அரசியல் செய்தி

தமிழ்நாடு

திசை மாறி பயணிக்கும் ஜல்லிக்கட்டுப் போராட்டம்; திரைமறைவில் செயல்படும் முப்பெரும் சக்திகள்

Updated : ஜன 23, 2017 | Added : ஜன 22, 2017 | கருத்துகள் (96)
Advertisement
திசை மாறி பயணிக்கும் ஜல்லிக்கட்டுப் போராட்டம்; திரைமறைவில் செயல்படும் முப்பெரும் சக்திகள்

ஜல்லிக்கட்டு விஷயத்தில், மாணவர்களும்; இளைஞர்களும் சிலருடைய கைப்பாவையாக செயல்பட்டு, அரசாங்க நடவடிக்கைகளை ஏற்க மறுப்பது, தமிழக அரசுக்கு கடும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், சென்னை, மெரினா கடற்கரையில் அமர்ந்து கொண்டு, வம்படிக்கும் இளைஞர்களை அங்கிருந்து வெளியேற்றும் முடிவுக்கு, தமிழக அரசு வந்துள்ளது.
தமிழக அரசு, இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு, அவசர சட்டம் கொண்டு வந்து, ஜல்லிகட்டை நடத்த முயன்றபோது, அதை நடக்கவிடாமல் செய்த இளைஞர்கள் மீது, முதல்வர் பன்னீர்செல்வம் கடும் கோபத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதிகாரிகள் வட்டமும், கடும் அதிர்ச்சியில் உள்ளதோடு, இளைஞர் பட்டாளம் மீது கடும் ஆத்திரத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து, தமிழக அரசின் உளவுத்துறை வட்டாரங்களில் கூறப்படுவதாவது: மத்திய - மாநில அரசு தரப்பில், இந்தாண்டு எப்படியாவது ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று, கடும் முயற்சி எடுக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு வந்த போது, ஜல்லிக்கட்டை நடத்துவது குறித்து, தெளிவான கருத்துக்களை, வாதங்களாக வைத்து வாதாடினர். எப்படியாவது, இந்தாண்டு பொங்கல் நாளுக்கு முன்னதாக, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பெற்று விட வேண்டும் என்றும் போராடினர். ஆனால், உச்ச நீதிமன்றம் அதை ஏற்காததால், இந்தாண்டு, பொங்கல் நாளில், ஜல்லிக்கட்டை நடத்த முடியவில்லை.
இதனால் தமிழகத்தில் கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டது. ஜல்லிக்கட்டை எப்படியாவது நடத்தியாக வேண்டும் என்று, இளைஞர்களும், மாணவர்களும், பெண்களுமாக தன்னெழுச்சியாக கிளம்பினர். இதற்காக மெரினாவில் கூடி போராட்டம் நடத்துவது என, சமூக வலைதளங்கள் மூலம் தகவல் அனுப்பினர். இந்தத் தகவல் காட்டுத் தீயாக பரவ, தமிழகம் முழுவதிலும் இருந்து, கடந்த 17ம் தேதி, மெரினா கடற்கரையில், மாணவர்கள் திரண்டு, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். ஜல்லிக்கட்டை இந்தாண்டு எப்படியாவது நடத்தியாக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்காக, சிறப்பு சட்டத்தை போட்டு, ஜல்லிக்கட்டு நடத்தும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என, அறிவித்தனர்.
இப்படி போராட்ட களத்தில் நின்ற இளைஞர்களுக்கு, தமிழக அரசியல் தலைவர்கள்; சமூக ஆர்வலர்கள்; பொது மக்கள் என, நாளுக்கு நாள் ஆதரவு பெருகியது. மீடியாக்களும், இளைஞர்கள் போராட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தன.
