி ஆய்வுக்கு போயிருக்காரு. அவரை ஸ்பாட்டில் பார்த்த மாநகராட்சி அதிகாரிங்க சிலர், செய்தி சேகரிக்க வந்திருக்கிறதா நினைச்சிருக்காங்க. ஆய்வுக்கு வந்திருக்கிறதா சொன்னதும், ஆடிப்போயிட்டாங்க,'' என்று சித்ரா, சொன்னதும், மித்ரா குலுங்கி குலுங்கி சிரித்தாள்.
ஒருவழியாக சிரித்து முடித்த பின், ""போலீஸ் டிபார்ட்மென்ட் பத்தின தகவல் இருக்கா,'' என்று, சித்ரா கேட்டாள்.
""இருக்காதே பின்னே. போலீஸ் கமிஷனர் ஆபீசில் போய், பொதுமக்கள் புகார் கொடுத்தா, சரிவர கேட்காம, சம்மந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனுக்கு பார்வேட் செய்யறாங்க. அங்க போனா, நடவடிக்கை இல்லாம, கிடப்பில் போடறாங்க. அதே மாதிரி, வழக்கு சம்மந்தமா விவரம் கேட்டாலும் சரி, கமிஷனர், துணை கமிஷனருக்கு, பத்திரிகைகாரங்க போன் போட்டா, எடுக்க மாட்@டங்கிறாங்களாம். புது நெம்பரில் இருந்து கூப்பிட்டா, எடுத்து பேசிட்டு, யாருன்னு கேட்டுட்டு "கட்' பண்றாங்களாம்,'' என்று, மித்ரா புகார் வாசித்தாள்.
""ஓ! பத்திரிகைகாரங்க மேல, போலீசுக்கு என்ன கடுப்பு,'' என்று சித்ரா ஆதங்கப்பட்டாள்.
""அதான் தெரியல. ஒவ்வொரு ஸ்டேஷனிலும், போலீசில் இருந்து, ஏ.சி., வரைக்கும், பத்திரிகை காரங்களுக்கு எந்த விவரமும் கொடுக்கக்கூடாதுன்னு, வாய்மொழி உத்தரவு போட்டிருக்காங்க. பத்திரிகை காரங்களுக்@க இந்த நிலைமைன்னா, சாதாரண மக்களோட அவதியை நினைச்சு பாரு. இதெல்லாம், சில போலீஸ்காரங்களுக்கு, வெளையாட்டா போச்சு,'' என்று மித்ரா கூறினாள்.
""விளையாட்டுன்னு சொன்னதும் தான் நியாபகத்துக்கு வருது. மாவட்ட விளையாட்டு அலுவலகம் ரொம்ப மோசமாயிட்டே வருது. விளையாட்டு போட்டி, உதவித்தொகைன்னு விளையாட்டு அலுவலகத்தில் இருந்து வரும் எந்த அறிக்கையும், அரசு பள்ளிகளுக்கு போய் சேர்றதில்லையாம். இதனால, சமீபத்தில் நடந்த மாவட்ட விளையாட்டு போட்டியில், ஒன்னு, ரெண்டு அரசு பள்ளிங்க மட்டும் தான் கலந்துகிட்டாங்களாம். பல பள்ளிகளுக்கு தெரியவே தெரியாதாம்,'' என்று சித்ரா கூற, "" அப்புறம் எப்படி, விளையாட்டில் அரசு பள்ளிகள் அசத்த முடியும்,'' என்று மித்ரா ஆதங்கப்பட்டாள்.
""அதுமட்டுமில்லாம, அசம்பாவிதம் நடக்கும் வாய்ப்பிருந்தும், போட்டி நடக்கும் இடத்தில, குடிநீர், கழிப்பிடம், ஆம்புலன்ஸ், இப்படி எந்த வசதியும் கிடையாதாம். இந்த விஷயம், கலெக்டர் வரை போயிருக்குன்னு தெரிஞ்சும், அலட்சியமாவே இருக்காங்களாம்,'' என்று, சித்ரா கூறினாள்.
