சிறப்பு பகுதிகள்

பொலிக! பொலிக! - ராமானுஜர் 1000

வாழ வைப்பார்! (17)

Added : ஜன 29, 2017
Share
Advertisement
ஆளவந்தார் காஞ்சி சென்று திரும்பிய சில காலம் கழித்து இரண்டு சம்பவங்கள் நடந்தன. முதலாவது, ராமானுஜர் நிரந்தரமாக யாதவப் பிரகாசரை விட்டு வெளியேறியது. மன்னர் மகளின் மனநோய் நீங்கியதை அடுத்து நிகழ்ந்தது அது. இரண்டாவது சம்பவம், ஆளவந்தாருக்கு உடல் நலன் குன்றிப் போனது.அவருக்குப் புற்றுநோய் இருந்தது. எத்தனைக் காலமாக என்று யாருக்கும் தெரியாது. நோயின் தீவிரம் அதிகரித்தபோது
வாழ வைப்பார்! (17) Ramanujar Download

ஆளவந்தார் காஞ்சி சென்று திரும்பிய சில காலம் கழித்து இரண்டு சம்பவங்கள் நடந்தன. முதலாவது, ராமானுஜர் நிரந்தரமாக யாதவப் பிரகாசரை விட்டு வெளியேறியது. மன்னர் மகளின் மனநோய் நீங்கியதை அடுத்து நிகழ்ந்தது அது. இரண்டாவது சம்பவம், ஆளவந்தாருக்கு உடல் நலன் குன்றிப் போனது.

