ஆயுளை அதிகரிக்கும் ஏழாம் சுவை| Dinamalar

ஆயுளை அதிகரிக்கும் ஏழாம் சுவை

Added : ஜன 11, 2017 | கருத்துகள் (3)
ஆயுளை அதிகரிக்கும்  ஏழாம் சுவை

குடும்ப, சமூக உறவுகள் விட்டுப் போகாமல் இருக்க புன்னகை முக்கியம். பொன் நகையை அணிவதை விட புன்னகை அணிந்த பெண்களே அழகாக தெரிவது இயற்கை. அறுசுவை உணவில் கிடைக்காத திருப்தி கூட நகைச்சுவையில் கிடைத்துவிடும். நம் செயல், நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வில் ஒரு சம்பவம் நமக்கு சிரிப்பை தரக்கூடியதாக இருக்கலாம். சோகமான இடத்தில் கூட ஒரு மெல்லிய நகைச்சுவை ஓடும் போது சோகம் கொஞ்சம் மறைந்துவிடும்.கணவன் மனைவிக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், சில நேரங்களில் அவர்களின் நகைச்சுவை உணர்வு கோபத்தை குறைத்துவிடும். இப்படித்தான் ஒருவர் மிகவும் கோபமாக தன் மனைவியைப் பார்த்து 'ஒன்ன கல்யாணம் பண்ணுனதுக்கு, பேசாம ஒரு கழுதையை கல்யாணம் பண்ணியிருக்கலாம்' என்று கத்தினார். மனைவி மிகவும் அமைதியாக 'சொந்தத்துல கல்யாணம் பண்ணக்கூடாதுங்க' என்றார்.
மனம் அமைதியாக...: நாம் சோகமாக இருந்தாலும் கூட நம்மைச் சுற்றி ஏதேனும் நகைச்சுவை சம்பவங்கள் நடந்தால் நமது சோகம் குறையும். சோக நிலையிலிருந்து மகிழ்ச்சியான நிலைக்கு நமது மனது மாறும் போது எல்லாம், 'என்டார்பின்' என்னும் வேதிப்பொருள் நமது உடலில் சுரக்க தொடங்குகிறது. ஆல்கஹால், மார்பின், ஹெராயின் போன்ற போதைப் பொருட்களால் ஏற்படும் வலி நிவாரணத்தை விட அதிகமான புத்துணர்ச்சி ஏற்பட்டு மனம் அமைதியடைகிறது.இப்படித்தான் ஒருவர் மிகவும் கவலையாக இருப்பதைப் பார்த்து எதிர் வீட்டுக்காரர் 'ஏன் கவலையாக இருக்கீங்க' என்றார். 'மனைவி, இனி ஒரு வாரம் வீட்டுக்கு வரமாட்டேன்னு சொல்லிட்டு கோவிச்சுகிட்டு ஊருக்கு போயிட்டா' என்றார். சமாதானப்படுத்த எதிர்வீட்டுக்காரர் நினைக்க 'அடப்போய்யா நீ வேற! இன்னியோட எழுநாள் முடியப்போகுது, அதை நினைச்சு கவலையா இருக்கேன்' என்றார். இப்படி மனைவிக்குத் தெரியாமல் சிலர் சந்தோஷப்பட்டுக் கொள்வதுண்டு.
குழந்தையின் நகைச்சுவை : வீட்டில் கணவனும், மனைவியும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வதால் குழந்தைகளுக்கு படிப்பின் மேல் கவனம் செலுத்த முடியாமல் போய்விடும். குழந்தைகளின் அந்த கோபமும், வெறுப்பும் கூட சில நேரங்களில் நகைச்சுவையாக வெளிப்படும். ஒரு வாத்தியார் குழந்தைகளுக்கு பாடம் எடுத்தார். அவர் எடுத்த பாடம் வீட்டு விலங்குகள் பற்றியது. நாம் வீட்டில் வளர்க்கும் ஒவ்வொரு விலங்கும் நமக்கு என்ன தருகிறது என்பதை சொல்லிக் கொடுத்த வாத்தியார், பின் கேள்வி கேட்க ஆரம்பித்தார். நாய் என்ன தரும் ? என்றார். குழந்தைகள் சத்தமாக 'வீட்டிற்கு பாதுகாப்பு' என்றனர். மாடு என்ன