சிறப்பு பகுதிகள்

பொலிக! பொலிக! - ராமானுஜர் 1000

உள்ளங்கைக் கொணர்ந்த நாயனார்

Updated : ஜன 21, 2017 | Added : ஜன 21, 2017
Share
Advertisement
உள்ளங்கைக் கொணர்ந்த நாயனார் Ramanujar Download

கங்கைக் கரைக்கு யாத்திரை செல்லலாம் வா என்று யாதவப் பிரகாசர் கூப்பிட்டிருந்தார். ஆனால், ராமானுஜருக்கு வாய்த்தது கிணற்றங்கரை யாத்திரை. அது குருவின் அழைப்பு. இது பேரருளாளனின் உத்தரவு. அது வாழ்விலே ஒருமுறை. இது வாழும் கணமெல்லாம். எத்தனை பேருக்குக் கிடைக்கும்? அவன் பேரருளாளன்தான். ஆனால், தனக்கு வாய்த்த அருள் பெரிதினும் பெரிதல்லவா? இன்னொருவர் எண்ணிப் பார்க்க இயலாததல்லவா?

திருக்கச்சி நம்பியை மானசீகமாக வணங்கிவிட்டு, மறுநாள் காலை முதலே ராமானுஜர் தமது கைங்கர்யத்தை ஆரம்பித்து விட்டார். விடிகிற நேரம் குளித்து, திருமண் தரித்து சாலைக் கிணற்றுக்குச் சென்றுவிட வேண்டியது ஒரு குடம் நீர். அதில்தான் திருமஞ்சனம் நடக்கும். தாயாருக்கு உகந்த நீர். இரண்டு முறை தன் கைகளால் அள்ளி ஏந்தி வந்ததை வாங்கிப் பருகிய பெருந்தேவித் தாயார். மூன்றாம் முறை நீர் எடுத்துச் சென்றபோது தான் இருவருமே மறைந்து நின்று மாயம் காட்டினார்கள்.நல்லது. நீரின்றி எதுவுமில்லை. எல்லாம் தொடங்குவது நீரில்தான். நிறைவடைவதும் அதிலேயேதான்.

ராமானுஜரின் மிக நீண்ட யாத்திரை அங்கே தொடங்கியது.மறுபுறம் விந்திய மலைக்காட்டில் யாதவர் தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தார். 'எங்கே ராமானுஜன்? எங்கே போனான்? எப்படித் தவறவிட்டோம்?''பதறாதீர்கள் குருவே. நாம் கங்கைக்கு அழைத்துச் சென்று செய்ய நினைத்ததை இங்கே காட்டு மிருகம் ஏதாவது செய்திருக்கும்.' என்றார்கள் சீடர்கள்.யாதவப் பிரகாசர் கோவிந்தனைத் தனியே அழைத்தார்.

'கோவிந்தா, நீ சொல். எங்கே உன் அண்ணன்? உன்னிடம் சொல்லாமல் அவன் எங்கும் போயிருக்க முடியாது.''என் கவலையும் அதுதான் ஐயா. விடிந்தது முதல், இக்காடு முழுவதும் அவரைத் தேடித் திரிந்துவிட்டு வருகிறேன். எங்குமே அவர் கண்ணில் படவில்லை. எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. என் பெரியம் மாவுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்?'கண்ணீரும் கவலையுமாக கோவிந்தன் பேசியது யாதவருக்கு மேலும் கவலையளித்தது. கோவிந்தன் அதை முன்னதாகத் தீர்மானித்திருந்தான். ஆத்ம சுத்தியுடன் நடந்ததை மறைத்துவிடுவது. தன் மூலம்தான் அண்ணன் தப்பித்தார் என்பது தெரிந்தால் தன்னை பலி கொடுத்து விடுவார்கள். உதட்டில் வேதமும் உள்ளத்தில் குரோதமுமாக என்ன பிழைப்பு இது! 'சரி, நாம் போகலாம்' என்றார் யாதவப் பிரகாசர். வழி முழுதும் கோவிந்தனுக்கு அவர் ஆறுதல் சொல்லிக்கொண்டே வந்தார். உள் மனத்தில் ஓர் உறுத்தல் இருந்தது.
ராமானுஜரைக் கொல்ல நினைத்துத்தான் அவர் அந்த யாத்திரைத் திட்டத்தையே வகுத்தார். ஆனால், பாதி வழியிலேயே தான் நினைத்தது நடந்துவிட்டது. கொன்ற பாவம் தன்னைச் சேராதுதான். ஆனால் மனச்சாட்சி எப்படிக் கொல்லாதிருக்கும்? வெளியிலும் காட்டிக்கொள்ள முடியாது. கோவிந்தன் இருக்கிறபோது மற்ற மாணவர்களிடம் மனம் விட்டுப் பேசவும் முடியாது. வெப்பம் கவிந்த யோசனைகளுக்குத் தன்னைத் தின்னக்கொடுத்தவராக வாரணாசியை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.இரு வாரப் பயணத்துக்குப் பிறகு அவர்கள் காசியை அடைந்தார்கள்.