அவருக்குப் புற்றுநோய் இருந்தது. எத்தனைக் காலமாக என்று யாருக்கும் தெரியாது. நோயின் தீவிரம் அதிகரித்தபோது அவர் செயல்பாடற்றுப் போனார். கொல்லும் வலியைக் காட்டிக்கொள்கிற மனிதரில்லை அவர். ஆனால் உடன் இருப்பவர்களுக்கு ஆசாரியரின் அவஸ்தை தெரியாதா?
'ஆசாரியரே! உமது சீடனுக்கு ஒரு வேண்டுகோள் இருக்கிறது. அளவிட முடியாத ஞானத்தையும், நல்லறிவையும் எனக்கு அள்ளித்தந்த தாங்கள் இதனையும் ஏற்றுக் கொடுத்தருள வேண்டும்!' கேட்டவர் மாறனேர் நம்பி. மாறன் என்பது நம்மாழ்வாரின் பெயர். நம்மாழ்வாருக்கு நிகராக வைணவ உலகம் கருதி மதித்த மகான் அவர். குரு பக்தியில் ஈடு இணையற்ற பெரியவர். அவர் கேட்கிறார். அதுவும் முதல் முறையாக 'தன் விருப்பம்' என்ற ஒன்று.
'என்ன வேண்டும் நம்பி?'
'நீங்கள் கொடுப்பதாக முதலில் வாக்களியுங்கள். அதன்பின் சொல்கிறேன்.'
'சரி, அப்படியே ஆகட்டும். சொல், என்ன வேண்டும்?'
'வைணவம் தழைக்க நீங்கள் நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டியது அவசியம். இந்த நோய் உங்களை விழுங்கிவிட்டால் நாங்கள் அனாதைகளாகிப் போவோம். எனவே உங்களுக்கு வந்திருக்கிற ராஜபிளவையை ஆசாரியப் பிரசாதமாக நீங்கள் எனக்குத் தந்தருள வேண்டும். நான் இருப்பது என்
குடும்பத்துக்கு மட்டுமே நல்லது. நீங்கள் இருந்தால் நாட்டுக்கு நல்லது.'சிலிர்த்துவிட்டது ஆளவந்தாருக்கு. ஒரு கணம் கண்மூடி யோசித்தார். என்னவென்று கேட்காமல், தருவதாக வாக்களித்துவிட்ட சொல்லும் முக்கியம். நல்ல மனம் கொண்ட சீடனின் நல்வாழ்வும் முக்கியம். எனவே, தனது புண்ணியங்களைப் புண்ணுக்குள் செலுத்தி, அதன் ஒரு பகுதியை மாறனேர் நம்பிக்கு மாற்றினார்.
'நம்பி! நீங்கள் கேட்டுவிட்டதால் இதனைச் செய்திருக்கிறேன். ஆனால் எனது இறுதி நெருங்கிவிட்டது என்பதை நான் அறிவேன். உமது புகழை உலகறியச் செய்ய இச்சம்பவம் ஒரு சாட்சியாகட்டும்.'
ஆளவந்தார் இறுதியாகப் படுத்தார். அவரது வலியும் வேதனையும் சற்றுக் குறைந்திருந்தது. ஆனால் அவரது சீடர்களுக்கு வருத்தம் மிகுந்திருந்தது.
'ஆசாரியரே! இப்படி எங்களைத் தனியே விட்டுச் செல்கிறேன் என்கிறீர்களே? இனி எங்களை யார் காப்பார்?' என்று பெரிய நம்பி அவரது கால்களைப் பற்றிக்கொண்டு கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருந்தார்.
'காஞ்சியில் நான் அவரைக் கண்டேன். பார்த்த கணத்திலேயே அவர் ஆதிசேஷனின் அம்சம் என்று என் மனத்தில் பட்டது. ஞானத்தின் செஞ்சுடர் தகதகக்கும் அத்தெய்வீக முகம் இப்போதும் என் கண்ணில் நிற்கிறது நம்பி. ராமானுஜர் இப்போது யாதவப் பிரகாசரை விட்டு விலகி, பேரரு
ளாளனுக்குத் தீர்த்த கைங்கர்யம் செய்து கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன். வைணவ உலகம் அவரால் தழைக்கும். அடியேன் ஆளவந்தார். அவர் வாழ வைப்பார்!'
குருவின் மனம் சீடர்களுக்குப் புரிந்துபோனது. தாமதம் பயனில்லை. இன்றே கிளம்புங்கள் என்று அனைவரும் துரிதப்படுத்தி, பெரிய நம்பியைக் காஞ்சிக்கு அனுப்பி வைத்தார்கள்.
ஒளியின் வேகத்தில் கால்கள் இயங்க முடிந்தால் எத்தனை நன்றாக இருக்கும்! ஆனால் அவர் காஞ்சியைச் சென்றடைய ஒரு வார காலமாயிற்று. திருக்கச்சி நம்பியைச் சந்தித்து ஆசாரியரின் விருப்பத்தைச் சொன்னார்.
'வைணவ தரிசன பீடம் ராமானுஜருக்காகக் காத்திருக்கிறது நம்பிகளே.
நமது ஆசாரியரின் எண்ணம் அதுதான். அவர் வருவாரா? மரணப் படுக்கையில் இருக்கும் ஆளவந்தார் தமது இறுதிக் கணத்துக்கு முன்னால் இளையாழ்வாரைச் சந்தித்துவிட வேண்டும். எப்படியாவது ஏற்பாடு செய்யுங்கள்.'
ராமானுஜரின் தாயார் காந்திமதி அப்போது காலமாகியிருந்தார். அந்தத் துயரின் சுவடுகள் மறைந்திராத நேரம். அருளாளன் திருப்பணியில் மட்டுமே அவர் ஆறுதல் தேடிக்கொண்டிருந்தார்.
'இது அவர் வரும் நேரம்தான். நீங்கள் முதலில் பெருமாளைச் சேவித்துவிட்டு வாருங்கள். நாம் பேசுவோம்' என்றார் திருக்கச்சி நம்பி.
பெரிய நம்பி சன்னிதிக்குச் சென்றார். வையம் காக்கும் வரதராஜப் பெருமாள். கற்பூர வெளிச்சத்தில் கடலெனப் பொங்கிப் பிரவகித்துக் கொண்டிருந்த அவனது பேரருள் தன்னை நெருங்கி வருடுவதாக அவருக்குத் தோன்றியது. 'பெருமானே! என் வருகையின் நோக்கம் உனக்குத் தெரியும். வேண்டியது உனது அனுமதி ஒன்றே.'
கண்மூடி அவர் சில சுலோகங்களை வாய்விட்டுச் சொல்லத் தொடங்கினார். ஆளவந்தார் இயற்றிய சுலோகங்கள்.
மிகச் சரியாக அந்நேரம் ராமானுஜர் சன்னிதிக்குள் நுழைந்தார். தான் அதுவரை கேட்டிராத அந்த சுலோகங்களின் கம்பீரத்திலும், ஆற்றல் மிக்க ஆராதனைகளிலும் மனம் பறிகொடுத்தவராக, 'ஐயா! இந்த சுலோகங்களை இயற்றியவர் யார்?' என்று கேட்டார்.
கண் திறந்து அவரைப் பார்த்தார் பெரிய நம்பி.
'இவர்தான் ராமானுஜர்.' என்று திருக்கச்சி நம்பி அறிமுகம் செய்தார்.
பரபரப்பாகிவிட்டது அவருக்கு. எங்கே தொடங்குவது, என்னவென்று சொல்லுவது, எப்படி அழைப்பது என்று கணப் பொழுதில் மனத்தில் எழுந்த நூறு வினாக்களில், எதை முதலில் விடுவிப்பது என்று புரியாமல் குழம்பி நின்ற கணத்தில் திருக்கச்சி நம்பியே எடுத்துக் கொடுத்தார்.
'அவர் இந்த சுலோகங்களைப் பற்றிக் கேட்டார்.'
'ஆம். இவை ஆளவந்தார் அருளிய சுலோகங்கள்.' பரவசமானார் ராமானுஜர். 'ஆ! ஆளவந்தாரா? வைணவம் தழைக்கப் பரமன் இவ்வையத்துக்கு அளித்த பெருங்கொடை அல்லவா அவர்! வாழ்வில் ஒருமுறையாவது அவரைத் தரிசித்துவிட மாட்டோமா என்று எத்தனைக் காலமாக நான் ஏங்கிக் கொண்டிருக்கிறேன் தெரியுமா?'
'திருவரங்கத்தில் இருக்கிறார். உடல்நலம் குன்றிய நிலையில், பேசவும் சக்தியற்றவராக...' அவர் முடிக்கவில்லை. 'கிளம்புங்கள். நான் உம்மோடு இப்போதே
திருவரங்கம் வருகிறேன். எனக்கு அவரைப் பார்த்தே தீரவேண்டும். உடனே. மிக உடனே.'
அது நடந்தது, பேரருளாளன் சித்தம். ராமானுஜர் வீட்டுக்குப் போகவில்லை. மனைவியிடம் சொல்லிக்கொள்ளவில்லை. சன்னிதியில் நின்றிருந்த பெரிய நம்பியை இழுத்துக்கொண்டு அப்படியே வீதிக்குப் பாய்ந்துவிட்டார்.
ஓட்டமும் நடையுமாகக் காஞ்சியில் இருந்து திருவரங்கம் சென்று சேரும் வரை இருவரும் ஆளவந்தாரைத் தவிர வேறு எதையுமே நினைக்கவில்லை.
ஆனால் விதி வேறாக இருந்தது. அவர்கள் திருவரங்கம் சென்று சேர்ந்தபோது ஆளவந்தார் காலமாகியிருந்தார்.
(நாளை தொடரும்...)
writerpara@gmail.com

- பா.ராகவன்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X