சிறப்பு பகுதிகள்

பொலிக! பொலிக! - ராமானுஜர் 1000

பேய்ப்பெண்

Added : ஜன 24, 2017
Share
Advertisement
யாதவப் பிரகாசரின் தாயார் உள்ளுக்குள் தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தாள். ஒரு விஷயம் இருக்கிறது. நெடுநாள் உறுத்தல். அதை ராமானுஜரிடம் சொல்ல வேண்டும். அதன்மூலம் என்னவாவது நல்லது நடக்க வேண்டும். முடியுமா?'அம்மா, உங்கள் மனக்குறையைச்சொல்லுங்கள். எதற்காகத் தயக்கம்?' என்று ராமானுஜர் திரும்பத் திரும்பக் கேட்டார். ஆனாலும், அவளால் சொல்ல முடியவில்லை. ஏனெனில்
பேய்ப்பெண் Ramanujar Download

யாதவப் பிரகாசரின் தாயார் உள்ளுக்குள் தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தாள். ஒரு விஷயம் இருக்கிறது. நெடுநாள் உறுத்தல். அதை ராமானுஜரிடம் சொல்ல வேண்டும். அதன்மூலம் என்னவாவது நல்லது நடக்க வேண்டும். முடியுமா?

'அம்மா, உங்கள் மனக்குறையைச்சொல்லுங்கள். எதற்காகத் தயக்கம்?' என்று ராமானுஜர் திரும்பத் திரும்பக் கேட்டார். ஆனாலும், அவளால் சொல்ல முடியவில்லை. ஏனெனில் சம்மந்தப்பட்டிருந்தது அவளது மகன் யாதவப்பிரகாசர். அவருக்குத் தெரியாமல்தான் அவள் காஞ்சிக்கு வந்திருந்தாள். கேட்டால், கோயிலுக்குப் போனதாகச் சொல்லிக் கொள்வதில் பிரச்னை இல்லை. ஆனால் ராமானுஜரை தரிசிப்பதே அவளது காஞ்சி வருகையின் நோக்கம்
என்று சொன்னால் அவன் தாங்குவானா? யாதவர் சில காலமாக மிகுந்த மனக்குழப்பத்தில் ஆழ்ந்திருந்த தருணம் அது. பாடசாலை சரிவர இயங்கவில்லை. அவரால் முடியவில்லை என்பதுதான் காரணம். வயது கொடுத்த தள்ளாமை ஒருபுறம். குற்ற உணர்ச்சிகள் அளித்த குறுகுறுப்பு மறுபுறம். திருப்புட்குழியில் இருந்தபடிக்கு காஞ்சியில் ராமானுஜரின் செல்வாக்கு வளர்ந்து கொண்டிருந்ததை அவர் கவனித்தபடியேதான் இருந்தார்.

ராமானுஜரின் செல்வாக்கு வளர்கிறது என்றால், அத்வைதம் என்னும் மகாதத்துவத்தின் ஆணிவேர் அசைக்கப்படுவதாக அர்த்தம். இது சரியா? இப்படித்தான் இது
நிகழ்ந்தாக வேண்டுமா? ஜகத்குருவான ஆதிசங்கரரின் தீர்மானங்களையே ஒருவன் நிராகரிப்பானா! அவனது வாதங்களும் வலுவாக இருந்துவிட முடியுமா! அதையும் மக்கள் ஆமோதிப்பார்களா? என்னதான் நடக்கிறது இங்கே?குழப்பம் அவரைக் கொன்று கொண்டிருந்தது. நேரே போய் சிண்டைப் பிடித்து ஆட்டிவிட ஒரு நிமிடம் ஆகாது. ஆனால் ராமானுஜரை நினைக்கும்போதெல்லாம் அவருக்கு இரண்டு விஷயங்கள் முதலில் நினைவுக்கு வந்துவிடும்.
கொல்ல நினைத்த கொடும் தருணம். வெல்ல முடியாமல் வாதங்களில் வீழ்ந்த பல தருணங்கள்.

