எண்ணங்கள் வாழ்க்கையின் வண்ணங்கள்

Added : ஜன 19, 2017
Advertisement
எண்ணங்கள் வாழ்க்கையின் வண்ணங்கள்

மனித வாழ்க்கை ஒருஅற்புதமான வரம். இந்த பிரபஞ்சத்தில் எண்ணில் அடங்கா மனிதர்கள் காலம் போற்றத்தக்க வகையில் தங்களது உன்னத, உயர்வான, வெற்றிகரமான வாழ்க்கையின் மூலம் பல்வேறு தளங்களில் தடம் பதித்துஉள்ளார்கள் என்பது வரலாற்றுச்சான்று.இன்னும் எண்ணற்றவர்கள் இதே போன்று தடம் பதிக்க ஆயத்தமாக உள்ளார்கள். நம்மில் பலர் சற்று தயங்கியவாறு தாழ்ந்த மனப்பான்மையுடன் என்னாலும் இவ்வுலகத்தில் தடம் பதிக்க முடியுமா? என்ற கேள்வியுடன் வாழ்ந்து வருகிறோம் என் பது இயற்கையான உண்மை.வாழ்க்கையை சில நபர்களால் தான் சிறப்பாக வாழ முடிகிறது. மற்றவர்கள் எல்லாம் வாழ்க்கையை நகர்த்திக் கொள்ள பழகிவிட்டோம் என சமூக பிரதிபலிப்பில் தோன்றும் கருத்தாக கூட இதை எடுத்துக் கொள்ளலாம்.இந்த நிலை நிரந்தரமானதா? மாற்றிக் கொள்ள முடிந்ததா? என்று சற்று யோசித்தால், இதில் மறைந்திருக்கும் மாபெரும் உண்மை வெகுவாக எல்லோருக்கும் புலப்படும். அது வேறு ஒன்றும் இல்லை. ஒவ்வொருவரின் வாழ்க்கைத்தரம் என்பது அவர்களின் மனநிலையை பொறுத்தே அமைகிறது என்ற உண்மை தான். ஒவ்வொரு மனிதருக்கும் அவர்களது வாழ்க்கை பல்வேறு அர்த்தங்களை கொடுக்கும்.சிலருக்கு வாழ்க்கை சுவாரசியமாக அமையும். சிலருக்கு வாழ்க்கை விருப்பமற்ற நிலையில் அமையும்; உற்சாகமாக அமையும். இன்னும் சிலருக்கு வாழ்க்கை கேள்விக்குறியாக கூட அமையும்.எந்த ஒரு மனிதனும் பிறக்கும் போதே அந்த வாழ்க்கை நிலைகளில் பிறந்து விடுவதில்லை. இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் அபாரமான சக்திகளை கொண்டும், ஆற்றலைக் கொண்டும் பிறக்கத்தான் செய்கின்றனர். ஆனால் அவர்களது வாழ்க்கை ஓட்டத்தை பலகாரணிகள் பல திசைகளில் இருந்து இழுக்கின்றன. இதுவே அவர்களது வாழ்க்கை முறையில் பிரதிபலித்து சமுதாயத்தில் அவர்களை பல வகையான மனிதர்களாக அடையாளம் காட்டுகிறது.
வண்ணமயமான வாழ்க்கை : வாழ்க்கையை உற்சாகத்துடன் வாழ கற்றுக் கொண்டால், அந்த உற்சாகத்தில் பிறக்கும் ஆனந்த மான மனநிலை, அவர்களின் அபூர்வ சக்தியை முழுமையாக வெளிப்படுத்தி மகிழ்ச்சி பொங்கும் வண்ணங்களுடன் பிரதிபலிக்கிறது. வண்ணமயமான வாழ்க்கை முறையை பெறுவதற்கு அல்லது பிரதிபலிப்பதற்கு ஒவ்வொரு மனிதனும் அவர்களிடம் உள்ள ஆரோக்கிய எண்ணங்களின் தரத்தை பிரதானமாக பயன்படுத்திக் கொள்ள ஆளுமை பெற வேண்டும்.ஏனென்றால், எண்ணங்கள் தான் மனிதனுக்கு செயல்திறன்களை அளிக்கும் சக்தியாக அமைகிறது. அடிப்படையாக, வெற்றிகரமான வாழ்க்கையை மேற்கொள்வதற்கு, வெற்றிகரமான செயல்களை ஒவ்வொரு மனிதனும் செய்வது இன்றியமையாததாக இருப்பது மட்டுமல்ல, அத்தியாவசியமாய் தேவைப்படும் வாழ்க்கை முறை. வண்ணமயமான உற்சாகம் பொருந்திய வாழ்க்கையை சமூகத்திற்கு பிரதிபலிக்க, ஒவ்வொரு மனிதனும் தனக்கு தேவையான ஆரோக்கிய எண்ணங்களை வளர்த்துக் கொள்ளும் மனப்பக்குவத்தை அடைய வேண்டும்.இவ்வாறு உயர்ந்த எண்ணங்களை கொண்டு தங்களது வாழ்க்கையை வெற்றிப்பாதையில் செலுத்த முற்படுபவர்களுக்கு என்றுமே வாழ்க்கை வண்ணமயமான வெற்றிகளை அள்ளித்தரும். இதற்கு எதிர்மறையாக வெற்றி பெறுவதற்கான எண்ணத்தை கொண்டிராமல், எந்த ஒரு மனிதனும் சமூகத்தில் மகத்தான வெற்றி பெற்றிட முடியாது.
