அசைவ உணவு விடுதிகளை மூடுமா உச்ச நீதிமன்றம்?| Dinamalar

அசைவ உணவு விடுதிகளை மூடுமா உச்ச நீதிமன்றம்?

Added : ஜன 21, 2017 | கருத்துகள் (16)
அசைவ உணவு விடுதிகளை மூடுமா உச்ச நீதிமன்றம்?

இப்படியொரு தலைப்பில் எழுத நேர்ந்ததற்கு, உண்மையிலேயே மனம் வருத்தமடையத் தான் செய்கிறது. ஆனால், சமீபகாலமாக, நீதித் துறையின் உத்தரவுகள், இப்படியொரு கேள்வியை எழுப்ப செய்துவிட்டன. அதற்கு முக்கிய காரணம், ஜல்லிக்கட்டு. அதற்கு முன், சில உதாரணங்களையும் பார்ப்போம். சென்னையில் வசிக்கும், 'டிராபிக்' ராமசாமி என்பவர், நாட்டில் எங்கெல்லாம் சட்ட மீறல்கள் நடந்தாலும், அவற்றை எதிர்த்து, சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார். உதாரணமாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் தலைமையில், கிரானைட் குவாரிகள் முறைகேடுகளை ஆராய, விசாரணை கமிஷன் அமைந்ததற்கு, 'டிராபிக்' ராமசாமி தான் காரணம். சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக, அரசியல் கட்சியினர் மற்றும் தனியார் நிறுவனங்கள், 'பிளக்ஸ் போர்டு'கள் வைப்பதை எதிர்த்து, இவர் போராடி வருகிறார். எங்கே பெரியளவில் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தாலும், அங்கே அவர் ஆஜராவார்; அதை அகற்றச் சொல்லி போராடுவார்; முடியவில்லை என்றால் வழக்கு தொடுப்பார். சமீபத்தில், மறைந்த ஜெயலலிதா வீட்டருகே, அந்த பகுதிமக்களுக்கு இடையூறாக, போலீஸ் குவித்து வைக்கப்பட்டிருந்ததை எதிர்த்து, அவர் நீதிமன்றத்தை நாடிய போது, வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தள்ளுபடி செய்ததோடு விட்டிருந்தால் பரவாயில்லை. 'அங்கே உனக்கு என்ன வேலை...' என, கேட்கவும் செய்தது. அங்கே வசிப்பவர்கள், நடிகர் ரஜினிகாந்த் உட்பட, அனைவரும் மேட்டுக்குடியினர். அவர்களால், இது போன்ற விஷயங்களுக்காக கோர்ட் படி ஏறிக் கொண்டிருக்க முடியாது. அவர்கள் சார்பில் இவர், தானே முன்வந்து, பொதுநல வழக்கை தொடர்ந்தால், 'அங்கே உனக்கு என்ன வேலை...' என, கோர்ட் கேலியாகக் கேட்டது, அவ்வளவு நாகரிகமாகத் தெரியவில்லை.காவிரியிலிருந்து, தமிழகத்திற்கு குறிப்பிட்ட அளவு தண்ணீரை, கர்நாடகா திறந்துவிட வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 'உனக்கும் பெப்பே; உங்கப்பனுக்கும் பெப்பே... ஒரு சொட்டுத் தண்ணீர் கூட திறந்துவிட முடியாது' என, கர்நாடக அரசு, இன்று வரை உறுதியாக நிற்கிறது. உச்ச நீதிமன்றமும், மத்திய அரசும் வேடிக்கை தான் பார்த்து கொண்டிருக்கின்றனவே தவிர, தீர்ப்பை மதிக்காத, கர்நாடக அரசு மீது ஒரு கண்டனம் கூட தெரிவிக்க இயலாத, கையறு நிலையில், கையைப் பிசைந்து கொண்டிருக்கின்றனவே தவிர, தீர்ப்பை அலட்சியப்படுத்திக் கொண்டிருக்கும், கர்நாடக அரசின் மீது நடவடிக்கை இல்லை.