'ரொம்ப யோசிக்க வேண்டாம் தாயே. நமக்கு அப்பால், நன்மை தீமைகளுக்கு அப்பால், தத்துவங்களுக்கு அப்பால், சித்தாந்தங்களுக்கு அப்பால், வேதாந்தங்களுக்கும் அப்பால் விவரிக்க முடியாத பெரும் பொருளாகப் பரந்தாமன் வீற்றிருக்கிறான். அனைத்தையும் உதிர்த்துவிட்டு அவன் தாள்களை மானசீகத்தில் பற்றிக்கொண்டால் போதும். ஜீவாத்மா துவண்டு விழும் தருணம் உண்டு. அறிவும், ஞானமும் உதிரும் கணம் உண்டு. மாயை
கண்ணைக் கட்டுகிறதென்றால், செருக்கே மாயையின் வித்து. சரணாகதி ஒன்றே அனைத்தையும் அகற்றி அவனிடம் கொண்டு சேர்க்கும் வழி.'
அந்தக் கிழவிக்குப் புரிந்தது. ஆனால், அவள் மகனுக்குப் புரிய வேண்டுமே?ஒரு சம்பவம். அவளால் சாகிற வரைக்கும் மறக்க முடியாத சம்பவம். அப்போது வட தமிழகத்தில் காஞ்சியின் சுற்றுவட்டாரப் பிராந்தியத்தை ஆண்டு கொண்டிருந்த சோழச் சிற்றரசன் ஒருவனது மகளுக்குப் பேய் பிடித்துவிட்டது என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். வராத மருத்துவரில்லை, பார்க்காத வைத்திய மில்லை. பூஜைகள், யாகங்கள் ஒரு பக்கம். மந்திர தந்திரவாதிகளின் பேயோட்டப் பிரயத்தனங்கள் ஒரு பக்கம். எதுவும் பலனளிக்காமல் அந்த இளவரசி ஆட்டமான ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தாள். யாரோ அரசனிடம் போய்ச் சொன்னார்கள்.

'திருப்புட்குழி யாதவப் பிரகாசர் பெரும் ஞானஸ்தர். தவிரவும், அவருக்கு மந்திரப் பிரயோகங்கள் தெரியும். மாந்திரிகம் அறிந்தவர். அரசர் அவரை அரண்மனைக்கு வரவழைத்து இளவரசியைக் காட்டலாமே?'உத்தரவு ஊருக்கு வந்து சேர்ந்தபோது யாதவருக்குக் கட்டுக்கடங்காத அகங்காரம் தலைக்கேறிவிட்டது. 'நான் எதற்கு வரவேண்டும்? யாதவப் பிரகாசன் உன்னைப் போகச் சொன்னான் என்று அந்த பிரம்ம ராட்சசனிடம் போய்ச் சொல்லுங்கள். ஓடியே விடுவான்' என்று அரசு ஊழியர்களிடம் சொல்லி அனுப்பி விட்டார். இது பெரிய இடத்து விவகாரம், நமக்கு பிரம்ம ராட்சசனையும் தெரியாது; யாதவப் பிரகாசரையும் தெரியாது; எதற்கு வம்பு என்று, அவர்களும் அதேபோல அரண்மனைக்குத் திரும்பி அவர் சொன்னதை அப்படியே சொன்னார்கள்.படுத்திருந்த இளவரசி சீறி எழுந்து கத்தினாள். 'அவனை ஓடிப் போகச் சொல்லுங்கள். நான் அடித்தால் நார்நாராகக் கிழிந்து விடுவான்.'
செய்தி கேட்டு அதிர்ந்து போனார் யாதவர். இது அவமானமல்லவா? விடமுடியாது. தனது மாணவர் பரிவாரத்துடன் அரண்மனைக்கு வந்து சேர்ந்தார். 'கூப்பிடுங்கள் உங்கள் மகளை' என்றார் அரசரிடம். சேடிகள் இளவரசியை சபைக்கு அழைத்து வந்தார்கள். பேய் பிடித்த இளவரசி. தலைவிரிகோல இளவரசி. சங்கிலி போட்டுப் பிணைத்திருந்தார்கள். அதை அறுத்தெறிந்து சீறிப் பாயும் வேகம் அவளது ஒவ்வொரு அசைவிலும் தெரிந்தது.

