தசைநார் வலிக்குத் தீர்வு என்ன என்பார்வை

Added : ஜன 26, 2017
Advertisement
 தசைநார் வலிக்குத் தீர்வு என்ன என்பார்வை

வாழ்நாளில் வலியை உணராத மனிதரைப் பார்ப்பது அரிது. உடல்வலி, தலைவலி, பல்வலி, கைவலி, கால்வலி, முதுகுவலி, முழங்கால் வலி, மூட்டுவலி என ஏதேனும் ஒரு வலியால் வேதனைப் படுவதைப் பார்க்கிறோம். இவற்றுக்கெல்லாம் காரணம் கண்டுபிடிக்க முடியும்.
அதற்கேற்ப சிகிச்சையும் தர முடியும். ஆனால் இன்ன காரணம் என்று குறிப்பிட்டுக் கூற முடியாத தசைவலி ஒன்று உண்டு. 'பைப்ரோமயால்ஜியா' என்று அதற்குப் பெயர். முன்பெல்லாம் முதியவர்களுக்கு மட்டுமே ஏற்பட்ட இந்த நோய், இப்போது இளம்வயதினருக்கும் ஏற்படுகிறது.
பெண்களை பாதிக்கும்
'பைப்ரோமயால்ஜியா'- பரவலான உடல்வலியைக் குறிக்கும் மருத்துவ வார்த்தை இது. ஆண்களைவிட பெண்களை அதிகம் பாதிக்கிறது. குறிப்பாகச் சொன்னால் 25லிருந்து 60 வயதுக்கு உட்பட்ட பெண்களைத்தான் இது பெரும்பாலும் பாதிக்கிறது. உடல்வலியோடு உடல் களைப்பு, உறக்கமின்மை, ஞாபக மறதி போன்றவையும் தொல்லை கொடுக்கும். முதுகுவலி, இடுப்பு வலி, தலைவலி மட்டுமல்லாமல் உடலின் பல இடங்களில் வலி ஏற்படும். கைகால் குடைச்சல் அதிகம் தொல்லை கொடுக்கும்.
ஒரே நேரத்தில் உடலின் இரண்டு பக்கமும் வலி ஏற்படுவது இதன் இயல்பு. உதாரணமாக, இடது கை வலித்தால், அதே வேளையில் வலது கையும் வலிக்கும். வீட்டிலோ,அலுவலகத்திலோ அன்றாடப் பணிகளைச் செய்ய விடாது. உற்சாகத்தைக் குறைக்கும். மனத்தளர்ச்சியை ஏற்படுத்தும்.காரணம் என்ன இதற்கு இதுதான் காரணம் என்று எதையும் குறிப்பிட்டுச் சொல்லமுடியாது. ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கும். சமயங்களில் பல காரணங்கள் ஒன்று சேர்ந்துகொள்ளும். ஹார்மோன்களின் சமச்சீர்த்தன்மை
பாதிக்கப்படுவதுதான் இந்த நோய் வர முக்கியக் காரணம். நமக்கு உடலில் வலி ஏற்படும்போது 'செரட்டோனின்' ஹார்மோன் சுரக்கும். நாம் வலியால் பாதிக்கப்படாத அளவுக்கு அந்த வலியை இது கட்டுப்படுத்தும். பைப்ரோமயால்ஜியா ஏற்படுபவர்களுக்கு இந்த ஹார்மோன் சுரப்பு குறைந்துவிடும். அல்லது முற்றிலும் சுரக்காமல் போய்விடும். இதனால் லேசான வலியைக்கூட இவர்களால் தாங்க முடியாது.
அடுத்து சிலருக்கு நரம்பு மண்டலத்தில் வலியை உணரச்செய்கிற வேதிப்பொருட்களின் அளவு அதிகரித்துவிடும். அப்போது அவர்களுக்கு இந்த நோய் வரும். அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படுபவர்களுக்கும் நீண்ட காலம் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இது ஏற்படுவதை அனுபவத்தில் காண்கிறோம். குடும்பத்தில் திடீரென ஏற்படும் அதிர்ச்சிகள், இழப்புகள்,
விபத்துகள், சோக நிகழ்வுகள் இந்த வலியைத் துாண்டுகின்றன.இது ஒரு பரம்பரை நோயாகவும் வருகிறது. புகைபிடிப்போர் உடல் பருமன் உள்ளவர்கள் உடற்பயிற்சி இல்லாதவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் வேறு ஏதேனும் மன நோயால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நோய் சீக்கிரத்தில் வந்து விடுகிறது. சரியான துாக்கமின்மையும் அதீத குளிரும் இந்த வலியை அதிகப்படுத்தும்.
வலி வரும் இடங்கள்

