சர்வதேச நீதிமன்றம் சென்று கச்சத்தீவை மீட்போம்!

Added : ஜன 14, 2017 | கருத்துகள் (4)
Share
Advertisement
  சர்வதேச நீதிமன்றம் சென்று கச்சத்தீவை மீட்போம்!

தமிழக மீனவர்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் இலங்கை கடற்படையின் அடாவடித்தனமும், அத்துமீறலும் எல்லையற்றதாகி விட்டது. சுண்டைக்காய் நாட்டின் சண்டியர் தனத்தை, ஒரு அதட்டலிலேயே அடக்கி விடக் கூடிய சக்தி மிக்க மத்திய அரசு, தமிழக மீனவர்கள் படும் இன்னலைப் பற்றி இம்மியளவும் கவலைப்படாமல், ஒப்புக்குச்சப்பாகப் பேச்சு நடத்திக் கொண்டிருக்க காரணம் என்ன?இந்திய நடுவண் அரசில் தலைமை பொறுப்புக்கு வருவோரெல்லாம், வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். அவர்களுக்கும், இலங்கை நாட்டு சிங்களர்களுக்கும் எப்போதுமே பற்றும், பாசமும் உண்டு.
அதை, ரத்த சம்பந்தம் என்று கூட சொல்லலாம். இலங்கை அமைச்சர்கள், குறிப்பாக, சிங்களர்கள் இந்தியா வந்தால், நேராக டில்லிக்கு தான் செல்வர். அங்குள்ள வட மாநில தலைவர்களிடமும், அமைச்சர்களிடமும், 'நாங்களும் உங்கள் வம்சாவளியில் வந்தவர்கள் தான்' என, உறவு கொண்டாடுவர்.இதற்கு என்ன காரணம் என்பதை அறிய, பல நுாறு ஆண்டுகளுக்கு முன் செல்ல வேண்டும்.
பாரத தேசத்திலிருந்த, 56 தேசங்களில் ஒன்று, லாட தேசம். இது, கலிங்க நாட்டுக்கருவில் இருந்தது. இந்த தேசத்தை ஆண்டு வந்த மன்னன் மகள் பெயர், சுபா. இவள், காட்டரசனாக இருந்த, சிங்கன் என்பவனுடன் சேர்ந்து, ஆண் - பெண் என, இரு குழந்தைகளை பெற்றாள்.
மூத்தவன் பெயர், சிங்கபாகு; இளையவள் பெயர் சிங்கவல்லி. பருவ வயதை அடைந்ததும், இருவரும், உடன்பிறந்தவர்கள் என்பதை மறந்து, திருமணம் செய்து
கொண்டனர்.
கலிங்கத்துக்கு அருகே சிங்கபுரம் என்ற பெயரில் ஊரை உருவாக்கி, அப்பகுதி பழங்குடியினருக்கு
தலைவனாக வாழ்ந்தான், சிங்கபாகு. அவன் மனைவி சிங்கவல்லி, ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத் தாள்; அவனுக்கு, விஜயன் என, பெயரிட்டனர்.
விஜயன், வாலிப வயதில் கொலை, கொள்ளை, கற்பழிப்புகளை செய்யும் கொடியவானான். அவன் தோழர்கள், நுாற்றுக்கணக்கானோரும் கொடியவர்களே. இதனால், மகனென்றும் பாராமல், விஜயனையும், அவனது தோழர்களையும், சிறு கப்பலில் ஏற்றி, நடுக்
கடலில் விட்டு விடும் படி செய்தான், சிங்கபாகு.
அக்கப்பல், ஒரு சிறு தீவுக்கு அருகில் கரை ஒதுங்கியது. அத்தீவில் மனித மாமிசம் சாப்பிடுபவர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களை, தந்திரமாக, கொஞ்சம், கொஞ்சமாக விஜயனும், அவன் தோழர்களும் அழித்தனர்; பின், அத்தீவின்
அரசனானான், விஜயன்.விஜயனின் தாய், தந்தையை பெற்றவனின் பெயர் சிங்கன். தாய் சிங்கவல்லி - தகப்பன் சிங்கபாகு. இவன் பிறந்த ஊர், சிங்கபுரம். எனவே, அத்தீவுக்கு சிங்களத்தீவு என, பெயர் சூட்டினான், விஜயன். அங்கு பிறந்து, வளர்ந்தவர்கள் தான் சிங்களர்கள். அது தான், இப்போதைய இலங்கை நாடு.
