இந்தநாள் இனிய நாள்! | Dinamalar

இந்தநாள் இனிய நாள்!

Added : ஜன 30, 2017 | கருத்துகள் (1)
இந்தநாள் இனிய நாள்!

ன்னும் ஒரு நாள் கூடுதலாய் இந்தப் பூமியில் வாழ்வதற்கான வாய்ப்பு இதோ விடியலின் விந்தைப் பூவாய் நம்முன் பூத்திருக்கும் இந்த இனிய நாள். இந்த நாள் இனிய நாள், இந்த நாள் நொந்தநாள் என்பதும் நம் மனதில்தான் இருக்கிறது. மனம் மலர்ந்த இத்தினம் நம் வாழ்வின் மகிழ்வான தினம். நம் வாழ்க்கைப் பயணத்தின் கசந்த நினைவுகள் அழிந்த வசந்தவரவு இத்தினம். நீலவானம் நமக்கு நிறைய நம்பிக்கையைத் தருகிறது. எப்படி வாழ்வது என்று புரியாமலேயே வாழ்வின் பெரும்பகுதியைக் கழித்திருக்கிறோமே!
நம்பிக்கை
முந்தைய நாள் இரவின் இருட்டைத் தன் ஒளியால் ஓட்டிய படி கதிரவன் தன் கற்றைகளால் புலரும் புதுப்பொழுதில் மலரும் மகிழ்ச்சி எங்கும்.அந்த விடிகாலை எவ்வளவு அழகாக இருக்கிறது? கீச்சிடும் பறவைக்கூட்டம் திசைகளைத் தீர்மானிக்காமல், இரைதேடி நம்பிக்கையோடு பறக்கவில்லையா? பஞ்சாரத்தில் அடைந்து கிடக்கும் கோழி தன் குஞ்சுகள் புடைசூழ புழுக்களை தேடி குப்பைகளைக் கிளறிக்கொண்டே நடப்பதில்லையா? யாருக்கு இல்லை துன்பம்? கலங்குவதற்கோ புலம்புவதற்கோ இந்த நாள் நம்மிடம் தரப்பட்டதா? கேள்விகள் எழுகின்றன.ஊக்கமது கைவிடேல் முடிந்ததையே நினைத்துக் கொண்டிருந்தால் விடிந்தவிடியலில் என்ன முன்னேற்றம் தரம்செயலைச் செய்வது? குறைகளின் தொட்டியா இந்தக்
குவலயம்? வாழ்வும் தாழ்வும் ஒரு நாணயத்தின் அடுத்தடுத்த பக்கங்கள் என்று ஏன் எண்ண மறுக்கிறோம்? காசிக்குப் போய்வரும் நாம், பிராவாகமாய் ஓடிவரும் கங்கையை ஒரு காசிச் செம்புவாங்கி கங்கை நீரால் நிரப்பி அன்னபூரணிக்கு அடியில் வைத்து ஆராதிக்கிறோமே! செம்புக்குள் அடங்குமா அந்தப் புண்ணியநதி? ஆனாலும் அப்படித்தான்செய்கிறோம். வாழ்க்கையும்
அப்படித்தான். நாளும் பல காட்சி களைக் காட்டி சின்ன சின்ன ஆறுதல்களாலும் சின்ன சின்னத் தேறுதல்களாலும் நம்மை நிலைகுலையாமல் சமன்படுத்தி வைத்திருக்கிறது. புரிந்து கொள்கிறவர்களுக்குச் சர்க்கரையாய் வாழ்வு இனிக்கிறது. வாழ்வின் போக்கு புலப்படாதவர்களுக்கு அதே வாழ்க்கை சர்க்கரை நோயாய் சங்கடம் தருகிறது.
இயந்திரங்களா நாம் ஒரு தேரோட்ட நாளில் கூட நாம் தேராய் மாறி முன்பு தேருக்குப் பின் சுற்றினோமே! இன்று கல்யாணநாளில் கூட மனைவியோடு பேசப்பிடிக்காமல் கையில் அலைபேசியோடு தனியே வெறுமையோடு பேசிக்கொண்டிருக்கிறோமே; எப்படிக் கசந்தார்கள் நம் பிரயத்திற்குரிய இனிய மனிதர்கள்? நம்மைச்சுற்றியிருக்கும் இயந்திரங்கள் ஏன் நம்மையும் மாற்றிவிட்டன? என்ன ஆயிற்று நமக்கு? வாசல்களை மூடலாம் ஆனால் நாம் வானத்தை அல்லவா மூடமுயல்கிறோம்! ரசிப்போம் நல்லவற்றைத் தேடி வாசிப்போம்.அந்தந்த வினாடிகளில் வாசிப்போம்.அந்த நாளும் ருசியாகும். ஒவ்வொரு விடியலும் விந்தையாகும்.
