சிறப்பு பகுதிகள்

பொலிக! பொலிக! - ராமானுஜர் 1000

மூன்று விரல்

Added : ஜன 30, 2017 | கருத்துகள் (1)
Share
Advertisement
காவிரியைக் கடந்து, திருவரங்கத்தின் எல்லையைத் தொட்டபோதே ஏதோ சரியில்லை என்று தோன்றியது. கூட்டம் கூட்டமாகப் போய்க்கொண்டிருந்த மக்களின் பதற்றமும், தவிப்பும் பெரிய நம்பிக்குக் குழப்பம் தந்தது. யாரையாவது நிறுத்தி விசாரிக்கலாம். ஏதாவது தகவல் வரும். ஆனால் அதற்கெல்லாம் நமக்கு அவகாசமிருக்கிறதா, தவிரவும் அது அவசியமானதாக இருக்கும் என்பது என்ன நிச்சயம்?'ஆனால் இம்மக்கள்
மூன்று விரல் Ramanujar Download

காவிரியைக் கடந்து, திருவரங்கத்தின் எல்லையைத் தொட்டபோதே ஏதோ சரியில்லை என்று தோன்றியது. கூட்டம் கூட்டமாகப் போய்க்கொண்டிருந்த மக்களின் பதற்றமும், தவிப்பும் பெரிய நம்பிக்குக் குழப்பம் தந்தது. யாரையாவது நிறுத்தி விசாரிக்கலாம். ஏதாவது தகவல் வரும். ஆனால் அதற்கெல்லாம் நமக்கு அவகாசமிருக்கிறதா, தவிரவும் அது அவசியமானதாக இருக்கும் என்பது என்ன நிச்சயம்?