எண்ணங்களின் வகைகள் : எண்ணங்களின் அடிப்படையில் தான் மனித வாழ்க்கையின் செயல்பாடுகள் உதயமாகிறது என்ற மனோதத்துவ உண்மையை எடுத்துக் கொண்டால் அந்த எண்ணங்கள் எல்லா நேரங்களிலும் ஒரே பக்குவத்தையோ, தன்மையையோ அளித்துவிடுவதில்லை. இதற்கு காரணம் மனதுக்குள் எழும் எண்ணங்கள் பல வகையில் வரையறுக்கப்படுகின்றன.வெற்றி பெற்ற மனிதர்களாக திகழ வேண்டும் என்றால் அதற்கு மிகவும் அவசியமானது ஆரோக்கிய எண்ணங்கள் தான். சாதாரண நிலையில் ஒவ்வொரு மனிதனும் தனக்குள் நம்பிக்கையை அளிக்கும் வகையில், சக்தி படைத்த மனநிலை என்று இதை எடுத்துக் கொள்ளலாம். எந்த ஒரு வாழ்க்கை சூழ்நிலையிலும் நம்மால் வாழ்ந்திட முடியும் என்றும் எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள முடியும் என்றும், எந்த நிலையிலும் தமது செயல் திறன்களை நல்ல நோக்கத்திற்காக அளித்திட முடியும் என்னும் எண்ணங்களை பிரதிபலிக்க கூடியவர்கள் தான் ஆரோக்கிய சிந்தனையை கொண்டவர்கள்.ஆரோக்கியமற்ற எண்ணங்கள் தனது வாழ்க்கை முறைக்கு பயன் அளிக்க முடியாத மனநிலையை கொண்டதாக இவ்வகையான எண்ணம் கருதப்படுகிறது. மனிதனுக்குள் எழும் தீமையான நோக்கங்களை கொண்டதாகவும், தன்னைத்தானே தாழ்த்தி மதிப்பீடு செய்து கொள்ளும் நிலை உடையதாகவும், வாழ்க்கையில் எதிர்வரும் சவால்களை எதிர்கொள்ள முடியாத நிலையாகவும் தோல்வியே, தனக்கு எப்போதும் நேரிடும் என்ற மனபக்குவத்தை வெளிப்படுத்தும் நபர்கள், இவ்வகையான எண்ணங்களை உடையவர்கள் என்று அறியப்படுகிறார்கள்.குறிக்கோளற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுபவர்கள் தனது செயல் திறன்களினால், எந்த ஒரு காரியத்தையுமே செய்ய இயலாத சிலந்தி வலைக்குள் மாட்டிக் கொண்டது போல் உணர்வார்கள். இவ்வகையான எண்ணம் கொண்டவர்கள், தனது வாழ்க்கையில் அதிக நேரம் ஒன்றும் பயன்படாத எண்ணங்களையே சிந்தித்து பொழுதைக்கழிப்பவர்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்.