'என் அன்புக்குரிய மாணவர்களே, நமது ராமானுஜன் இன்று நம்மோடு இல்லை. அவனுக்கும் நல்ல கதி கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக்கொண்டு கங்கையில் நீராடுங்கள்.'அவர்கள் வேத மந்திரங்களை முழங்கிக்கொண்டு கங்கையில் இறங்கினார்கள். கோவிந்தனும் இறங்கினான். அவர்கள் மும்முறை மூழ்கி எழுந்தார்கள். கோவிந்தனும் மூழ்கி எழுந்தான். அவர்கள் கரை ஏறியபோது கோவிந்தன் மட்டும் ஏறவில்லை.அங்கே சாலைக் கிணற்றில் இருந்து மூன்றாவது முறையாக வேடுவப் பெண்ணுக்கு நீர் ஏந்திக்கொண்டு ராமானுஜர் வந்தபோது பேரருளாளனின் லீலாவினோதம் அரங்கேறிய மாதிரி, இங்கே
கங்கையில் மூன்றாவது முறை மூழ்கி எழுந்த கோவிந்தனின் கரங்களில் ஒரு சிவலிங்கம் வந்து சேர்ந்திருந்தது!'ஆஹா! ஆஹா!' என்று பரவசப்பட்டுப் போனார் யாதவப் பிரகாசர். 'இது எல்லோருக்கும் வாய்க்காது கோவிந்தா. லட்சம் பேர் தினமும் கங்கையில் குளித்தெழுகிறார்கள். அவர்களில் எத்தனை பேரின் கரங்களில் சிவபெருமான் வந்து சேர்ந்திருக்கிறார்? ஒருவருக்கும் இல்லை; நான் உள்பட! உன்னை அவன் தேர்ந்தெடுத்திருக்கிறான். உன் பிறப்பு அர்த்தமுள்ளது. இனி நீ 'உள்ளங்கைக் கொணர்ந்த நாயனார்' என்று அழைக்கப்படுவாய்!'அவரது பரவசம் ஒரு வகையில் உண்மையானதுதான். மறுபுறம்
ராமானுஜரின் தம்பியை ஒரு பூரணமான, நிரந்தரமான சிவபக்தனாக்கி விடக் கிடைத்த சந்தர்ப்பத்தைத் தவறவிடக்கூடாது என்ற எண்ணமும் அவருக்கு
இருந்தது. பரபரவென்று கணக்குப் போட்டார். ஊருக்குப் போனதும் அத்தனை பேரும் ராமானுஜனைப் பற்றித்தான் விசாரிக்கப் போகிறார்கள்.

விந்திய மலைக்காட்டில் அவன் மிருகத்தின் பசிக்கு இரையான கதையைச் சொல்ல வேண்டும். ஐயோ என்று ஊரும் உறவும் கதறுகிற நேரம், கோவிந்தனுக்கு சிவபெருமான் அளித்த மாபெரும் அங்கீகாரத்தை எடுத்துச் சொல்லி சமாதானப்படுத்த வேண்டும். சர்வேஸ்வரனேதான் வழி காட்டியிருக்கிறான். இத்தனைக் காலம் வேதம் சொன்னதன் பலன் என்று எண்ணிக் கொண்டார்.கோவிந்தனும் மிகுந்த பரவச நிலையில்தான் இருந்தான். விவரிக்க முடியாத பேரானந்த நிலை. அன்றிரவு அவனுக்குக் கனவில் ஒருகுரல் கேட்டது. 'கோவிந்தா, காளஹஸ்திக்கு வா.' அதே குரல்,காளஹஸ்தியில் இருந்த கோயில் குருக்களுக்கும் உத்தரவாக ஒலித்தது. 'என் பக்தன் என்னை ஏந்தி வருகிறான். அவனை இந்த ஊர் ஏந்திக் கொள்ளட்டும்.'யாதவரின் குழு காஞ்சிக்குத் திரும்பியபோது கோவிந்தன் மட்டும் காளஹஸ்தியிலேயே தங்கிவிட்டான். தன் உள்ளங்கையில் கொண்டுவந்த லிங்கத்தை அங்கே பிரதிஷ்டை செய்து அங்கேயே அமர்ந்துவிட்டான். இனி இதுவே என் இடம். இனி சிவனே என் சுவாசம்.நடந்ததையெல்லாம் ராமானுஜர் எண்ணிப் பார்த்தார்.'நான் எப்படி கோவிந்தனை மறப்பேன்? எப்படி அவனை இனியும் இங்கே வரவழைக்காமல் இருப்பேன்? நான் பரப்ப விரும்பும் வைணவ சித்தாந்தத்தின் வேர்தாங்கிகளுள் ஒருவனாக அவன் இருந்தாக வேண்டும். பேரருளாளனின் பிள்ளை வேறொரு கைங்கர்யம் செய்து கொண்டிருக்கலாகாது.' முதலியாண்டானுக்குப் புரிந்தது. கூரத்தாழ்வானுக்குப் புரிந்தது. நடாதுாராழ்வான் என்று ராமானுஜரால் அழைக்கப்பட்ட வரத தேசிகனுக்குப் புரிந்தது. மூன்று சீடர்களுக்கும் குருவின் மனம் புரிந்த மறுகணம்முதலியாண்டான் சட்டென்று கேட்டான். 'எப்படி வரவழைப்பீர்?'ராமானுஜர் உடனே பதில் சொல்லவில்லை. கண்மூடி அமைதியாக இருந்தார். பெயர் வைத்தவரைத் தவிர உயர் வழியைச் சுட்டிக்காட்ட யாரால் முடியும் என்று அவருக்குத் தோன்றியது.

(நாளை தொடரும்...)

writerpara@gmail.com

பா.ராகவன்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X