'ஆனால் இம்மக்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல், ஒரே துக்கத்தின் ஓரங்களைப் பிய்த்துத் தம் முகங்களில் ஒட்டவைத்துக் கொண்டு போகிறாற் போலத் தெரிகிறது சுவாமி!' என்றார் ராமானுஜர்.
ஒரே துக்கம்! உணர்வளவில் ஒன்றுதான். ஆனால் அவரவர் துக்கத்தின் கனம் நிச்சயமாக வேறு வேறாக அல்லவா இருக்கும்?
'எதற்கும் விசாரித்து விடுவோமே?'
சரி என்று பெரிய நம்பி ஒருவரை அழைத்தார். 'எல்லோரும் எங்கே போய்க் கொண்டிருக்கிறீர்கள்?'
'ஐயா உங்களுக்கு விவரம் தெரியாதா? ஆளவந்தார் சுவாமிகள் பரமபதம் அடைந்துவிட்டார்கள். திருக்கரம்பன் படித்துறையில் இறுதிச் சடங்குகள் நடந்து கொண்டிருக்கின்றன.'
ராமானுஜருக்கு நெஞ்சடைத்துப் போனது. பெரிய நம்பி ஐயோ என்று அலறியே விட்டார். நின்று பேசவோ, அழுது தீர்க்கவோ அவகாசமற்ற தருணம். எய்த அம்பைப் போல் அவர்கள் படித்துறையைப் பாய்ந்து அடைந்தபோது, ஆளவந்தாரின் திருமேனி அங்கு கிடத்தப்பட்டிருந்தது. சுற்றிலும் சீடர்கள். சூழ்ந்த பெரும் துயரம். நாலாபுறங்களில் இருந்தும் அவரது பக்தர்களும், அன்பர்களும் அந்த இடத்தை நோக்கி வந்தபடியே இருந்தார்கள்.
'நாம் மோசம் போய்விட்டோம் நம்பிகளே! ஆசாரியர் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார்!' என்று கதறினார் திருக்கோட்டியூர் நம்பி.
'அவரது நோயை நான் விரும்பிப் பெற்றதன் காரணமே அவரது மரணத்தை நான் களவாட நினைத்ததுதான். ஆனால் விதி இத்தனைக் குரூரம் காட்டும் என்று எண்ணவில்லை நம்பிகளே!' மாறனேர் நம்பி சொல்லிச் சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்தார்.
அரையர் ஒருபுறம் அழுது கொண்டிருந்தார். திருமாலையாண்டான் மறுபுறம் அழவும் தெம்பற்றுச் சரிந்து விழுந்திருந்தார். ஒவ்வொருவர் மனத்திலும் ஊடுருவியிருந்த அந்த மகான், அத்தனை பேரின் துக்கத்துக்கும் சாட்சியே போல சும்மா கிடந்தார்.
பெரிய நம்பி நம்ப முடியாமல் தமது ஆசாரியரின் திருமேனியைப் பார்த்துக்கொண்டே இருந்தார்.
'ஐயா, கண்ணைத் திறந்து பாருங்கள். நீங்கள் விரும்பிய மகாபுருஷனைக் காஞ்சியில் இருந்து அழைத்து வந்திருக்கிறேன். நீங்கள் பார்க்க விரும்பியதாகச் சொல்லித்தான் அழைத்து வந்திருக்கிறேன். இப்போது இவருக்கு நான் என்ன பதில் சொல்லட்டும்?'
அங்கிருந்த அத்தனை பேரும் அப்போதுதான் ராமானுஜரை கவனித்துப் பார்த்தார்கள். இவரா?
இவரேதானா? இவரைத்தான் நமது ஆசாரியர் தமது வாரிசாக மனத்துக்குள் சுவீகரித்து வைத்திருந்தாரா? ஆளவந்தார் மனத்தையே ஆண்டு வந்தாரென்றால் இவர் எப்பேர்ப்பட்ட யோகியாக இருப்பார்!
ராமானுஜர் யாரையும் பார்க்கவில்லை. எதையும் கவனிக்கவில்லை. யார் பேச்சும் அவர் சிந்தைக்குள் நுழையவில்லை. கிடத்தி வைக்கப்பட்டிருந்த ஆளவந்தாரின் திருமேனியையே சலனமின்றிப் பார்த்துக் கொண்டிருந்தார்.
'குருவே சரணம். உம்மை நான் நேரில் தரிசித்ததில்லை. ஆனால் மனத்தில் எண்ணாதிருந்ததும் இல்லை. மிகச் சிறு வயதில் வீட்டுத் திண்ணையில் பாடம்
சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிற போது, சில சமயம் என் அப்பா உங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். எப்போதாவது எங்கள் வீட்டுக்கு வருகை தரும் என் மாமா பெரிய திருமலை நம்பி, மூச்சுக்கு மூச்சு உமது திருநாமத்தைத்தான் உச்சரித்துக்கொண்டே இருப்பார். திருக்கச்சி நம்பியுடன் பழக்கமான பிற்பாடு நாளைக்கொரு முறையாவது உம்மைப் பற்றி அவர் பேசாதிருந்ததில்லை. ஞானத்தின் பூரண வடிவான தங்களை என்றேனும் ஒருநாள் தரிசிப்பேன், உங்கள் தாள் பணிவேன் என்று தினமும் எண்ணிக்கொள்வேன். வைணவம் என்னும் பெரும் சித்தாந்தம் இப்பூவுலகில் தழைப்பதற்கு எம்பெருமான் உம்மைத் தேர்ந்தெடுத்து அனுப்பியிருந்தான்.
