தகுதியானவர் தலைமைக்கு வரட்டும் :இன்று தேசிய வாக்காளர் தினம்| Dinamalar

தகுதியானவர் தலைமைக்கு வரட்டும் :இன்று தேசிய வாக்காளர் தினம்

Updated : ஜன 25, 2017 | Added : ஜன 24, 2017
Advertisement
 தகுதியானவர் தலைமைக்கு வரட்டும் :இன்று தேசிய வாக்காளர் தினம்

தகுதியானவர் தலைமைக்கு வரட்டும்

இந்தியா 1947ல் சுதந்திரம் பெற்றது. எனினும் ஆங்கி லேய ஏகாதிபத்தியத்தின் சாயல் இருந்து கொண்டிருந்தது. இதனை நீக்க என்ன செய்யலாம்? என யோசித்தார் அப்போதைய
பிரதமர் நேரு. அப்போதுதான் தேர்தல் நடத்த முடிவு செய்தார். மக்களே, தங்களை ஆளுபவர்களைத் தேர்ந்தெடுப்பது தான் சரியாக இருக்கும் என நினைத்தார். ஆனால் காங்கிரசார் விரும்பவில்லை. காரணம், ஏராளமான கட்சிகள் முளைத்திருந்தன. எனவே, 'கொஞ்சகாலம் போகட்டும்,' என்றனர். அதற்கு நேரு இணங்க வில்லை. இது நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் தேர்வு. ''ஜனநாயகப் பாதையில் மேற்கொள்ளவிருக்கும் முதல் சோதனை ஓட்டம் இது," என்றார் நேரு.

தேர்தலுக்கு அடிப்படை தேர்தலுக்கு அடிப்படை வாக்காளர்கள் பட்டியல். அது தயாராக இல்லை. தேர்தல் நடத்திட போதிய பயிற்சி பெற்றவர்கள் இல்லை. ஓட்டுச்சாவடிகள் இல்லை. மக்
களுக்கும் விழிப்புணர்வு இல்லை. ஆனாலும் நேரு தயங்கவில்லை. வங்கத்தின் தலைமைச்செயலாளராக இருந்த சுகுமார் சென் என்பவரை முதல் தேர்தல் கமிஷனராக நியமித்தார். சுகுமார் சென் ஒவ்வொரு மாகாணத்துக்கும் தனித்தனி தேர்தல் அதிகாரிகளை நியமித்தார்.


தேர்தல் ஆணையம்


இந்திய தேர்தல் ஆணையம் 1950 ஜனவரி 25ம் தேதி உதயமானது. 1951 அக்டோபரில், முதல் தேர்தல் துவங்கி மூன்று மாதங்கள் நடந்தன. 489 லோக்சபா தொகுதிகள். 4500 சட்டசபைத் தொகுதிகள். இத்தேர்தலில் 364 இடங்களில் காங்., வெற்றி பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதி, தேர்தல் ஆணையத்தைக் கொண்டாடும் வகையில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது.

கண்ணியமான முறையில் தேர்தல், ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது, வன்முறையற்ற ஓட்டுப்பதிவு, வாக்களிப்பது தேசத்திற்கு செய்யும் தொண்டு என்ற பிரசாரத்தை தேர்தல் ஆணையம்செய்து வருகிறது. ஓட்டளிப்பதன் முக்கியத்துவத்தை எல்லோருக்கும் உணர்த்தி, வாக்களிப்பதை அதிகப் படுத்துவதே இதன் நோக்கம். தேர்தல் ஆணையம் நவீன
வளர்ச்சிக்கு ஏற்ப ஆன்லைனில் பெயர் சேர்ப்பு, நீக்கம், அனைவருக்கும் போட்டோ அடையாள அட்டை, ஓட்டுப்பதிவை ஆன்லைனில் கண்காணிப்பது, விரைவான தேர்தல் முடிவுகள் என புதுமைகளை புகுத்தி வருகிறது.