இதுவா, தேசிய ஒருமைப்பாடு... அரசியல் நிர்ணய சட்டம் இதைத் தான் வலியுறுத்திக் கொண்டிருக்கிறதா? பெரியாறு அணை வலுவுடன் தான் உள்ளது; அதில் தாராளமாக, 142 அடி வரை தண்ணீரை தேக்கலாம் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், 'அணை வலுவாக இல்லை. பக்கத்திலேயே புதிதாக ஒரு அணை கட்டியே தீருவோம்' என, கேரள அரசு முரண்டு பிடித்து கொண்டிருப்பதோடு, புதிய அணை கட்ட பணிகளையும் துவக்கி விட்டது. மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும், கையை கட்டிக் கொண்டும், வாயைப் பொத்திக் கொண்டும் வேடிக்கை தான் பார்த்துக் கொண்டிருக்கின்றன தவிர, கேரள அரசை தட்டிக் கேட்க முன்வரவில்லை.
ஏறு தழுவுதல் என்றும், மாடு பிடி என்றும், பணத்தை மாட்டின் கொம்பில் கட்டுவதால், 'சல்லிக்கட்டு' என்றும் அழைக்கப்படும், ஜல்லிக்கட்டுக்கு மட்டும் விதிக்கப்பட்ட தடையை விலக்கிக் கொள்ள, உச்ச நீதிமன்றம் முன்வருவதாக இல்லை. மத்தியில் ஆளும் அரசும், அது குறித்து அக்கறை எடுத்துக் கொள்வதாக தெரியவில்லை.ஜல்லிக்கட்டு என அழைக்கப்படும், மாடு பிடி விளையாட்டு, இன்று, நேற்று துவங்கியதல்ல; சங்க காலம் தொட்டு நிகழ்ந்து வரும், ஒரு வீர விளையாட்டு. இந்த வீர விளையாட்டில், வீரர்கள் தான் காயம்படுவர்; சமயங்களில் உயிரையும் விடுவர்; மாடுகளுக்கு சிறு சிராய்ப்பு கூட ஏற்படாது. அப்படி இருக்கும் போது, மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன என்பதை, எந்த மகானுபாவன் கண்டு பிடித்தான்... அதை, பிராணிகள் நல வாரியத்தில், 'போட்டுக் கொடுத்து' அந்த வீர விளையாட்டுக்கு தடை ஏற்படுத்தினான் என்பது தெரியவில்லை. ஜீவ காருண்யம் குறித்து, பிராணிகள் நல வாரியமான, அமெரிக்காவின், 'பீட்டா' தமிழர்களுக்கு வகுப்பு எடுக்கத் தேவையில்லை. 'அருட் பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை' என உபதேசித்த, ஜோதி ராமலிங்க அடிகளார், 200 ஆண்டுகளுக்கு முன்பே எடுத்துக் கூறி இருக்கிறார். தைப் பூச நாளன்று, ஜோதி தரிசனம் தரும், கடலுார் மாவட்டம், வடலுாரில், இன்றளவும் அவர் ஏற்றி வைத்த தீபம், அணையாமல் தொடர்ந்து எரிந்து கொண்டிருப்பதோடு, பசி என வருவோருக்கு, உணவை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது. பிராணிகள் நல வாரியத்திற்கு, உண்மையிலேயே பிராணிகள் மீது அக்கறை இருக்குமாயின், நடிகர் கமல்ஹாசன் கூறுவது போல, பிரியாணிக்குத் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கட்டும்; நாடு முழுவதும் உள்ள அசைவ உணவு விடுதிகளை மூட உத்தரவு பிறப்பிக்க, உச்ச நீதிமன்றத்தை நாடட்டும். அது மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள, கோழிக்கறி மற்றும் ஆட்டு இறைச்சிக் கடைகள், மீன் மார்க்கெட்டுகள் அனைத்தையும் மூட நடவடிக்கை எடுக்கட்டும். முதலில், அந்த குழுவின் உறுப்புகளில் ஒன்றாக உள்ள, கே.