இந்த வலியானது, உடலில் குறிப்பிட்ட இடங்களில் ஆரம்பித்து சிறிது சிறிதாக அதிகரித்து பிறகு பிற இடங்களுக்குப் பரவும். இந்த இடங்களை அழுத்தினால் வலியை உணர முடியும். அந்த இடங்கள் இவை: தலையின் பின்பகுதி, கழுத்தின் மேற்பகுதி, தோள்பட்டை நடு நெஞ்சின் மேற்பகுதி, இடுப்பு, உட்காரும் இடம் முழங்காலின் பின்
பகுதி. இந்த இடங்களில் உள்ள தசைகளை இயக்கும்போது வலியோடு தசை இறுக்கமாக இருப்பதையும் உணரமுடியும். இந்த நோய் உள்ளவர்கள் எளிதில் களைப்படைந்து விடுவார்கள். முக்கியமாக காலையில் கண் விழிப்பது சிரமமாக இருக்கும் இன்னும் உறங்க வேண்டும்போல் இருக்கும். உடலில் சக்தி இல்லாததுபோல் உணர்வார்கள்.
சிகிச்சை என்ன

இந்த நோய்க்கென தனியாக எந்தப் பரிசோதனையும் இல்லை. நோயின் தன்மையைப் பொறுத்து மருத்துவர்தான் தீர்மானிக்க முடியும். இந்த நோய்க்கு முதலில் குடும்ப மருத்துவரைப் பார்க்க வேண்டும். அவரது ஆலோசனைப்படி நரம்பு நோய் நிபுணர், மனநல நிபுணர், எலும்பு நோய் நிபுணர் ஆகியோரையும் கலந்து ஆலோசிக்க வேண்டும். வலியைக் குறைக்க மருந்து மாத்திரை மட்டும் போதாது. மன அழுத்தம், உறக்கமின்மை போன்றவற்றுக்கு மாத்திரைகளோடு மனநலத்துக்குக் கவுன்சிலிங் தேவைப்படும்.
இப்போது பெருநகரங்களில் வலி மருத்துவத்துக்கெனத் தனிப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றிலும் ஆலோசனை பெறலாம். இவற்றோடு சில உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டியதும் வரும். தியானம், யோகா போன்றவையும் உதவும். அக்குபங்சர் மற்றும் ஆயுர்வேத மசாஜ் நல்ல பலனைத் தருகிறது.
தடுப்பது எப்படி
மன அழுத்தம் குறைக்கின்ற, வாழ்க்கை முறைகளைக் கடைப்பிடியுங்கள். வாரம் ஒருநாளாவது, குடும்பத்துடன் நேரத்தைச் செலவழியுங்கள். பகலில் உறங்குவதைத் தவிர்த்து, இரவில் சீக்கிரமே உறங்கப் பழகுங்கள். இரவில் தொலைக்காட்சி, மொபைல் போன் போன்றவற்றை நீண்ட நேரம் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். நடைப்பயிற்சி மட்டுமில்லாமல், உடற்பயிற்சி செய்வதையும் தினசரி வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருங்கள். காபி அதிகமாகக் குடிக்க வேண்டாம். மது, புகை ஆகவே ஆகாது.
பழச்சாறுகள் அருந்துவதை அதிகப்படுத்துங்கள். காய்கறி, பழங்கள் போன்ற நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிட்டு உடலின் பொது ஆரோக்கியத்தைக் காத்துகொள்ளுங்கள். ஓய்வு நேரங்களில், புத்தகம் படிப்பது, இசை கேட்பது, தோட்ட வேலை பார்ப்பது என உங்களுக்குப் பிடித்த வேலைகளைச் செய்யுங்கள். வாழும் ஒவ்வொரு நாளையும் ரசித்து வாழப் பழகிக்கொள்ளுங்கள்.டாக்டர் கு. கணேசன்மருத்துவ இதழியலாளர்ராஜபாளையம்.gganesan95@gmail.com

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X