யாதவர் அவள் எதிரே வந்து நின்று மந்திரங்களை உச்சரிக்கத் தொடங்கினார்.'டேய், எனக்கு உன்னையும் தெரியும், நீ சொல்லும் மந்திரங்களும் பொருளோடு தெரியும். என்னை விரட்ட உன்னால் முடியாது. உயிர்மீது ஆசை இருந்தால் ஓடிவிடு' என்றது அந்தப் பேய்ப்பெண். 'என்னைத் தெரியுமா? என்ன தெரியும் உனக்கு?''போன ஜென்மத்தில் மதுராந்தகம் ஏரிக் கரையில் ஓர் உடும்பாகப் பிறந்தவன் நீ. பரம பக்தர்கள் சிலர் சாப்பிட்டு மீந்த உணவைத் தின்றபடியால் இந்த ஜென்மத்தில் வேதம் சொல்லித்தரும் உயரிய பிறப்பு உனக்கு வாய்த்திருக்கிறது. ஆனால், இந்த ஜென்மத்துப் பாவங்கள் உன்னை இன்னும் இரண்டு ஜென்மங்களுக்கு ஆட்டிப் படைக்கப் போகிறது மூடா! ஓடிப் போ!'அதிர்ந்து விட்டார் யாதவர். வந்திருந்த அவரது மாணவர்களுக்குப் பேச்சு மூச்சில்லை. ராமானுஜருக்கு ரொம்ப சங்கடமாகப் போய்விட்டது. குருவல்லவா? மன்னனின் சபையில் அவருக்கு இது எப்பேர்ப்
பட்ட அவமரியாதை?சட்டென்று அவர் முன்னால் வந்து நின்றார். 'பேயே' என்று தொடங்காமல் 'பெண்ணே' என்று பேச ஆரம்பித்தார். ஒரு நிமிடம். ஐந்து நிமிடம். பத்து நிமிடங்கள். மந்திரங்கள் இல்லை. மாயம் ஏதுமில்லை. வெறும் பேச்சு. ஆனால் சாத்விகத்தின் சாறு பூசிய பேச்சு. பரமாத்மாவான நாராயணனின் பாத கமலங்களை முன்வைத்து, அந்தப் பெண் குணமாக மனப்பூர்வமாக வேண்டிக்கொண்டார் ராமானுஜர். அன்று அது நடந்தது. அவள் குணமானாள்.தொண்டை மண்டலம் முழுதும் ராமானுஜரின் புகழ் தீயெனப் பரவத் தொடங்கிய தருணம் அது.

'செய்தது நானில்லை; நாராயணனே' என்றார் ராமானுஜர். அந்தப் பணிவு அவரை இன்னும் உயரத்துக்கு எடுத்துச் சென்றது. யாதவர் மட்டும் புழுக்கத்தில் வெந்து கொண்டிருந்தார். தாங்க முடியவில்லை அவரால். 'வேண்டாமப்பா! என்னினும் பெரியவன் என்னிடம் படிக்க அவசியமில்லை. இனி பாடசாலைக்கு வராதே' என்று சொல்லிவிட்டார்.தன் மகன் தரம் தாழ்ந்து போனது அன்றே அத்தாய்க்கு புரிந்துவிட்டது.

(நாளை தொடரும்...)

writerpara@gmail.com

- பா.ராகவன்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X