ஆரோக்கிய எண்ணம் : 'எண்ணம் போலதான் வாழ்க்கை' என்ற சொல்லுக்கு ஏற்ப ஒவ்வொரு மனிதனும் தனக்குள் உதயமாகி வெளிப்படும் எண்ணத்தின் அடிப்படையில் வாழ கற்றுக் கொள்ள வேண்டும். இன்னும் குறிப்பாக இத்தகைய வாழ்க்கை தனக்கு வேண்டும் என்று நிர்ணயித்து, அதற்கு தேவையான வகையில் ஆரோக்கிய செயல்களை உருவாக்கும் எண்ணங்களை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.ஆரோக்கிய எண்ணங்களை பிரதானமாக தனக்குள் கொண்டு, தனது வாழ்க்கை நிலையில், அதை தனக்கு சாதகமாக வெளிப்படுத்தி செயல்படும் மனிதர்களுக்கே, வாழ்க்கை பெரிதும் வெற்றிகரமாகவும் மகிழ்ச்சி உடையதாகவும் அமையும். இவ்வகையான ஆரோக்கிய எண்ணங்களை எல்லோரும் வளர்த்து கொள்ள முடியுமா?எண்ணங்கள், எல்லோரின் மனதிலுமே எழக்கூடிய மிகவும் இயற்கையான வாழ்க்கை கொடை. அதனை உயிர் உள்ள வரை எவராலும் நிறுத்திவிட முடியாது. எண்ணங்களை தமது வாழ்க்கை முறைக்கு தேவையான வகையில், ஆரோக்கியமாக, மனிதர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.
தெளிவான சிந்தனை : ஆரோக்கிய எண்ணங்களை தனது வாழ்க்கையில் பிரதான நிலைக்கு கொண்டு வர, எந்த மனிதனும் தனக்குள் எழும் ஆரோக்கியமற்ற எண்ணங்கள் தோன்றுவதை குறைப்பதற்கு பழகிக் கொள்ள வேண்டும். எளிய பயிற்சி முறைகளில் தெளிவான சிந்தனையை பயன்படுத்தி இதை பழகிக்கொள்ளலாம்.ஆரோக்கிய எண்ணத்தை பிரதானமாக்கி கொள்வதற்கு ஒவ்வொரு மனிதனும் தனக்குள் ஆக்கபூர்வமான கனவுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வகையான கனவுகள் உறக்கத்தில் வருவதல்ல. விழித்திருக்கும் போது பெரிய வெற்றியையோ, பெரிய சாதனையையோ தான் நிகழ்த்த போவதாக தனது மனதிற்குள் நம்பிக்கையை விதைப்பதன் மூலம், தனது மனத்திரையில் அந்த அனுபவத்தை காணும் பக்குவத்தை வளர்க்க வேண்டும்.ஆரோக்கிய எண்ணங்கள் தான், ஒரு மனிதனுக்கு சிறப்பான அடையாளத்தை பெற்றுத் தரும் என்று மனிதர்கள் தங்களது மனதில் நிலைநிறுத்திக் கொள்ளல் வேண்டும்.ஆரோக்கிய எண்ணங்கள் தான் சமுதாயத்தில், அளப்பரிய செயல்களின் மூலம், தடம் பதிக்க உதவும் மாபெரும் சக்தியாக இருக்கிறது.ஆரோக்கிய எண்ணங்களை கொண்டவர்கள் என்றுமே வாழ்க்கையில் தோல்வியை தழுவியதில்லை. என்னால் முடியும்... என்னால் எப்போதும் முடியும் என்று முழக்கமிடுவோர்கள் ஆரோக்கிய எண்ணத்திற்கான விதைகளை விதைத்து வண்ணமயமான வெற்றியை அறுவடை செய்ய முடியும்.
சிந்தனைசெய் மனமே : வாழ்க்கை வாழ்வதற்கே. அதை சிறப்பாக வாழ்வதற்கு நேற்று இல்லை; நாளை இல்லை, இன்று தான் முக்கியம். இன்று முதல் ஒவ்வொரு மனிதனும், ஆரோக்கிய எண்ணத்தின் பலனை அறிந்து கொண்டு, வாழ்க்கையை தனக்கும், குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்கும் விதமாக அமைத்துக் கொள்வதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வெற்றி பெற வேண்டும்.
சிந்தனை செய் மனமே... வாழ்க்கையை வண்ணமயமாக மாற்றும் சக்தி உன்னிடம் அல்லவா பிறக்கின்றது. சிந்தித்து செயல்படுங்கள்.
- நிக்கோலஸ் பிரான்சிஸ்தன்னம்பிக்கை எழுத்தாளர், மதுரை

94433 04776

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X