தைத் திருநாளும்! தமிழர் வீரமும்!| Dinamalar

தைத் திருநாளும்! தமிழர் வீரமும்!

Added : ஜன 13, 2017
தைத் திருநாளும்! தமிழர் வீரமும்!

உடற்பயிற்சி, பொழுதுபோக்கு, சடங்குகள் போன்றவற்றைத் தாண்டி தனிமனிதனிடம் குழு உணர்வை ஏற்படுத்தி, அதன் மூலம் சமூகமாக மனிதன் கூடிவாழ்தல் அவசியம் என்பதை வலியுறுத்தி, அவனைச் சமூகத்தின் ஓர் அங்கமாக மாற்றும் கடமையைச் செய்கிறது விளையாட்டுக்கள். இவ்விளையாட்டுக்களை மரபார்ந்த வழியில் தனக்கேயுரிய பாணியில் பன்னெடுங்காலமாக நடத்திய தமிழர்கள், உலகில் வேறு எந்த இனத்தவருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதைப் பறைசாற்றி நிற்கின்றனர். மனித சமூகம் பல்வேறு காரணிகளால் பல பிரிவுகளாகப் பிரிந்து வாழ்ந்தாலும் அப்பிரிவுகளால் ஏற்படுத்தப்படும் வேற்றுமைளைப் புறந்தள்ளவும், உறவுகளைச் சீராகப் பேணவும், கலாசார, பண்பாட்டை போற்றிப் பாதுகாக்கவும் கொண்டாட்டங்கள் நடைபெறுதல் இயற்கையாகும். இக்கொண்டாட்டங்கள், திருவிழாக்கள், விளையாட்டுக்கள், பாரம்பரியக் கலைகள் எனப் பல்வேறு வடிவங்களில் வெளிப்படும். அந்த வகையில் தமிழர்களின் தலையாயத் திருவிழாவாகக் கருதப்படும் தைத்திருநாள் விழா உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது.
பொங்கும் பொங்கல் : சங்ககாலத்தொட்டு தைத் திருநாள் விழாக்கள் பெருமிதத்துடன் கொண்டாடப்பட்டு வருவதை நம் இலக்கியங்கள் எடுத்துக்காட்டுகின்றன. அடுப்பு மூட்டி, சுவை மிகு பால்கொண்டு, புத்தரிசி புதுக்கி, புது மண்பானையில் செங்கரும்புத் தோரணங்களுடன், வைக்கும் பொங்கல் ஆண்டாண்டு காலமாய்த் தமிழர்களின் வீட்டு முற்றத்தில் பொங்கி வழிகிறது. இந்நன்னாளில் தமிழரின் இல்லம் செல்பவர்களுக்கு இன்சுவை ததும்பும் பொங்கல் பரிமாறப்படுகிறது. இவ்வாறு இல்லத்தில் பொங்கல் பொங்கித் ததும்ப, மறுபுறம் களத்தில் தமிழர்களின் வீரம் எழிலுறப் பொங்கும்.
தைத்திருநாள் விழா மட்டும்தான் தமிழர் திருவிழாவா? என்பன போன்ற கேள்விகளை சிலர் எழுப்புகின்றனர். தொன்றுதொட்டு தமிழ்ச் சமுதாயம் தனக்கேயுரிய கம்பீரத்தைப் பறைசாற்றி நிற்பதற்குக் காரணம் அதன் சீரிய கலாசாரம், மாற்றாரை மதிக்கும் பண்பாடு, உயர் வாழ்வியல் நெறிகள், அறம்சார் வாழ்க்கை முறை போன்றவைகளாகும். இதனை சான்றுகளுடனும், ஆரவாரத்துடனும் அடையாளப் படுத்தி நிற்பது தான் தைத்திருநாள் விழா. தமிழர்களின் பண்பாட்டுச் செழுமையின் அடையாளம், இயற்கைக்கு நன்றி நவிலும் நன்நாள், ஈரத்தையும் ஈடில்லா வீரத்தையும் காலம் காலமாய் இணைத்துக் கொண்டாடும் நாள், மண்ணின் பெருமையை உரக்கச் சொல்லும், தமிழர்களின் வாழ் வியலோடு பின்னிப் பிணைந்த விழா தைத்திருநாள் விழா. எனவே தான் தமிழர்கள் உலகில் எங்கெல்லாம் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் தைத்திருநாள் விழா பல்வேறு நிலைகளில் உணர்வுப் பெருமூச்சுடன் கொண்டாடப்படுகின்றது.