தரும்? குழந்தைகள் சத்தமாக 'பால்' என்றனர். குரங்கு என்ன தரும்? அனைத்து குழந்தைகளும் மவுனமாக இருக்க, ஒரு குழந்தை மட்டும் மெல்லிய குரலில் 'ஹோம் ஒர்க்' என்றது. மகிழ்ச்சி என்பது கணவன், மனைவியிடம் இருந்தால் தான் குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். மகிழ்ச்சியாக இருக்கும் பெண்களுக்குத்தான் 'புரோலாக்டின்' என்னும் ஹார்மோன் அதிகமாக சுரக்கிறது. இது தம்பத்ய மகிழ்ச்சியை அதிகப்படுத்தி, குழந்தை பேறை ஊக்குவிக்கிறது. மார்பு, கர்ப்பப்பை புற்றுநோய் வராமல் தடுக்கிறது. நகைச்சுவை உணர்வு உள்ள வீட்டில் சண்டை, சச்சரவு குறைவாக இருக்கும். தன் நகைச்சுவை உணர்ச்சியை மனைவியிடம் காட்டுவதாக ஏடாகூடம் செய்து சிலர் மாட்டிக் கொள்வர். இப்படித்தான் நண்பர் ஒருவர் பொதுக்கூட்டத்திற்கு போனார். அங்கு பேச்சாளர் கூட்டத்தை பார்த்து பேசும் போது 'இளமைக் காலத்தில் இன்னொருவர் மனைவியுடன் நான் இருந்த நாட்கள் மிகவும் அதிகம் சந்தோஷமானவை' என்றார். கூட்டம் மொத்தமும் அதிர்ச்சியாக, சில நிமிடம் அமைதியானது. அவர் சிரித்துக் கொண்டே 'அந்த இன்னொருவரின் மனைவி என் அம்மா' என்று சொல்லக் கூட்டம் கைதட்டி சிரித்தது.
டாக்டரிடம் நகைச்சுவை : மாமியாரை நாய் கடித்துவிட்டதால் டாக்டரிடம் ஒருவர் கூட்டிப் போனார். டாக்டர் அவரைப் பார்த்து 'நாய் கடிச்ச உடனே என்ன செஞ்சீங்க' என்றார். அவர் உடனே 'நாய்க்கு பிஸ்கட் வாங்கிக் கொடுத்தேன்' என்றார். இது போல் தன் சந்தோஷத்தை வேறு வழியில் காட்டுபவர்களும் இருக்கிறார்கள். இப்படித்தான் ஒருவர் தன் உடைந்து போன பல்லை சரி செய்ய டாக்டரிடம் போனார். அவரும் எப்படி உடைந்தது எனக் கேட்க 'என் மனைவி மிகவும் கடினமான மைசூர்பாகு செய்திருந்தாள், அதனால் தான்' என்றார். டாக்டரோ ' வேண்டாம் என்று சொல்ல வேண்டியது தானே' என்றார். ' அப்படி சொன்னதினால் தான் இப்படி பல்லு உடைஞ்சது' என்றார். புதிதாக கல்யாணமான ஒருவர் ஏதோ ஒரு சண்டையின் போது தன் மனைவியை மிகவும் கோபத்துடன் தேவாங்கு என திட்டிவிட்டார். மாலையில் தன் கணவர் அலுவலகம் விட்டு வந்தவுடன் அவரை பிடிபிடி என பிடித்துக் கொண்டார். 'எப்படி என்னை தேவாங்குனு திட்டலாம்' என்று சண்டை போட ஆரம்பித்தாள். காலையில் நாம் திட்டும் போது அமைதியா இருந்துட்டு, இப்ப ஏன் இப்படி சண்டை போடுறான்னு கணவர் காரணம் கேட்டார். மனைவி கோபமாக 'அந்த தேவாங்கு எப்படி இருக்கும்ன்னு இப்பத்தான் கூகுளில் தேடிப்பார்த்தேன்,' என்றார்.ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் போன் சார்ஜ் செய்யும் இடத்தில் பல ஆண்கள் நின்றிருந்தனர். அப்போது சார்ஜிலிருந்த ஒரு போன் அடித்தது. ஒருவர் போனை ஆன் செய்ய, போன் ஸ்பீக்கர் சத்தமாக கேட்டது. எதிர் முனையில் ஒரு பெண் பேசிக் கொண்டிருந்தாள். 