காளை(யர்) துள்ளிக்கிட்டு வரும் ஜல்லிக்கட்டு!

Added : ஜன 22, 2017 | கருத்துகள் (1)
Advertisement
காளை(யர்) துள்ளிக்கிட்டு வரும் ஜல்லிக்கட்டு!

தமிழர் கலாசாரத்தின் அடையாளமாக விளங்கி வந்த ஏறு தழுவல் ஆட்டம், பெயர் மாறுதல்கள் கொண்ட பிரிவுகளுடன் இன்றும்நிகழ்த்தப்பட்டு வருகிறது.ஜல்லிக்கட்டு, விளையாட்டு, மஞ்சு விரட்டு, வடம் மஞ்சு விரட்டு போன்றவை இதில் அடங்கும்.
ஏறு தழுவுதல்
இது தமிழக திருமணமுறையுடன் தொடர்புடையது. சங்க கால தமிழகத்தில் பல வகை திருமண முறைகள்இருந்தன. களவு மணம், மரபு வழித்திருமணம், பரிசம் கொடுத்து மணத்தல், சேவை மணம், தினைக் கலப்பு மணம், மடலேறி மண முடித்தல், போர் செய்து மணம் முடித்தல், ஏறு தழுவுதல் ஆகும். இதில், ஒவ்வொன்றுக்கும் விளக்கம் உண்டு. ஆனால் ஏறுதழுவுதல் பற்றி மட்டும் அறியலாம்.
ஆண்களின் திருமண தகுதிக்கு சான்று வழங்குதல்; பெண் கேட்கும் வாலிபனின் வீரத்தை நேரில் கண்டறிய களம் அமைத்தல்; ஒரு பெண் ஒரு வாலிபனை விரும்பினால் துாற்றிப் பேசும் ஊரார், அந்த வாலிபன் அந்த வீட்டார் காளையை தழுவி அடக்கி வென்றால் அதைஅங்கீகரித்தல்; ஏறு தழுவிய வனைப் பெண் விரும்பினால், அதை மறுக்காமல் ஏற்றுகொள்ளுதல் போன்றவையாகும்.
ஜல்லிக்கட்டு
'ஜல்லிக்கட்டு என்று சொல்வது பொருந்தாது' என்கிறார், ஆராய்ச்சி யாளர் எழில்வேந்தன். 'ஜ' என்ற எழுத்து வடமொழிக்கு உரியது. 'ஜல்லி' என்றொரு வார்த்தை வழக்கில் இல்லை. தமிழ் பண்பாட்டை குறிக்கும் விளையாட்டுக்கு வேற்று மொழியில் பெயர் இருப்பது பொருந்தாது.'சல்லி' என்றால் 'சிறிய நாணயம்' என்று பொருள். அளவில் சிறியது. முன்பெல்லாம் சிறிய காசை 'சல்லி' என்போம். சல்லிக்கட்டில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பெண்கள் பரிசாககொடுக்கும் பழக்கம் மாறியது. சிறிய அளவிலான பொற்காசுகள் அடங்கிய முடிப்பு வழங்கப்படுவதால், 'சல்லிக்கட்டு' என்பது தான் சரி. காளைகளை அடக்கி அதன் கழுத்தில் கட்டப்பட்டுள்ள சல்லிக்கட்டை காசு முடிப்பை அவிழ்ப்பதே, விளையாட்டின் வெற்றியாகவும் கருதப்பட்டது.
ஆட்டத்தின் தொடக்கம்
ஆடுகளத்துக்கு அழைத்து வரப்படும் மாடுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்படும் இடம் 'கொட்டம்' எனப்படும். ஆட்டம் தொடங்குவதற்கு முன் இந்த இடத்தில் ஒவ்வொருமாட்டுடனும் அதன் பயிற்சியாளர் மூக்கணாங்கயிற்றை பிடித்தபடி நிற்பார். இதற்கு அடுத்த பகுதி 'உள்வாடி' எனப்படும். ஆட்டம் தொடங்கியதும் கொட்டத்தில் இருக்கும் மாடுகள் ஒவ்வொன்றாக உள்வாடிக்கு இட்டுச்செல்லப்படும். இங்கு ஒரு மாடும், அதனுடன் பயிற்சியாளர் ஒருவரும் நிற்பதற்கு செவ்வக வடிவிலான இடம் இருக்கும். இந்த இடத்தில் இருந்து காளையின் மூக்கணாங்கயிறு அவிழ்க்கப்பட்டு, வாடிவாசல் களத்திற்கு அனுப்பப்படும்.