உற்சாகம்
காலையில் சாப்பிடும் தேநீர், நமக்கு அந்த இனிய நாளைத் தொடங்குவதற்கான உற்சாகத்தை அளிப்பதுபோல, நாம் நல்ல எண்ணங்களால் நம்மைத் தினமும் உற்சாகமாய் நிரப்பிக்கொண்டு புதுமையை நோக்கிப் பயணிப்பது எவ்வளவு சுகமானது! பூஞ்செடி களைப் பதியன்போட்டோம்! புதுத்தளிர் துளிர்க்கையில் துள்ளிக்குதித்தோம்!ஒவ்வொரு நாள் விடியலையும் கொண்டாடுவோம்.
சிறகுகளைச் சிதிலமாக்கியபின்தான் நாம் பறத்தல் குறித்துப் பலநேரம் யோசிக்கிறோம். அழுக்கான கண்ணாடியில் முகம் கலங்கலாகத்தான் தெரியும். அழுக்கும் இழுக்கும் இல்லாத பரிசுத்தமான வாழ்க்கை நிம்மதியான மனதின் சன்னிதியாக அமைகிறது. வெற்றியில் மமதையைத் தவிர வேறேதும் கற்கமுடியாது. தோல்வியின் தோள்களில் நாம் கற்றுக் கொள்வதற்கும் நாம் பெற்றுக்கொள்வதற்கும் நிறைய பாடங்கள் உண்டு. தோல்வியின் காரணங்களை நாம் ஆராய முற்படும்போது அந்த நாளும் இனிய நாளாய் அமைகிறது. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லைநம் கண்ணோட்டம் மாறும்போது நம்மைச் சுற்றியிருக்கும் சகமனிதர்களும் நல்லவர்களாகவே தெரிகிறார்கள். எந்த முன்முடிவு களோடும் யாரையும் அணுகாமல்
இருத்தல் நல்ல உறவுகளைப் பேணுவதற்கான வழி. உலகைத் தாங்குவது அன்பே! அன்பிற் சிறந்த தவமில்லை என்றார் பாரதியார். பிரதிபலன் பாராமல் எல்லோர் மீதும் அன்பு செலுத்துங்கள். சினம் இனத்தையே அழித்துவிடும். எனவே கோபத்தை ஆயுத மாக்கி நாளை தொடங்காதீர்கள். மனைவி, குழந்தைகள், சுற்றம் யாவரும் இறைவனின் அருட்கொடை என உணருங்கள். அவர்களிடம் இன்சொல்லே பேசுங்கள். சிரித்தமுகமும் இனிமையான நல்ல பேச்சும் நம் நாளை இன்னும் அழகாக்கும் என்பதைப்புரிந்து செயல்படுவோம்.
அச்சம் தவிர் ஒரு மூச்சுக்கும் இன்னொரு மூச்சுக்கும் இடையில்தான் வாழ்வும் மரணமும் அடுத்தடுத்து ஒழிந்திருக்கிறது. எனவே மரணம் கண்டு கலங்கவேண்டாம் என் கிறார் புத்தர். விழித்திருப்பவன் நாளே விடிந்திருக்கிறது. ஆகவே அளவுகடந்த துாக்கம் துக்கத்தையே தரும். எல்லோருக்கும் முன்பாக நாம் எழுந்திருக்கும் அந்த ஒருமணிநேரமே நம் வாழ்வை முன்னே அழைத்துச்செல்கிறது.பிரார்த்தனை நாம் செய்யும் பிரார்த்தனை அந்த நாளை இறைவனின் ஆசிகளோடுகூடிய அற்புதமான நாளாக மாற்றுகிறது. அந்த நாள் விடியும்போது தினமும் ஐந்துநிமிடம் மனத்தை ஒருமுகப்படுத்தி நமக்காகவும் உலக நன்மைக்காகவும் தியானம் செய்யும் போது மனமும் அத்தினமும் மகிழ்ச்சிக்குள்ளாகிறது.