தைத்திருநாளும் விளையாட்டுக்களும் : தொடக்கத்தில் தமிழர்களின் விளையாட்டுக்கள் சமயச் சடங்குகளுடன் தொடர்பு கொண்டதாக அறியப்படவில்லை. ஆனால் பிற்காலத்தில் அது சமயங்களுடனும், பொது நிகழ்வுகளுடனும் தொடர்புடையதாக மாறியது. இவற்றில் மற்போர், விற்போர், படகுப்போட்டி, யானையேற்றம், குதிரையேற்றம், ஏறுதழுவுதல், சிலம்பம் போன்ற பல விளையாட்டுக்கள் ஆண்களின் வீரத்தையும், உடல் வலிமையையும் பறைசாற்றும் வகையில் அமைந்திருந்தது. அதிலும் குறிப்பாக ஏறுதழுவுதல் என்பது மரபு, கலாசாரம், பண்பாடு சார்ந்த வீர விளையாட்டாக இன்றும் போற்றப்படுகின்றது.தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் முதன்மையானதாகக் கருதப்படும் ஜ(ச)ல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, எருதுபிடி சண்டை, மாடுபிடி சண்டை, ஏறுதழுவுதல் என்று பாரம்பரியமாகப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டது. திராவிட நாகரிகம் என அறியப்படும் சிந்துவெளி நாகரிக கால முத்திரைகள் மற்றும் நாணயங்களில் இவ்விளையாட்டு இடம் பெற்றிருப்பதன் மூலம், இதன் பழம் பெருமையும் வரலாற்றுச் சிறப்பும் புலப்படுகிறது. சங்க இலக்கியங்கள், தொல்காப்பியம் போன்ற நுால்களும், பிற்கால இலக்கிய, இலக்கணங்களும் இதனைக் “கொல்லேறு தழுவுதல்” எனப் போற்றி வந்தன. அனைத்து நில மக்களும் இதைக் கொண்டாடினாலும், முல்லை நிலத்து ஆயர் இன மக்களே இதனை வெகு சிறப்பாகக் கொண்டாடியதை அறிய முடிகிறது. அம்மக்களின் பொழுதுபோக்கிற்காகவோ அல்லது அவர்கள் சண்டையிட்டு வீழ்வதற்காகவோ இது நடைபெறவில்லை. மாறாக அவ்வினப் பெண்களுக்கு நல்ல வீரமிக்க கணவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்வாக இது நடைபெற்றுள்ளது.
மஞ்சு விரட்டு : மேகங்கள் சூழ்ந்த கார்காலத்தின் அழகிய மாலைப் பொழுதிலே விழா நடைபெற்றதால் பண்டைத் தமிழினம் இதற்கு “மஞ்சு விரட்டு'' எனப் பெயரிட்டது. முல்லை நில மக்களால் கார்கால மாலைப் பொழுதில் கொண்டாடப்பட்ட இவ்விழா இன்று முன்பனிக் காலமான தையில் நடைபெறுகிறது. இதன் மூலம் இது வெற்று வேடிக்கைக்கும், வீண் ஆரவாரத்திற்கும் நடத்தப்பட்டதல்ல என்பதும் இனப் பாரம்பரியத்தின் சிறப்பையும், வரலாற்றுப் பெருமையையும் நிலைநாட்டு வதற்காகப் பயன்பட்டது என்பதும் உறுதியாகிறது.மன்னராட்சிக் காலத்தில் நிலச்சுவான்தார்கள் தங்கள் செல்வாக்கையும், ஆதிக்கத்தையும் பறைசாற்றும் வகையில் காளைகளை வளர்த்து, பயிற்சி அளித்து “அதை யாராலும் அடக்க முடியாது”என்று பேசி இத்தகைய விளையாட்டுக்களில் அக்காளைகளை பயன் படுத்தினர். காளைகளின் கொம்புகளில் தங்கக்காசுகளைப் பையில் போட்டுக் கட்டி அதை அடக்குவோருக்கு அப்பரிசுத் தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்புடன் இது நிகழ்வுற்றது.