இன்று நீங்கள் விடைபெற்று விட்டீர்கள். வீட்டில் தகப்பன் மறைந்தாலே குடும்பம் திண்டாடித் தெருவுக்கு வந்துவிடும். நீங்கள் ஒரு சமூகத்தின் தகப்பன் அல்லவா? இனி எங்களை யார் கரை சேர்ப்பார்?'
பெருகிய கண்ணீரைத் துடைக்கத் தோன்றவில்லை. அப்படியே பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்.
சட்டென்று ஏதோ இடறியது. ராமானுஜர் முகத்தில் கணப் பொழுது ஒரு குழப்பம் தோன்றியது.
'இது விசித்திரமாக இருக்கிறதே? ஆசாரியரின் வலக்கரத்தைப் பாருங்கள். மூன்று விரல்கள் மடங்கியிருக்கின்றன. முன்பே இவை இப்படித்தான் இருந்தனவா?'
அப்போதுதான் மற்றவர்கள் அதைக் கவனித்தார்கள். அவரது வலது கரத்தின் கட்டை விரல், ஆள் காட்டி விரல் தவிர, பிற மூன்று விரல்களும் மடங்கியிருந்தன.
'இல்லையே, நான் பார்க்கவில்லையே'
'நானும் கவனிக்கவில்லையே!'
யாரும் பார்த்திருக்கவில்லை. ராமானுஜர்தான் முதலில் கண்டது.
'ஆசாரியர் திருநாடு அலங்கரித்த நேரம் இம்மாதிரி மூன்று விரல்கள் மடங்கியிருக்கின்றன என்றால், அவை எதையோ உணர்த்தும் குறியீடாக எனக்குத் தோன்றுகிறது. அவரை அறிந்த உங்களில் ஒருவர்தாம் அவர் எதை இப்படி உணர்த்துகிறார் என்று சொல்ல வேண்டும்.'
பெரிய நம்பி திடுக்கிட்டுப் பார்த்தார். 'ஆம் ராமானுஜரே! நீங்கள் சொல்லும்போதுதான் நினைவுக்கு வருகிறது. ஆசாரியருக்கு மூன்று பெரும் விருப்பங்கள் இருந்தன. பிரம்ம சூத்திரத்துக்கு போதாயன மகரிஷி எழுதிய உரையை அடியொற்றி, விசிஷ்டாத்வைத சித்தாந்தப் பிரகாரம் ஓர் உரை எழுதவேண்டும் என்பது அதில் முதலாவது.'
'சரி.'
'திருவாய்மொழிக்கு மிகத் துல்லியமான ஓர் உரை எழுத வேண்டும். வேதம் தமிழ் செய்த மாறனான நம்மாழ்வாரின் பெயர் விளங்கும்படியாக, தகுதியுள்ள ஒரு நபருக்கு அவரது திருநாமத்தைச் சூட்ட வேண்டும் என்பது இரண்டாவது அவா.'
'அடுத்தது?'
'விஷ்ணு புராணம் படைத்த பராசர பட்டர், மகாபாரதம் தந்த அவரது புதல்வர் வியாசர் இருவரது பெயர்களையும், காலமுள்ள வரையும் ஏந்திப் பெருமைப்படுத்தும் விதத்தில் வாழப் போகிறவர்களைக் கண்டடைந்து சூட்ட வேண்டும் என்பது மூன்றாவது விருப்பம்.'
ராமானுஜர் ஒரு கணம் கண்மூடி ஆளவந்தாரை தியானித்தார். பிறகு சொன்னார், 'ஆசாரியரின் ஆசியும் எம்பெருமான் திருவருளும் கூடுமானால் என் வாழ்
நாளுக்குள் இம்மூன்று ஆசைகளையும் நான் நிறைவேற்றுவேன்.'
துந்துபி முழங்கியது போல் ஒலித்த அந்தக் குரலின் உறுதியும், ஈர்ப்பும் அங்கு கூடியிருந்தவர்களைச் சிலிர்ப்புற வைத்தது. இவர்தான், இவரேதான், சந்தேக
மில்லை என்று ஒருமித்து முடிவு செய்தார்கள்.
அக்கணம் அது நிகழ்ந்தது. மூடியிருந்த ஆளவந்தாரின் மூன்று விரல்களும் விரிந்தன.
(நாளை தொடரும்...)
writerpara@gmail.com

- பா.ராகவன்

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - Pollachi  ( Posted via: Dinamalar Windows App )
30-ஜன-201711:59:15 IST Report Abuse
Ram நன்றி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X