குடவோலை டூ மின்னணு


உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா. 9-ம் நூற்றாண்டில் குடவோலை முறை மூலம் துவங்கிய தேர்தல் இன்று மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் வந்து நிற்கிறது. தேர்தல் காலங்களில் ஆட்சியாளர்கள், ஆட்சி அமைக்க விரும்பவர்கள் எளிய மனிதர்களை வணங்கும் காட்சி வாக்குரிமையின் வலிமைக்கு ஒரு சாட்சி. இந்திய ஜனநாய கட்டமைப்பே வாக்குகளின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ளது என்றால் மிகையாகாது.


82 கோடி வாக்காளர்கள்


1951 ஆண்டில் மூன்று மாதங்கள் நடந்த முதல் பொதுத் தேர்தல், இன்று அதிகபட்சம் ஒன்பது கட்டங்களாக எளிதாக நடந்து விடுகிறது. 82 கோடி வாக்காளர்கள் பங்கெடுக்கும், பிரம்மாண்ட தேர்தல் நடைமுறை உலகில் இந்தியாவில் மட்டுமே சாத்தியமாகியுள்ளது. நம் தேர்தல் நடவடிக்கைகளில் சில, பல குறைபாடுகள் இருந்தாலும், அமெரிக்கா போன்ற விஞ்ஞான வளர்ச்சியில் உச்சம் தொட்ட மேலை நாடுகள் இந்திய தேர்தல் முறையை வியப்புடன் பார்க்கின்றன.

முன்பு அடிதடி, கள்ள ஓட்டு என்பது தான் தேர்தல் வன்முறையாக இருந்தன. இன்றைக்கு பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் சத்தமில்லாத ஜனநாயகப் படுகொலை அரங்கேறிக் கொண்டிருக்கிறது. என்றாலும் ஓரளவிற்கு நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மை யாகவும், தேர்தல்கள் நடக்க காரணம் உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு முற்போக்கான தீர்ப்புகளே.


ஆணையம் தன்னாட்சி அமைப்பு


தேர்தல் ஆணையம் என்பது அரசின் ஒரு அங்கம் என்பது போல் நடத்தப்பட்டது. 1978-ம் ஆண்டு நடந்த மொகிந்தர் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உள்ள தனிப்பட்ட அதிகாரங்கள், பொறுப்புகள் மற்றும் கடமைகளை உறுதி செய்தது. தேர்தல் ஆணையம் என்பது தேர்தல்களை நியாயமாக நடத்த உருவாக்கப்பட்ட தன்னாட்சி அமைப்பு என்பதை உறுதிசெய்தது.

தேர்தலில் பங்கெடுப்பவர்கள், பணபலம் படைத்தவர்கள் எவ்வளவு வேண்டுமானலும் பணத்தை வாரி இறைக்க முடியும் என்ற சூழல் 1996-ம் ஆண்டு “காமன் காஸ்” என்ற வழக்கின் மூலம் முடிவுக்கு வந்தது. இதில் தீர்ப்பு வெளியிட்ட உச்சநீதிமன்றம் அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளர்களும் தேர்தல் செலவுகள் குறித்த கணக்குகளை ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என கட்டாயமாக்கியது.


உச்சநீதிமன்றத்தின் உத்தரவு


2002-ம் ஆண்டிற்கு முன் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த எந்த விபரங்
களையும் வாக்காளர்கள் அறிய முடியாது. ஜனநாயக உரிமைக்கான அமைப்பு தொடர்ந்த வழக்கில், 2002-ம் ஆண்டு தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், தான் தேர்வு செய்ய போகும் வேட்பாளரின் தகுதி குறித்த விபரங்களை வாக்காளர்கள் அறிந்து கொள்வது அடிப்படை உரிமை என தீர்ப்பளித்தது.

அத்துடன் தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொருவரும் அவர்களுடைய கல்வித்தகுதி, சொத்து விவரங்கள் மற்றும் குற்றப்பின்புலம் குறித்து வேட்பு மனுவில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. விவரங்களை பூர்த்தி செய்யாத வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படும் என்றும் அறிவித்தது.