கி.பி., 1480களில் ராமநாதபுரம் கடல் பகுதியை புயலும், கொந்தளிப்பும் புரட்டிப் போட்டன. ராமேஸ்வரம், குத்துக்கால் வலசை, முயல் தீவு, பூமரிச்சான் தீவு, முல்லைத்தீவு, குருசடைத்தீவு, கச்சத்தீவுகள் போன்றவை உருவாகின. இத்தீவுகள், ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் சொத்தாக இருந்தன. கடைசி சேதுபதி, 'ரிபெல்' முத்துராமலிங்கத்துக்கு பின், ஆங்கிலேய அரசின்
கட்டுப்பாட்டுக்கு வந்து, சுதந்திர
இந்தியாவின் சொத்துகளாகின.அந்த ஒரு டஜன் தீவுகளில், ராமநாதர் கோவில் உள்ள ராமேஸ்வரம் தவிர்த்து, கச்சத்தீவும் சிறப்பு வாய்ந்தது. இத்தீவில் நல்ல தண்ணீர்; உமரி எனும் மூலிகை செடிகள்; பவளப் பாறைகள்; விலை மிகுந்த மீன் வகைகள் ஏராளமாக கிடைத்தன.
கச்சத்தீவின் முக்கியத்துவம் கருதி, அத்தீவை எப்படியாவது கைப்பற்ற வேண்டுமென, இலங்கை அரசு போலி ஆவணங்களை தயாரித்து, பல முறை முயன்று தோற்றது. 1955ல் ரகசியமாக தன் கடற்படை வீரர்களுக்கு கச்சத்தீவில் பயிற்சி
அளித்தது. இதை, எப்போதும் இந்தியாவின் எல்லை காவலர்களாக விளங்கும் தமிழக மீனவர்கள், மத்திய அரசுக்கு தெரியப்படுத்தினர்.
பார்லிமென்ட்டில், எம்.பி.,க்கள் கண்டனக்குரல் எழுப்பினர். இலங்கை கடற்படை, கச்சத்தீவை விட்டு வெளியேறியது. 1974ல்,
இந்தியா அணுகுண்டு சோதனையை ரகசியமாக நடத்தியது. இதை பெரிய பிரச்னையாக்கிய பாகிஸ்தான், ஐ.நா., சபையில் இந்தியாவுக்கு
எதிராக கண்டன தீர்மானத்தை கொண்டு வந்தது. இத்தீர்மானத்தை முறியடிக்க, இந்தியாவுடன் இலங்கை ஒத்துழைத்தது. இதனால், அப்போதைய பிரதமர் இந்திரா, இலங்கைக்கு நன்றிக்கடனாக ஏதாவது செய்ய நினைத்தார்.
உலகின் முதல் பெண் பிரதமராக, இலங்கையில் பதவி வகித்த, சிரிமாவோ பண்டார நாயகா, சந்தர்ப்பம் வாய்த்தது என மகிழ்ந்து, கச்சத்தீவை தரும் படி இந்திராவிடம் கேட்டார். முன் பின் யோசிக்காமலும், பார்லிமென்ட்டில் விவாதித்து, ஒப்புதல் பெறாமலும், மக்களின் சொத்தான, கச்சத்தீவை தன் பூர்விக சொத்தை தானமளிப்பது போல, இலங்கைக்கு தாரை வார்த்து விட்டார், இந்திரா.
ஏதோ தானோவென, எட்டு நிபந்தனைகளுடன் இலங்கைக்கு கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. நிபந்தனைகளில், ஐந்தாவது நிபந்தனையில், தமிழக மீனவர்கள் கச்சத்தீவில் வலைகளை உலர்த்தவும், ஓய்வெடுக்கவும் உரிமை வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஒப்பந்தத்துக்கு பின் தான், இலங்கை கடற்படை, நம் மீனவர்களை கச்சத்தீவுக்கு அருகில் வர விடாமல் அடித்து, உதைத்து, வலைகளை அறுத்தெறிந்து, மீன்களை கொள்ளையடித்தும் வருகிறது.
இலங்கை கடற்படையின் அட்டூழியம் எல்லை மீறியதை கண்ட, அப்போதைய, அ.தி.மு.க., பொதுச் செயலர், ஜெயலலிதா, 2008 டிசம்பரில், உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.