""மித்ரா கொஞ்சம் தண்ணீர் கொண்டுவா. நாக்கு வறண்டு போச்சு,'' என்று சித்ரா சொன்னதும், உள்ளே சென்று தண்ணீர் கொண்டு வந்தவாறு ""தண்ணீருன்னு சொன்னதும், நஞ்சராயன் குளம் மேட்டரு சொல்றேன். கேளுங்க. நஞ்சராயன் குளத்துக்கு, டி.டி.எஸ்., அளவு பாக்க போன அமைச்சர், குளத்து தண்ணியில, 1,064 டி.டி.எஸ்., என்றதும், இப்படி இருந்தா தாராளமா குடிக்கலாமேன்னு சொல்லீட்டு, விரலில் தொட்டு ருசிச்சு பாத்தாரு. இதை பார்த்து, பக்கத்தில் இருந்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிங்க, தர்ம சங்கடப்பட்டாங்க,'' என்று, அமைச்சரின் விசிட் பற்றி, மித்ரா கூறினாள்.
""அட, இதுமாதிரியெல்லாம் வேற நடக்குதா. கலெக் டர் ஆபீசுக்கு மனு கொடுக்க வர்ற பெண்களும் தான், ரொம்ப சங்கடப்படறாங்க,'' என்று, சித்ரா கூறினாள்.
""அங்க என்ன பிரச்னை,'' என்று, மித்ரா கேட்டாள்.
""மனு கொடுக்க வர்ற பெண்கள், இயற்கை உபாதை கழிக்க வழியில்லாம சிரமப்படறாங்க. கலெக்டர் ஆபீசுக்குள், 14 "டாய்லெட் யூனிட்' இருந்தும், அங்க போறதுக்கு அனுமதிக்கறதில்ல. திறந்தவெளி மலம் கழிக்கும் இடம் இல்லாத பகுதியாக அறிவிக்க போறோம்னு சொல்றவங்க, முதலில், இந்த விஷயத்தை கொஞ்சம் கவனிச்சு, "டாய்லெட்' வசதி செஞ்சு தரணும்,'' என்று சித்ரா கூறினாள்.
""காணாம போனவங்க மறுபடியும் வந்து, ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கார் தெரியுமா,'' மித்ரா, புதிய தகவலுக்கு தாவினாள்.
""சிட்டி மம்மியை தானே சொல்றே?'' என்றாள் சித்ரா.
""ரொம்ப கரெக்ட். ஜெ., இறந்தப்ப, ஊரே துக்கமா இருந்தது. ஆனா, இவரை பார்க்க முடியல. ஆனா, ஜெ., 30ம் நாள் மவுன ஊர்வலத்தில, முன்வரிசைக்கு
வந்தது, ஆச்சரியமா இருந்துச்சு. இது, சிலருக்கு சந்தோஷத்தை தந்தாலும், திண்ணை காலியாகிடும்; துண்டை போட்டு வைக்காலாமுன்னு கனவில் இருந்த கவுன்சிலர்கள் சில பேருக்கு, வயிற்றில் புளியை கரைத்து விட்டதாம். மறுபடியும் மேலிடத்தில் ஒட்டிகிட்டு, நல்ல பெயரையும், கூடவே சீட்டையும்
வாங்கிடுவாங்களோன்னு, புலம்பிட்டு இருக்காங்களாம்,'' என்று மித்ரா கூறி முடித்து விட்டு, ""அக்கா, கொஞ்சம், விசாலாட்சி அம்மன் கோவில் வரைக்கும் போயிட்டு வந்துடறேன். மாவிளக்கு போடணும், '' என்று சொல்ல, ""ஓகே, நானும் கிளம்பறேன். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்'' என்று சொன்ன சித்ரா, "விருட்டென்று' வண்டியில் பறந்தாள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X