உள்வாடியின் வாசல்பகுதியை ஒட்டி, வாசலின் இரு புறத்திலும் ஒவ்வொரு பனைமரம் நடப்பட்டிருக்கும். இது பத்தடி உயரம் இருக்கும்; இது 'அணைமரம்' எனப்படும். உள்வாடியின் வெளிப்புறச் சுவருக்கும் அணை மரத்துக்கும் இடையில் சிறிய இடைவெளி இருக்கும். இந்த இடைவெளி ஒருவர் நுழைந்து வெளியேறும் அளவாக இருக்கும்.அணைமரத்தின் ஓரமாக'பிடிகாரர்' மறைந்திருப்பார்;
வரப்போகும் காளையைகவனித்து அதன் மீது தாவி அணைவது ஆட்டத்தின்தொடக்கமாகும். அணைமரங்களின் மேல் பகுதியில் நடுவரும், விருது வழங்குபவரும் அமர வசதி செய்யப்பட்டிருக்கும். அதன் மீது அமர்ந்து உள்வாடியையும்வாடிவாசலையும் கவனிக்க இயலும்.அணைமரத்திற்கு அடுத்த பகுதி 'வாடிவாசல்' எனப்படும். இது காளையும் பிடிகாரரும்விளையாடும் இடமாகும். இதன் துாரம் 50 அடியாகும். இந்ததுாரத்துக்கு தென்னை மஞ்சி பரப்பப்பட்டிருக்கும். வாடிவாசலின் 50 அடி துாரத்திற்கு அப்பால் உள்ள பகுதி காளை வெளியேறும் பாதையாகும். வாடிவாசல் களத்தின் ஒரு புறம் முக்கிய விருந்தினர்களுக்கும், மற்றொரு புறம் பொதுமக்களுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கும்.
பார்வையாளர் மாடம்
பொதுமக்களுக்கான இடத்தில் தற்போதைய விதிமுறைகளின்படி பார்வையாளர் மாடம் அமைக்கப்பட்டிருக்கும். (2007 ம் ஆண்டுக்கு முந்தைய காலங்களில் பார்வையாளர்களுக்கு மாடங்கள் அமைத்து கொடுக்கப்படவில்லை). வாடிவாசல் களத்திற்கும் பார்வையாளர் பகுதிகளுக்கும் இடையில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுஇருக்கும். மாடுகள், பார்வையாளர்பகுதிக்குள் நுழையாதபடி பாதுகாக்கவே இந்த ஏற்பாடு.ஆட்டம் தொடங்கியதும் காளைகள், உள்வாடி எனப்படும் இரண்டாவது இடத்திற்கு இட்டுச் செல்லப்படும். இந்த இடத்தில் தான் விளையாட்டுத் திடலுக்கு காளையை அனுப்புவதற்கு தயார் செய்வார்கள். இந்த இடத்தில் இருந்து அணைமரத்தின் மீது அமர்ந்திருக்கும் நடுவரின் ஆணையை எதிர்பார்த்திருப்பார்கள்.
முதலில் கோயில் மாடு அவிழ்த்து விடப்பட்டு, அடுத்து முக்கிய பிரமுகர்களின் மாடுகளும், பின் பிற மாடுகளும் அவிழ்த்து விடப்படும். உள்வாடிக்குள் நிற்கும் மாடு பற்றிய விபரத்தை பரிசு விபரத்தை யும் நடுவர் ஒலிபெருக்கியில்அறிவிப்பார். உடனே பயிற்சியாளர் மாட்டின் மூக்கணாங்கயிற்றை அவிழ்ப்பார்.
