வாழ்க்கையை ருசிக்க புரிந்து கொள்வோம்| Dinamalar

வாழ்க்கையை ருசிக்க புரிந்து கொள்வோம்

Added : ஜன 25, 2017 | கருத்துகள் (1)
வாழ்க்கையை ருசிக்க புரிந்து கொள்வோம்

இன்றைக்கு பல குடும்பங் களில் பிரச்னைகள் வருவதற்கும், நிம்மதி இழப்பதற்கும் காரணம் புரிந்து கொள்ளாமையே! ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும். சங்க இலக்கியத்தில் வரும் ஒரு காட்சி. சுனையில் ஒரு மான், குடிப்பதற்கு மட்டுமே நீர்உள்ளது. ஆண் மான் குடிக்காமல் பெண்மானைக் குடிக்கச் சொன்னால் குடிக்காது. எனவே ஆண் மான் நீரைக் குடிப்பது போல பாவனை செய்ய, பெண் மான் குடித்தது.இக்காட்சி கணவன், மனைவிக்காக விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் என்ற கருத்தை, நன்கு உணர்த்துகின்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது. மணமான புதிதில் கணவன்- மனைவி நடந்து செல்லும் போது, மனைவியின் காலில் கல்தட்டியது. உடன், சனியன் பிடித்த கல் என்று கல்லைத் திட்டி விட்டு, கல்லை துாக்கி எறிந்தான் கணவன். சில ஆண்டுகள் சென்றது, அதே கணவன், -மனைவியை மறுபடியும் கல் தட்டியது. உடன் கணவன், சனியனே, கல் இருக்குது பார்த்து வரக்கூடாதா? என்று திட்டினான். ஏன் இந்த மாற்றம். எப்போதும் மனைவியை நேசிக்கும் உள்ளம் கணவனுக்கு இருக்க வேண்டும்.
பாராட்டாத கணவன் : மனைவி உணவு பரிமாறினாள். உணவில் உப்பு குறைவாகஇருந்தது. உடன் கணவன் தட்டை விட்டெறிந்து கோபத்தில் கத்தினான். சரியான உப்புப் போட்டு சுவையாக இருந்தபோது என்றுமே பாராட்டாத கணவன், உப்பு குறைவு என்ற குறை கண்டதும் கோபப்படுவது ஏன்? சமைப்பது மனைவி என்றாலும், சாப்பிட்டு விட்டு சுவையாக இருந்தால் மனம் திறந்து பாராட்ட வேண்டும். பலருக்கு இந்த பாராட்டும் எண்ணம் இருப்பது இல்லை. பாராட்டிப் பாருங்கள், மகிழ்ச்சியில் மனைவி இன்னும் சுவையாக சமைப்பார்.
ஆணாதிக்க சிந்தனை : ரத்தத்தில் ஊறி விட்ட ஆணாதிக்க சிந்தனையை, கணவன் அறவே அகற்றி விட்டால் குடும்பம் ஒரு பல்கலைக்கழகமாகும்!குடும்ப மகிழ்ச்சி என்பது, புரிந்து கொள்வதில்தான் உள்ளது. பணத்தில் இல்லை மகிழ்ச்சி. ஏழை கணவன், மனைவி இருவர். மிதிவண்டியில் இடுப்பில் கை வைத்து மகிழ்வாக பயணம் செய்வதை பார்த்து இருக்கிறோம். ஆனால், பணக்கார கணவன் மனைவி விலை உயர்ந்த காரில், மகிழ்ச்சி இல்லாமல் இருவரும் இரண்டு ஓரங்களில் அமர்ந்து பயணம் செய்வதையும் பார்த்து இருக்கிறோம்.மனைவிக்கும் மனசு உண்டு; கருத்து உண்டு; காது கொடுத்து கேட்க வேண்டும்; மதிக்க வேண்டும்; கலந்து பேசி முடிவெடுத்தால் முடிவில் நன்மை இருக்கும். கணவன், மனைவி இருவருக்கும் புரிதல் என்பது மிக மிக அவசியம்.
நேர்மை வழியில்... : மனைவியும், கணவனும்வருமானம் அறிந்து அதற்கு மீறிய எதையும் கேட்கக் கூடாது. மனைவி கேட்பதால் லஞ்சம் வாங்கினேன் என்று சொல்லும் கணவனும் உண்டு, இந்த நிலை மாற வேண்டும்.கணவன் வட்டிக்கு கடன் வாங்கி பத்தாயிரம் ரூபாய்க்கு பட்டுச்சேலை வாங்கித் தருவதை விட கடன் வாங்காமல் சொந்த பணத்தில், நுாறு ரூபாய்க்குகைத்தறிச் சேலை வாங்கித்தந்தாலும் மகிழ்வோடு ஏற்கும் மனம் மனைவிக்கு வேண்டும். இது தான் புரிதல். கணவனும் நேர்மையான வழியில் உழைத்துப் பணம் ஈட்ட வேண்டும்.
மனதில் நிம்மதி : நிம்மதி என்பது வெளியில் இல்லை, நம் மனதில் உள்ளது என்பதை புரிந்து கொண்டு வாழ வேண்டும்.எழுத்தாளர் மெர்வின், 'சந்தனக்கட்டை வீரப்பன் போல, பெரிய மீசை வைத்து இருப்பார். அதற்கு அவரே சொன்ன காரணம். எனக்கு தலை வழுக்கையாக உள்ளது, எல்லோரும் என்னை அடையாளப்படுத்தும் போது சொட்டைத் தலை, வழுக்கைத் தலை என்றனர். மீசையை பெரிதாக வளர்த்தேன். மீசைக்காரர் என்றனர்'. இதில் வாழ்வியல் தத்துவமும் உள்ளது. 'இழந்த ஒன்றுக்காக வருந்துவதை விட, இருப்பதை செம்மைப்படுத்துவது மேல்' என்றார். நம்மில் பலர் இழந்ததற்காக வருந்தி, கவலை யில் காலம் தாழ்த்தி வருகிறோம். அதனை விடுத்து, இருப்பதற்குள் மகிழ்ச்சி அடையும் உள்ளம் வேண்டும்.