மாறுதல்களுடன் ஜல்லிக்கட்டு : காலந்தோறும் ஏற்பட்ட மாறுதல்களின் அடிப்படையில் இன்றைய ஜல்லிக்கட்டும் சில மாறுதல்களுடன் நிகழ்த்தப்படுகின்றது. ஜல்லிக்கட்டில் பயன்படுத்துவதற்கென்றே காளைகள் வளர்க்கப்பட்டு, பயிற்சியளிக்கப்பட்டு களத்தில் விடப்படுகின்றன. காளைகளின் போக்கினை அறிந்த பயிற்சி பெற்ற கிராமத்து இளைஞர்கள் துணிச்சலாக காளைகளின் திமிலை அல்லது கொம்புகளைப் பிடித்தோ அடக்க முற்படுவர். அவ்வாறு காளைகளைப் பிடித்து அடக்கியவர்களுக்கு வீரத்தின் பெருமையைப் போற்றும் விதமாக பரிசுகள் வழங்கப்படும். உலகின் பல நாடுகளில் காளைகள் தொடர்பான விளையாட்டுக்கள் நடைபெற்றாலும், ஜாதி மத பேதங்கள் கடந்து, தமிழர்களின் பாரம்பரியச் சிறப்பை வெளிப்படுத்தி நிற்கும் தமிழநாட்டு ஜல்லிக்கட்டு தனக்கான அடையாளத்தை உலக அளவில் என்றும் இழந்ததில்லை.
தடைநீக்க வழி இல்லை : வரலாற்றுச் சிறப்பை எடுத்தியம்பும், வீர விளையாட்டைத் தடைசெய்யும் சூறாவளி சுழன்றடித்து தடைகளைக் கடக்கும் தெளிவான வழியின்றிக் கலங்கி நிற்கின்றது. இச்சூறாவளியில் சட்டமும், நீதியும் எந்தளவிற்குப் பங்குபெற்றுள்ளதோ அதைவிடப் பன்மடங்கு முதலாளித்துவம், அரசியல், மேம்போக்கான பார்வை, மிருகவதை ஆகியவை தங்களின் பங்களிப்பைச் செலுத்தத் தவறியதில்லை.தமிழினத்தின் பொதுப் பிரச்னையாக, சமூகப் பிரச்னையாக ஜல்லிக்கட்டுப் பிரச்னையைப் பார்க்க மறுக்கும் சிலர், பாரம்பரியத்தை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் அடக்கிட முயல்வதுடன் இதனை வேறு கோணத்தில் திசைதிருப்ப முயற்சிக்கின்றனர்.பண்டைத் தமிழினம் பகைமை பாராட்டவோ அல்லது சண்டையிட்டு மடிவதற்கோ இதுபோன்ற வீர விளையாட்டுக்களை உருவாக்கிடவில்லை. இனத்தின் பெருமையையும், இனப் பெண்களின் உள்ளத்து உயர்வு மற்றும் உளம் விரும்பிய காதலரின் வீரத்தையும் வெளிப்படுத்தும் வரலாற்று அடையாளங்களாகத்தான் இவற்றை உருவாக்கினர். அனைத்துத்தரப்பினரும் ஒன்றிணைந்து தமிழினத்திற்கு ஒரு பகை வந்தால், அதை அனைவரும் சேர்ந்து எதிர்கொள்வோம் என்பதை உலகிற்கு உரக்கச் சொன்னார்கள் பல்லாயிரம் கோடி முதலீட்டில், பணக்காரர்களின் விளையாட்டுகளுக்கு யாரும் ஜாதி, மத, அரசியல் சாயம் பூசுவதில்லை. ஒரு வேளை யாரேனும் அங்ஙனம் பூச முயன்றால் அவர்களைக் கோடியைக் காட்டி ஒரு கோடியில் தள்ளி விடுகின்றனர்.மாறாக, பழந்தமிழர் அடையாளங்களை அரசியலைப் புகுத்தி அழித்திட நினைக்கும் அறிவுஜீவிகளையும் இத்தமிழ்ச் சமூகம் பெற்றிருக்கிறது என்பதை நினைக்கும் போது வெட்கித் தலைகுனிய வேண்டியுள்ளது.ஆண்டு முழுதும் ஓய்வறியாமல் உழைக்கும் எம்கிராமத்து மக்கள், மண்ணின் மகத்துவத்தை, தொன்மை மரபின் மாண்பினைப் பறைசாற்றும், தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஒரு திருவிழாவைக் கூட ஒருநாள் கொண்டாட முடியவில்லையே? மத்திய, மாநில அரசுகள், ஊடகங்கள், ஆர்வலர்கள் இழந்து போன கலாசாரப் பெருமையை மீட்டெடுக்க ஆக்கப்பூர்வமான தொடர்முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
-முனைவர் இரா.வெங்கடேஷ்உதவிப் பேராசிரியர்அண்ணா பொது வாழ்வியல் மையம்சென்னைப் பல்கலை.

rvsh76@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X