கள்ளக்காதலன் சுட்டுக்கொலை - பெண் தற்கொலை : கணவர், மாமனார் போலீசில் சரண்| Dinamalar

கள்ளக்காதலன் சுட்டுக்கொலை - பெண் தற்கொலை : கணவர், மாமனார் போலீசில் சரண்

Added : ஜன 16, 2017 | கருத்துகள் (15)
கள்ளக்காதலன் சுட்டுக்கொலை - பெண் தற்கொலை : கணவர், மாமனார் போலீசில் சரண்

பெங்களூரு: மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வழக்கறிஞரை சுட்டு கொன்ற ரியல் எஸ்டேட் அதிபர், தன் தந்தையுடன் போலீசில் சரணடைந்தார். கள்ளக்காதலனை இழந்த துக்கத்தில் அந்த பெண்ணும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரு தெற்கு பகுதி, கக்கலிபுராவை சேர்ந்தவர் ராஜேஷ் கவுடா, 33; ரியல் எஸ்டேட் தொழிலதிபர். இவரது மனைவி ஸ்ருதி கவுடா, 32, கொல்லரஹள்ளி கிராம பஞ்சாயத்து அபிவிருத்தி அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு, 6, 12 வயதில் இரு மகள்கள் உள்ளனர்.பாகல்குண்டே, எம்.இ.ஐ., லே - அவுட்டில் வசித்து வந்த அமித், 35, எட்டு மாதங்களுக்கு முன், லண்டனிலிருந்து பெங்களூரு திரும்பினார். அமித்துக்கு திருமணமாகி, மூன்று வயதில் மகன் உள்ளான். ராஜேஷ் கவுடாவின் தந்தையும், ரியல் எஸ்டேட் அதிபருமான கோபால கிருஷ்ணாவுக்கு, 78, வழக்கறிஞராக அமித், பணியாற்றி வந்தார். இந்த வகையில், ஸ்ருதிக்கும், அமித்துக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது, நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியது.இதையறிந்த ராஜேஷ், ஸ்ருதியை எச்சரித்துள்ளார்; அவர் கேட்கவில்லை. இருவரையும் கையும், களவுமாக பிடித்தார். இது குறித்து ராம்நகரில் வசிக்கும் ஸ்ருதியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். அமித்தை சந்திப்பதில்லை என்று ஸ்ருதி உறுதியளித்தார். ஆனாலும் அது காற்றில் பறந்தது.இதையடுத்து ராஜேஷ், ஸ்ருதியின் காரில் ஜி.பி.எஸ்., கருவியை பொருத்தி, கண்காணிக்க துவங்கினார். பல முறை ஸ்ருதியின் கார், பெங்களூரை தாண்டி சென்றதை ராஜேஷ் அறிந்தார் கடந்த, 13ம் தேதி மதியம், வீட்டிலிருந்து ஸ்ருதி கிளம்பிய போது, சந்தேகமடைந்த ராஜேஷ், தந்தை கோபால கிருஷ்ணாவுடன், ஸ்ருதியின் காரை, மற்றொரு காரில் பின் தொடர்ந்தார். வழியில் மதனநாயக்கனஹள்ளி ஜங்ஷனில் அமித்தை ஏற்றிக்கொண்டு, ஹெசர்கட்டா பிரதான சாலை, ஆச்சார்யா கல்லுாரி அருகில் ஸ்ருதி, அமித் சென்றனர். அங்கு காரினுள் அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.பின் தொடர்ந்து வந்த ராஜேஷ், ஸ்ருதியின் கார் அருகே சென்று, கதவை திறக்கும்படி கோபத்துடன் கூறினார். இருவரும் இறங்க மறுத்தனர். ஆத்திரமடைந்த அவர்களில் ஒருவர், அமித்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவரை காப்பாற்ற, அருகிலிருந்த மருத்துவமனைக்கு ஸ்ருதி காரில் சென்றார். மருத்துவமனையில் அமித் இறந்து விட்டார். இதற்கிடையில், ராஜேஷும், கோபால கிருஷ்ணாவும், சோழதேவனஹள்ளி காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அதிர்ச்சியடைந்த ஸ்ருதி, மருத்துவமனையிலிருந்து வெளியேறி, அருகிலுள்ள, 'ராஜ்விஸ்டா' ஓட்டலில் அறை எடுத்து, தன் சகோதரர் கீர்த்தி கவுடாவுக்கு போன் செய்து, நடந்த விஷயங்களை கூறினார்.தான் வாழ விரும்பவில்லை என்றவாறு, போனை துண்டித்தார். உடனடியாக ஓட்டலுக்கு வந்த கீர்த்தி கவுடா, மாற்று சாவி மூலம், கதவை திறந்து பார்த்தபோது, ஸ்ருதி, மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்திருப்பது தெரிந்தது.கொலை, தற்கொலை குறித்து, சோழதேவனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
திட்டமிட்ட படுகொலை : அமித்தை சுட்டது யார் என்ற விசாரணையில், துப்பாக்கி உரிமம் பெற்றிருந்த கோபால கிருஷ்ணா, தான் சுட்டதாக கூறினார். தனக்கு வயதாகி விட்டது; குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இருப்பதால், இந்த குற்றத்தை தான் ஏற்றுக்கொள்வதாக கூறினார்.துப்பாக்கி உரிமம் ராஜேஷ் பெயரில் இருப்பதும், சுடப்பட்ட துப்பாக்கியில் அவரது கை ரேகை பதிவாகி இருப்பதும் தெரிய வந்துள்ளது. தந்தை, மகனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நான்கு நாள் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கின்றனர். விசாரணையில், பல தகவல்கள் வெளியாகியுள்ளன. தன் திருமண வாழ்க்கையை அமித் பாழாக்கி விட்டார். இதனால், அவரை கொலை செய்ததாக கூறிய ராஜேஷ், இதற்காக திட்டம் போட்டு செயல்பட்டுள்ளார். மனைவியின் காரில் ஜி.பி.எஸ்., பொருத்தியது, வேவு பார்த்தது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X