இப்படி இளைஞர்கள் போராட்டத்துக்கு நாளுக்கு நாள் வலிமை கூடிக் கொண்டே போவதை உணர்ந்த தமிழக முதல்வர் பன்னீர்செல்வம், இது தொடர்பாக, பிரதமர் மோடியிடம் போனில் பேசினார். இது தொடர்பாக உங்களை சந்தித்தாக வேண்டும் என்று சொல்ல, அடுத்த நாளே, அப்பாயின்மெண்ட் கொடுத்தார் மோடி. அதன்படி டில்லி சென்ற முதல்வர் பன்னீர்செல்வம், மோடியை சந்தித்து, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார்.
பிரதமர் மோடியும், பன்னீர்செல்வத்தின் நெருக்கடியை புரிந்து கொண்டார். கூடவே, பன்னீர்செல்வம், இந்த பிரச்னையை தீர்ப்பதன் மூலம், அ.தி.மு.க.,வில் தனக்கு இருக்கும் நெருக்கடியை தீர்த்து, தொடர்ந்து, மக்கள் ஆதரவோடு, முதல்வராக தொடரலாம் என கணக்குப் போட்டு காய் நகர்த்தினார்.
இதற்கு மோடியும் சம்மதித்தார். அதனால்தான், முதல்வர் பன்னீர்செல்வத்தை டில்லியிலேயே தங்கச் சொல்லி, சட்ட வல்லுநர்களை கலந்து ஆலோசிக்கச் செய்து, தமிழக அரசு சார்பில், ஜல்லிக்கட்டு நடத்த, அவசர சட்டம் கொண்டுவர ஏற்பாடு செய்தார்.
டில்லியில் இருந்த படியே, ஜல்லிக்கட்டுத் தொடர்பான அவசர சட்டத்துக்கான, சட்ட முன்வடிவை தயார் செய்து, சென்னையில் இருந்து அதிகாரிகள் அனுப்பி வைக்க, அதை, சட்ட வல்லுநர்களிடம் காட்டி, ஒப்புதல் பெற்று, அதை உள்துறைக்கு அனுப்பி, வனத்துறை உள்ளிட்ட பல துறைகளின் ஒப்புதலையும் பெற்றார். அதன்பின், கவர்னர் ஒப்புதலோடு, மத்திய அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு, அவசர சட்டம் இயற்றப்பட்ட அறிவிப்பு வெளியானது.
இதையடுத்து, இந்த அவசர சட்டத்துக்கு, தமிழக சட்டசபையின் ஒப்புதல் பெற வேண்டும் என்பதற்காக, 23ல் சட்டசபையும் கூட்டப்படுவதாக அறிவிக்கபப்ட்டது. இப்படி எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டு, சென்னை திரும்பிய பன்னீர்செல்வம், ஏதோ சாதித்துவிட்ட திருப்தியில் இருந்தார். ஆனால், அதன் பின்னும், பிரச்னைகள் தொடருவதுதான், பன்னீர்செல்வம் உள்ளிட்ட யாருமே எதிர்பாராதது.
இந்த அவசர சட்டமெல்லாம் எங்களுக்குத் தேவையே இல்லை; இது போன்ற தற்காலிக ஏற்பாட்டுக்காக நாங்கள் போராடவில்லை என, தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் போராடி வந்த இளைஞர்கள், திடீர் முரண்டு பிடித்து, பாடிய பல்லவியையே திரும்பத் திரும்ப பாடினர். இப்படி இளைஞர்கள் திடீரென முரண்டு பிடித்ததோடு, அவர்களை பல்வேறு சக்திகள் பின்னணியில் இருந்து இயக்கும் தகவல் வர, தமிழக அரசு என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகிறது.
ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வந்ததன் மூலம், முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு, தமிழக மக்கள் மத்தியில் நல்ல பெயர் ஏற்பட்டிருக்கிறது. அப்படி அவருக்கு தொடர்ந்து நல்ல பெயர் கிடைக்கும் பட்சத்தில் அவர், நிரந்தர முதல்வராகி விடுவார் என்ற பதட்டம், அ.தி.மு.க.,வுக்குள்ளேயே, முதல்வராகத் துடிப்பவருக்கு ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு பின்னணியில் இருந்து செயல்படும் முக்கிய நபர் ஒருவரே, ஜல்லிக்கட்டுத் தொடர்பான அவசர சட்டத்தை இயற்றிய பின்னும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது என, இளைஞர்களை தூண்டி விட்டுள்ளார்.
ஏற்கனவே ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, கனிம பிரச்னையில், தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர், ஜெயலலிதா இருந்த வரையில் தமிழக அரசையும் கடுமையாக எதிர்த்து வந்தார். தற்போது, ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அ.தி.மு.க.,வின் பொது செயலராகி, மறைமுகமாக ஆட்சி - அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டிருக்கும் சூழலில், அவரை நோக்கிச் செல்ல, கனிம வள பிரமுகர் முடிவெடுத்துள்ளார். அவர் மூலம், தனது பிசினசுக்கு அணுகூலம் ஏற்படும் என்பதால், அவரும், சசிகலா தரப்பினருக்காக, ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில் இருக்கும் இளைஞர்களை, போராட்டத்தை வாபஸ் வாங்க விடாமல் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த இரண்டு சக்திகள் தவிர, அரசுக்கு எதிரான பிரச்னை என்றால், அல்வா சாப்பிடுவது போல எடுத்துக் கொண்டு, எந்த விஷயத்தையும் கையில் எடுக்கும் தீவிரவாத எண்ணம் கொண்ட பல்வேறு அமைப்புகளும், ஜல்லிக்கட்டு பிரச்னை முடிவடையாமல் செய்து கொண்டிருக்கின்றன.
இப்படியெல்லாம், ஜல்லிக்கட்டு பிரச்னை திசை மாறி பயணிக்கும் என்பதை, கடந்த 17ம் தேதியே, தமிழக ஆட்சி மேலிடத்தில் இருப்பவர்களிடம், உளவுத்துறை சார்பில் தெரிவித்து விட்டோம். ஆனால், அன்றைய தினம், எம்.ஜி..ஆர்., பிறந்த தினம் என்பதால், ஏகப்பட்ட அ.தி.மு.க., தொண்டர்களுடன், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, ஊர்வலமாக புறப்பட்டு வந்து, எம்.ஜி.ஆர்., சமாதியில் அஞ்சலி செலுத்திச் சென்றார்.
அபரிமிதமாக தொண்டர்கள் அவர் பின்னால் கூடி வந்த செய்தி பெரிதாகி விடக் கூடாது என்பதற்காக, ஆட்சி - அதிகாரத்தில் இருப்பவர்களே, ஜல்லிக்கட்டு தொடர்பாக இளைஞர்கள் நடத்திய போராட்டத்தை பெரிதுபடுத்தினர். அப்போதே, இளைஞர்கள் போராட்டத்தை ஒடுக்க வேண்டும் என, உளவுத்துறையினர் கொடுத்த ரிப்போர்ட்டை மதித்து, அரசு தரப்பில் நடவடிக்கை எடுத்திருந்தால், பிரச்னை இத்தனை சீரியஸாகி இருக்காது.
என்னதான் தமிழக அரசு அவசர சட்டம் இயற்றி, அதற்கு தமிழக சட்டசபை மற்றும் ஜனாதிபதி ஒப்புதல் பெற்றாலும், உச்ச நீதிமன்றம் நினைத்தால், சட்டத்துக்கு தடை போட்டு விடும். அதேபோல, மத்திய அரசு, புதிதாகவே ஜல்லிக்கட்டுக்காக சட்டம் இயற்றி, பார்லிமெண்டிலும்; ஜனாதிபதியிடமும் ஒப்புதல் பெற்றாலும், அதையும் உச்ச நீதிமன்றம் நினைத்தால், தடை போட்டுவிட முடியும்.