'என்னங்க இரண்டாவது மாடியில் ஒரு பட்டுச் சேலை இருக்கு வாங்கிக்கவா'. 'ஓகே டியர்' என்றார். பின், அதே குரல் 'என்னங்க இங்க ஒரு நெக்லஸ் நல்லாயிருக்கு' என்றது. இவரும் 'ஒகே டியர்' என்றார். பின் அதே குரல் 'என்னங்க ரொம்ப நாளா நான் கேட்டுட்டு இருந்தேன்ல அந்த 'ஐ போன்' இங்க இருக்கு, எழுபது ஆயிரம் தானாம் வாங்கிக்கவா' என்றது. இவரும் 'ஓகே டியர்' என்றார். சுற்றியுள்ள அனைவரும் அவரைப் பிரமிப்பாக பார்க்க, அவரோ 'யாரு போனுங்க இது! சார்ஜ் போட்டுட்டு எங்க போயிட்டாரு' என்றார்.
மனைவியும், கணவனும் : ஒரு மனைவி தன் கணவரிடம் கோபமாக 'ஏங்க நீங்க மத்தியானம் சாப்பிட வரலை', என கேட்க. அவரும் எதார்த்தமாக 'வரலாம்னு தான் கிளம்பினேன், ஆனா அதுக்குள்ள வேற ஒரு கஷ்டம் வந்திருச்சு' என சொல்ல மனைவி முறைக்க ஆரம்பித்தாள். கோபத்திற்கு இடையே தோன்றும் சின்ன, சின்ன சிரிப்பு கூட நரம்பு மண்டலத்தில் என்டார்பின்களை துாண்டி மன அழுத்தத்தை குறைத்து கோபத்தை தணிக்கிறது.ஒரு கணவர் வீட்டிற்கு போன் செய்து தன் மனைவியிடம் 'இன்னைக்கு ராத்திரி என்ன டிபன் டியர்' என்றார். ஏற்கனவே கணவர் மேல் ஏதோ கோபத்தில் இருந்த மனைவி போனில் தன் கணவரிடம் மிகவும் வெறுப்பாக 'ஆங்...விஷம்' என்றாள். சூழ்நிலையை புரிந்து கொண்ட கணவர் சாமர்த்தியமாக 'சாரி டியர் நீ வெயிட் பண்ணாத; நான் வர லேட்டாகும். நீ சாப்பிட்டு துாங்கு' என்றார். மனைவி சிரித்துவிட்டாள். நாம் மகிழ்ச்சியாக இருக்கும் போதெல்லாம் டொபமின், ஆம்பிட்டமின் என்ற வேதிப்பொருட்கள் நமது உடலில் சுரக்கிறது. இவை புத்துணர்ச்சியையும், மனக்கிளர்ச்சியையும் துாண்டுகிறது. எனது நண்பரின் தந்தை மிகவும் பொறுமையாக, மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது மனைவி எப்படி கோபமாக பேசினாலும் இவர் கொஞ்சம் கூட கோபப்படாமல் 'பேபி கூல் டவுன், கோபப்படாதே' என பொறுமையாக பதில் சொல்வார். ஒருநாள் ஆச்சரியம் தாங்காமல் நான் அவரைப் பார்த்து 'சார் நீங்க ரொம்ப பொறுமைசாலி; மாமி என்ன சொன்னாலும் கொஞ்சம் கூட கோபப்படாமல் செல்லமா பேபின்னு கொஞ்சி சமாளிக்கிறீங்க, இது எப்படின்னு எனக்கும் சொல்லிக் கொடுங்களேன்' என்றேன். அவரும் குரலை தாழ்த்தி 'ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை, நான் பேபின்னு சொல்றது பேயே, பிசாசே என்பதன் சுருக்கம் தான். 'நீயும் இப்படி சமாளிச்சு வாழ்க்கையை ஓட்டு' என்றார்.வீட்டில் கணவன், மனைவி கோபப்படும் போதெல்லாம் பெரிய, பெரிய வார்த்தைகளை பேசிப் பிரச்னையை பெரிதாக்கிவிடாமல், மகிழ்ச்சியாக வாழ, மெல்லிய நகைச்சுவை உணர்வோடு வாழ வேண்டியது அவசியம். அப்போதுதான் மகிழ்ச்சியாக நீண்ட ஆயுளோடு வாழ முடியும்.
- டாக்டர்ஜெ.ஜெயவெங்டேஷ்,சித்த மருத்துவர்,மதுரை

98421 67567

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X