அடுத்தகணம் மாடு மின்னல் வேகத்தில் அணைமரத்தை கடந்து வாடிவாசலுக்கு விரையும். அணைமரத்தின் அருகில் பிடிகாரர் மறைந்திருப்பார். ஒருவினாடி நேரம் தான். வெளியேறும் மாட்டின் மீது பாய்வார். மாட்டின் திமில் தான் பிடிகாரரின் இலக்கு. மாட்டை அடக்குவதற்கு திமிலைப் பற்றுவதே முதல் வேலை. திமிலை அணைந்த பிடிகாரரை மாடு பக்கவாட்டில் குத்த முயற்சி செய்யுமானால், அவர் ஒரு கையால் திமிலைப் பிடித்தவாறே மறுகையால் கொம்பைப் பிடித்து எதிர்திசையில் திரும்புவார்.
வாடிவாசல்
மாடு இப்போது களத்தை விட்டு வெளியேற முயற்சிக்கும். ஒரே ஓட்டமாக வாடிவாசல் எல்லையை கடப்பதே அதன் நோக்கம். தன் மீது அணைந்துஇருக்கும் பிடிகாரரின் எடையை யும் தாங்கி கொண்டு அல்லது அவரை உலுப்பி எறிந்து விட்டு விரையும். இந்த 50 அடி எல்லைக் குள் வீரர் மாட்டை அடக்கி கட்டுப்படுத்த வேண்டும். 50 அடி துாரத்துக்குள் மாட்டை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாவிட்டாலும் கூட, திமிலில் பிடித்த பிடியை விடாமல் மாட்டை அணைந்தபடி வாடிவாசல் எல்லை வரை சென்று விட்டால், அவர் காளையை அடக்கி விட்டதாக அறிவிக்கப்படும். எல்லையை கடக்கும் முன் பிடியை விட்டு விட்டால் மாடு வென்றதாக அறிவிக்கப்படும்.
பிடிகாரர் வெற்றி பெறாவிட்டால், மாட்டின் உரிமையாளருக்கு பரிசு வழங்கப்படும். உரிமையாளர் அல்லது பயிற்சி யாளர் அதை பெறுவர். சில மாடுகள் நின்றபடி துள்ளி துள்ளி பிடிகாரரை உலுப்பித்தள்ள முயற்சி செய்யும். இவை உடனடியாக களத்தை விட்டு வெளியேற முயற்சி செய்வதில்லை. வாடிவாசலுக்குள்ளேயே நின்றுவிளையாடி களத்தை பரபரப்பாக்கும்.மாடு துள்ளி துள்ளி பிடிகாரரை உலுப்பும் வேளையில் பிடிநழுவாமல் மாட்டோடு அணைந்து மூன்று துள்ளல் வரை சமாளித்து விட்டால் அது வீரரின் வெற்றியாக அறிவிக்கப்படும். இரண்டாவது துள்ளலுக்கு பின் பிடி தழுவினால் கூடமாட்டுக்குத்தான் வெற்றி.
பயிற்சி வியூகம்
உழவு மாட்டுக்கும், ஜல்லிக்கட்டு காளைக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. மனிதர்களை கண்டால் மிரளும் வகையில் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கப் படும். இதற்கு ஓட்டப்பயிற்சி, கொம்பினால் குத்தும் பயிற்சி, சைகைப் பயிற்சி அளிக்கப்படும். தினமும் காலை வேளைகளில் நீச்சல் பயிற்சியும் அளிப்பர். இந்த காளைகள் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும்.
பிடி முறைகள்
ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்கும் வீரர்கள் திமில்பிடி, கொம்பு பிடி, கால் பின்னல் பிடி, கழுத்துப்பிடி, வால்பிடி என களத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்ய பயிற்சி பெற்றிருப்பர். இந்த பிடி முறைகள் சங்க இலக்கியத்தில், 'ஏற்றின் கொம்பை பற்றி மார்புடன் தழுவிக் கொண்டனர் சிலர்; கழுத்திலே இறுகப் பற்றிக் கிடந்தனர் சிலர்; திமில் முறியும்படி தழுவினர் சிலர்' என தொடரும்.தற்போது ஜல்லிக்கட்டில் வால் பிடி தடை செய்யப்பட்டுஉள்ளது. ஜல்லிக்கட்டுக்கு தனிச் சட்டம் அரசால் இயற்றப்பட்டு ஆட்டம் முறைப்படுத்தப்பட்டுஉள்ளது. அதனால் பாதுகாப்பான அம்சங்களை கொண்டதாக விளங்குகிறது.