எப்.சி., எனப்படும், உலக நாடுகளில் வியாபித்துள்ள, அமெரிக்க கறிக்கோழி உணவுக்கடை, அதற்கு ஒத்துக் கொள்கிறதா என, பார்க்கட்டும். காஷ்மீர் முதல், கன்னியாகுமரி வரையுள்ள அத்தனை மக்களும், அசைவ உணவைத் தவிர்த்து, வெறும் சைவ உணவை மட்டுமே உண்ண வேண்டும் என, ஒரு அவசர சட்டம் பிறப்பிக்க ஆவன செய்யட்டும். செய்வரா... செய்ய முடியுமா? மாடு மட்டும் தான் பிராணியா... கோழி, ஆடு, மீன், மான் போன்றவை எல்லாம் பிராணிகள் இல்லையா... ஜல்லிக்கட்டுக்கு நேர்ந்துள்ள தடையை வைத்து, தமிழக அரசியல் கட்சிகள் நடத்தும் அலப்பறை, தனிக் கதை. எந்த கட்சி தடையை உருவாக்க உறுதுணையாக இருந்ததோ. அந்தக் கட்சியே, அந்தத் தடையை எதிர்த்துப் போராட்டம் நடத்துவது தான் உச்ச கட்ட, 'காமெடி!'ஜல்லிக்கட்டு என்பது, பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஒரு வாரம் வரை நடத்தப்படும் நிகழ்ச்சி தானே! ஒரு வாரம் கடத்தி விட்டால், மெதுவாக மறந்து விடுவர்... அதோடு, அடுத்த ஆண்டு தான் ஜல்லிக்கட்டு குறித்து பேச்சு எழும் என, உச்ச நீதிமன்றமும், மத்திய அரசும் கருதி இருக்கலாம். அங்கே தான் அவை, தவறிழைத்து இருக்கின்றன.எப்படி, கர்நாடக மாநிலமும், கேரள அரசும், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை உதாசீனப்படுத்திக் கொண்டிருக்கிறதோ, அந்த முன்னுதாரணம், இந்த ஜல்லிக்கட்டு தடை விஷயத்தில் தடையை மீற, வசதியாகி விட்டது. தமிழகம் முழுவதும், பல இடங்களில் தடையை மீறி, ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உச்ச நீதிமன்றமும், மத்திய அரசும், தங்கள் முகங்களை இப்போது எங்கே கொண்டு வைத்துக் கொள்ளும்... இந்த ஜல்லிக்கட்டு விஷயத்தில், உடனடியாக முடிவெடுத்து, உரிய நேரத்தில் தடையை விலக்கி உத்தரவிடாமல், பிராணிகள் நல வாரியத்தின் பக்கமே ஒருதலை பக்கமாக சாய்ந்து நின்றதன் விளைவு, உச்ச நீதிமன்றமும், மத்திய அரசும், மதிப்பையும், மரியாதையையும், இழந்து நிற்கின்றன என்பது தான் நிதர்சனம்.இந்த நாட்டு மக்களுக்கு, நீதி கிடைக்கும் ஓர் இடம் என்ற நம்பிக்கை, உச்ச நீதிமன்றத்தின் மீது இருந்தது. ஜல்லிக்கட்டு விஷயத்தில், அந்த நம்பிக்கை நொறுங்கியதோடு, உச்ச நீதிமன்றத்தின் நேர்மையும் கேள்விக்குரியதாகி விட்டது. இனி மேலும், உச்ச நீதிமன்றத்தில் நியாயமான நேர்மையான தீர்ப்பு கிடைக்கும் என நம்ப, தமிழக மக்கள் தயாராக இல்லை என்பது தான் உண்மை.
- எஸ்.ராமசுப்ரமணியன் -எழுத்தாளர், சிந்தனையாளர்


இ - மெயில்: essorres@gmail.comWe use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X