ஜல்லிக்கட்டு பிரச்னையில், உச்ச நீதிமன்றத்தை சமாதானப்படுத்தி, நிபந்தனைகளுடன் கூடிய ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெற்றால் மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்பதை, தமிழக அரசு எப்படி இளைஞர்களுக்கு புரிய வைக்கப் போகிறது என தெரியவில்லை. இதனால்தான், பிரதமர் மோடி, இந்த பிரச்னையில் நேரடியாக களம் இறங்காமல், தமிழக அரசை, அவசர சட்டம் கொண்டுவரச் செய்து ஒதுங்கிக் கொண்டு விட்டார்.
ஆனாலும், இளைஞர்கள் போராட்டத்தை தொடர விடுவதில் தமிழக அரசுக்கு விருப்பம் இல்லை. அவசர சட்டம் மூலம், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதித்ததில், புதுக்கோட்டையில் இரண்டு இளைஞர்கள் இறந்துவிட, அதுவும் உச்ச நீதிமன்றம் செல்லும்போது, தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு தடையேற்படுத்தப்படும் என, தமிழக அரசு அச்சப்படுகிறது. அதனால், இப்போதைக்கு, உடனடியாக ஜல்லிக்கட்டுத் தொடர்பான இளைஞர்களின் அனைத்து போராட்டத்தையும் தடுக்க, தமிழக அரசு தீவிரமாக களம் இறங்கி உள்ளது.
அனேகமாக, 26ல் நடக்கவிருக்கும் குடியரசு தின அணிவகுப்பு தொடர்பான பயிற்சிகளுக்காக, மெரினா கடற்கரை சாலை முழுவதையும், போலீஸ் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தீவிரமாகி விட்டது. அதனால், இன்று இரவே, சென்னை மெரினா கடற்கரையில் இருந்து இளைஞர்கள் முழுவதுமாக அப்புறப்படுத்தப்படுவதோடு, காமராஜர் சாலையின் எல்லைகளை 26 வரை மூடி வைக்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.

Advertisement
வாசகர் கருத்து (96)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Durairaj.V. - Kadayanallur,இந்தியா
24-ஜன-201710:40:48 IST Report Abuse
Durairaj.V. மாணவர்களே, இளைஞர்களே, நீங்களே வருங்காலம். வருங்காலம் உங்களுடையது. உங்களுடைய மேலான சக்தியை ஆக்கபூர்வமான அறவழியில் செலுத்தி நாட்டுக்கும் வீட்டுக்கும் நன்மையும் பெருமையும் சேர்க்கவேண்டும். கெட்ட சக்திகளை அடையாளம் காணுங்கள். கெட்ட சக்திகளை புறம் தள்ளுங்கள். வெற்றி நமதே. நடந்த வெற்றிக்கு பாராட்டுக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Bharathi - Melbourne,ஆஸ்திரேலியா
24-ஜன-201700:31:39 IST Report Abuse
Bharathi கலைஞர் டீவில போலீஸ் அத்துமீறலென்னுதான் காற்றங்களே ஒழிய இந்த சமூகவிரோத கும்பல் பண்ற தீவைப்பு நாசவேலைகளை காட்ல. அவங்க புத்தி எப்பவும் மாறாது.
Rate this:
Share this comment
Cancel
Bharathi - Melbourne,ஆஸ்திரேலியா
24-ஜன-201700:29:42 IST Report Abuse
Bharathi புற்றீசல் போல பெருகியிருக்கிற இந்த டிவி சேனல்களும் ஒரு முக்கிய காரணம்.தராதரம் இல்லாம எல்லார்கிட்டயும் மைக்கை நீட்ட வேண்டியது. கேமரா இருக்குறதால போலீஸ் ஒன்னும் பண்ணாதுன்ற தைரியத்துல தேசத்துரோகிகள் ஆட்டம்போடுதுங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X