'மனிதரில் நீயும் ஒரு மனிதன்மண்ணன்று; இமைதிறஎழுந்து நன்றாய் எண்ணுவாய்மீசையை முறுக்கி மேலே ஏற்றுதோளை உயர்த்து; சுடர்முகம் துாக்கு'என பாரதிதாசனின் வார்த்தைகளால் ஜல்லிக்கட்டு வீரர்களை ஊக்கப்படுத்துவோம்.
-முனைவர் இளசை சுந்தரம்ரேடியோ நிலையமுன்னாள் இயக்குனர்மதுரை. 98430 62817

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ananda - thirunelveli,இந்தியா
29-ஜன-201713:36:29 IST Report Abuse
ananda ஏறு தழுவுதல் என பெயரிட்ட்தால் அது தமிழ் கலாச்சாரம் என ஏற்றுக்கொள்ள என் மனம் தயங்குகிறது. ஜல்லிக்கட்டு தமிழ் நாட்டில் ஒரு சில ஊர்களில் மட்டுமே நடை பெறுகிறது மற்ற இடங்களில் மாட்டு பொங்கல் நடை பெறுகிறது. கவிஞர்கள் தங்கள் கற்பனையி புகுத்தி ஒரு சில அபூர்வ நிகழ்வுகளை சித்திரம் தீட்டி பெருசுபடுத்தி காவியமாக தந்து விடுவார் .இது தான் கவி நயம் அதற்கு அந்தணர்களும் அரசர்களும் பொது மக்களும் மயங்கி விடுவதில் தவறில்லை அதற்காக அது தான் தமிழர் பண்பாடு கலாச்சாரம் என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது களவு என்ற காதல் சமாச்சாரமும் அப்படித்தான் அதை கலாச்சாரமாக ஏற்படுத்தி ஊடகங்களும் சினிமாக்களும் விளம்பரங்களும் அதை வசீகரமாக சித்தரித்து இன்றய சமுதாயத்தை சீர் குலைத்து சமுதாய தவிப்பிற்கு நிம்மதி இழப்பிற்கு விவாக ரத்திற்கு வித்திடுகிறார்கள் தமிழர் பண்பாடு காதலசனை திருமணம் வரை நேரில் காணாதவாறு தலைவனை ஏற்றுக்கொள்ளும் பண்பு தான் தமிழர் பண்பு. ஒரு வீட்டில் ஒரு சின்ன தவறு காதல் கிசுமுசு ஏற்படடாள் அந்த வீட்டில் பெண் எடுக்க பெண் கொடுக்க ஐயப்படும் கலாச்சாரம் தான் தமிழர் கலாச்சாரம் வீர தீர செயல்கள் ஒரு சில a மன்னர் கால ங்களில் நிகழ்ந்தாலும் அது பொதுவான கலாச்சாரம் என ஏற்றுக்கொள்ள முடியாது அது பொதுவான கலாச்சாரம் அல்ல ஆகவே தான் அது பரவலாக நாடெங்கும் நடை பெறவில்லை. ஆனால் இப்போதைய அரசியல் வாதிகள் சுய நல வாதிகள் ஜல்லிக்கட்டுக்கு தாளம் கொட்டுவது அது கலாச்சசாரம் என பறை சாற்றுவது ஏற்புடையது அன்று அதனால் ஏற்படும் தீமையை சூதாடடம் உயிர் பலி இழப்பீடுகளை கவனத்தில் கொள்ள வேண்டும் மாடுகளும் பலர் ஒரு காளையை விரட்டுவதால் நிச்சயமாக மிரளத்தான் செய்யும் அது மாடடை நேசிப்பது போன்ற தழுவல் ஆகிவிடாது எருத்தவில்லை என்பதால் மட்டும் அது தழுவல் என பேசுவது ஏற்புடையதும் ஆகாது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X