ஆசையே அழிவு : ஆசையே அழிவுக்குக் காரணம் என்றார் புத்தர். பேராசை பெருநஷ்டம் என்ற பொன்மொழியும் உண்டு. ஆசையின் காரணமாக பலர் நிம்மதி இழந்து, தவித்து வருகின்றனர். ஆசையையும், தேவைகளையும் குறைத்து புரிந்து கொண்டு வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும், வாழ்க்கையை இஷ்டப்பட்டு வாழ வேண்டும், கஷ்டப்பட்டு வாழக்கூடாது.காலணி இல்லை என்றுவருந்துபவர், கால்களே இல்லா தவரைப் பார்த்து ஆறுதல் கொள்ள வேண்டும். காலணி பெற உழைக்க வேண்டும், ஊதியம் ஈட்ட வேண்டும், உழைப்பு என்பது மிக உன்னதமானது. அதனால் தான் கடின உழைப்பிற்கு ஈடு இணை இல்லை என்றனர். இன்று கடின உழைப்பை விட விவேகமான, வித்தியாசமான உழைப்பு வேண்டும்.வட்டிக்கு கடன் வாங்கி சுகபோக வாழ்க்கை வாழ்வது இன்பம் என்று சிலர் தவறாகக் கருதி வாழ்ந்து வருகின்றனர். “கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்” என்பார்கள். கடன் கொடுத்தார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்று கூட மாற்றி எழுதி விடலாம். கடன் கொடுத்தவர்களும், வாங்க முடிய வில்லை என்ற வருத்தத்தில் இருப்பவர்களும் உண்டு. முடிந்தவரை கடன் வாங்காமல் உழைத்து ஈட்டிய பணத்தில் வாழும் வாழ்க்கையே சிறப்பு என்பதை உணர வேண்டும்.
கோபம் வந்தால்... : கோபம் அதிகம் கொள்ளும் மகனிடம் 50 ஆணிகள் தந்து கோபம் வரும் போதெல்லாம், வீட்டின் சுற்றுச்சுவற்றில் அடி என்றார். அவன் ஒவ்வொன்றாக அடித்து 50 ஆணிகளும் தீர்ந்து விட்டது. பின் கோபம் வரும் போது ஒவ்வொரு ஆணியை பிடுங்கு (எடு) என்றார். 50 ஆணிகளையும் பிடுங்கி விட்டான். இப்போது அந்தச் சுவற்றைப் பார் என்றார். பார்த்தான், ஆணி அடித்த இடங்கள் சிதைந்து வடுக்களாக இருந்தன. நீ கோபத்தில் சொல்லும் சொற்கள் அடுத்தவர் மனதை இப்படித் தான் காயப்படுத்தி வடுக்களாக்கும். எனவே இனிமேல் கோபம் கொள்ளாதே என்று மகனுக்கு அறிவுரை வழங்கினார். அவனும் புரிந்து கொண்டு கோபத்தைக் கைவிட்டான்.காயப்படுத்தும் சொற்கள் : கணவன், மனைவி இருவரும் இக்கதையைப் புரிந்து கொள்ள வேண்டும். கோபத்தில் சொல்லும் சொற்கள் மற்றவரைக் காயப்படுத்தும் என்பதை உணர்ந்து, வன்சொல் பயன்படுத்தாமல் புரிந்து கொண்டு, இன்சொல் பயன்படுத்தினால் வாழ்க்கை இனிக்கும். சண்டை சச்சரவு வராது. விட்டுக் கொடுத்து வாழ்தல், புரிந்து கொண்டு வாழ்தல் என்பதற்கு, மறைந்த ஜெயலலிதா சொன்ன கதை என் நினைவிற்கு வந்தது.கணவன், வேலைக்கு வெளியில் சென்றுள்ளான். மனைவி, இருந்த மாவில் 12 இட்லிகள் வேக வைத்து, வைத்திருந்தாள். கணவன், நண்பனுடன் இல்லம் வந்து சாப்பாடு வை என்றான். இருவருக்கும் தலா 4 இட்லிகள் வைத்து விட்டாள். மீதமுள்ள 4 இட்லி நமக்கு இருக்கட்டும் என்று நினைத்துக் கொண்டாள். மனைவியின் முகம் பார்த்து புரிந்து கொண்டான் கணவன். இன்னும் இரண்டு இட்லி சாப்பிடுங்கள் என்று வைக்க வந்தாள். கணவன் சொன்னான், 4-க்கு மேல் யார் சாப்பிடுவார்? எனக்கு போதும் என்றான். அண்ணன் நீங்க சாப்பிடுங்க என்று கணவனின் நண்பனுக்கு வைக்கப் போனாள். நான் எப்போதும் 3 இட்லி தான் சாப்பிடுவேன். சுவையாக இருந்ததால் 4 இட்லி சாப்பிட்டு விடுவேன். இது போதும் எனக்கு என்றான், நண்பன்.கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். நானே பெரியவன் என்ற அகந்தை விடுத்து அன்பு செலுத்தி வாழ்ந்தால் வாழ்க்கை வசந்தமாகும்.
கவிஞர் இரா.இரவிஎழுத்தாளர், மதுரை

98421 93103

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X