'இந்தியா மற்றும் இலங்கை அரசுகளுக்கு இடையே, 1974 மற்றும் 1976ம் ஆண்டுகளில் ஒப்பந்தங்கள் ஏற்பட்டன. இந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில், இலங்கை அரசுக்கு கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. எனவே, இந்த ஒப்பந்தங்கள்
செல்லாது என, அறிவிக்க வேண்டும்' என, மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.இந்த மனுவுக்கு, மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்த வாசகங்கள், பொய் என்று கூட சொல்லலாம்.
ஜமீன் ஒழிப்பு சட்டத்தின் படி, ராமநாதபுரம் சீமைக்கு சொந்தமான தீவுகளை, மக்கள் சொத்தாக்கிய மத்திய அரசு, முக்கியமான, கச்சத்தீவு பகுதியை இலங்கைக்கு சட்ட விரோதமாக துாக்கி, கொடுத்து விட்டு, 'இந்தியாவின் எந்த ஒரு பகுதியும், எந்த நாட்டிற்கும் கொடுக்கவில்லை' என, சுப்ரீம் கோர்ட்டிலேயே
சொல்லியது.மத்திய அரசு இப்படி என்றால், நம் மாநில அரசு செய்த காரியம், 'ஏற விட்டு, ஏணியை பிடுங்கியது' போலிருந்தது.ஜனசங்க கட்சியின் பார்லிமென்ட் தலைவராக இருந்த, வாஜ்பாய், 'கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்தது ஒப்பந்தம் அல்ல; பணிந்து போதல்' என, சாடியதுடன், பா.ஜ., தலைவர், ஜனா.கிருஷ்ண
மூர்த்தியை அழைத்து, 'கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது, அரசியல் சட்டத்துக்கு எதிரானது' என, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரவும் ஆணையிட்டார்.அதன் படி தொடரப்பட்ட வழக்கில், கச்சத்தீவு பற்றிய ஆவணங்களை கேட்டனர், நீதிபதிகள். ஆவணங்களை தருமாறு, ஜனா.கிருஷ்ணமூர்த்தி, தமிழக அரசிடம் கேட்டார். 'எல்லா ஆவணங்களையும் மத்திய அரசிடம் ஒப்படைத்து விட்டோம்; கைவசம் எதுவும் இல்லை' என, மிகவும், 'பொறுப்பான' பதிலை கூறியது, அப்போதைய தமிழக அரசு. வேறு என்ன... வழக்கு தள்ளுபடியாகி விட்டது.
மீனவர் பாதுகாப்பு சங்க தலைவர், பீட்டர் ராயன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொது நல மனுவை தாக்கல் செய்தார். அதில், 'இந்தியாவுக்கு சொந்தமான கச்சத்தீவில், தமிழக மீனவர்கள் வலைகளை காயப் போடவும், ஓய்வெடுக்கவும் உரிமை பெற்று தர வேண்டும்' என, கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த தலைமை நீதிபதி, கவுல் மற்றும் நீதிபதி, ஆர். மகாதேவன், 'கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கும் போது செய்து கொண்ட ஒப்பந்தத்தை, இலங்கை அரசு தான் மீறுகிறது. இலங்கை அரசுக்கு
உத்தரவிடும் படி இம்மனுவில் மறைமுகமான கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.
'ஆனால், இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்தி, அதன் படி செயல்பட வேண்டும் என, இலங்கைக்கு இந்த ஐகோர்ட் உத்தரவிட முடியாது. எனவே, இந்த மனுவை முடித்து வைக்கிறோம். இந்த
விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை நாட வேண்டும்' என, தீர்ப்பளித்தனர்.அந்த இரு நீதிபதிகளும், மத்திய அரசுக்காவது உத்தரவிட்டிருக்கலாமே... அவ்வாறு இல்லாமல், வழக்கை முடித்து விட்டனர்.
உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி, கச்சத்தீவு பிரச்னையை உலக நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றால், நம் மீனவர்களின் அவலம் தீர்ந்திருக்கும்.