தண்டனை பெற்றால் பதவி பறிப்பு


தேசிய தேர்தல் கண்காணிப்பகம் வெளியிட்ட அறிக்கையின் படி 2014-ல் தேர்வு செய்யப்
பட்டுள்ள லோக்சபா உறுப்பினர்களில் 34 சதவீதம் பேர் குற்றப் பின்னணி உள்ளவர்கள். இது 2009 லோக்சபா தேர்தலை விட 4 சதவிகிதம் அதிகம். லில்லி தாமஸ் என்பவர் தொடர்ந்த வழக்கில்
தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், இரண்டு ஆண்டுகள், அதற்கு அதிகமாகவோ நீதிமன்ற
தண்டனை பெறும் எம்.பி., அல்லது எம்.எல்.ஏ.,வின் பதவி உடனடியாக பறிபோகும் என தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பினால் கட்சி எல்லைகளை கடந்து பல கட்சிகளை சேர்ந்த பெரும் தலைகள் உருண்டன.


'நோட்டா' அறிமுகம்


போட்டியிடும் வேட்பாளர்களில் தகுதியான வேட்பாளர்கள் இல்லாத சூழலில், தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வாய்ப்பு வேண்டும் என வாக்காளர்கள் விரும்பினர். சிவில் உரிமைகளுக்கான மக்கள் அமைப்பு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், தேர்தலில் வாக்காளர் அவருடைய எதிர்ப்பை பதிவு செய்ய வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் இன்று 'நோட்டா'விற்கு ஓட்டளிக்க மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் வாய்ப்பளிக்கப் பட்டது.

மத அடிப்படையில் ஓட்டு சேகரிக்கும் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யலாம் என்றும், வேட்பாளர் மட்டுமின்றி அவருடைய ஏஜன்டோ அல்லது அவரது சார்பில் தனி நபரோ ஓட்டு
சேகரித்தல் கூடாது என்றும், அவ்வாறு செய்தல் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு விரோதமானது என நாராயன் சிங் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு மத அடிப்படைவாத அரசியல் செய்பவர்களிடம் அதிர்ச்சியை அள்ளி விசீயது.

மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து கவலைப்படாமல் ஓட்டுக்களை குறிவைத்து இலவச வாக்குறுதிகளை அள்ளி வீசுவதை காண்கிறோம். இது தொடர்பான வழக்கில் 2013ம் ஆண்டு தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள், நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல் முறையின் அடிப்படைக்கு ஊறு விளைவிக்கும் என கூறியது. தேர்தல் ஆணையம் அனைத்து கட்சிகளையும் அழைத்து,விவாதித்து இதை தடுத்திட வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் புதிய சட்டத்தை பார்லிமென்டில் இயற்றலாம் என்றும் ஆலோசனை வழங்கி யது. ஆனால் இதுவரையில் நடவடிக்கைகள் இல்லை.


சமத்துவம் தரும் ஓட்டு


நியாயமான, நேர்மையான தேர்தல் நடைபெறுவதற்கு உச்ச நீதிமன்றமும், தேர்தல் ஆணைய மும் நடவடிக்கை எடுத்தாலும் கூட "நான் பணத்துக்கோ சலுகைகளுக்கோ பொருட்களுக்கோ விலைபோக மாட்டேன்" என்ற உறுதி ஜனநாயக எஜமானர்களான மக்களிடம் இருந்தால்தான் ஜனநாயகம் மலரும்.

நாட்டின் மிகப்பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும் அவருக்கும் ஒரு ஓட்டு தான். சாதாரண மக்களுக்கும் ஒரு ஓட்டுதான். இந்த சமத்துவத்தை வாக்களிப்பதில் மட்டுமே காண முடியும். 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளராக சேருங்கள். ஓட்டுப்பதிவு சதவிகிதமானது நுாறைத் தொடும்போது தான் தகுதியானவர்கள் தலைமைக்கு வர அதிக வாய்ப்பு ஏற்படும். அந்த வாய்ப்பினை உருவாக்குவோம்.

ஆர்.காந்தி
உயர்நீதிமன்ற வழக்கறிஞர்
மதுரை. 98421 55509

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X