நன்னெறி
ஆர்வத்துடன் நாம் செய்யும் வேலைகள் கலைநுணுக்கமான பேர்சொல்லும் நற்பணிகளாக மாறுகின்றன. கர்மயோகம் ஒவ்வொரு நாளையும் அழகாக மாற்றுக் கிறது. சிந்தனை, சொல், செயல் இம்மூன்றிலும் நேர்மையும் உண்மையும் சத்தியமும் இருக்கவேண்டும். மன முதிர்ச்சியைக் கற்றுத்தரும் பயிற்சிக்கூடமே இந்த உலகம் என்பதைப் புரிந்து கொண்டால் ஒவ்வொரு நாளும் நற்செயல் செய்யும் இன்னொரு இனிய நாளாக அமைகிறது.
நம்மால் உருவாக்கப்படும் எல்லாப் பிரச்னைகளுக்கும் நம் நாவே முக்கியப்பங்கு வகிக்கிறது. எனவே தேவையில்லாதவற்றைப் பேசாமல் நம் நாவைக் காத்துக்கொண்டால் நலம்.சரியான திட்டமிடல் திட்டமிடத் தவறுகிறவன் தவறு செய்யத் திட்டமிடுகிறான்.. காலை எழுந்தவுடன் சரியான செயல்திட்டத்தோடு அந்த நாளைத் தொடங்குகிறவர்கள் வெற்றியாளர்களாய் உறங்கச்செல்கிறார்கள். அமெரிக்க அதிபராகியிருந்த கென்னடியைப் பார்க்கப் போன இளைஞன் அந்த நாற்காலியில் ஒருநாள் அமர்வேன் என்று அவரிடமே உறுதியாய் சொன்னார். அவர்தான் பின்னாளில் அதே அதிபர் பதவியை அலங்கரித்த பில்கிளிண்டன்.
பசித்திருந்து தனித்திருந்து விழித்திருந்து உழைப்பவர்களையே பதவி என்னும் அழகான சொல் வந்தடைகிறது.தேவையற்ற அறிவுரைகள் எல்லோரையும் நம்புவதும் யாரையும் நம்பாமலிருப்பதும் ஆபத்தானது. நுால்களிலிருந்து கற்ற அறிவைவிட சகமனிதர்களிடமிருந்து பெற்ற அனுபவம் மிகவும் பயன்தரக்கூடியது. தேவையில்லாதவர்களுக்குத் தேவையில்லாமல் அறிவுரை கூறுவதை சாண்டில்யர் அர்த்தசாஸ்திரத்தில் இடித்துரைக்கிறார். “கடலில் பெய்யும் மழை பயனற்றது. பகலில் எரியும் தீபம் பயனற்றது. செல்வந்தனுக்குக் கொடுக்கும் பரிசு பயனற்றது.
அதுபோல் அறிவற்றவனுக்குக் கூறும் அறிவுரையும் பயனற்றது” என்கிறார். எனவே காலை முதல் இரவு வரை யாரையாவது அழைத்து தேவையற்ற அறிவுரைகள் கூறும்போது, நாம் நம் நேரத்தையும் வீணாக்கிக் கேட்போர் நேரத்தையும் வீணாக்கிக்கொண்டிருக்கிறோம்.உறுதியாய் இருப்போரை நாளும் கோளும் ஏதும்செய்வதில்லை. எல்லா நாளையும் நமக்கான நாளாக மாற்றுவதில்தான் வாழ்க்கையின் வெற்றியேஉள்ளது. நிராகரிப்பின் நிமிடங்களில்தான் நிஜமாகப் புரிந்துகொள்கிறோம் நிறைய மனிதர்களின் நிஜமுகங்களை. எனவே யார் நம்மை நிராகரித்தாலும் நாம் நம்மை நிராகரிகாமல் உற்சாகத்துடன் உழைத்தால் நாளை நமதாகும்; எல்லா நாளும் நமதாகும்!முனைவர் சௌந்தர மகாதேவன்தமிழ்த்துறைத் தலைவர்சதக்கத்துல்லாஹ்அப்பா கல்லுாரிதிருநெல்வேலி. 99521 40275We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X