'கச்சத்தீவு யாரிடம் இருக்க வேண்டும் என்பதோ, கடல் வளம் குன்றி விடும் என்ற அச்சமோ, இலங்கை அரசுக்கு பிரச்னை அல்ல. தமிழர்கள் எங்கிருந்தாலும்
வேரறுக்க வேண்டுமென்ற இலங்கை அரசின் கொள்கைக்கான முகமூடியே, கச்சத்தீவு. இலங்கையின் இன ஒழிப்பு கொள்கை நீங்கும் வரை, பாக் நீரிணையும், மன்னார் வளைகுடாவும், தமிழரின் நீர் இடுகாடாகவே தொடரும்' என்கிறார், கொழும்பு கடல் தொழில் முன்னாள் ஆராய்ச்சி நிலைய ஆய்வு அலுவலரான, மறவன் புலவு க.சச்சிதானந்தன்.
நம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரிடம் சிக்கிச் சின்னாபின்னமாவதை தடுக்க, கச்சத்தீவை மீண்டும் நம் சொத்தாக்க வேண்டும். சட்டப்படியும், உரிமைப்படியும், இந்தியராகிய நாம் அதைப் பெற,
சர்வதேச நீதிமன்றம் செல்வதை தவிர, வேறு வழி இல்லை. கச்சத்தீவை மீட்டெடுப்போம்; நம் மீனவர்களின் கண்ணீரை துடைப்போம்!
kalyansundar39@gmail.com

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா
29-ஜன-201704:47:37 IST Report Abuse
Palanisamy T 1. சர்வ தேச நீதி மன்றம் செல்வதென்றால் இந்தியாவும் இலங்கையும் ஒப்புக் கொண்டால்தான் முடியும் இது சாத்தியமா? 2. கச்சத் தீவு விவகாரம் இருக் கூட்டுக் களவாணிகள் திரை மறைவில் தமிழர்களுக்குத் தெரியாமல் செய்த மோசடி வியாபாரம் வெளிப் படையாக செய்யவேண்டுமென்றால் அன்று காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு நாடாளுமன்றம் செல்ல வேண்டியிருக்கும் நாடாளுமன்றமும் ஏற்றுக் கொள்ளாது தமிழக மக்களும் நிச்சயம் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள் சர்வதேச நீதிமன்றம் செல்ல இந்த இரு நாடுகளும் ஒப்புக் கொண்டால் பல உண்மைகள் வெளிவந்து உலகமே சந்தி சிரிக்குமே. இதில் வேறு உலகத்தில் இந்தியா பெரிய மக்களாட்சி நாடாம்
Rate this:
Cancel
Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா
28-ஜன-201722:15:38 IST Report Abuse
Palanisamy T 1. கச்சத் தீவு விவகாரத்தைப் பற்றிய மிகத் தெளிவானக் கட்டுரை. அனைத்துத் தமிழர்களும் குறிப்பாக தமிழக மாணவக் கண்மணிகள் திறந்த மனத்தோடு படித்துத் தெளியவேண்டியக் கட்டுரை தமிழகத்திற்கு சொந்தமான ஒருத் தீவை - தமிழகத்திற்கு சொந்தமென்றால் இந்தியாவின் தீவுதானே தன்னிச்சையாக நாடாளுமன்ற ஒப்புதல் பெறாமல் எப்படி மத்திய அரசு இலங்கையிடம் ஒப்படைக்க முடியும் நட்பு அடிப்படையில் கொடுத்தார்களாம். எந்த நட்பு அடிப்படையில்? தீவைக் கொடுக்கு முன் நாளை தமிழக மீனவர்களுக்கு ஏற்படப் போகும் பின் விளைவுகளை கொஞ்சமாவது மத்திய ஆட்சியாளர்கள் நன்கு சிந்தித்துப் பார்த்தார்களா? இந்தியாவின் செயல்களில் ஏதோவொரு உள்நோக்கம் உள்ளதாகத் தெரிகின்றது. இதன் பின் விளைவுகளைத்தான் இன்று தமிழக மீனவர்களும் இலங்கையில் ஈழத் தமிழர்களும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். தன் சொந்த நாட்டு மக்களான தமிழர்களை விட பேரினவாத சிங்கள மக்களின் நலனே முக்கியமென்று மத்திய ஆட்சியாளர்கள் நினைத்துக் கொண்டு செயல்படுவது போல் தெரிகின்றது.
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
26-ஜன-201700:42:48 IST Report Abuse
மதுரை விருமாண்டி இந்தியாவையே வெளிநாட்டுக்கு எழுதிக் கொடுக்க துடிக்கும் ஆட்சியாளர்களிடம், அரசாங்கத்திடம் சென்று, கச்சத்தீவை மீட்கச் சொல்லி கேட்பது எத்தகைய செயலாக அமையும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X